ஊடகங்களில் ஒரே நாளில் கதாநாயகனாகவும், மறு நாளே வில்லனாகவும் மாற்றப்பட்ட ஒரு மருத்துவரின் வாழ்க்கை
ஏழு மாத கால சிறைவாசத்துக்குப் பிறகு கடந்த செப்டம்பர் 1-ம் தேதி மதுரா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார் மருத்துவர் கஃபீல் கான். மூன்று வருடங்களுக்கு முன்னர் கோரக்பூர் பி.ஆர்.டி (BRD) மருத்துவமனையில் பணியில் இருந்தபோது ஆக்சிஜன் பற்றாக்குறையால் நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்து போன சம்பவத்தின் போதுதான் இவர் முதன்முதலாக கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் பிணை வழங்கப்படாமல் ஆறு மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்தார்.
இவை எல்லாம் நடப்பதற்கு முன்னர் அனைத்து மருத்துவர்களையும் போல, இவரும் ஒரு சாதாரண மருத்துவராகவே பணி செய்து கொண்டிருந்தார். 2017-ல் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை நிகழ்ந்த போது, இவர் சில குழந்தைகளை காப்பாற்ற முயன்றபோது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம்தான் இவரது வாழ்க்கையையே மாற்றியது.
கஃபீல் கானின் வாழ்க்கை எப்படி தொடங்கியது?
கோரக்பூர் மாவட்டம் பசந்த்பூர் பகுதியில் கஃபீல் கான் (46) குடியிருந்தார். இவர் தன் ஆரம்பக் கல்வியை கோரக்பூரில் உள்ள அமர்சிங் குழந்தைகள் பள்ளியில் பயின்றார். பின்னர் மேல்நிலை மற்றும் உயர்நிலைக் கல்வியை மகாத்மா காந்தி கல்லூரியில் முடித்தார். ஒருங்கிணைந்த முன் மருத்துவ தேர்வு (CMPT) மற்றும் மணிப்பால் மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் தேர்வில் அனைத்திந்திய அளவில் 5-வது ரேங்க் எடுத்துத் தேர்ச்சி பெற்றார். பின் தன் குடும்ப ஆசையை நிறைவேற்ற மணிப்பால் நிறுவனத்திலேயே சேர்ந்து மருத்துவக் கல்வியைத் தொடர்ந்தார். மணிப்பால் மருத்துவ நிறுவனத்தில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவக் கல்வியை முடித்துவிட்டு அங்கேயே குழந்தைகள் நலப் பிரிவில் துணைப் பேராசிரியராக தன் பணியைத் தொடர்ந்தார். கிட்டத்தட்ட 12 ஆண்டு காலம் மணிப்பால் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பணிபுரிந்தார். பின் 2013-ல் சபிஸ்டா கான் என்பவரை திருமணம் செய்துகொண்டு கோரக்பூருக்கு திரும்பினார்.
2013 முதல் 2016 வரை மூத்த மருத்துவராக பி.ஆர்.டி மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டு இருந்தார். பின் தன் ஒப்பந்தம் ஏப்ரல் மாதத்தோடு முடிவடைந்த நிலையில் குடும்ப மருத்துவப் பிரிவில் பணி செய்துவந்தார். பின் ஆகஸ்ட் மாதம் அதே மருத்துவமனையில் குழந்தைகள் நலப் பிரிவில் துணைப் பேராசிரியராக பணியமர்த்தப்பட்டார்.
கோர சம்பவம் நடந்தேறிய நாள்
ஆகஸ்ட் 10, 2017 அன்று மாலையில் மருத்துவமனைக்கான திரவ ஆக்சிஜன் விநியோகம் நிறுத்தப்பட்டுவிடும் என்பது பி.ஆர்.டி மருத்துவமனை நிர்வாகத்திற்கு முன்பே தெரிந்திருந்தது. அன்று காலை 11:20 மணிக்கு ஆக்சிஜன் விநியோகிக்கும் நிறுவனம், ஆக்சிஜன் சேவை நிறுத்தப்படும் செய்தியினை பி.ஆர்.டி மருத்துவமனை அதிகாரிகளுக்கு அனுப்பியிருந்தது. இத்தகவல்கள் ஊடகங்களிலும் கசிந்து, பல செய்தி நிருபர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாக ஆக்ஸிஜன் விநியோகிக்கும் நிறுவனத்தின் கடிதம் பரப்பப்பட்டது.
செய்திகள் வெளியான பின்னரும் மருத்துவமனை நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் ஆக்ஸிஜன் விநியோகத்திற்கு மாற்று ஏற்பாடு ஏதும் செய்யவில்லை. இதன் காரணமாக அன்று இரவு 7:30 மணியளவில் அந்த கோரமான சம்பவம் நடந்தேறியது. ஏராளமான குழந்தைகள் பி.ஆர்.டி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தனர்.
அடுத்த நாள் ஆகஸ்ட் 11-ம் தேதி காலை 11 மணியளவில் மூளை வீக்கப் பிரிவில் மருத்துவர் கஃபீல் கான் தொலைபேசியில் பரபரப்பாக பேசிக் கொண்டிருப்பதை நிருபர் ஒருவர் பார்த்துள்ளார். பின் சிறிது நேரத்தில் வந்த ஒரு லாரியிலிருந்து பெரிய அளவிலான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இறக்கி வைக்கப்பட்டதையும் கவனித்து வந்துள்ளார்.
அந்த நேரத்தில் ஒரு பெண்மணி அழுதுகொண்டே தன் குழந்தையை தூக்கிக் கொண்டு ஓடி வந்திருக்கிறார். அதைக் கண்ட கஃபீல் கான வேகமாக ஓடி அந்த குழந்தையை தன் கையில் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குள் ஓடியிருக்கிறார். இந்த காட்சி புகைப்பட நிருபர் ஒருவரால் படமெடுக்கப்பட்டது.
அடுத்த நாள் குழந்தைகள் மரணம் குறித்த செய்தி பரவ ஆரம்பித்த போது, சில செய்தித்தாள்களில் மருத்துவர் கஃபீல் கான் குழந்தையைக் காப்பாற்றிய புகைப்படம் பதிவிடப்பட்டு, அவரைக் குறித்த குறிப்புகளும் வெளிவந்தன. ஆக்சிஜன் ஊழலினால் கோபத்தில் இருந்த மக்கள், மருத்துவர் கஃபீல் கானின் சேவையினால் ஈர்க்கப்பட்டனர். இதனால் அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. கஃபீல் கான் ஒரு நாயகனாக சமூக வலைதளங்களில் புகழப்பட்டார்.
ஆகஸ்ட் 12-ம் தேதிவரையில் இந்த ஆக்சிஜன் குற்ற விவகாரத்தில் எந்த இடத்திலும் கஃபீல் கானின் பெயர் உச்சரிக்கப்படவில்லை. அதற்கு முன்தினம் ஆகஸ்ட் 11 அன்று, மாவட்ட மாஜிஸ்திரேட் ராஜிவ் ரௌடெலா இச்சம்பவம் குறித்து விசாரித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த பொழுதுகூட, கஃபீல் கான் அவருக்கு அருகில் நின்று கொண்டு தேவையான முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டிருந்தார்.
அந்த செய்தியாளர் சந்திப்பில் மாஜிஸ்திரேட், இந்த சம்பவம் குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு அமைப்பதாக அறிவித்தார். அந்த குழு 24 மணிநேரத்திலேயே விசாரித்து அறிக்கை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் கூட மருத்துவர் கஃபீல் கான் குற்றவாளி என குறிப்பிடப்படவில்லை.
ஆகஸ்ட் 12-ம் தேதி மாநில சுகாதாரத்துறை சித்தார்த் நாத் சிங் மற்றும் மருத்துவ கல்வியியல் துறையின் அமைச்சர் அஸ்தோஷ் டாண்டோன் (Ashutosh Tandon) ஆகியோர் பிஆர்டி மருத்துவமனைக்கு வருகை தந்து பார்வையிட்டனர். அப்போது டாண்டோன் ஆகஸ்ட் மாதத்தில் குழந்தைகள் இறக்கதான் செய்வார்கள் என்ற ரீதியில் பத்திரிக்கையாளர்களிடம் சொன்னது பெரும் கண்டனங்களை உருவாக்கியது. அதற்குப் பிறகு அவர் பி.ஆர்.டி கல்லூரி முதல்வரான ராஜீவ் மிஷ்ராவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
ஆகஸ்ட் 12, 2017-க்குப் பின் நடந்த மாற்றங்கள்
அதற்குப் பின்னர் இச்சம்பவம் தலைகீழாக மாற்றப்பட்டு, இக்குற்றச்சாட்டில் கஃபீல் கான் உள்ளே கொண்டு வரப்பட்டார். என்செபாலிடிஸ் நோயாளிகள் வார்டின் பொறுப்பாளராக இருந்ததற்காக, ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு அவர் குற்றம் சாட்டப்பட்டார். குழந்தைகளுக்குத் தேவையான ஆக்சிசன் சிலிண்டர்களை மருத்துவர் கஃபீல் கான் திருடி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுவிட்டதாக சமூக வலைதளங்களில் சிலர் பரப்ப ஆரம்பித்தனர். மேலும் ஏற்கனவே அவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்ட ஒரு பாலியல் வழக்கு ஒன்றினை மீண்டும் தோண்டி எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர். இரண்டு நாட்களுக்கு முன் கதாநாயகனாக இருந்தவர், ஒரேயடியாக வில்லனாக சித்தரிக்கப்பட்டார். பல செய்தி நிறுவனங்கள் இந்த சித்தரிப்புகளை மேற்கொண்டனர்.
இதனால் ஊடக முக்கியத்துவம் பி.ஆர்.டி மருத்துவமனையில் இருந்து மருத்துவர் கஃபீல் கானின் குடும்பத்தினர் நடத்திவரும் ’மெடி ஸ்பிரிங் மருத்துவமனை’ மீது மாறியது. இதையடுத்து ஆகஸ்ட் 13-ம் தேதி பி.ஆர்.டி மருத்துவமனைக்கு உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சென்றார். அப்போது செய்தியாளர் சந்திப்பின் போது நிருபர் ஒருவர் அரசு மருத்துவர்கள் தனியாக தனியார் மருத்துவமனைகளில் வேலை செய்வது குறித்து கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு யோகி ஆதித்யநாத் கொதித்தெழுந்து தன் நாற்காலியிலிருந்து எழுந்து, இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபம் மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அன்று மாலையே மருத்துவர் கஃபீல் கான் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
அன்றே மருத்துவக் கல்வி இயக்குனரான கே.கே.குப்தா கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களுக்கும் நேர்காணல்களை அளித்தார். அதில் மருத்துவர் கஃபீல் கான் தனியாக தனியார் மருத்துவப் பணியும் மேற்கொண்டு வருவதாக முதல்வர் ஆதித்தியநாத்திடம் ஒப்புக் கொண்டதாக தெரிவித்தார். ”ஏற்கனவே 52 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கையிருப்பில் இருந்ததாகவும், மருத்துவர் கஃபீல் கான் ஏற்பாடு செய்த மூன்று ஆக்சிஜன் சிலிண்டர்களால் என்ன பெரிய மாற்றம் வந்திருக்கப்போகிறது” என்றும் கேட்டு கஃபீல் கானை நாயகனாக காட்டிய ஊடகங்களை கேலிக்குள்ளாக்கினார்.
ஆக்சிஜன் சிலிண்டர் ஊழல்கள் குறித்து பேச வேண்டிய இடத்தில், தனியார் மருத்துவமனையில் பணிபுரிவது என்பது விவாதமாக்கப்பட்டது. அதைப் பற்றியே அனைவரும் பேசினர். ஆனால் கஃபீல் கானைத் தவிர வேறு எந்த அரசு மருத்துவர் மீதும் கூடுதல் நேரங்களில் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிவதற்காக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பி.ஆர்.டி மருத்துவமனையில் பணிபுரிகிற பல அரசு மருத்துவர்கள், வெளியே தனி மருத்துவமனை வைத்து மருத்துவம் பார்த்துதான் வருகிறார்கள்.
பின்னர் லக்னோவிற்கு சென்ற மருத்துவக் கல்வி இயக்குனர் முதன்மை மருத்துவக் கல்வி இயக்குநரிடம் அறிக்கையை சமர்ப்பித்ததையடுத்து அரசாங்கத்தின் உத்தரவுப்படி, ஆகஸ்ட் 23-ம் தேதி ஹஸ்ரத்கஞ்ச் காவல் நிலையத்தில் கஃபீல் கான் உட்பட 9 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
கஃபீல் கான் கைது
இதையடுத்து செப்டம்பர் 9-ம் தேதி கஃபீல் கான் கைது செய்யப்பட்டார். “எல்லாம் சில நாட்களில் சரியாகி விடும்” என்று குடும்பத்தாருக்கு கஃபீல் கான் சிறையிலிருந்து கடிதம் எழுதினார். அவரது குடும்பத்தினர் அவரது கைதுக்கு எதிராக எதுவும் பேசவில்லை. குடும்பத்தினரை எதுவும் பேச வேண்டாம் என கஃபீல் கான் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறார்.
”பயத்தின் காரணத்தினாலேயே நான் அமைதியாக இருந்தேன். நான் கைது செய்யப்பட்டபோதும், ஆறு மாத காலத்திற்கு சிறைப்படுத்தப்பட்ட போதும் அமைதியாகவே இருந்தேன். ஆனால் ஆக்சிஜன் வினியோக நிறுவனத்தின் இயக்குனர் மனிஷ் பண்டாரிக்கு பிணை வழங்கப்பட்டதை அறிந்தபோது, நடந்த உண்மை சம்பவத்தை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தேன். இதைத் தொடர்ந்து ஏப்ரல் 17, 2018 அன்று சிறையில் என்னைக் காண வந்த மனைவி சபிஸ்டா கானிடம் நான் ஒரு கடிதம் எழுதவேண்டும் என தெரிவித்தேன். 1 மணி நேரத்தில் கடிதத்தினை எழுதி என் மனைவியிடம் கொடுத்து அனுப்பினேன்.” என்று கஃபீல் கான் தெரிவித்தார்.
அந்த கடிதத்தின் மூலமாகத்தான் கஃபீல் கானுக்கு என்ன நடந்தது என்பது மக்களுக்கு முன்னால் வைக்கப்பட்டது. இந்த கடிதத்தின் மூலமே அந்த சம்பவம் நடந்த நாளன்று கஃபீல் கான் விடுப்பில் இருந்தார் என்பதும் மக்களுக்கு தெரியவந்தது. சம்பவம் நடந்த நாளன்று மருத்துவமனையிலிருந்து சக பணியாளர் ஒருவர் வாட்ஸ்அப் மூலமாக மருத்துவர் கஃபீல் கானுக்கு விஷயத்தினை தெரியபடுத்தியிருக்கிறார். இதையடுத்து மதியம் 2:30 மணியளவில் கஃபீல் கான் பி.ஆர்.டி மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அன்று இரவு முழுவதும் நோயாளிகளைக் கவனித்ததுடன், ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்பாடு செய்யவும் முயன்றிருக்கிறார். இந்த செய்தி கஃபீல் கடிதத்தின் வழியாகத்தான் தெரிய வந்தது.
நீண்ட காலம் சிறைவாசத்தினை முடித்து ஆகஸ்ட் 25, 2018 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றம் கஃபீல் கானை பிணையில் விடுதலை செய்தது. விடுதலைக்குப் பின் அவர் கொடுத்த நேர்காணல் ஒன்றில், தான் விடுப்பில் இருந்ததையும் தாண்டி அன்றிரவு மருத்துவமனைக்கு சென்றதற்காகவும், இரவில் குழந்தைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்பாடு செய்ததற்காகவும் தன்னை தீயவனாகக் காட்டியதற்கு துளியும் வருத்தப்படவில்லை என்று அவர் கூறினார். மேலும் மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடந்தால் அப்போதும் விளைவுகள் குறித்து எந்த கவலையும் கொள்ளாமல் உதவுவதற்கு அங்கு நான் இருப்பேன் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து நடக்கும் கைது
உங்கள் பணியிடைநீக்கம் ரத்து செய்யப்படவில்லை என்றால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு, மூளை வீக்க நோய்க்கான சிறப்பு நிறுவனத்தை தனியாக தொடங்குவேன் என்று தெரிவித்தார். ஆனால் பணியிடை நீக்கம் ரத்து செய்யப்படவும் இல்லை, அவரது சொந்த மருத்துவ நிறுவனத்தையும் தொடங்கவில்லை. தொடர்ச்சியாக பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாக்கப்பட்டார். செப்டம்பர் 2018 அன்று பஹ்ராய்ச்(Bahraich) மாவட்ட மருத்துவமனையில் பிரச்சனை செய்ததாக மீண்டும் கைது செய்யப்பட்டார். பின் ஒரு மோசடி புகாருக்கு உட்படுத்தப்பட்டு, தன் மூத்த அண்ணனுடன் கைது செய்யப்பட்டார். மீண்டும் விடுதலைக்குப் பின்னர் நாடு முழுவதும் மருத்துவ முகாம்கள் நடத்தத் தொடங்கினார்.
CAA போராட்டத்தில் மீண்டும் கைது
மருத்துவர் மேல் பதியப்பட்ட 2 வழக்குகளின் மீதும் துறைரீதியான விசாரணையில் அவர் குற்றமற்றவர் என்று முடிவாகியது. இதனால் அவருக்கு இழந்த வேலை மீண்டும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் உத்திரப்பிரதேச மாநில அரசு புதிய குற்றச்சாட்டுகளை பதிந்து மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தியது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது டிசம்பர் 12, 2019 அன்று அலிகார் முஸ்லீம் பல்கலைகழகத்தில் கஃபீல் கான் ஆற்றிய உரையை அடுத்து மறுநாளே அவர் மீது 153A பிரிவில் வழக்கு பதியப்பட்டது. மேலும் பின்னர் 153B, 109A, 505(2) ஆகிய பிரிவுகளும் சேர்க்கப்பட்டது. அதன்பின்னர் 1 மாத காலத்திற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமால் இருந்தது. பின்னர் திடீரென ஜனவரி 29 அன்று மும்பையில் கைது செய்யப்பட்டார். பின்னர் பிப்ரவரி 10 அன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவருக்கு பிணை வழங்கப்பட்டது. பிணை வழங்கப்பட்ட பின்பும் 3 நாட்களுக்கு அவர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படவில்லை.
தேசிய பாதுகாப்பு சட்டம்
மருத்துவர் கஃபீல் கான் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையால் அங்கே பல நாட்களுக்கு கலவரங்கள் ஏற்பட்டதாகவும், இவரை விடுதலை செய்வதால் மேலும் சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் அவர் விடுதலை செய்யப்படக் கூடாது என்று பிப்ரவரி 13 அன்று சிவில் லைன்ஸ் காவல் நிலைய ஆய்வாளர் வட்டார அதிகாரியிடம் தெரிவித்தார். மேலும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் இவரைக் கைது செய்ய வேண்டும் எனவும் உயரதிகாரிகளுக்கு பரிந்துரைத்தார். இந்த பரிந்துரையை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு மேஜிஸ்திரேட் பார்வைக்கு கொண்டு சென்றார். இந்த பரிந்துரைகளை ஏற்றுக் கொண்ட மாவட்ட மேஜிஸ்திரேட் கஃபீல் கானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
மூன்று மாத கால சிறைக்குப் பின் மேலும் மூன்று மாத காலம் நீட்டிக்கப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 13, 2020 அன்று மேலும் 3 மாத காலத்திற்கு கைது நீட்டிக்கப்பட்டது.
ஏழு மாதத்திற்குப் பின் விடுதலை
இறுதியாக செப்டம்பர் 1 அன்று அலகாபாத் நீதிமன்றம் கஃபீல் கானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் இருந்து விடுதலை செய்து உத்தரவிட்டது. மேலும் தீர்ப்பில் மருத்துவர் கஃபீல் கான் அலிகார் பல்கலைகழகத்தில் ஆற்றிய உரையில் தேச விரோதமாக எதையும் கூறவில்லை, மாறாக தேசிய ஒற்றுமையையே வலியுறுத்தியுள்ளார் எனக் குறிப்பிட்டு இருந்தது.
விடுதலையான கஃபீல் கான் மீண்டும் தன் பழைய வேலையில் தன்னை நியமிக்க வேண்டும் என விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். வெள்ளதினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவியாக தன் வேலையை தொடரப் போவதாக தெரிவித்துள்ளார். ஆனால் இன்னும் அரசு அவர் மீதான நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை.
நன்றி: The Wire