தோப்பில் முகமது மீரான்

தமிழக நாட்டார் மரபை ஒத்த இசுலாமிய தாய் தெய்வ மரபினை கதைக்களமாக்கிய தோப்பில் முகமது மீரான்

தோப்பில் முகமது மீரான் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்பு பதிவு – Madras Radicals

தோப்பில் மீரான் 1944-ம் ஆண்டு செப்டம்பர் 26-ம் தேதி குமரி மாவட்ட கடலோர கிராமமான தேங்காப்பட்டனத்தில் அப்துல்காதர் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தோப்பில் என்பது அவரது ஊரில் அவர் வாழ்ந்த பகுதியாகும். 

தேங்காப்பட்டனத்தில் அவர்கள் குடும்பம் வாழ்ந்த பகுதி ஒதுக்கப்பட்ட பகுதியாக இருந்தது. சுடுகாட்டிற்கு அருகில் இருந்தது. அதற்கு தோப்பு என்று பெயர். அதனால் தன் பெயருக்குப் பின்னால் தோப்பில் என்பதை இணைத்துக் கொண்டார்.

சொந்த ஊரில் பள்ளிப் படிப்பை முடித்த அவர் கல்லூரிப் படிப்பை நாகர்கோவில் தெ.தி.இந்து கல்லூரியில் நிறைவு செய்தார். கல்லூரிக் காலத்தில் தோப்பில் முகமது மீரானுக்கு தமிழ் இலக்கியத்தின் மீதான ஆர்வம் ஏற்பட்டது.

ஒரு கடலோர கிராமத்தின் கதை

இவரது முதல் நாவல் ஒரு கடலோர கிராமத்தின் கதை ’முஸ்லிம் முரசு’ இதழில் தொடராக வெளிவந்தது. அதன்பின் பாளையங்கோட்டை, தூய சவேரியார் கல்லூரி பேராசிரியர் பொ.ஜெயராம பாண்டியன் மதிப்புரையுடன் 1988-ல் நாவலாக வெளியிட்டார்.

இந்த நாவல் தேங்காப்பட்டனத்தில் ஆதிகாலத்தில் நிலவிய நம்பிக்கை சார்ந்த சடங்குகளை கேள்விக்குள்ளாக்கி எழுதப்பட்டதாகும். இந்த நாவலின் கதை பல செவி வழி உண்மைகளைக் கொண்டது என்றும், தன் தந்தையிடமிருந்து கேட்டறிந்ததாக நேர்காணல் ஒன்றில் அவரே  குறிப்பிடுகிறார். மேலும்  இந்நாவல் மூட நம்பிக்கைகளையும் அடிப்படைவாதங்களையும் கேள்வி எழுப்பியதால், தேங்காப்பட்டனத்தில் சர்ச்சையைக் கிளப்பியது. இதன் காரணமாக ஒரு கட்டத்தில் அவர் ஊருக்குள் நுழைய முடியாத சூழல் கூட ஏற்பட்டது.

நிலவுடமை சமூகத்தின் மீது கேள்விகளை எழுப்பிய சாய்வு நாற்காலி

இவர் எழுதிய சாய்வு நாற்காலி நாவலுக்கு 1997-ல் சாகித்திய அகாதமி விருது கிடைத்தது. சாய்வு நாற்காலி என்பதே திருவாங்கூர் சமஸ்தானத்தில் நில உடமை சமுகத்தின் அடையாளமாக இருந்தது. அந்த நிலஉடமை சமூகத்தின் மீதான கேள்விகளே அந்த நாவல்.

அந்நாவலில் வரும் ’முஸ்தபா கண்’ எனும் கதாபாத்திரம் நிலவுடைமை சமூகத்தின் அத்தனை அழுக்குகளையும் கொண்ட கடைசி பிரபு கதாபாத்திரம் எத்தனையோ ஆதிக்க கற்பிதத்தை, பழம் பெருமையின் ஆணவத்தை, பெண்களின் மீதான ஆதிக்கத்தை, ஜாதி கொடுக்கிற அதிகாரத்தை, சுயநலத்திற்காக எதையும் செய்யும் மனித மனதின் இழிநிலையை என பலவற்றையும் முக்காலங்களிலும் நம் கண் முன்னே விரித்து காட்டியிருக்கும்.

தமிழக நாட்டார் மரபை ஒத்த இசுலாமிய தாய் தெய்வத்தின் கதை

2008-ல் அவர் வெளியிட்ட ’அஞ்சுவண்ணம் தெரு’ நாவல் குமரி மாவட்டம் தக்கலை இஸ்லாமியர்களை மையப்படுத்தியது. குறிப்பாக தர்கா வழிபாடு சார்ந்த வாழ்க்கை பண்பாட்டு முறையினை எழுதியது.  

அஞ்சுவண்ணம் தெரு நாவலில் தமிழ் நாட்டார் மரபில் இருக்கும் உலகம்மான் தாய் தெய்வத்தை ஒத்த ஒரு இஸ்லாமிய தாய் தெய்வத்தின் கதையை சொல்லுவார்.

அதன் மையப் பகுதி மகாராஜா பாண்டிய நாட்டிலிருந்து ஐந்து நெசவுக் குடும்பங்களை தருவித்து, அவர்களுக்கான நிலத்தையும் ஒதுக்கி குடியமர்த்துகிறார். எனவேதான் அந்தத் தெருவின் பெயர் இயல்பாக ‘அஞ்சு வண்ணம் தெரு’வாகிறது. ‘அடக்கம் செய்யப்பட்ட தாய்’தான் அந்தத் தெரு மனிதர்களுக்கு தெய்வமாக இருக்கிறது. நாட்டார் மரபில் சிறு தெய்வங்கள் தோன்றும் அதே பின்னணிதான். 

மகாராஜா உலாவரும் போது அவரை மறைந்திருந்து பார்த்த ஹஜாராவின் (தாயம்மா) அழகில் மயங்கி மணம் முடிக்க தூது அனுப்புகிறார். 

ஒரு காபிருக்கு இசுலாமியப் பெண்ணை மணம் முடிப்பதாவது?. தந்தை கேட்கிறார், “மன்னன் உன்னை மனைவியாக்கி விடுவான். நீ காபிராக இறக்கப் போகிறாயா? ஈமானுள்ள முஸ்லிமாக இறக்க விரும்புகிறாயா?”. 

மகள் சொல்கிறாள் “ஈமானுள்ள முஸ்லிமாக”. 

“அப்படியானால் இந்த குழியில் இறங்கம்மா”. 

மதத்திற்காக உயிருடன் புதைக்கப்படுவதை விரும்பி ஏற்றுக் கொள்ளும் அவள் ‘அடக்கம் செய்யப்பட்ட தாய்’ ஸ்தானத்தை அடைந்த புராதன நிகழ்வு அஞ்சுவண்ணம் தெருவின் ஆதித் தாயின்  வரலாறு அது.

மலையாளத்தில் பள்ளிப் படிப்பை படித்தவர். எனவே மலையாள மொழி அறிவு உண்டு. அதை அவர் சரியான முறையில் பயன்படுத்தினார். திருவிதாங்கூர் சமஸ்தானம் பற்றிய வரலாற்று அறிவும் அவருக்குண்டு. தமிழ் இஸ்லாமியர் வரலாற்றை தன் கதைகளின் ஊடாக அவர் எடுத்து வைத்தார். அதன்  பின்னால் அவரது கடினமான உழைப்பும் இருந்தது.

மலையாள எழுத்தாளர்கள் பலருடன் அவருக்கு நட்பும் இருந்தது. இதன் தொடர்ச்சியில் எம்.என்.காரசேரி எழுதிய வைக்கம் பஷீரின் வாழ்க்கை வரலாற்றைத் தமிழில் மொழிப்பெயர்த்தார். தெய்வத்தின் கண்ணே என்ற மலையாள நூலையும் தமிழில் மொழிபெயர்த்தார். 

மேலும் தமிழக நிலப்பரப்பில் ஒரு சின்னஞ்சிறு பகுதி. கன்னியாகுமரி மாவட்டத்தின் முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழும் கடற்கரை கிராமமான தேங்காப்பட்டனம் கிராமத்தின் களத்துக்குள் இருந்துதான் ஒரு கடலோர கிராமத்தின் கதை, சாய்வு நாற்காலி, துறைமுகம், கூனந்தோப்பு உள்ளிட்ட நாவல்களைத் அதனை மையப்படுத்தியே எழுதினார்.

தமிழில் ஆறு நாவல்களும், ஏழு சிறுகதை தொகுப்புகளும், மலையாளத்தில் இரண்டு நாவல்களும் வெளிவந்திருக்கின்றன. சாகித்திய அகாதமி விருது உட்பட பல்வேறு விருதுகள் பெற்றிருக்கிறார். ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’யின் ஆங்கில மொழிபெயர்ப்பு ‘Crossword Book Award’க்கு பரிந்துரை செய்யப்பட்டது.

நாஞ்சில் நாட்டு இசுலாமியர்களின் வாழ்வையும், பிற்போக்குத்தனங்களையும் கேள்வி கேட்டு எழுதிய தோப்பில் 74 வயதில் 2019-ம் ஆண்டு மே 1-ம் தேதி  தொழில் நிமித்தமாக தான் வாழ்ந்து வந்த திருநெல்வேலி மாவட்டம், பேட்டையில் இறந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *