கொரோனா வைரஸ் இரண்டாம் அலை: இன்னும் நான்கு வாரத்தில் இந்தியாவின் நிலை என்ன?

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,03,558 புதிய கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தொற்று தொடங்கியதிலிருந்து இதுவரை ஒரே ஒரு நாளில் இவ்வாறு பதிவாகவில்லை. கடந்த திங்களன்று மட்டும் 1,25,89,067 ஆக பதிவாகியுள்ளது. 

தனி ஒரு நாள் கணக்கீட்டின்படி கடந்த ஆண்டு செப்டம்பர் 16, 2020 அன்று 97,894 பேருக்கு தொற்று ஏற்பட்டதாக பதிவாகியுள்ளது. 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் நாட்டின் முதல் தொற்று கண்டறியப்பட்டதிலிருந்து ஒப்பிடும்போது கடந்த திங்கட்கிழமை எண்ணிக்கை மிக உயர்ந்ததாகும்.

வேகமாக பரவும் மாநிலங்கள்

மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, கேரளா, சத்தீஸ்கர், சண்டிகர், குஜராத், மத்தியப்பிரதேசம், தமிழ்நாடு, டெல்லி மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது.

இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு

திங்களன்று கொரோனா தொற்றால் இறந்துபோன 478 பேருடன் சேர்த்து இதுவரை இறப்பு எண்ணிக்கை 1,65,101 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சைக்குப் பிறகு தொற்றிலிருந்து மீட்டு வருபவர்களின் சதவீதம் 92.80 ஆகக் குறைந்துள்ளது. 

இதுவரை கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1,16,82,136 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இறப்பு விகிதம் 1.31 சதவீதமாக உள்ளது என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்பைவிட மிக வேகமாக பரவும் கொரோனா

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது கோவிட்-19 இப்போது மிக வேகமாக பரவுகிறது என்றும் சுகாதார அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. மேலும் கோவிட்-19க்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் அடுத்த நான்கு வாரங்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி ஆயோக்கின் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது, ”நாட்டில் தொற்றுநோய் நிலைமை மோசமடைந்து வருகிறது. மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் இன்னும் வைரசால் பாதிக்கப்படுகின்றனர்” என்றும் கூறினார்.

மேலும் “கொரோனா பரவலின் இந்த இரண்டாவது அலைகளைக் கட்டுப்படுத்த மக்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. அடுத்த நான்கு வாரங்கள் மிகவும் முக்கியமானவை. முழு நாடும் ஒன்றிணைந்து தொற்றுநோயை எதிர்த்துப் போராட முயற்சிக்க வேண்டும். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரமாக பின்பற்ற படவேண்டும் மேலும் தொற்றுகுறித்தான சோதனை இன்னும் திறமையாக செயல்படுத்தப்பட வேண்டும் அத்தோடு மருத்துவ உள்கட்டமைப்பை அதிகரித்து தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்தப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் கருத்து

”கடந்த ஒரு வாரத்தில் இந்தியாவில் ஒரு நாளைக்கு 90,000-க்கும் மேற்பட்டவர்கள் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இருந்தும் ஒரு மில்லியன் மக்கள் தொகையில் எவ்வளவு பேர் இறந்துள்ளனர் என்று பார்க்கும்போது, அது இந்தியாவில் குறைவானது. அதேபோல் உலக சராசரியான ஒரு மில்லியனுக்கு 16,783 தொற்றுடன் ஒப்பிடும்போது, ​​இந்தியாவில் 9,192 மட்டுமாகும்” என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் பிரான்சில் ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு 1600, 1500 மற்றும் 1400 பேர் கோவிட்-19 தொற்றால் இறந்துள்ளனர் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் ஒரு மில்லியன் மக்களுக்கு 120 பேர் கோவிட்-19 பாதிப்பால் இறக்கின்றனர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி போடுவதை அதிகரிக்கக் கோரும் மாநிலங்கள்

தொற்று அதிகமாக பரவிவரும் மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் போன்ற மாநில அரசுகள் அதிகபட்ச அக்கறை செலுத்தப்பட வேண்டும். பாதிப்பு அதிகரிக்கும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் தடுப்பூசி போடுவதை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுள்ளனர். 

இந்தியாவில் தற்போது கோவிட் -19 தடுப்பூசி போடுவது மூன்றாம் கட்டத்தில் உள்ளது. குறிப்பாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடத் தொடங்கியுள்ளது.

கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் என்ற இரண்டு தடுப்பூசிகளை ஜனவரி 16-ம் தேதி இந்தியா சுகாதாரப் பணியாளர்களுக்கு போடுவதினூடாக தடுப்பூசி திட்டத்தின் முதல் கட்டத்தைத் தொடங்கியது. மேலும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 20 மில்லியன் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அடுத்த கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடுவதை அதிகரித்தது.

சுகாதாரப் பணியாளர்கள், முன்கள ஊழியர்கள் மற்றும் முதியவர்கள் என்று மூன்று பிரிவுகளைச் சேர்ந்த 300 மில்லியன் மக்களுக்கு முதலில் தடுப்பூசி போடுவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதனை பரவலாக்க வேண்டும் என்று டெல்லி மற்றும் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர்கள் மத்திய அரசைக் கேட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தடுப்பூசி போடுவதில் வயது வரம்பு தளர்த்தப்பட வேண்டும் மற்றும் புதிய தடுப்பூசி மையங்களை திறக்கக்கபட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கோரும் டெல்லி முதல்வர்

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் தடுப்பூசி போடுவதில் இரண்டு அணுகுமுறையை பரிந்துரைத்துள்ளார். “முதலில், தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அவசரத் தேவை உள்ளது. இதற்காக, தடுப்பூசி மையங்கள் தொடர்பாக மத்திய அரசு முன்வைக்கும்  நிபந்தனைகள் தளர்த்தப்பட வேண்டும்,”

“இரண்டாவதாக, நோய்த்தடுப்புக்கான வயது வரம்பை நீக்குவதன் மூலம் இது அனைவருக்கும் கிடைக்க வேண்டும். மருத்துவ ரீதியாக தடுப்பூசி போட முடியாதவர்களைத் தவிர, அனைவருக்கும் தடுப்பூசி போட ஆரம்பிக்க வேண்டும். இது மக்களிடையே உள்ள தயக்கத்தை நீக்கி, தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும். அதிகமான மக்கள் தடுப்பூசி போடுவதால், நோய் பரவலைக் குறைக்க முடியும்” என்று கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தனது கடிதத்தில் பின்வருமாறு கூறியுள்ளார். ”தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் வயது வரம்பு 25 ஆகக் குறைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இளம் மற்றும் உழைக்கும் மக்களில் அதிக எண்ணிக்கையிலான அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

”அரசாங்கம் செய்ய வேண்டிய முதல் விஷயம் பிற நாடுகளில் பயன்பாட்டில் உள்ள ஃபைசர் இன்க், மாடர்னா, ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிகள் தயாரிக்க அந்த நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்” என்று பொருளாதார நிபுணர் ஸ்ருதி ராஜகோபாலன் பரிந்துரைக்கிறார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *