கடந்த ஜூன் மாதம் 30-ம் தேதி பீகாரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏனென்றால் பீகாரில் அன்று ஒரே நாளில் 83 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். அதே நாளில் உத்தரபிரதேசத்தில் 30 பேர் மின்னலுக்கு உயிரிழந்தனர். தொழில்நுட்பம் வளர்ந்த இக்காலத்திலும் மின்னல் தாக்கி ஒரே நாளில் இத்தனை பேர் உயிரிழந்த விடயம் நாட்டில் மக்களிடையேயும், ஆராய்ச்சியாளர்கள் மத்தியிலும் பெரிய அதிர்ச்சியினை உருவாக்கியது.
18 ஆண்டுகளில் இறந்த 42,500 பேர்
கடந்த 4 மாதத்தில் மட்டும் இந்தியாவில் மின்னல் தாக்கி 200 பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மின்னல் தாக்குவதன் மூலம் சராசரியாக 2360 நபர்கள் இறக்கிறார்கள் என தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) அறிக்கை தெரிவிக்கிறது.
2001-ம் ஆண்டு தொடங்கி 2018-ம் ஆண்டு வரையிலான 18 ஆண்டுகள் காலக்கட்டத்தில் இந்தியாவில் 42,500 பேர் மின்னல் தாக்கி இறந்துள்ளனர்.
இந்தியாவில் உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் அதிகமாக மின்னல் தாக்கும் மாநிலங்களாக இருக்கின்றன.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின்(NCRB) 2018-ம் ஆண்டின் தரவுகளின் படி இயற்கைப் பேரிடர்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையில், மின்னல் தாக்கி இருந்தவர்களின் எண்ணிக்கையே அதிகமானதாக இருக்கிறது.
மின்னல் தாக்கி நிகழும் மரணங்களில் பெரும்பாலானவை ஊரகப் பகுதிகளிலேயே நடைபெறுகின்றன, 4% மரணங்கள்தான் நகர்ப்புறங்களில் நடைபெறுவதாக 2019-ம் ஆண்டின் தென்மேற்கு பருவ மழைக்கால மின்னல் அறிக்கை (South West Monsoon Lightning Report) தெரிவிக்கிறது.
மேலும் இந்த அறிக்கையில், பத்தில் ஏழு நபர்கள் கனமழை பெய்யும் நேரத்தில் நேரடியாக மரங்களுக்கு அருகில் நிற்பதால் மின்னல் தாக்கி பலியானவர்கள் என்று சொல்கிறது.
வெட்டவெளியில் மின்னல் தாக்கி பலியாகும் நான்கில் ஒரு நபராக விவசாயிகள்,மீனவர்கள், கால்நடை மேய்ப்பவர்கள், விவசாயம் சார்ந்த வேலைகள் செய்வோர் மற்றும் விறகு எடுக்க செல்பவர்கள் ஆகியோர் இருக்கின்றனர்.
மின்னல் கீற்றுகளின் வீரியம்
2019-ம் ஆண்டின் ஏப்ரல் மாதம் துவங்கி செப்டம்பர் மாதம் வரையிலான காலத்தில் இந்தியாவில் மொத்தம் 90,62,546 மின்னல் தாக்கம் நடந்திருக்கிறது. ஒரிசாவில் 11,20,265 தாக்கங்களும், மத்தியப் பிரதேசத்தில் 11,06,319 தாக்கங்களும் நடந்து இருக்கின்றன. இந்த எண்ணிக்கையில் முதன்மையானதாக இருக்கும் 10 மாநிலங்களில் இந்த எண்ணிக்கையில் 80% தாக்கம் ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாடு இந்த பட்டியலில் 12-ம் இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் 3,67,699 மின்னல் தாக்கங்கள் நடந்திருக்கின்றன.
மின்னல் மற்றும் இடியின் காரணமாக மனிதர்கள் கொல்லப்படுவதுடன் கால்நடைகள் மற்றும் பொருளாதார சேதங்களும், சுற்றுச்சூழல் பாதிப்பும் கணிசமான அளவில் ஏற்படுகிறது.
பருவநிலை மாற்றமும், மின்னலும்
2017-ம் ஆண்டு உலக காலநிலை கண்காணிப்பு அமைப்பு மற்றும் உலக வானிலை ஆய்வுக் கழகமும் இணைந்து காலநிலை மாற்றத்திற்கும், மின்னல்கள் உருவாக்கத்திற்குமான தொடர்பினை ஆய்வு செய்ய ஒரு பணிக்குழுவினை உருவாக்கியது.
மேலும் 2018 செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட்ட சூழலியல் சார்ந்த Lightning: A New Essential Climate Variable என்ற ஆய்வு, இரண்டு முக்கிய விடயங்களை தெரிவிக்கிறது.
- காலநிலை மாற்றத்தின் விளைவாக, மின்னல்கள் உருவாகும் எண்ணிக்கையில் மாற்றங்கள் ஏற்படுவதாக கூறுகிறது. காலநிலை மாற்றத்தினைக் கணிப்பதற்கான ஒரு கூறாகவும் மின்னல் இருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
- இரண்டாவதாக மின்னல்கள் ஏற்படும் பொழுது பசுமைக்குடில் வாயுவாகிய நைட்ரஜன் ஆக்சைடு வெளிவருகிறது. இதன் மூலம் சுற்றுச்சூழலை நேரடியாக பாதிக்கும் தன்மையும் மின்னலுக்கு இருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது.
ஒவ்வொரு டிகிரி வெப்பநிலை உயர்வுக்கும், மின்னல்கள் உருவாகும் எண்ணிக்கை 10% சதவீதம் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தை சேர்ந்த ஆய்வாளர் ராய் கூறுகிறார்.
சில ஆய்வுகளில் மாறுபட்ட தகவல்களாக மேகத்தில் பனி இருப்பு குறைவால் மின்னல் தாக்கும் தன்மை குறைந்து வருவதாக கூறப்படுகிறது. எப்படி ஆகினும் மின்னல் தாக்கத்தில் உள்ள காலநிலை மாற்றத்தின் பங்கு முக்கியமானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
இறப்புகளைக் குறைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்
கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மேற்கு உத்திரப்பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் மின்னல் தாக்கி இறந்தனர். இதன்காரணமாக இந்திய அரசானது வானிலை ஆய்வு மையத்தைச்(IMD) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புவி அறிவியல்(ministry of Earth science) அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளையும் ஒருங்கிணைந்து வல்லுனர் குழு ஒன்றை நிறுவியது. இவர்களின் பணி மின்னல் தாக்குவதை முன்கணிப்பு செய்வதை விரைவாக்கும் மாதிரிகளை உருவாக்குவது மற்றும் மின்னல் தாக்குதல்களால் வரும் பாதிப்புகளை அறிவியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தி குறைப்பது.
இதையொட்டி lightning resilient India campaign என்கிற பிரச்சாரம் தொடங்கப்பட்டது. இப்பிரச்சாரத்தின் நோக்கம் பலதரப்பட்ட தரவுகளை ஆராய்ந்து செயற்கைக் கோள் புகைப்படங்களின் உதவியுடன் பாதிக்கப்படும் பகுதிகளை கண்டடைவதுடன், குறிப்பிட்ட பகுதிக்கு சரியாக முன்னெச்சரிக்கை தகவல்கள் சென்று சேருகிறதா என்பதை உறுதி செய்து இறப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பது.
இப்பிரச்சாரத்தின் முக்கிய வெளிப்பாடாக, 2019-ம் ஆண்டின் தென்மேற்கு பருவகாலத்தின் மின்னல் தாக்கம் குறித்த அறிக்கையானது (South West Monsoon 2019 Lightning Report), மாநிலங்கள் வாரியாக அதிகமாக மின்னல் தாக்கும் பகுதிகளை வெளிக்காட்டும் வரைபடத்தை வெளியிட்டது. இதன் மூலம் பாதுகாப்பான இருப்பிடங்கள் மற்றும் இடிதாங்கிகள் அமைப்பது போன்ற தகவல்களை தெரிந்துகொள்வதுடன் இறப்பு எண்ணிக்கையை பெரிய அளவில் குறைக்க முடியும்.
பேரிடர் மேலாண்மை திட்டம் 2019, இந்திய வானிலை ஆய்வு மையம் மூலமாக பெறப்படும் தகவல்கள் அனைத்தும் அச்சு ஊடகம், மின்னணு ஊடகம் அல்லது சமூக வலைதளங்கள் ஆகியவற்றின் மூலமாக பொதுமக்களிடம் சென்று சேர்ப்பது ஒரு அரசின் கடமை என்று கூறுகிறது.
முன்னெச்சரிக்கை தகவல்கள் அனைத்தும் அந்தந்த இடத்திற்கு ஏற்ப உள்ளூர் மொழிகளில் வெளியிடப்பட வேண்டும் எனவும், பழைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட முறைகளான தண்டோரா அறிவிப்பு, ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கும் முறை ஆகியவை மட்டுமில்லாமல் புதிய தொழில்நுட்பங்களின் (அலைபேசிக்கு தகவல்கள் அனுப்புவது) வழியே கடைசி மனிதன் வரை கொண்டு சேர்த்து முன்னெச்சரிக்கை மற்றும் தகவல்கள் எளிமையாக சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் சூரியபிரகாஷ்.
விரிவுபடுத்தப்பட் வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
இந்த ஆண்டு மின்னல் தாக்கத்தினால் பலியாவோர் குறித்து வெளியாகும் செய்திகள், மின்னல்களை முன்கணிப்பு செய்து மக்களுக்கு அறிவிக்கும் திட்டத்தில் நாம் பின்னடைவில் இருக்கிறோம் என்பதையே காட்டுகிறது. மின்னல்கள் குறித்த முறையான முன்னறிவிப்பு மக்களுக்கு அளிக்கப்பட்டு, பாதுகாப்பு வழிமுறைகளும் அளிக்கப்பட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
புவிவெப்ப நிலை உயர்வினைக் குறைப்பதே முதன்மையானது
வேகமாக உயர்ந்து வரும் புவி வெப்பநிலையின் அளவினை குறைப்பதற்கான முயற்சியினை உலக நாடுகள் விரைவாக இணைந்து முயலாவிட்டால் அனைத்து விதமான இயற்கைப் பேரிடர்களும் தொடர்ந்து நிகழும் சூழல் ஏற்படும்.
புவி வெப்பநிலை உயர்வால் ஏற்பட்ட பருவ நிலை மாற்றமானது, நாம் இன்று சந்திக்கும் பெருந்தொற்று நோய்கள், வெள்ளம், வறட்சி, பூகம்பம், சுனாமி, மின்னல் போன்ற அனைத்திற்கும் மூல காரணியாக இருக்கிறது. இந்த எல்லா பேரிடர்களும் வரலாற்றின் பல கட்டங்களில் ஏற்பட்டிருந்தாலும், தற்போது இவை உருவாகும் விகிதம் கற்பனைக்கு எட்டாத வகையில் அதிகரித்து வருகிறது.
பருவநிலை மாற்றத்தினை முறைப்படுத்த முயலாமல், ஒவ்வொரு இயற்கைப் பேரிடரையும் தனித்தனி நிகழ்வுகளாக பார்ப்பதன் மூலமாக நாம் நிச்சயமாக இந்த புவியினை அழிவிலிருந்து காப்பாற்ற இயலாது.
நன்றி:
- IndiaSpend
- South West Monsoon 2019 Lightning Report