ஜார் குண்டு

மறைத்துவைக்கப்பட்ட அறுபது ஆண்டுகால ரகசியம்…வெளியிட்ட ரஷ்யா!

ஜெர்மனியின் நாஜி படையை வெற்றிகொண்ட 75வது வருடத்தின் வெற்றிவிழா நிகழ்வுகளை ரஷியா கடந்த மாதம் கொண்டாடியது. அதே சமயம் ரஷியாவின் அணுசக்தி நிறுவனமான  ‘ரோசாட்டம்’ (Rosatom) தனது 75 வருட நிறைவினையும் கொண்டாடியது. இந்த இரு நிகழ்வுகளும் உலகளவில் பேசப்படும் நிகழ்வுகளாக மாறின. இந்த நிகழ்வுகளையோடி ‘ரோசட்டாம்’ தனது 75ஆண்டுகால வரலாற்றில் ஒரு  அதிமுக்கியத்துவம் வாய்ந்த  நிகழ்வினை உலகிற்கு காணொளி ஆவணப்படம் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறது. ஏறத்தாழ அறுபது ஆண்டுகளாக மறைத்து வைக்கப்பட்ட அணுகுண்டு வெடிப்பு நிகழ்வினை அது தயாரித்த இடம் முதல் வெடித்தபின் நடத்தப்பட்ட சோதனைவரை விரிவாக விளக்குகிறது நாற்பது நிமிட காணொளி.

காணொளி

காணொளியில், அக்டோபர் 30, 1961-ம் ஆண்டு அதிகாலை ரஷ்யாவின் வடமேற்கு பிரதேசமான முர்மென்ஸ்க் (Murmansk) நகரிலிருந்து தெற்கில் 92 கிலோமீட்டர்  தொலைவில் இருக்கக்கூடிய ஒலின்யா(Olenya Air Base) விமானப்படை தளத்திலிருந்து இரு விமானங்கள் அடுத்தடுத்து கிளம்புகின்றன. அவற்றில் ஒன்று அணுகுண்டுகளை சுமந்து செல்லும் திறன் வாய்ந்த Tu-95V விமானமும் அதை தொடந்து செல்லும் Tu -16 விமானமும் ஆகும். 

விமானங்களின் அமைப்பு

Tu-95V விமானத்தில் அடிப்பகுதியில் இந்த உலகம் இதுவரை கண்டிராத, பேரழிவினை ஏற்படுத்தக்கூடிய 27 டன் எடை கொண்ட ஹைட்ரஜன் அணுகுண்டு ஒன்று பொருத்தப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து செல்லும் விமானம், ஒரு தேர்ந்த  சோதனைக்கூடத்தை தன்னுள் கொண்டிருந்தது. அதனுள் அதிர்வலைகளை, வெப்ப ஆற்றலை, நில அதிர்வுகளை இப்படி எண்ணற்ற திறன்வாய்ந்த கணக்கிடும் கருவிகள் பொருத்தப்பட்டு அதனை சுற்றிலும் ஒளிப்பட கருவிகளும் பொறுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றினைப் பற்றிய விவரங்கள் ரஷ்ய ராணுவத்தின் மிக சிலருக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாக இருந்தது. ஆம் அந்த இரண்டு விமானங்களும் அணுகுண்டு சோதனையை நிகழ்த்த சென்றுகொண்டிருந்தன.

இந்த அணுகுண்டு சோதனை நடத்தப்பட்ட காலகட்டத்தில் அமெரிக்கா மற்றும் ரஷியா நாடுகளினிடையே பனிப்போர் உச்சத்தில் இருந்தது. 

ஆயுதப் போட்டியில் உருவாக்கப்பட்ட மெகா அணுகுண்டு

இரு நாடுகளும் போட்டிபோட்டுக்கொண்டு ஆயுத குவிப்பிலும் பேரழிவினை ஏற்படுத்தக்கூடிய ஆயுதத் தயாரிப்பிலும் ஈடுபட்டன. இந்த சோதனைக்கு முன்பாக அமெரிக்கா 1954-ம் ஆண்டு பிகினி தீவினில் நடத்திய ஹைட்ரஜன் அணுகுண்டு சோதனையே மிகப்பெரிய சோதனையாக உலக நாடுகளால் உற்றுநோக்கப்பட்டது. அந்த சோதனையில் 15 மெகா டன் TNT அளவிலான ஆற்றல்  வெளிப்பட்டது. அதையறிந்த அப்போதைய ரஷிய அதிபர் ‘நிகிதா குருசேவ்’ (Nikita Khrushchev) அதை விஞ்சக்கூடிய அளவிலான  100 மெகா டன் அளவிலான மிகப்பெரிய அணுகுண்டை தயாரிக்க தன்னுடைய விஞ்ஞானிகளுக்கு உத்தரவிட்டதுடன் தன்னுடைய நேரடி மேற்பார்வையில் இந்த அணுகுண்டு தயாரிப்பினை கொண்டுவந்தார். விஞ்ஞானிகளோ 100 மெகா டன் TNT அளவு என்பது மிகப்பெரிய அழிவினை ஏற்படுத்தக்கூடிய சாத்தியங்களை எடுத்துக்கூறி அதை 50 மெகா டன் TNT அளவில் குறைத்து தயாரித்தனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட தீவு

RDS -220 இதுதான் அந்த அணுகுண்டின் பெயர். மேலும்  ‘ஜார் பாம்’ (Tsar Bomba) என்று ரஷிய மொழியில் மற்றொரு பெயரும் உண்டு ( ‘ஜார்’ என்றால் ரஷிய மொழியில் ‘மிகபெரியது’ என்று அர்த்தம்). ஆர்டிக் கடலில் அமைந்திருக்கக்கூடிய ஆளில்லா தீவுக்கூட்டமான  ‘நவயா ஸீம்லயா’ ( Novaya Zemlya) என்ற இடத்தில்  இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த தீவுக்கூடம் புவியின் தென்புலத்திலிருந்து 1200 மைல்கள் தொலைவில் அமைந்திருக்கிறது. தென் துருவத்தின் அருகில் இருப்பதால் எப்போதும் பனி உறைந்து காணப்படும். இதன்  நிலவமைப்பும் அதனால் மனித நடமாட்டமற்ற சூழ்நிலையும் இந்த தீவுக்கூட்டத்தை தேர்ந்தெடுக்க முக்கிய காரணிகளாக இருந்திருக்கின்றன.  

இரு விமானங்களும் புறப்பட்டு வெடிகுண்டு பொருத்தப்பட்டுள்ள விமானமும், அதைத் தொடர்ந்து செல்லும் விமானமும் தீவுக்கூட்டத்தின் மேலே 34,000 அடி உயரத்தை அடைந்தவுடன் தரைக்கட்டுப்பாட்டு தளத்திலிருந்து உத்தரவு கிடைக்கப்பெற்று  அணுகுண்டு பாராசூட் மூலம் விடுவிக்கப்படுகிறது.

அணுகுண்டு தரையை தொடுவதற்கு முன் தரையிலிருந்து 4 கிலோமீட்டர்  வான்வெளிபரப்பிலேயே குண்டு வெடிக்க வைக்கப்படுகிறது. அடுத்த நொடி தீப்பிழம்புகள் விண்ணில் எழுகின்றன அதன்  அதிர்வலைகள் தீவுக்கூட்டம் முழுவதும் பரவுகின்றன. அந்த பனிமூடிய தீவுக்கூட்டம் நொடிப்பொழுதில் பாலைவனமாகின்றது. 

இதில் குறிப்பிடத்தகுந்த விடயம் என்னவென்றால் வான்வெளியிலேயே வெடிக்க வைக்கப்பட்டதால் பேரழிவு  ஏற்படவில்லை. மேலும் சோதனைக்கு முன்னரே அங்கு கடலில் காணப்பட்ட மீன்பிடி படகுகள் பாதுகாப்பான தொலைவிற்கு அப்புறப்படுத்தப்பட்டதால் எந்த ஒரு மனித உயிரிழப்பும் ஏற்படவில்லை.

ஹிரோசிமா, நாகசாகியில் வீசப்பட்ட குண்டுகளை விட 1325 மடங்கு அதிக ஆற்றல்

யூ ட்யூப் (You Tube) காணொளி தளத்தில் வெளியிடப்பட்டுள்ள 40 நிமிட காணொளியில் இந்த அணுகுண்டு சோதனை தொடக்கம் முதல் இறுதி வரை முக்கிய நிகழ்வுகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இந்த வெடிப்பின் போது 50 மெகா டன் TNT அளவில் அதன் ஆற்றல் வெளிப்பட்டிருக்கிறது. இது அமெரிக்கா இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானின் நாகசாகி, ஹிரோஷிமா நகரங்களின் மீது வீசப்பட்ட அணுகுண்டுகளை ஒருங்கிணைத்தால் கிடைக்கக்கூடிய ஆற்றலைவிட 1325 மடங்கு பெரியது. இந்த சோதனையின் போது எழுந்த தீப்பிழம்புகள் 600 கிலோ மீட்டருக்கு அப்பாலும் தெளிவாக பார்க்கமுடிந்திருக்கிறது. மேலும் வெடிப்பினால் உண்டான கடும் அனலானது 250 கிலோமீட்டர் வரை உணரப்பட்டுள்ளது. 

அதன் அதிர்வலைகள் நிலத்தில் 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கத்தை ஏற்படுத்தியிருந்தன என்றால் அதன் வீரியத்தை உணர்ந்துகொள்ளலாம். வெடிப்பிற்குப் பின் உண்டான காளான் வடிவ வெண்புகை விண்ணில் 60 முதல் 65 கிலோமீட்டர் உயரம்வரை எழுந்திருக்கிறது. மேலும் வெண்புகையின் சுற்றளவு 90 கிலோமீட்டர் வரை பரவியிருந்திருக்கிறது. இந்த வெடிப்பின் பின்னால் உண்டான கதிரியக்க துகள்கள் ஸ்காண்டிநேவியா பிரதேசம் முழுவதும் பொழிந்திருக்கின்றன. வான்வெளியிலேயே வெடிக்கவைக்கப்பட்டதால் துகள்களின் ஆற்றல் இந்த குண்டின் அளவையும் அதன் ஆற்றலையும் ஒப்பிடும்பொழுது குறைவாகவே காணப்பட்டிருக்கிறது.

இதன் பின் இருநாடுகளின் ஆயுதக் குவிப்பும் உச்சமடைந்தது. இதனால் கவலையுற்ற மற்ற உலகநாடுகள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தின. பின்பு அமெரிக்காவில் ஏற்பட்ட  அரசியல் மாறுபாடுகளினாலும், சோவியத் என்றழைக்கப்பட்ட ஒருங்கிணைந்த ரஷ்யாவின் பொருளாதார , அரசியல் மாறுபாடுகள் ஆகியவற்றாலும் இரு நாடுகளுகிடையிலான பனிப்போர் மெல்ல மெல்ல குறைந்தது. பின்வந்த 1963-ம் ஆண்டு அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்களுக்கிடையில் அணுஆயுத சோதனையை மட்டுப்படுத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தம் வளிமண்டலத்தில், வான்வெளியில் நடத்தக்கூடிய அணுஆயுத சோதனையை தடுக்கும் முக்கிய அம்சத்தைக் கொண்டிருந்தது.

இந்த சோதனையின் முக்கியத்துவத்தைப் பற்றி சொல்லவேண்டுமென்றால்’ இதுவரை  இந்த பூவுலகில் மனித இனத்தால்  நடத்தப்பட்ட  அணுகுண்டு சோதனைகளில் இதுவே மிகப்பெரியது. இந்த சோதனை நிகழ்ந்து 60 ஆண்டுகளை கடந்த பின்னும் இதற்கு இணையான அல்லது இதைவிட மேலான சக்தி கொண்ட எந்தவொரு அணுகுண்டு வெடிப்பு சோதனையும் உலகின் எந்த பாகத்திலும் நிகழவில்லை.

அணு ஆயுதமற்ற ஒன்றாக மாற வேண்டிய உலகம்  

இன்றும் உலகளவில் எப்பொழுதும் பயன்படுத்தக்கூடிய நிலையில் ஏறத்தாழ 1500 அணுகுண்டுகளை பல்வேறு உலகநாடுகள் தயார் நிலையில் வைத்திருக்கின்றன. எந்த ஒரு நொடிபொழுது முடிவும் , எந்த ஒரு தனிமனிதனின் பேராசைகளும் இந்த புவியில் வாழுகின்ற அனைத்து உயிர்களுக்கும் பேராபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையிலேயே இந்த மனித இனம் வாழ்வதென்பது நாகரீகமடைந்த காலகட்டத்தின் பேரவலம். இந்த காணொளி ஏற்படுத்துகின்ற அதிர்வுகள் ஒவ்வொருவரின் மனதிற்கும் கடத்தப்படவேண்டும் ஏனெனில் இந்த உலகம் அணுஆயுதமற்ற ஒன்றாக மாறுவதற்கு ஒவ்வொருவரின் பங்களிப்பும் தேவைப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *