ரிக் வேதம் விருத்திரன் கொலை

பாபர் மசூதி இடிப்பு – ரிக்வேத கால வன்முறை உளவியலின் தொடர்ச்சி

பாபர் மசூதி இடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நாட்டையே 28 ஆண்டுகளாக உலுக்கி, மத ஒருப்பாட்டை சீர்குலைத்த ஒரு மோசமான வன்முறை செயலுக்கு எவரும் தண்டிக்கப்படவில்லை. இத்தனை பெரிய குற்றத்தில் எவரும் தண்டிக்கப்படாததற்கு வைதீக மரபின் வழிவந்தோர் எந்த குற்ற உணர்ச்சிக்கும் உள்ளாகவில்லை. சி.பி.ஐ கடமை தவறியதாக விமர்சிப்பதற்குக் கூட திறந்த மனம் பலருக்கும் வரவில்லை. இந்த நியாயப்பாட்டிற்கான தர்க்கம் எங்கிருந்து பெறப்பட்டது? 

450 ஆண்டுகால பழமையான மசூதி இடிக்கப்பட்டது அவ்வளவு நியாயமானதாக ஏன் கொண்டாடப்படுகிறது? 1992-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் நடந்த அனைத்து மதக் கலவரங்களுக்குப் பின்னாலும்  பாபர் மசூதி இடிப்பின் தாக்கம் இருக்கிறது. காந்தி என்கின்ற பூத உடல் வலதுசாரி தீவிரவாதிகளுக்கு குறுக்கீடாக இருந்ததுபோல, ஒரு மண் சுவரால் எழுப்பப்பட்ட கட்டிடமும் அவர்களுக்கு குறுக்கீடாக இருந்திருக்கிறது.

வடகிழக்கு மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்தவுடன் லெனின் சிலையை தகர்த்தார்கள். அந்த சிலை அவர்களை இடைமறிக்கிறது. அதேபோல்தான் தமிழ்நாட்டில் பெரியார் சிலையும். சிலைகள், கட்டிடங்கள், மனிதர்கள் இவ்வனைத்தும் உயர்திணை, அஃறிணை பாகுபாடில்லாமல் எதோ ஒரு வகையில் அவர்களைக் குறுக்கிடுகிறது. மக்களிடமிருந்து அவர்களை அந்நியப்படுத்துகிறது. அதனால்தான் அவர்கள் இன்னும் ஆக்கிரமிப்பு மனநிலையில் இருக்கிறார்கள். 

பாபர் மசூதியை இடித்ததைக் கொண்டாடும் இந்துத்துவவாதிகள்

இந்த மனநிலையை எப்படி பகுப்பது?

ஆரிய ஆதிக்க தத்துவார்த்த பின்புலம் கொண்ட கட்சியான பாஜகவானது, ஒரு மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்தவுடன் அங்கு பல ஏற்கனவே நடைமுறையில் இருந்த பல விடயங்கள் சூறையாடுகிறது. கலாச்சார சூழல் மாற்றியமைக்கப்படுகிறது. வன்முறைக் கலாச்சாரம் ஊக்குவிக்கப்படுகிறது. வரலாற்று அரசியல் சின்னங்கள் தகர்க்கப்படுகிறது. இது ஒரு விதமான நாடோடி சமூகத்தின் பாதுகாப்பின்மையில் இருந்து எழக்கூடிய வன்முறை. 

ரிக் வேத மரபின் தொடர்ச்சியே அவர்களின் ஆதிக்க வன்முறை

ரிக்வேத வைதீக மரபை அடிப்படையாகக் கொண்ட ஆரியர் வருகையில் இருந்து அந்த போக்கு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நிலம் இல்லாமல் நாடோடிகளாக வந்த ஆரியர்கள் கால்நடை மேய்க்கும் சமூகமாக இந்திய துணைக் கண்டத்திற்குள் வந்தார்கள். இந்தியத் துணைக் கண்டத்தின் பூர்வீக மக்களான தாசர்களும் தஸ்யூக்களும் நிலத்தை அடிப்படையாகக் கொண்ட வேளாண் சமூகமாக வாழ்ந்து வந்தனர். வேளாண்மைக்கு பிரதானமாக அமைந்தது நதிகள். அந்த நதிகளுக்கு குறுக்கே சிறு சிறு தடுப்பணைகளைக் கட்டி நீரைத் தேக்கிவைத்து நிலத்தைப் பண்படுத்தி விவசாயம் செய்தனர். 

இந்த போக்கு ஆரியர்களுக்கு பொருத்தமில்லாமல் இருந்துள்ளது. அவர்களின் ரிக்வேத முறைப்படி நீரைத் தடுப்பது பாவம். எனவே அவர்கள் தங்களது கடவுளான இந்திரனுக்கு மாடுகளையும் ஆடுகளையும் வெட்டி தீயில் போட்டு வேள்வி நடத்தினார்கள். அந்த வேள்வியின் நியாயப்பாட்டில் அங்கிருந்த அனைத்து தடுப்பணைகளையும் உடைத்தார்கள். தாசர்களும் தஸ்யூக்களும் கொல்லப்பட்டனர். 

இதனைப் பற்றி ரிக்வேதத்தில் பல பாசுரங்கள் கூறுகின்றன. இதனால்தான் இந்திரனுக்கு புரந்தரன் எனும் பெயரும் உள்ளது. பூர்வீக நிலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு வேளாண் சமூகத்தை ஆக்கிரமிக்கும் பொருட்டு நடத்தப்படும் அனைத்து வன்முறைகளும் நியாயமானதாக ஆரியர்களின் ரிக்வேதம் குறிப்பிடுகிறது. பூர்வீக சமூகத்தின் நீர்நிலைகளை விருத்திரன் என்னும் அசுரனாக ரிக்வேதம் கூறுகிறது. அந்த கொடிய அசுரனை கொல்வதற்காகவே இந்திரன் பிறந்தான் என்று கொண்டாடப்படுகிறது. இது வைதீக மரபின் உள்ளார்ந்த மனநிலை.

வன்முறையால் ஆதிக்கம் பெறுவதைப் பற்றி ரிக் வேதம் சொல்வது

பாம்பைப் போன்று நீர் நிலைகளின் குறுக்கே தடையாக படுத்திருக்கும்  விருத்திரன் என்று ரிக்வேதம் கூறுகிறது. 

’‘இந்திரன் தன்னுடைய மிகப் பயங்கரமான வஜ்ஜிராயுதத்தால் மோசமான விருத்திரனைத் துண்டு துண்டாக வெட்டினான். கோடரியால் வெட்டப்பட்ட மரத்துண்டு போல் விருத்திரன் பூமியின் மீது சரிந்து கிடக்கிறான்.” (ரிக்வேதம் 1.32.5)

”விழுந்து கிடக்கும் விருந்திரனின் மீது பெருகிப் பாயும் நீர், கரைகளை உடைத்துச் செல்லும் நதியைப்போல் அவன் மீது  ஓடுகிறது. தனது அளவற்ற பலத்தால் அடைத்து வைத்திருந்த நீர்த்தாரைகள் பெருகி ஓடும் போது அதற்குள் அவன் விழுந்து கிடக்கிறான்.” (ரிக்வேதம் 1.32.8)

இங்கு விருத்திரன் என்பது வெறும் தடுப்பணையை மட்டும் குறிக்கவில்லை. அதை கட்டியவர்களையும் அதை நம்பி வாழ்ந்து கொண்டிருந்த பெரும் சமூகத்தையும் உள்ளடக்கியது. எனவேதான் ரிக் வேதத்தில் பல இடங்களில்  விருத்திரன்கள் என்று பன்மையில் குறிப்பிடப்படுகிறது. எனவே இது ஆரியர்களை எதிர்த்தவர்களை குறிக்கும் குறியீடு என்று  டி.டி.கோசாம்பி குறிப்பிடுகிறார். 

”தாசர்களால் அடக்கி வைக்கப்பட்டிருந்த நீரோட்டத்தை நீ வெற்றி கொண்டாய்” என்று ரிக் வேதப் பாடல் கூறுகின்றது (ரிக்வேதம் 8.98.18)

விருத்திரர்கள் எனும் பன்மைக் குறியீடு ஆரியர்களின் எதிரிகளாக இருக்கும் நிஜ மனிதர்களையே, அதாவது பூர்வீக இந்திய மக்களையே குறிப்பிடுகிறது என்று இந்தியவியல் ஆயவாளர் ஏ.பீ.கீத் கூறுகிறார்.

வேத காலத்தை மீட்டெடுக்க முயலும் உளவியலின் ஒரு பகுதி

ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க-வின் இலக்கு ஆரியவர்த்தம் என்ற கோட்பாடுதான். இன்று நடக்கும் அனைத்து சிதைவுகளுக்கும் அடிப்படையாக இருப்பது வேத காலத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற உளவியல்தான். வைதீக சிந்தனை உடையவர்களுக்கு இன்னும் ஆக்கிரமிப்பு மனநிலை நிறைவடையவில்லை. அவர்கள் இஸ்லாமியம் என்பதனை வெளிப்படையான ஒரு பகையாக பாவிக்கிறார்கள். அடிப்படையில் அவர்களுக்கு சாதி, பெண்ணடிமைத்தனம், பார்ப்பனிய மேலாதிக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய சமத்துவமும் சகோதரத்துவமும் அற்ற சமூகக் கட்டமைப்பின் இருப்பே தேவை. அதுவே அவர்களின் தர்மம். அதுவே அவர்களின் நியாயம். 

அதன்படிதான் ஆரிய வேத சமஸ்கிருதத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள வைதீக மரபினர், பல்வேறு மொழி, பண்பாடு, கலாச்சாரத்தை உள்ளடக்கிய மிகச் செழுமையான இந்தியத் துணைக்கண்டத்தை தமதாக்கிக் கொள்ள இன்னும் தொடர்கிறார்கள். அந்த ஆக்கிரமிப்பிற்கான நியாயப்பாட்டை அவர்கள் ரிக்வேதத்தில் இருந்தே எடுத்துக் கொள்கிறார்கள்.

ஆரியம் சொல்லும் நீதி நடைமுறை

“வஜ்ஜிராயுதம் ஏந்தி இந்திரன் எங்களுக்கு பாதை அமைத்துக் கொடுத்தான். எங்கள் நீரோட்டத்தைத் தடுத்த விருத்திரனைக் கொன்றான்’‘ என்று நதிகள் விசுவாமித்திரனை நோக்கிக் கூறியதாக ரிக்வேதம் (3.33.6) குறிப்பிடுகிறது. 

இதுபோன்று இங்குள்ள இந்துத்துவவாதிகளின் கருத்தாளுகைக்கு உட்பட்ட மக்கள் மசூதியை தகர்த்து, ராமரை வழிபட எங்களுக்கு பாதை அமைத்துக் கொடுத்ததாக பாஜக-வைக் கொண்டாடுகிறார்கள். அதனால்தான் பாபர் மசூதியில் ராமர் கோயிலுக்கு மோடி அடிக்கல் நாட்டியதைப் பார்த்து ஆர்ப்பரிக்கிறார்கள். அதுவே ஆரியம் சொல்லும் நீதி.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *