சூரரைப் போற்று கோபிநாத் உண்மையிலே மக்கள் நலனுக்காகத் தான் விமானம் விட்டாரா? முழுமையான பின்புலங்கள்

  • சூரரைப் போற்று திரைப்படத்தில் ஒரு சாமானியனாக சித்தரிக்கப்பட்ட கோபிநாத், 1994-ம் ஆண்டு கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் பாஜக வின் வேட்பாளராக போட்டியிட்டவர். ஆனால் அத்தேர்தலில் அவர் வெற்றி பெறவில்லை.
  • 1995-ம் ஆண்டு இந்திய அரசு வானூர்தி சேவை மற்றும் தொழில் துறைக்கான பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. அப்போதுதான் கோபிநாத், சாமுவேல் என்பவருடன் இணைந்து டெக்கான் ஏவியேசன் எனும் நிறுவனத்தை தொடங்கினார்.
  • இந்நிறுவனம் பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு சேவை வழங்கியதோடு, இலங்கை, நேபாளம், காபூல் மற்றும் தென் இந்தியாவில் பாதுகாப்பு மீட்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தப்பட்டது. இந்த நிறுவனம் இந்தியாவிலும் இலங்கையிலும் மிகப்பெரிய தனியார் விமான சார்ட்டர் நிறுவனமாக இருந்தது.

குறைந்த விலை ஏர்டெக்கான் நிறுவன உருவாக்கம்

  • அமெரிக்காவில் சௌத்வெஸ்ட் ஏர்லைன்ஸ்(Southwest Airlines) மற்றும் ஐரோப்பாவில் ரியானைர்(Ryanair) போன்ற நிறுவனங்கள் குறைந்த விலை விமான போக்குவரத்தினைத் தொடங்கி புகழ்பெற்றிருந்தன. அதன் மூலமாக ஈர்க்கப்பட்டுதான் கோபிநாத் 2003-ம் ஆண்டு டெக்கான் ஏவியேசன் நிறுவனத்தின் மூலம் இந்தியாவின் முதல் குறைந்த விலை வானூர்தி சேவை என்ற பெயரில் ஏர் டெக்கான் நிறுவனத்தை தோற்றுவித்தார். 
  • ஆகஸ்ட் 23, 2003 அன்று பெங்களுரில் இருந்து ஹப்ளிக்கு அந்த விமானம் இயக்கப்பட்டது. பிறகு செப்டம்பர் 24, 2003 இல் ஹைதராபத்திலிருந்து விஜயவாடாவிற்கு புறப்பட்ட ஏர் டெக்கான் விமானம் பறப்பதற்கு முன்பாக நடையோட்டம் செய்யப்படும்போதே தீப்பிடித்தது. அந்த விமானத்தில் வெங்கையா நாயுடு, ராஜீவ் பிரதாப் ருடி, எர்ரான் நாயுடு போன்ற பல முக்கியப் பிரமுகர்கள் இருந்தனர்.

விஜய் மல்லையாவும் கோபிநாத்தும்

  • 2006-ம் ஆண்டு பங்குச் சந்தையில் பொதுப் பங்குகளை வெளியிட்ட ஏர் டெக்கான் அதன் பிறகு நட்டத்தை சந்தித்தது. விஐய் மல்லையாவின நிறுவனமான யுனைடெட் பிவரேஜஸ் குழுமம் ஏர்டெக்கானின் 26% சதவீத பங்குகளை வாங்கியது. ரிலையன்ஸ் நிறுவனமும் பெரும் பங்குகளை வாங்கியிருந்தது. ஆனால் கோபிநாத் மல்லையாவிற்கு தனது நிறுவனத்தை அளிக்காமல் புரட்சி செய்ததாக படத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தது.
  • 2007-ல் ஏர் டெக்கான் நிறுவனம் மல்லையாவின் கிங்க் ஃபிஷர் ஏர்லைன்ஸ் உடன் இணைவதாகத் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு இணைவதற்கு உள்ளூர் விமானச்சேவை ஐந்து ஆண்டுகளாவது பணியில் இருந்தால்தான் உலகளவில் விமானச்சேவையில் ஈடுபட முடியும் என்ற விதிமுறையும் ஒரு முக்கியக் காரணம்.
  • அந்த சமயத்தில் ஏர் டெக்கான் இந்தியாவின் அறுபத்து ஒன்பது மாநகர்களை இணைத்துக் கொண்டிருந்தது. விஜய் மல்லையா ஏர் டெக்கான் மற்றும் கிங்ஃபிஷர் நிறுவனங்களை ஒன்றாக இணைத்தார். 2008-ம் ஆண்டு விஜய் மல்லையா அதன் தலைமை நிர்வாக அதிகாரியானார். கேப்டன் கோபிநாத் அதன் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார். 
  • சில காலத்திற்குப் பிறகு கோபிநாத் தன் பங்குகளின் பெரும் பகுதியை விற்றுவிட்டார். 2011-ம் ஆண்டு கிங்க்ஃபிஷர் நிறுவனம் பல முறைகேடுகள் மற்றும் திவால் காரணமாக மூடப்பட்டது.

டெக்கான் சார்டர் ஹெலிகாப்டர் மற்றும் டெக்கான் 360

  • 2008-ல் கால அட்டவணையில்லாத வான் சேவை அனுமதி(Non-scheduled Air Operator Permit – NSOP from DGCA) பெற்ற பின் ஏர் டெக்கான் நிறுவனம் டெக்கான் சார்டர் என்ற பெயரில் தனி நிறுவனமானது. 
  • அந்த காலகட்டத்தில் டெக்கான் சார்டரின் ஹெலிகாப்டர் சேவை திருப்திகரமாக இயங்கியது. அதோடு எண்ணெய் துறைக்கு தன்னுடைய சேவையை விரிவுபடுத்தியது.
  • யு.பி. நிறுவன ஒப்பந்த விற்பனை முடிவில் கிடைத்த பணத்தை வைத்து டெக்கான் 360 என்ற நிறுவனத்தை மே 2009-ல் கோபிநாத் தொடங்கினார். டெக்கான் 360 நிறுவனத்தில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் முதலீடு செய்தது. 
  • 2010-ம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனத்தின் கிடங்குகளை இணைக்கும் வகையில் கூட்டணியில் இணைந்தது டெக்கான் 360 நிறுவனம்.
  • சில காலத்திற்குப் பிறகு டெக்கான் 360 நிறுவனமும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி 2011-ல் மூடப்பட்டது.

டெக்கான் சட்டில்ஸ் மற்றும் குறைந்த இருக்கைகள் கொண்ட விமானம்

  • அதே வருடம் கோபிநாத் டெக்கான் சார்டரின் 100% உரிமையாளரானார். அதைத் தொடர்ந்த வருடத்தில் கோபிநாத், டெக்கான் சட்டில்ஸ் என்ற பெயரில் குஜராத்தில் தினசரி வானூர்தி சேவையை ஆரம்பித்தார். 
  • இந்த விமானங்கள் அகமதாபாத், சூரத், ஜாம்நகர், பாவ்நகர் மற்றும் காண்ட்லாவை ஒன்பது இருக்கைகள் கொண்ட செஸ்னா கிராண்ட் கேரவன் விமானத்தைப் பயன்படுத்தி இணைத்தன. இந்த சேவை 2013ல் நிறுத்தப்பட்டது.

CBI விசாரணை வளையத்தில் கோபிநாத்

  • விஜய் மல்லையாவின் கிங் ஃபிஷர் நிறுவனத்தால் கடன் பெறப்பட்டு திரும்ப செலுத்தப்படாத விவகாரங்களில் 2014-ம் ஆண்டு கோபிநாத்தும் புலனாய்வு நிறுவனங்களின் விசாரணை வளையத்திற்குள் வைக்கப்பட்டிருந்தார். 
  • ஆக்சிஸ் வங்கியின் கணக்குகள் மூலமாக நிதிகளை மாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டு கோபிநாத் சிபிஐ விசாரணை வளையத்திற்குள் இருந்தார். ஏனென்றால் அப்போது அவர் கிங்ஃபிஷர் ஏர்லைன்சின் இயக்குநர்களில் ஒருவராக இருந்தார்.
  • கோபிநாத் மற்றும் அவரது நிறுவனம் 155 கோடிக்கு பெற்ற லோனை திரும்ப கட்டாமல் இருந்தது. 2012-ம் ஆண்டிலிருந்து அதற்கான வட்டியைக் கட்டக் கோரி தீர்ப்பாயத்தில் முறையிடப்பட்டது.

மோடியின் UDAN திட்டத்தில் கோபிநாத்

  • ஏப்ரல் 2017-ல் நரேந்திர மோடி ஆட்சியில் உதான் (UDAN) திட்டத்தில், டெக்கான் சார்டர் 34 இந்திய வழித்தட அனுமதிகளைப் பெற்றது. 
  • 2018-ம் ஆண்டு, இந்திய அரசாங்கத்தின் ஏர் இந்தியா நிறுவனம் நட்டத்தில் இயங்குவதாக பங்குகளை விற்க முற்பட்ட போது, அந்த விற்பனையை சர்வதேச அளவில் திறந்து வைத்து வெளிநாட்டு நிறுவனங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார் கோபிநாத். 
  • மேலும் ஏர் இந்தியா நிறுவனம் மிக அதிகமான எண்ணிக்கையில் பணியாளர்களைக் கொண்டிருப்பதாகவும், பணியாளர்களைக் குறைக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தார். செலவுகளைக் குறைக்க பணியாளர்களுக்கு கட்டாய விருப்ப ஓய்வு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என்றும் சொன்னார். இன்று Lay off என்ற பெயரில் ஐ.டி நிறுவனங்கள் செய்வதைத் தான் ஏர் இந்தியா ஊழியர்களுக்கு அரசாங்கம் செய்ய வேண்டும் என்று கோபிநாத் பரிந்துரைத்திருந்தார்.
  • 2019-ம் ஆண்டின் பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவின் தேசியத் தலைமை கர்நாடகாவின் ஹசன் தொகுதியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜவகல் ஸ்ரீநாத் அல்லது கோபிநாத்தை இறக்குவதாக முடிவு செய்திருந்தது. அதற்காக தனது கூட்டணியில் இருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு அந்த தொகுதியினை விட்டுக் கொடுக்காமல் விடாப்பிடியாக இருந்தது. இறுதியாக பிரீத்தம் ஜெ.கெளடா என்பவருக்கு அந்த சீட்டு கொடுக்கப்பட்டது.

ஒட்டுமொத்தத்தில் கோபிநாத் துவங்கிய அனைத்து ஏர்லைன்ஸ் முயற்சிகளும் வணிக நோக்கத்திற்கானதாகவே இருந்திருக்கிறது. சாதாரண ஏழை மக்கள் குறைந்த விலையில் விமானத்தில் பறக்க வேண்டும் என்பதுதான் கோபிநாத்தின் லட்சியமாக இருந்ததாக காட்டியதெல்லாம் ரொம்பவே ஓவர். மேலும் அதிகார வர்க்கத்துடன் மிகவும் நெருக்கமாக பாஜகவின் முக்கியப் பிரமுகராகவே இருந்திருக்கிறார்.

கோபிநாத்தின் உண்மை முகமும், சூரரைப் போற்று சூர்யாவின் முகமும் முற்றிலும் எதிரெதிராக இருப்பதால் இப்படிப்பட்ட விமர்சனங்களை தவிர்ப்பதற்காகவே சுதா கொங்காரா இது கோபிநாத்தின் முழுமையான வாழ்க்கைக் கதையல்ல என்ற டேக் லைனை போட்டுவிட்டார். 

அத்துடன் அப்படியே நிறுத்தியிருக்கலாம். ஆனால் மாறாக கிளைமேக்சில் கோபிநாத்தின் புகைப்படங்களைக் காட்டி அவரது புகழ்பாடி, சூர்யாவின் நெடுமாறன் கேரக்டரைப் போல்தான் கோபிநாத் வாழ்ந்திருப்பாரோ என்ற மாயையை பார்வையாளனுக்கு உருவாக்கி விடுவதால் இந்த உண்மையை நாம் பேச வேண்டியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *