அமெரிக்காவின் டைம் (TIME) பத்திரிக்கை வெளியிட்டுள்ள 2020-ம் ஆண்டிற்கான உலகின் 100 முக்கிய மனிதர்களின் பட்டியலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இடம் பெற்றிருப்பதாக பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தது. ஆனால் அந்த பட்டியலில் மோடி எந்த அடிப்படையில் என்ன காரணத்திற்காக சேர்க்கப்பட்டார் என்ற செய்தி மட்டும் எந்த ஊடகத்திலும் வெளியாகவில்லை.
சாதாரணமாக இந்த செய்திகளைப் பார்க்கும் ஒருவர் மோடியை கவுரவிப்பதற்காகத் தான் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்றுதான் எண்ணக் கூடும். ஆனால் அதுதான் இல்லை. இந்தியாவின் ஜனநாயகத்தை நரேந்திர மோடி கேள்விக்குறியாக்கி இருப்பதாக அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
TIME பத்திரிக்கையின் ஆசிரியர் கார்ல் விக் மோடியைப் பற்றி குறிப்பிட்டிருப்பது என்ன?
TIME பத்திரிக்கையின் ஆசிரியரான கார்ல் விக் (Karl Vick) கடுமையான விமர்சனத்தினை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மீது வைத்திருக்கிறார். மோடி 100 நபர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கான காரணத்தைப் பற்றி அவர் குறிப்பிடும்போது,
”ஒரு ஜனநாயகத்தின் முக்கியக் கூறு என்பது சுதந்திரமாக தேர்தல்கள் நடத்தப்படுவது மட்டும் குறிப்பதல்ல. தேர்தல்கள் யார் அதிக வாக்குகள் பெற்றிருக்கிறார்கள் என்பதை மட்டுமே காட்டும். ஆனால் ஜனநாயகத்தில் முக்கியமானது என்னவென்றால், வெற்றி பெற்றவருக்கு வாக்களிக்காத மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுதான்.
கடந்த 70 ஆண்டுகளாக இந்தியா உலகத்தின் மிகப் பெரிய ஜனநாயகமாக இருந்து வருகிறது. அந்நாட்டின் 130 கோடி மக்கள் தொகையில், கிறித்தவர்கள், இசுலாமியர்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள், ஜைனர்கள் மற்றும் இதர மதப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் கூட உள்ளடங்குவர். தன் வாழ்வின் பெரும் பகுதியை இந்தியாவில் அடைக்கலமாகிக் கழித்த தலாய் லாமா இந்தியாவை நல்லிணக்கம் மற்றும் ஸ்திரத் தன்மைக்கு எடுத்துக்காட்டு என்று பாராட்டினார்.
அவை அனைத்தையும் நரேந்திர மோடி கேள்விக்கு உள்ளாக்கியுள்ளார். இந்தியாவின் 80 சதவீத மக்கள் தொகையைக் கொண்ட இந்து மதத்திலிருந்தே அந்நாட்டின் பெரும்பான்மையான பிரதமர்கள் வந்திருந்தாலும், வேறு மதத்தினர் எவருமே முக்கியமில்லை என்பதைப் போல மோடியின் ஆட்சி மட்டுமே இருக்கிறது. முதலில் வளர்ச்சி என்ற ஜனரஞ்சகமான வாக்குறுதியை வைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்து தேசியவாத கட்சியான பாரதிய ஜனதா கட்சி, பன்மைத் தன்மையை முற்றிலுமாக நிராகரித்துள்ளது. குறிப்பாக இசுலாமியர்களைக் குறிவைத்து செயல்பட்டு வருகிறது. எதிர்ப்புகளை கட்டுப்படுத்துவதற்கான ஒரு கருவியாக இந்த பெருந்தொற்று சூழல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகின் மிகத் துடிப்பான ஜனநாயகமானது இன்று இருளுக்குள் மூழ்கிக் கொண்டிருக்கிறது”
என்று தெரிவித்துள்ளார்.

மோடி ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்கி, மதச்சிறுபான்மையினருக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கும் நபராக இருக்கிறார் என்ற எச்சரிக்கை உணர்வினை தெரிவிக்கும் விதமாகவே டைம் பத்திரிக்கை 2020-ம் ஆண்டின் 100 நபர்களின் பட்டியலில் மோடியை இணைத்துள்ளது.
விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கும் இந்தியா டுடே பத்திரிக்கையின் செய்தி
என்ன காரணத்திற்காக மோடி இணைக்கப்பட்டார் என்ற தகவலை வெளியிடாமலே 100 முக்கிய நபர்களின் பட்டியலில் அவர் இருப்பதாக இந்தியா டுடே தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
சமூக செயல்பாட்டாளரும், குஜராத் கோப்புகள் (Gujarat Files) எனும் புத்தகத்தை எழுதியவருமான ரானா அயூப், மோடியைப் பற்றி TIME பத்திரிக்கை என்ன எழுதியுள்ளது என்பதை ஏன் குறிப்பிடவில்லை என இந்தியா டுடே பத்திரிக்கையை நோக்கி கேள்வியெழுப்பியுள்ளார்.
ஏராளமானோர் டைம் பத்திரிக்கையின் ஆசிரியர் கார்ல் விக் மோடியைப் பற்றி எழுதியிருப்பதை ScreenShot ஆக, இந்தியா டுடே பத்திரிக்கையின் ட்விட்டர் பக்கத்தைக் குறிப்பிட்டு பதிவிட்டு வருகிறார்கள்.