Prof Karthikesu Sivathamby

நாம் அறிந்திருக்க வேண்டிய ஆய்வாளர் பேராசிரியர் கா.சிவத்தம்பி

ஆய்வாளரும், பேராசிரியருமான கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் பிறந்த நாளையொட்டி வெளியிடப்பட்ட அவருடைய வாழ்க்கை வரலாற்றுப் பதிவு

யாழ்ப்பாணம் அருகில் உள்ள வடமாராட்சி கரவெட்டியைச் சேர்ந்த தமிழ் பண்டிதரும், சைவ அறிஞருமான பொ. கார்த்திகேசு – வள்ளியம்மாள் ஆகியோருக்கு மகனாக 10.05.1932 பிறந்தார் சிவத்தம்பி.

கரவெட்டி விக்கினேஸ்வரா கல்லூரி மற்றும் கொழும்பு சாஹிராக் கல்லூரியில் தனது பள்ளிக் கல்வியைப் படித்த சிவத்தம்பி, இளநிலை மற்றும் முதுகலைப் பட்டப் படிப்புகளை இலங்கை பல்கலைக் கழகத்திலும் பயின்றார்.

நான்கு ஆண்டுகள் கொழும்பு சாஹிராக் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றிய பொழுது, இலங்கை பாராளுமன்றத்தில்  சமகால மொழிபெயர்ப்பாளராகவும் (Simultaneous Interpreter) பதவி வகித்தார்.

இங்கிலாந்தில் உள்ள  பெர்மிங்ஹாம் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து, பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம்’ (Drama in Ancient Tamil Society) என்ற தலைப்பில்  மார்க்சிய அறிஞரான பேராசிரியர் ஜார்ஜ் தாம்சனின் வழிகாட்டலின் கீழ் ஆய்வு மேற்கொண்டு ,1970-ம் ஆண்டு  முனைவர் பட்டம் பெற்றார்.

தமிழ் நாடகத்தின் தோற்றம் பற்றி விரிவாக ஆராய்ந்த இவர் தன் ஆய்வில்  கிரேக்க நாடகங்களின் தோற்றம், வளர்ச்சி, தன்மைகள் ஆகியவற்றை விளக்கினார். அதுபோல் தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் உள்ளிட்ட நூல்கள் கல்வெட்டுகள், நாணயங்கள் உள்ளிட்ட தரவுகளை உட்படுத்தி தனது ஆய்வை செய்திருந்தார். ஆங்கிலத்தில் இருந்த இவரது ஆய்வு தமிழுக்கு மொழிப்பெயர்க்கப்பட்டு என்.சி.பி.எச் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.

இந்த நூல் தமிழக அரசின் 1980-ம் ஆண்டிற்கான சிறந்த நூலுக்கான பரிசினைப் பெற்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 1978 முதல் 1996 வரை பதினெட்டு ஆண்டுகள் பேராசிரியராகவும், அதன் பின் மட்டக்களப்பில் உள்ள கிழக்கு இலங்கைப் பல்கலைக் கழகத்தில் இரண்டு ஆண்டுகள் பேராசிரியராகவும் பணியாற்றினார்.

இலங்கைப் பல்கலைக் கழகங்கள் மட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ள தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம், சுவீடனில் உள்ள உப்சலா மற்றும் பெர்க்லி, விஸ்கான்சியன், ஹார்வார்ட், கலிபோர்னியா ஆகிய பல்கலைக் கழகங்களிலும் வருகைதரு பேராசிரியராகவும் இருந்தார். மேலும், உலக புகழ்பெற்ற  இங்கிலாந்து கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தின் தென் ஆசிய மையம், புதுடெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் வரலாற்றுக்  கல்வி மையம், சென்னை அனைத்துலகத் தமிழராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் வருகை தரு பேராசிரியராகவும் பணிபுரிந்தார். தமிழக இலங்கை கலைச் சொல்லாக்கக் குழு உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார்.

தமிழ்ச் சூழலில் மார்க்சிய ஆய்வுப் பின்புலத்தில் பண்டைய இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரையிலான அனைத்தையும் இணைத்துப் பார்க்கும் புலமை மரபு கொண்டவர்.

சமூகம், பண்பாடு, அரசியல் போன்ற களங்களின் ஆய்வு செய்யும் ஒரு புதிய மரபை தமிழுக்கு வழங்கியவர்.

ஊடகம், கலை, இலக்கணம் மற்றும் பண்பாடு சார்ந்து அவர் வெளிப்படுத்திய பார்வைகள் தமிழ் சிந்தனை மரபில் புதிய பார்வை  கொண்டவை.

தமிழியல் பல்கலைகழக உயராய்வு செயல்பாடுகள் அனைத்தும் ஆய்வுத் தளத்தில் விரிவுபடுத்தி கொண்டு செல்வதில் மிகுந்த ஈடுபாடு உடையவராக இருந்தார்.

மாக்ஸ்முல்லர் உள்ளிட்ட பல மேற்குலக அறிவுஜீவிகள், சமஸ்கிருத மொழிதான் இந்தியா முழுவதும் பரவியிருந்த மொழி எனவும், இந்தியாவில் உள்ள பிறமொழிக்கு இலக்கண, இலக்கிய வளங்களை வழங்கிய மொழி எனவும் கருத்துகளைக் கூறி மேற்குலகம் முழுவதும் கட்டைமைத்திருந்தனர்.  இதன்மூலம் சமஸ்கிருதம் முதன்மையான மொழியாக பதிவு செய்திருந்த காலத்தில், பழந்தமிழ் இலக்கியங்கள் கிரேக்க, ரோம இலக்கியங்களுக்கு இணையான  பழைமையை உடையது,சிறப்பினை உடையது என ஆய்வுகள் மூலம்  சான்றுகளுடன் நிறுவியவர்களில் பேராசிரியர் சிவத்தம்பியும் ஒருவர்.   சங்க இலக்கிய நூல்கள் மேற்குலகில் கவனம் பெற உழைத்தவர்  கா.சிவத்தம்பி என்றும்  சொல்லலாம்.

எம்.ஜி.ஆர் தமிழக முதல்வராக  இருந்த போது  மதுரையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில், ‘The Politicians as Players’ என்ற ஆய்வுக் கட்டுரையில் எம்.ஜி.ஆர் குறித்த விமர்சனங்கள் இருந்ததால் வாசிக்க மாநாட்டுக் குழுவினரால் பேராசிரியர் கா.சிவத்தம்பிக்கு அனுமதி மறுக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டார்.

 முதல் உலகத் தமிழாசிரியர் மாநாடு சிங்கப்பூரில் 1992-ம் ஆண்டு நடைபெற்றது. அதில் பேராசிரியர் கா.சிவத்தம்பி கலந்துகொண்டு உரையாற்றினார். தஞ்சாவூரில் நடைபெற்ற எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டுக்கு வருகை புரிந்த பேராசிரியர் கா.சிவத்தம்பி, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர் என முத்திரை குத்தப்பட்டு வந்த  விமானத்திலேயே இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.

தமிழ்நாட்டில் கோவையில் நடைபெற்ற செம்மொழித் தமிழ் ஆய்வு மாநாட்டின் ஆய்வரங்கக் குழுவின் தலைவராக விளங்கினார். தமிழீழ இனப்படுகொலை நடந்த காலகட்டத்தில் அதற்கு அன்றைய  திமுக அரசு துணைபோனதாக தமிழ் உணர்வாளர்களும், ஆய்வாளர்களும் புறக்கணித்த மாநாட்டில் சிவத்தம்பி கலந்து கொண்டது, பெரும் விமர்சனங்களுக்கு  உள்ளானது.

தமிழீழத்தைச் சேர்ந்த பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களின் வழிவந்த கடைசி ஆய்வாளராக சிவத்தம்பி இருந்தவர். பண்டிதமணி  மறைந்த போது பேராசிரியர் சிவத்தம்பி எழுதிய அஞ்சலிக் குறிப்பு “பண்டிதமணி ‘காலம்’ ஆனார்” என்று குறிப்பிட்டிருந்தார். இதன்மூலம் பண்டிதமணி காலம் ஒன்று இருப்பதை அடையாளங்காட்டினார்.

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் தனது 79 வது வயதில் 2011 சூலை 6இல் காலமானார்.

பேராசிரியர் சிவத்தம்பி தமிழியல் ஆய்வுலகில் கடந்த அறுபது வருடங்களாக   இயங்கி ஆய்வுத் திசைகாட்டி வந்துள்ளார். அது போலவே, பேராசிரியர் சிவத்தம்பி காலம் என கணிப்பிட்டு ஆய்வுகள் பெருகுவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. எனவே “பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி காலம் ஆனார்” என்று ஆய்வாளர்கள் அஞ்சலி குறிப்பு எழுதினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *