கெரோனா(covid 19) நோய்த் தொற்று உருவானதில் இருந்து முகக் கவசங்கள் ஒரு அத்தியாவசியப் பொருளாகி இருக்கிறது. தினந்தோறும் வெளியில் செல்ல வேண்டியவர்கள் ஒரு குடும்பத்திற்கு சராசரியாக மாதம் 30 முகக்கவசங்களை பயன்படுத்துகிறார்கள்.
அவற்றை முறையாக தனியாக பிரிப்பதற்கும், அகற்றுவதற்கும் மக்களுக்கு எந்தவித பயிற்சியும் கொடுக்க அரசு முயற்சி எடுக்காததால் மிகச் சாதரணமாக தெருக்களில் பூங்காக்களில் என்று பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்கள் கிடக்கின்றன.
20-30% வரை உயர்ந்துள்ள மருத்துவக் கழிவுகள்
இதேபோல் தான் கையுறைகள், முகக்கவசங்கள் மற்றும் PPE கருவிகள் போன்ற ஒற்றைப் பயன்பாட்டு மருத்துவ தயாரிப்புகளின் அனைத்தின் கதையும் இருக்கிறது. நகரிலும் அதைச் சுற்றியுள்ள ஏரிகள் மற்றும் குளங்களில் இருந்து சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவுகளில் 20% – 30% வரை உயர்ந்துள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். இந்த நோய்த்தொற்று காலத்திற்கு முன்புவரை ஏரிகள் மற்றும் குளங்களில் சேகரிக்கப்பட்ட மருத்துவக் கழிவுகள் மொத்த குப்பைகளில் சுமார் 5% மட்டுமே இருந்திருக்கின்றன.
கடற்கரையை மாசுபடுத்தும் கழிவுகள்
முறையற்ற நிலையில் கொட்டப்படும் கழிவுகள் நிலத்திலிருந்து ஏரிகள் அல்லது பள்ளிக்கரணை போன்ற சதுப்புநிலப் பகுதிகள் வரையும், அதேபோல் மூன்று பெரிய நதிகளான கொசஸ்தலை ஆறு, கூவம் மற்றும் அடையாறு வழியாக கடலுக்கும் செல்கின்றன. செல்லுகிற வழியெல்லாம் நீர்நிலைகள், கரையோரங்கள் மற்றும் சதுப்பு நிலங்களை மாசுபடுத்த வழிவகுக்கிறது.
இதனால் இன்றைக்கு கடற்கரையின் 400 மீட்டர் சுற்றளவில் ஒரு பகுதி மிகவும் மாசுபட்டுள்ளது. மருத்துவக் கழிவுகள் இவ்வாறு கையாளப்படுவதால், அதனுடன் தொடர்புடைய நோய்களைக் கொண்டு செல்வது மட்டுமல்லாமல், பலவிதமான சுற்றுச்சூழல் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகின்றன.
“நீர்நிலைகளில் உள்ள கழிவுகள் நீர்ப் பறவைகள் மற்றும் பிற வனவிலங்குகளின் கழுத்தை நெரிப்பதாக உள்ளது. இது கூடு கட்டும் பருவத்தில் முட்டையிட கரையை நோக்கி வரும் ஆமைகளை திணறச் செய்து பாதிக்கக்கூடும். இறுதியாக இந்த நெகிழிகள் நுண்துகள்களாக (microplastic) மாறி நம் உணவிலும் நுழைகிறது.
மருத்துவக் கழிவுகளை தனியாகக் கையாள்வதற்கான வழிமுறைகள் இல்லை
தற்பொழுது மக்கும் குப்பை, மக்காத குப்பை போல ஒவ்வொரு வீட்டிலும் மருத்துவக் கழிவுகளை தனியாகக் கையாள வேண்டும். ஆனால் மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சியால் (G.C.C) வரை இதுவரை எந்த ஒரு முறையும் அறிவுறுத்தப்படவில்லை.
தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் இருந்து பெறப்படும் மருத்துவக் கழிவுகள் மஞ்சள் வண்ண பைகளில் சேகரிக்கப்பட்டு மணலியில் உள்ள குப்பைகள் எரியூட்டும் வளாகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டாலும், மற்ற வீடுகளுக்கு இது போன்ற சிறப்பு சேகரிப்பு முறை எதுவும் பின்பற்றப்படுவது இல்லை.
ஏரிகளுக்கு அருகிலும், சாலை ஓரங்களிலும் கொட்டப்பட்டும் மருத்துவக் கழிவுகள்
இதைப்போல் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகிலுள்ள நெடுஞ்சாலைகளில் கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் மூன்று முறை சட்டவிரோதமாக மருத்துவக் கழிவுகளை கொட்டிய சம்பவங்கள் நடந்திருகிறது.
பூவிருந்தவல்லியின் மேப்பூர் கிராமத்தில் மருத்துவக் குப்பைகளை கொட்டி வருவதாகவும், அங்குள்ள புதர்களுக்கு மத்தியில் ஊசி மருந்து குழல்கள்(syringes) மற்றும் ஊசிகள் காணப்படுவதாகவும் அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் தேசிய நெடுஞ்சாலை NH48-ன் கிளைவழி சாலையான மாநில நெடுஞ்சாலை 50B வழி தடத்தில் உள்ள மேவலூர்குப்பத்திலும், திருமழிசை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதிகளிலும் கூட மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகிறது.
அபாயகரமான கழிவுகள் என்ற பிரிவின் கீழ் வரும் இத்தகைய மருத்துவக் கழிவுகளை மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள்(Clinics), தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் (T.N.P.C.B) அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள்(Agencies) மூலமாக மட்டுமே அப்புறப்படுத்த வேண்டும்.
சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் இதுபோன்ற கழிவுகளை கையாள இரண்டு இடங்கள் உள்ளன. அவை ஒரு நாளைக்கு 6.5 டன் வரை மருத்துவக் கழிவுகளை கையாளக்கூடியவை. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து தினமும் கழிவுகள் சேகரிக்கப்பட்டு உயர் அழுத்த கொப்பரைகள் மற்றும் எரியூட்டுதல் எனும் முறைகளில் இக்குப்பைகளை அழிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், காலாவதியான மருந்துகள், ஊசி மருந்து குழல்கள்(syringes) மற்றும் பிற கழிவுகள் நகரத்திற்கு வெளியே உள்ள நெடுஞ்சாலைகளில் கொட்டப்படுவதாக பத்திரிக்கைகளில் ஆதாரங்களுடன் செய்தியாயுள்ளது மூலம் தெளிவாகியுள்ளது. ஆனால் உள்ளாட்சி அமைப்புகள் இதனை உறுதிப்படுத்துவதோடு தடுக்க முயல வேண்டும்.