ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியாளர்களாக மாறுவதற்கு முன்பு அவர்கள் தத்துவவாதிகளாக இருக்க வேண்டும். மனித இனத்தின் குறிக்கோள் என்ன, மனித இனம் எதை உருவாக்கவேண்டும் என்பதனை அவர்கள் முதலில் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். மனிதர்கள் வாழ்வதற்கான ஆதாரமாக எது உள்ளது என்ற அடிப்படை வரையில் ஆராய்ச்சியாளர்கள் செல்ல வேண்டும்.
வேளாண்மைப் பற்றிய என் கோட்பாடுகளை நடைமுறையில் பயன்படுத்திப் பார்த்தபோது, நான் பல வழிமுறைகளைக் கையாண்டாலும் என்னுடைய கருத்தானது இயற்கையை ஒட்டிய ஒரு முறையை உருவாக்க வேண்டும் என்பதிலேயே உறுதியாக இருந்தது. நான் தேவையற்ற பல வேளாண்மை நடைமுறை உத்திகளைக் களைந்தெறிந்ததன் மூலம் இதை சாதித்தேன். ஆனால் நவின அறிவியல் வேளாண்மைக்கு இப்படிப்பட்ட நோக்கம் எதுவும் கிடையாது என்றார் ஜப்பானின் இயற்கை வேளாண் விஞ்ஞானி மாசனபு ஃபுகாகோ.
தனித்தனியாக பிரித்து பார்க்கக் கூடாததே வேளாண்மை
ஆராய்ச்சி குறிக்கோளற்று அலைந்து திரிந்தது. ஆராய்ச்சியாளர்கள். மகசூலை பாதிக்கும் எண்ணற்ற இயற்கையான அம்சங்களில் ஏதாவது ஒரு பகுதியை மட்டும் உற்று நோக்குகின்றனர். மேலும் இத்தகைய இயற்கை காரணிகள் ஆண்டுக்கு ஆண்டு இடத்திற்கு இடம் வேறுபடுகிறது. பயிரிடும் நிலம் அதேதான் என்றாலும் ஒரு விவசாயியானவர் தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாறுதலுக்கு ஏற்பவும், பூச்சியினப் பெருக்கங்களுக்கு ஏற்பவும், மண்ணின் நிலைக்கு ஏற்பவும் மற்றும் இதர இயற்கை காரணிகளுக்கு ஏற்பவும் ஒவ்வொரு ஆண்டுக்கும் ஏற்றார்போல் பயிர் செய்ய வேண்டும்.
இயற்கை சுழன்று கொண்டே இருக்கிறது. எந்த இரண்டு ஆண்டுகளும் ஒன்றுபோல இருப்பதில்லை. நவீன ஆய்வுகள் இயற்கையை சிறு பிரிவுகளாக பிரித்து அதை இயற்கை விதிகளுக்கும், நடைமுறை அனுபவங்களுக்கும் ஒவ்வாததுபோல் ஆய்வு செய்கின்றனர். ஆராய்ச்சியின் முடிவுகள், ஆராய்ச்சியின் வசதிக்கு ஏற்றாற்போல அமைத்துக் கொள்ளப்படுகின்றன. விவசாயியின் தேவைகளுக்கு ஏற்ப அவை அமைக்கப்படுவதில்லை. இந்த ஆய்வு முடிவுகளை வெற்றிகரமாக விவசாயிகளின் நிலத்தில் பயன்படுத்தி விடலாம் என்று நினைப்பது மாபெரும் தவறாகும்.
இயற்கை சூழல் குறித்த புரிதல் இல்லாமல் ஆய்வு இருக்க முடியாது
அண்மையில் எமி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் வளர்சிதை மாற்றத்திற்கும், நெல் அறுவடைக்கும் உள்ள தொடர்பு குறித்து ஒரு நீண்ட புத்தகம் எழுதியுள்ளார். அப்பேராசிரியர் அடிக்கடி என் பண்ணைக்கு வந்து. நிலத்தில் சில அடிகள் தோண்டி பரிசோதிப்பார். மாணவர்களை அழைத்து வந்து சூரிய ஒளி பாயும் கோணம், நிழல்கள் அது இது என்று அனைத்தையும் அளக்கச் சொல்வார். தாவர மாதிரிகளை ஆய்வு சாலைக்கு ஆய்வுக்காக எடுத்துச் செல்வார். நான் அவரிடம் கேட்பேன், “நீங்கள் திரும்பிச் சென்றதும், உழத்தேவையற்ற, நேரடி விதைப்பு முறையைச் செய்யப் போகிறீர்களா?” அதற்கு அவர் சிரித்தவாறே, “நான் செயல்முறைகளை உங்களிடம் விட்டு விடுகிறேன். என் வேலை ஆய்வோடு சரி” என்று பதிலளிப்பார்.
இப்படித்தான் விஷயங்கள் எல்லாம். நீங்கள் தாவர வளர்சிதை மாறுபாடு பற்றி ஆராய்வீர்கள். மண்ணின் வளத்தை அது எவ்வாறு கிரகித்துக் கொள்கிறது என்பதை கவனிப்பீர்கள். அதை ஒரு புத்தகமாக வெளியிடுவீர்கள். ஒரு டாக்டர் பட்டமும் பெற்றுக் கொள்வீர்கள். ஆனால் உங்கள் கோட்பாடு களத்தில் செல்லுபடியாகக் கூடியதா என்று மட்டும் கேட்கக்கூடாது. வளர்சிதை மாற்றம், சராசரி வெப்பநிலை 84 ஃபாரன் ஹீட்டாக இருக்கும்போது எப்படி மேலே உள்ள இலையில் உற்பத்தித் திறனை பாதிக்கிறது என்பதை நீங்கள் விவரித்தால் கூட, வெப்ப நிலை 84’ அளவு இல்லாத இடங்கள் அனேகம் இருக்கின்றன. எமியில் இவ்வாண்டு 84’ இருந்தால் அடுத்த ஆண்டு 75’ இருக்கும்.
வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம், மாவுப் பொருள் உற்பத்தி பெருகி அறுவடை அமோகமாக இருக்கும் என்று பொதுப்படையாகக் கூறுவது மாபெரும் தவறாகும். ஓரிடத்தில் உள்ள நிலத்தின் புவியியற் சூழல், மண்ணின் நிலை, அதன் அமைப்பு, கழிவுநீர், நிர்வாகம், சூரிய வெளிச்சம் பெறும்நிலை, பூச்சியினத் தொடர்பு, உபயோகிக்கப்படும் விதை வகைகள், சாகுபடி முறைகள் போன்ற எண்ணற்ற காரணிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இவை அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும் அறிவியல் ஆய்வு நடக்கக் கூடிய ஒன்றல்ல.
இயற்கை வளத்தை சீர்செய்யத்தான் வேளாண் தொழில்நுட்பங்கள் வந்ததா?
இப்பொழுதெல்லாம் பசுமைப் புரட்சிப் பற்றி அதிகமாகப் பேச்சு அடிபடுவதை நீங்கள் கவனித்திருக்கக்கூடும். இந்த வீரியமற்ற விதைகள் மிகவும் பலகீனமற்று இருப்பதால், ஒரு விவசாயி ஒரு போகத்திற்குள்ளேயே ஏழெட்டு முறை வேதி உரங்களையும், பூச்சிக் கொல்லிகளையும் பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார். குறுகிய காலத்திற்குள்ளேயே பூமியிலுள்ள நுண்ணுயிர்களும், கரிமப் பொருட்களும் சுத்தமாக அழிந்துவிடுகின்றன.
மண்ணில் உயிர்ச்சத்துகள் அழிக்கப்பட்ட பிறகு பயிரானது வேதி உரங்கள் போன்ற வெளி சத்துகளை சார்ந்திருக்கும் நிலைக்கு வந்து விடுகின்றது. விவசாயி “அறிவியல்” செயல்முறைகளைப் பயன்படுத்தும்போது, விளைவுகள் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதுபோல ஒரு தோற்றம் நம்முன் தோன்றுகிறது. இயற்கை வளம் போதுமானதாக இல்லாததால் அதைச் சீர்செய்ய அறிவியல் முன்வந்துள்ளது என்று இதைத் தவறாக புரிந்து கொள்ளக்கூடாது. இயற்கை வளம் அழிக்கப்பட்டதால் தான் அதற்கு அப்படி ஒரு தேவையே வந்துள்ளது.
இயற்கை முறையில் நிலங்களை மீட்கலாம்
வைக்கோலை பரப்புவது, தீவனப்பயிர்களை வளர்ப்பது, நிலத்தில் இருந்து பெறப்படும் அனைத்துக் கரிமப் பொருட்களையும் மீண்டும் நிலத்திற்கே அளிப்பது, ஆகியவை நெற்பயிரும், மாரிக்கால பயிரும் ஒவ்வொரு ஆண்டும் வளர்ப்பதற்குத் தேவையான விளக்கத்தை பூமிக்கு அளிக்கின்றன. இதன்மூலம் ஏற்கனவே உழப்பட்டதன் மூலமும், வேதிப் பொருட்களைப் பயன்படுத்தியதன் மூலமும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலங்களையும் இயற்கை வேளாண்மை மூலம் வெற்றிகரமாக மீட்டுவிடலாம்.
மாசனபு ஃபுகோகா எழுதிய ஒற்றை வைக்கோல் புரட்சி புத்தகத்தின் முக்கியப் பகுதிகளைத் தான் இங்கே அளித்தோம்.
ஒற்றை வைக்கோல் புரட்சி
‘பூவுலகின் நண்பர்கள்’ இயக்கத்தினர் முதன் முதலில் 1991-ம் ஆண்டு ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ நூலை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டனர். இன்று பல மொழிபெயர்ப்புகள் வந்துவிட்டது.
இன்று இயற்கை விவசாயம் குறித்து மிகப் பரவலான விவாதங்களை உருவாக்கிய மிக முக்கியமான புத்தகமாகும் இது.
விவசாயத்தைப் பற்றியான புத்தகம் மட்டுமல்ல. தற்சார்பு வாழ்க்கை, உணவுப் பழக்கங்கள், உடல் நலம், கலாச்சார மதிப்புகள், மனித அறிவின் எல்லை, வாழ்வியல் கலை ஆகியவனற்றைக் குறித்தும் முக்கியமான விவாதங்களை வைக்கிறது. இதன் தத்துவம் குறித்துப் பேச்சுவாக்கில் கேள்விப்பட்டவர்களுக்கு இது நெற்பயிர், மாரிக்காலப் பயிர், ஆரஞ்சு, காய்கறிகள் போன்றவற்றை பண்ணையில் எப்படி வளர்ப்பது என்பது குறித்த விரிவான விளக்கங்களைக் கொண்டிருப்பது வியப்பாக இருக்கலாம்.
புத்தக ஆசிரியர்கள் ஏதாவது ஒரு துறையில் நிபுணர்களாக இருப்பார்கள் என்றும், புத்தகங்கள் ஒரே ஒரு துறை குறித்து மட்டுமே பேசும் என்றும் எதிர்பார்க்க நாம் கற்றுக்கொண்டு விட்ட காரணத்தால் ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ நமக்கு மாறுபட்ட அனுபவத்தைக் கொடுப்பதாகவும் அவசியமானதாகவும் இருக்கிறது. தத்துவார்த்தப் பூர்வமாகவும் அதே சமயம் நடைமுறைக்கு ஏற்றதாகவும் விளங்குவதால் இந்நூல் மிக மதிப்பு வாய்ந்தது. வேளாண்மை குறித்து ஈடுபாடு கொள்ள வைக்கும் தூண்டுதலைக் கொடுக்கும் கருவியாக இருக்கிறது.
வேளாண்மை பற்றி அறிந்தவர்களுக்கு ஃபுகோகாவின் முறைகளை அப்படியே இங்குள்ள நிலங்களுக்கு அமல்படுத்த முடியாது என்ற கருத்து இருக்கும். ஆனால் அதனாலேயே இப்புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ள செயல் முறைகளால் நமக்கு ஒரு பயனும் கிடையாது என முடிவு கட்டிவிடக் கூடாது. ஏனெனில் நிலங்களை தட்பவெப்ப நிலை மற்றும் பயிர்கள் குறித்த தெளிவான பார்வையுடன், செம்மையான நோக்குடன் அணுகும்போது அதனால் விளையும் பயன்கள் எத்தகைய பெரியதாய் இருக்கும் என விளக்கும் பெட்டமாக இந்த புத்தகம் இருக்கிறது. இயற்கையினை நோக்கிய மிக முக்கிய நேசிப்பினை இந்த புத்தகம் நமக்கு வழங்கி நம்மை இயற்கையோடு வாழவும் பழகத் தூண்டுகிறது.
தரவிறக்கம் செய்து படிக்க: ஒற்றை வைக்கோல் புரட்சி