வ.உ.சிதம்பரனார்

சமூக நீதி, பார்ப்பனர் அல்லோதோர் உரிமைப் போராட்டத்தில் வ.உ.சி

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்பு பதிவு – Madras Radicals

திலகர், அரவிந்தர், சுப்ரமணிய சிவா, பாரதியார், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடி சீடரான சுவாமி ராமகிருஷ்ணானந்தர் ஆகியோருடன் தனது விடுதலை அரசியலின் முதல் பகுதியில் செயல்பட்ட வ.உ.சி, சிறைவாழ்வில் இருந்து விடுதலை ஆன பிறகு ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்பில் இன்னும் தீவிரமாக செயல்பட்டார். அதேவேளையில் தமிழ்நாட்டில் நீதிக்கட்சியின் உருவாக்கத்திற்குப் பிறகு வளர்ந்திருந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம் எனும் சமூகநீதி கருத்திலும் பழமையை எதிர்க்கும் பல சீர்திருத்த அரசியலிலும் பல்வேறு பரப்புரைகளை மேற்கொண்டார்.

காங்கிரசில் இருந்த பார்ப்பனர் அல்லாதாரின் இயக்கமான சென்னை மாகாண சங்கத்தின் வேலைத்திட்டத்தை வடிவமைத்தவர்களில் ஒருவர் வ.உ.சி என்று பெரியார் பதிவு செய்துள்ளார்.

வகுப்புவாரி உரிமைக்காக குரல்கொடுத்த வ.உ.சி

பெரியார் காங்கிரசிற்குள் இருந்து வகுப்புவாரி உரிமைக்காக குரல் கொடுத்துக் கொண்டிருந்தபோது, அதனை வலுப்படுத்திய பார்ப்பனர் அல்லாத தலைவர்களில் வ.உ.சி முக்கியமானவர். 1920-ம் ஆண்டு திருநெல்வேலியில் நடந்த காங்கிரசின் 26-வது மாகாண மாநாட்டில் வாக்காளர் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்புவாரி பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்ற தீர்மானத்தை வ.உ.சி கொண்டு வந்தார் என்று 20.11.1925 ஆம் நாள் குடியரசு பத்திரிகையில் என்.வி.கல்யாணந்தரம் பதிவு செயதிருக்கிறார்.

1926-ம் ஆண்டு டிசம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் நீதிக்கட்சியின் சார்பாக ஏ.பி.பத்ரோ தலைமையில் சென்னை மாகாண பார்ப்பனர் அல்லாதோர் மாநாட்டை எம்.டி.சுப்ரமணிய முதலியார் கூட்டினார். இதில் பட்டிவீரன்பட்டி சவுந்திர பாண்டியனார், வைக்கம் போராட்டத்தின் முக்கியத் தலைவரான ஜார்ஜ் ஜோசப் உள்ளிட்டோருடன் வ.உ.சியும் கலந்து கொண்டார். நீதிக்கட்சி தேர்தலில் தோல்வியடைந்து சோர்வுற்றிருந்த போது புத்துயிர் கொடுக்க கூட்டப்பட்ட முக்கியமான மாநாடாகும் இது.

ஒற்றுமையின்மைக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் இல்லாததே காரணம்

அதனைத் தொடர்ந்து 5.11.1927-ல் சேலம் மாவட்ட அரசியல் மாநாட்டில் வ.உ.சி ஆற்றிய உரை தனி நூலாக வெளிவந்துள்ளது. அது வரலாற்று சிறப்பு மிக்க உரையாகும். அந்த மாநாட்டில் தலைமை உரையை ஆற்றுகையில் நாட்டு மக்களிடையே பிளவுகளும் பகைமைகளும் இருப்பதற்குக் காரணம் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இல்லாததுதான் என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

“நம் தேசத்தாருள் நிலவும் ஒற்றுமையின்மை முதலியவற்றிற்கு முக்கியமான காரணம் தான் யாதோ? எனின் நம் தேசத்து இராசாங்க உத்தியோகங்களிலும், சட்டசபை முதலிய ஸ்தல ஸ்தாபன உத்தியோகங்களிலும், காங்கிரசு மகாசபை முதலிய பொது ஸ்தாபன உத்தியோகங்களிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படாமையே”

வகுப்புரிமை போராட்டம் பிரிட்டிஷ் ஆதரவு என்பதை மறுத்த வ.உ.சி

வகுப்புரிமைப் போராட்டம் என்பது பிரிட்டிஷ் அரசின் ஆதரவில் உருவானதாக இன்று ஜெயமோகன் போன்றவர்கள் எழுதுவது புதிதல்ல. அன்றே பார்ப்பன தலைவர்கள் சொன்னதுதான். அந்த பொய்களையும் வ.உ.சி மறுத்து அந்த உரையில் பேசியிருக்கிறார்.

”பிராமணருக்கும் பிராமணரல்லாதாருக்கும் ஏற்பட்டுள்ள சண்டைகளை உண்டு பண்ணுகின்றவர் இராஜாங்கத்தாரே என்றும், சுதேச மன்னர்கள் அரசாட்சிக்குட்பட்ட நாடுகளில் சாதிச் சண்டைகள் இல்லை என்றும், நம் தேசத்துக்கு சுய அரசாட்சி வந்து விட்டால் சாதிச் சண்டைகள் எல்லாம் நீங்கிவிடும் என்றும் சிலர் சொல்லுகின்றனர். இந்த மூன்றும் முழுப் பொய்.

பிராமணர் – பிராமணரல்லாதார் சண்டைகளுக்குக் காரணம் ஒன்றுமே இல்லையெனின் இராஜாங்கத்தாராலோ மற்றவராலோ அவர்களுக்குள் சண்டையை உண்டு பண்ண முடியாது. சுதேச மன்னர்களின் அரசாட்சிக்குட்பட்ட நாடுகளிலும் சாதிச் சண்டைகள் இல்லாமல் இல்லை. அவற்றிலும் தென்னாடுகளில் பிராமணர் – பிராமணரல்லாதார் சண்டைகள் இருக்கின்றன. சுய அரசாட்சிக்கு முதல் வழி நமது தேசத்தினர்கள் எல்லாம் ஒற்றுமைப்படுதல்.

உண்மை அவ்வாறிருக்க, சுய அரசாட்சி வந்து விட்டால் நமது தேசத்தினர்களுக்குள் ஒற்றுமை உண்டாகிவிடும் என்று சொல்வது நீந்தக் கற்றுக் கொண்டால் நீரில் இறங்கலாம் என்பது போலாம். ஒருவன் நீரில் இறங்காமல் நீந்தக் கற்றுக் கொள்ளப் போவதில்லை. அதுபோல நம் தேசத்தார்களெல்லாம் ஒற்றுமைப்படாமல் நாம் சுய அரசாட்சி அடையப் போவதில்லை”

என்று பேசியவர் வ.உ.சி.

பார்ப்பனர் அல்லாதார் உரிமையோடு மட்டும் நின்றுவிடாமல் சமுதாய சீர்திருத்தக் கருத்துகளையும் பரப்பினார். தான் பின்பற்றும் சைவ மதத்தில் உள்ள பிற்போக்குத்தனங்களை அவர்களது மேடையில் நின்றே கண்டித்தார்.

மனுஸ்மிருதி மற்றும் ஆரிய நூல்கள் பற்றி

ஆரியர்களின் நூல் தமிழ் நூல்களில் கலந்த பின்னரே பிறப்பால் உயர்வு தாழ்வு என்பது தமிழரிடம் உருவாகியது. புறநானூறு உள்ளிட்ட சங்க இலக்கியங்களில் பிறப்பினால் உயர்வு தாழ்வில்லை என்று பேசியவர் வ.உ.சி.

மனுஸ்மிருதி பற்றி பேசுகிற பொழுது,

”எந்த நூலாக இருந்தாலும் அதில் உள்ள குறைகளை நாம் களைய வேண்டும். மனிதனாகப் பிறந்தவன் தவறு செய்வது இயற்கை. பிழை இருக்குமானால் வள்ளுவர் அல்ல சிவபெருமானே ஆகட்டும் யார் கூறினாலும் தள்ள வேண்டியது தான். எந்த நூலையும் மனிதன் எழுதினான், அறிஞன் எழுதினான், முனிவர் எழுதினார், கடவுள் என்று சொல்லத்தக்க ஒருவர் எழுதினார் என்றுதான் கூறவேண்டும். கடவுளே எழுதினார் என்று கூறப்படும் நூலிலும் பிழை இருக்குமானால் அதனைத் தள்ள வேண்டியது தான்”

என்று பகுத்தறிவுப் பரப்புரையில் ஈடுபட்டனர்.

பெண் விடுதலை குறித்து

”நம் நாட்டில் பெண் மக்களை சமைக்கும் இயந்திரமாக செய்துவிட்டனர். பிள்ளை பெறும் இயந்திரமாக அனைவருமே செய்துவிட்டோம். நம்மைப் போல் பெண்களுக்கும் சம உரிமை இருத்தல் வேண்டும். எல்லா விஷயங்களிலும் அவர்களை ஆலோசித்து செய்தல் அவசியமாகும் என்றும், ஐந்து வயது பெண்ணுக்கும் ஆறு வயது ஆணுக்கும் திருமணம் செய்கிறார்கள், இதனை பொம்மை கல்யாணம் என்றே சொல்ல வேண்டும். இதனால் விதவைகள் பெருகி விட்டார்கள்”

என்று பெண்களின் கல்விக்கான அவசியம் குறித்தும் பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என்றும் பேசியவர் வ.உ.சி.

சீர்திருத்த சைவராக

ராஜகோபாலாச்சாரி எல்லோரும் சமம் என்பார். ஆனால் ஒரு பலன் கிடைக்கும் என்றால், அதை அவர் தன் இனத்தாருக்குத் தான் கொடுப்பார் என்று பார்ப்பனர்கள் தங்கள் நலன் குறித்து எப்படி செயல்படுவார்கள் என்றும் எச்சரிக்கை செய்து பேசிய வ.உ.சி தன்னை கடைசிவரை சைவர் என்றே அடையாளப்படுத்தினார். ஆனால் தொடர்ந்து சீர்திருத்த சைவராக இருந்தார். சிவஞான முனிவரின் கருத்துகளுக்கு மாறுபட்ட கருத்தை எழுதியிருப்பதால், தான் எழுதிய சிவஞான போதக உரையை போலி சைவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று அவரே கூறியுள்ளார்.

சுதேசி இயக்கத்தில் துவங்கிய வ.உ.சிதம்பரனார், சமூகத்தில் நிகழ்ந்த மாற்றங்களை உள்வாங்குபவராக, அன்றைய மக்களின் தேவைக்கு எது சரியானதாக இருக்கும் என்று ஆய்ந்து அறிந்து தன்னை புதுப்பித்துக் கொள்ளும் பெருமக்கள் தலைவராக இருந்தார்.

வ.உ.சியின் தியாகம் முழுமையாக மக்களிடம் கொண்டு செல்லப்படாததற்கும், காங்கிரஸ்காரர்கள் வ.உ.சியை மறந்ததற்கும், அவர் பார்ப்பனர் அல்லாதவர் என்பதுதான் காரணம் என்று பெரியார் பல இடங்களில் பேசினார்.

”சிதம்பரம் பிள்ளையின் முதுகில் ஒரு பூணூல் மட்டும் தொங்கி இருக்குமேயானால், அவரது சிலை மூலைக்கு மூலை வைக்கப்பட்டு இருக்கும். அவரது படம் ஒவ்வொரு அக்கிரகார வாசிகளின் வீடுகளிலும் மாட்டப்பட்டிருக்கும். அவர் பேரால் மண்டபங்கள், மனைவி, பிள்ளை குட்டிகளுக்கு பதவி வாழ்க்கை வசதிகள் எல்லாம் கிடைத்து இருக்கும்.”

என்று பெரியார் ‘விடுதலை’ நாளேட்டில் 13.5.1961 அன்று எழுதினார்.

உதவிய நூல்கள்:

1)அரசியல் பெருஞ்சொல் வ.உ.சி பதிப்பாசிரியர் செ.திவான்
2)நீதி கட்சி வரலாறு க.திருநாவுகரசு.
3)வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் திருவிக-பெரியார் அறிக்கை போர் தொகுப்பு சு.ஒளிச்செங்கோ
3)திராவிட இயக்கமும் வேளாளரும் ஆ.இரா.வெங்கடாசலபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *