தமிழ் நாட்டில் 71.79% வாக்குப்பதிவு

தமிழ்நாட்டில் 16-வது சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி அன்று நடந்து முடிந்துள்ளது. இன்று நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 3,998 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.மனுத் தாக்கல் செய்த 7,255 பேரில் 2,806 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 451 பேர் மனுக்களை திரும்பப் பெற்றுக்கொண்டனர்.

இந்த தேர்தலில் அதிகபட்சமாக கரூரில் 77 வேட்பாளர்கள்,அரவக்குறிச்சியில் 40 வேட்பாளர்கள், குறைந்தபட்சமாக பவானிசாகர் மற்றும் வால்பாறையில் ஆறு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.


தமிழ்நாடு முழுவதும் 88,900 வாக்குச்சாவடிகள் உள்ளன. தமிழகத்தில் 50% வாக்குச்சாவடிகள் கண்காணிப்பு கேமரா வசதியுடன் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. தேர்தலில் 4.17லட்சம் பேர் தேர்தல் தொடர்பான பணியில் ஈடுபட்டனர் . தமிழகத்தில் மொத்தம் 6.28 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிப் பெற்ற வாக்காளர்களாக உள்ளனர். காலை 7 மணி முதல் மாலை ஏழு மணி வரை நடந்த வாக்குப்பதிவில் தமிழகத்தில் மொத்தம் 71.79 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாப் சாகு அறிவித்துள்ளார்.
234 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

கடந்த கால தேர்தல்களின் வாக்குப்பதிவு

கடந்த காலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தல்களின் வாக்குப்பதிவில், 1962-ம் ஆண்டு 70.65% வாக்குகள் பதிவாகியிருந்த தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றிய தேர்தலாக இருந்தது 1967ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பதிவான 76.57% வாக்குகள். திமுக தலைவராக கருணாநிதி எதிர்கொண்ட முதல் தேர்தலான 1971 ஆம் ஆண்டு தேர்தலில் 72.10% வாக்குகள் பதிவாகின.

திமுகவிலிருந்து எம்ஜிஆர் பிரிந்து, மிகப்பெரிய அரசியல் மாற்றம் நிகழ்ந்த 1977 ம் ஆண்டு தேர்தலில் மிக குறைவாக 61.58% வாக்குகள் பதிவாகின. மீண்டும் எம்ஜிஆர் ஆட்சியே தொடர்ந்த 1980 தேர்தலில் எம்ஜிஆர் முதல் முறை சந்தித்த தேர்தலை விட அதிகமாக 65.42% வாக்குகள் பதிவானது. அதேபோல எம்ஜிஆர் முதல்வராகவே சந்தித்த அடுத்த தேர்தலான 1984 ம் ஆண்டு தேர்தலில் முன்பைவிட அதிகமாக 73.47% வாக்குகள் பதிவாகின.

எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு மிகப்பெரிய ஆட்சி மாற்றம் நிகழ்ந்த 1989ம் ஆண்டு தேர்தலில் குறைவான 69.69% வாக்குகளே பதிவாகின. மீண்டும் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த தேர்தல் மட்டுமல்லாமல் ஆளும் கட்சியாக இருந்த திமுக ஒற்றை இலக்கில் மட்டுமே வெற்றி பெற முடிந்த 1991ம் ஆண்டு தேர்தலில் மிக குறைந்த வாக்குகளே,அதாவது 63.84% வாக்குகளே பதிவாகின.

முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா தோல்வியடைந்த 1996ம் ஆண்டு தேர்தலில் 66.95% வாக்குகள் பதிவானது.ஜெயலலிதாவின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு போட்டி போடாமலே மீண்டும் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த 2001 தேர்தலில் தமிழக தேர்தல் வரலாற்றிலேயே குறைவாக 59.07% வாக்குகளே பதிவானது.

எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணி கட்சிகளின் ஆதரவில் திமுக ஆட்சி அமைத்த 2006 ம் ஆண்டு தேர்தலில் 70.81% வாக்குகள் பதிவானது.
பிரதான எதிர்க்கட்சியாக இருந்த திமுக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக கூட வர முடியாத அளவு தோல்வியை சந்தித்த 2011ம் ஆண்டு தேர்தலில் இதுநாள் வரை நடந்த தேர்தல்களிலேயே மிக அதிகமாக 78.12% பதிவாகி இருந்தது.

மும்முனை போட்டியும் ஆளுங்கட்சிக்கு நிகராக எதிர்க்கட்சி வெற்றியும் பெற்ற கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில் 74.81% வாக்குகள் பதிவானது.

இந்த தொகுப்பிலிருந்து வாக்குப்பதிவின் விகித மாற்றம் என்பது தேர்தல் முடிவுகளில் பெரியத் தாக்கங்களை ஏற்படுத்தவில்லை என்று தெரிந்து கொள்ளலாம்.ஆட்சிமாற்றம் நிகழ்ந்த 1967-லில் அதிகமாகவும், அதுபோல மீண்டும் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த 1971 குறைவாகவும் என்று மாறி மாறியே வாக்கு சதவிகிதமானது இருந்துள்ளது என்று இத்தொகுப்பிலிருந்து தெரியவருகிறது.

வாக்குப்பதிவு சதவிகிதத்தை வைத்து தேர்தல் முடிவுகளை கணிப்பது என்பது சரியான பார்வை கிடையாது என்றே கடந்தக் கால தேர்தல் வரலாறு காட்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *