இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்தது என்ன?: அதிர்ச்சியூட்டும் 25 புகைப்படங்கள்

இந்தியா சுதந்திரம் அடைந்து 74-வது ஆண்டினை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். 1947 ஆகஸ்ட் 14 மற்றும் 15 – நள்ளிரவு நேரத்தில் பாகிஸ்தானும், இந்தியாவும் ஆங்கிலேயர் தங்களுக்கு சுதந்திரம் வழங்கியதனை ஒருபுறம் மகிழ்ச்சியாகக் கொண்டாடிக் கொண்டிருந்தது. மறுபுறத்திலே ரத்த ஆறு ஓடிக் கொண்டிருந்தது. லட்சக்கணக்கில் மக்கள் செத்துக் கொண்டிருந்தார்கள். இது ஆங்கிலேயப் படையினருக்கும் நமக்கும் நடந்த சண்டையின் விளைவாக அல்ல. நமது மக்களுக்குள்ளேயே நடத்தப்பட்ட மதக் கலவரங்களின் விளைவு. 

இந்தியா-பாகிஸ்தான் பிரிக்கப்பட்ட போது ஏராளமான கலவரங்கள் வெடித்தன. பஞ்சாப், வங்காளம் என்ற இருபெரும் மாகாணங்களை பிரிக்க வேண்டி நேர்ந்தது. இதில் இந்துக்களும், சீக்கியர்களும் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகள் இந்தியாவில் இருக்கும் வண்ணமும், இசுலாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகள் பாகிஸ்தானில் இருக்கும் வண்ணமும் எல்லைக்கோடு பிரிக்கப்பட வேண்டிய தேவை இருந்தது. சுதந்திரம் அறிவிக்கப்பட்ட பின்பும் எல்லைக் கோட்டின் குழப்பம் தீரவில்லை. இந்தியா-பாகிஸ்தான் பிரிவிற்கான மேலோட்டமான எல்லைக்கோடு முதன் முதலில் வேவல் பிரபுபினால் வரையப்பட்டது.

பின்னர் எல்லைக் கோட்டினை நுணுக்கமாக வரையும் பொறுப்பினை 1947-ம் ஆண்டு ஜூன் மாதம் சிரில் ராட்கிளிஃப் என்பவரிடம் பிரிட்டன் அரசு கையளித்தது. ஜூலை மாதம் 8-ம் தேதி ராட்கிளிஃப் இந்தியாவிற்கு வந்தார். எல்லையினை முடிவு செய்வதற்கு அவருக்கு வெறும் 5 வார கால அவகாசமே அளிக்கப்பட்டது. 88 மில்லியன் மக்களைக் கொண்ட 4,50,000 சதுர கி.மீ பகுதியினை பிரிக்க வேண்டியிருந்தது.

 இந்தியாவிற்கு சுதந்திரம் அறிவிக்கப்பட்ட இரண்டு நாட்கள் கழித்து ஆகஸ்ட் 17-ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் பிரிவுக்கான எல்லைக்கோடு இறுதி செய்யப்பட்டது. இந்த எல்லைக் கோடானது “ராட்கிளிஃப் கோடு (Radcliffe Line)” என்று அழைக்கப்படுகிறது. ராட்கிளிஃப் கோடு என்பது வரைபடத்தின் மீது மட்டுமே வரையப்பட்ட கோடு அல்ல. அது மக்களின் மீதும், வீடுகளின் மீதும், வீதிகளின் மீதும், ஊர்களின் மீதும், நகரங்களின் மீதும் வரையப்பட்ட கோடாகும்.

மதவாத சக்திகளின் மதவெறுப்புப் பிரச்சாரங்களினால் இரு பக்கங்களிலும் மிகப் பெரிய கலவரங்கள் மூண்டன. இந்தியா மற்றும் பாகிஸ்தானின் எல்லைக்கு இடையில் கோடிக்கணக்கான மக்கள் இடம்பெயர ஆரம்பித்தனர். இந்த கலவரங்களில் 10 லட்சம் பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் ஒன்றரை கோடிக்கும் அதிகமானோர் இடம் பெயர்ந்தனர். ராட்கிளிஃப் கோடு ஒரே நாளில் ஒரு கோடி மக்களை அகதிகளாக்கியது. உலகில் போர் இல்லாத சூழலிலும், பஞ்சம் இல்லாத சூழலிலும் நடந்த மிகப்பெரும் மனித அவலமாக இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் பேசப்படுகிறது. 

அந்த கோர நிகழ்வுகளின் அரிய, அதிர்ச்சிக்குரிய 25 புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக:

எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஏறிக் கொண்டு, இந்த ரயில் பயணத்தின் மூலமாக எல்லையைக் கடந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முயலும் லட்சக்கணக்கான மக்கள்.
வீடுகளை காலி செய்துவிட்டு மாட்டு வண்டியை கட்டிக் கொண்டு எல்லை கடந்து அகதிகளாய் செல்லும் மக்கள்.
எல்லைப் பிரிவினை ஏற்படுத்திய சோகத்தினை இந்த புகைப்படம் வெளிக்காட்டுகிறது.
சாலைகளில் சிதறிக் கிடந்த சடலங்கள், தகனத்திற்காக ஒரு லாரியில் ஏற்றப்படுகின்றன.
மருத்துவ வசதிகள் ஏதுமற்ற இடத்தில் சிகிச்சை பெறும் பெண்மணி
உடல் மெலிந்து கிடக்கும் மக்கள்
எண்ணற்ற உடல்கள் தகனம் செய்யப்படுகின்றன.
பழங்கால கோட்டை ஒன்றிற்கு வருகை தரும் இசுலாமிய மக்கள். லட்சக்கணக்கான இசுலாமியர்களுக்கு இக்கோட்டை தான் அகதி முகாமாக மாறியது.
ரயில் தண்டவாளங்களின் இரு பக்கங்களிலும் கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் அழுகும் நிலையில் கிடக்கின்றன. அவற்றைக் கண்டுகொள்ளாமல் கடந்து செல்லும் மக்கள்.
எல்லைப் பகுதிக்கு அருகிலுள்ள குளம் ஒன்றில் அழுகிக் கிடக்கும் பயணிகளின் சடலங்களை கழுகுகள் கொத்தித் தின்கின்றன.
புழுதிகளில் புதைந்து கிடக்கும் மனித உடல்களும் எலும்புகளும்.
குடும்பத்துடன், மூட்டை முடிச்சுகளை சுமந்து கொண்டும், முதியவர்களை தோளில் ஏந்திக் கொண்டும் அகதிகளாய் நடக்கும் மக்கள்.
வயதானவர்களும், நோயுற்றவர்களும் எல்லையைத் தாண்டி செல்வதற்காக குடும்பத்தில் உள்ள ஆண்களால் இவ்வாறு தூக்கிச் செல்லப்பட்டனர்.
படுகொலை செய்யப்பட்டு வீதிகளில் வீசப்பட்ட உடல்களை கழுகுகள் கொத்தித் தின்னும் துயரமான புகைப்படம்.
கொன்று வீசப்பட்டு தண்ணீரில் பிணங்களாய் மிதக்கும் மக்கள்.
மக்கள் மட்டுமல்ல, புத்தகங்கள் மற்றும் பல உயிரற்ற பொருட்களும் கூட இரு நாடுகளிடையே பிரித்தளிக்கப்பட்டன.
இந்த பெரும் சோகத்தால் பாதிக்கப்பட்டவர்களை தங்கவைக்க நூற்றுக்கணக்கான கூடாரங்கள் அமைக்கப்பட்டன. எத்தனை மக்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதை இந்த படம் நமக்கு சொல்கிறது.
எண்ணற்ற தூரம் நடந்தும், மாட்டு வண்டிகளில் சென்றும் சிதைக்கப்பட்ட மக்களின் வாழ்வை பிரதிபலிக்கும் தடங்கள்
எல்லையை நோக்கி செல்லும் பெரும் மக்கள் கூட்டம்
இறந்து கிடக்கும் பெண் ஒருவரின் உடலை நாய் ஒன்று கடித்துத் தின்கிறது.
அகதி முகாம்களில் உள்ள மக்களின் நிலை
பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் மத்தியில் மதவாத வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என வலியுறுத்தி உரையாற்றுகிறார். இந்த கூட்டத்தில் மகாத்மா காந்தியும் நேருவுடன் கலந்து கொண்டார்.
பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்கள். உணவின்றி அவர்கள் மெலிந்து கிடக்கும் காட்சி.
கலவரங்களில் மரணித்த மக்களின் உடல்கள் சிலரால் எரியூட்டப்படுகின்றன.
ரயிகளில் முண்டியடித்துக் கொண்டு ஏறும் பெருமக்கள் கூட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *