கொரோனா பெருந்தொற்றிலிருந்து உலகம் சிறிது சிறிதாக மீண்டெழும் நம்பிக்கை ஏற்பட்டிருக்கும் இந்த வேளையில் மீண்டுமொரு கொரோனா அலை தாக்கக்கூடுமோ என்ற அச்சம் கடந்த இருநாட்களில் சர்வதேச அளவில் எழுந்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் மிக அவசரமாக விஞ்ஞானிகள் குழுவின் கூட்டத்தை இன்று கூட்டியிருக்கிறது.
இங்கிலாந்து நாடு அவரசஅவசரமாக ஆப்பிரிக்காவின் 6 நாடுகளுடனான விமான சேவையை நிறுத்தியிருக்கிறது. இந்த பதற்றத்தின் காரணமாக சர்வதேச அளவில் பங்குச்சந்தைகள் மிகப்பெரும் வீழ்ச்சியை கடந்த இரு நாட்களில் சந்தித்திருக்கின்றன. கடந்த கொரோனா இரு அலைகளின் போதும் பங்குச்சந்தைகள் வரலாறு காணாத அளவில் ஏற்றத்தைக் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்திற்கும் காரணம் ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானா (Botswana) நாட்டில் கண்டறியப்பட்டிருக்கும் கொரோனா வைரஸின் திரிபு வகையாகும்.

இதைப்பற்றி முதலில் அறிந்த விஞ்ஞானிகள் ‘நம்ப முடியாத அளவிற்கு அதிக’ எண்ணிக்கையிலான பிறழ்வுகளைக் கொண்ட ஒரு புதிய கோவிட்-19 திரிபு உருவாகியுள்ளதாகவும், இது உலகளவில் மீண்டும் கொரோனா நோய்த்தொற்றை அதிகரிக்கக் கூடும் என்று எச்சரித்துள்ளனர்.
மூன்று நாடுகளில் கண்டுபிடிப்பு
இதுவரை போட்ஸ்வானா மாறுபாட்டின் திரிபு பாதித்த 10 நபர்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கையானது குறுகிய காலத்தில் மூன்று நாடுகளில் கண்டறியப்பட்டதால் அந்த எண்ணிக்கை விரைவில் உயரக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

ஒரே திரிபில் 32 பிறழ்வுகள்
B.1.1.529 என்றழைக்கப்டும் இந்த திரிபு, தன்னுள் 32 பிறழ்வுகளைக் கொண்டிருக்கிறது. அவற்றில் பல திரிபுகள் இதுவரை பயன்படுத்தும் தடுப்பூசிகளுக்கு எதிராக அதிக எதிர்ப்புத் திறன் கொண்டதாகவும், அதிக அளவில் பரவக்கூடியதாகவும் இருப்பது புதிய அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த திரிபு அதன் புரத முனையில் (Spike Protein) அதிக மாற்றங்களைக் கொண்டிருப்பது இதை ஒரு மிகப்பெரும் அபாயமான ஒன்றாக மாற்றியிருக்கிறது. இந்த புரத கூர்முனைகளே கொரோனா வைரஸ் மனித செல்லுக்குள் நுழைய உதவுகிற உறுப்பு என்பது குறிப்பிடத்தக்கது. பலவீனமான நோயெதிர்ப்பு ஆற்றல் கொண்ட ஒரு நபருக்கு நாள்பட்ட நோய்த்தொற்றின் போது இந்த திரிபு உருவாகியிருக்கலாம் என்றும் – அந்த நபர் சிகிச்சை அளிக்கப்படாத HIV/எய்ட்ஸ் நோயாளியாக இருக்கலாம் என்றும் கண்டறிந்துள்ளனர்.
தடுப்பூசிகள் பயனளிக்குமா?
இதுவரை கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்களின் திரிபுகளின் புரத கூர்முனைகளைக் கண்டறிந்து அதை எதிர்த்து போராடும் விதமாகவே நாம் இதுவரை உபயோகிக்கும் தடுப்பூசிகள் செயலாற்றுகின்றன.
விரிவாக சொல்வதென்றால் தடுப்பூசிகள் இதுவரை ஏற்கனவே கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்களின் பாதிப்புகளை அடையாளம் காணவே நம் மனித உடலுக்கு பயிற்சி அளிக்கின்றன. இந்த வகை மிகவும் பெரியளவில் தன்னளவில் புரத கூர்முனைகளில் மாற்றங்களை கொண்டிருப்பதால் இதற்கு எதிராக தடுப்பூசிகள் பயனளிக்குமா என்பது பற்றிய அச்சம் விஞ்ஞானிகளிடையே ஏற்பட்டிருக்கிறது. இதன் புரத கூர்முனைகளில் காணப்படும் மிக நீண்ட கிளைகள் மற்றும் அதன் நீளம் ஆகியவை நம்பமுடியாத அளவிற்கு அதிக அளவு பிறழ்வுகள் ஏற்பட்டிருப்பதை உறுதி செய்கின்றன. இது இந்த திரிபு பற்றிய கவலையை மேலும் அதிகரிக்கிறது.
அதிகமாக கண்காணிக்கப்பட வேண்டும்
இந்த மாறுபாட்டின் முதல் நோய் பதிவு நவம்பர் 11 அன்று போட்ஸ்வானாவில் கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆறு புதிய நோயாளர்கள் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டனர். மேலும் தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய ஒரு பயணிக்கு ஹாங்காங்கில் இதன் பாதிப்பு கண்டறியப்பட்டது.
36 வயதான அந்த நபர் ஹாங்காங்கிற்கு திரும்பி வந்தபோது எடுக்கப்பட்ட கொரோனா நோய் சோதனையில் இதன் பாதிப்பு கண்டறியப்படவில்லை. இருந்தபோதிலும் தனிமைப்படுத்தலில் இருந்தபோது நவம்பர் 13 அன்று அவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
லண்டன் இம்பீரியல் கல்லூரியின் வைராலஜிஸ்ட் டாக்டர் டாம் பீகாக் (Dr Tom Peacock, a virologist at Imperial College London) இந்த மாறுபாடு ‘உண்மையாகவே கவலைக்குரியதாக’ இருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார். ட்விட்டர் தளத்தில், ”இந்த திரிபின் புரத கூர்முனைகள் மிக அபாயகரமானதாகக் காணப்படுவதால் இந்த திரிபு மிக, மிக அதிகமாக கண்காணிக்கப்பட வேண்டுமென்றும், மக்கள் தொகை அதிகமாயிருக்கும் ஆசிய கண்டத்திற்கு இது பரவினால் மிகப்பெரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பிருக்கிறது” என்றும் கவலை தெரிவித்திருக்கிறார்.
விஞ்ஞானிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக இந்த வகை திரிபுக்கு பெயரிடவில்லை, இருப்பினும் பெயரிடப்பட்டால் அது பெயரின் இறுதியில் கிரேக்க எழுத்தான ‘நு’ (Nu) என்ற எழுத்தில் பெயரிடப்படலாம். இதற்கு தற்போது ஓமைக்ரான் (Omicron) என பெயரிடப்பட்டுள்ளது.

இதுவரை ஆப்பிரிக்காவின் ஒரு பிராந்தியத்தில் மட்டுமே இது மிகக் குறைந்த எண்ணிக்கையில் கண்டறியப்பட்டிருக்கிறது என்பது ஒரு சிறிய நம்பிக்கையளித்தாலும் அதன் பயங்கரமான புரத கூர்முனைகள் காரணமாக இது மிகவும் கண்காணிக்கப்பட வேண்டும்.
சில விஞ்ஞானிகள் இதன் தொடக்க காலத்தில் இது எவ்வளவு வேகமாக பரவுகிறது என்பதைக் கணிப்பது கடினமென்றும், தற்போதைக்கு அது உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட வேண்டுமென்றும் கூறுகின்றனர். மேலும் எதிர்காலத்தில் அதன் பரவும் வேகத்தின் அதிர்வெண் அதிகரிக்கத் தொடங்கும் வரை அதிக கவலை கொள்ள தேவையில்லை என்றும் தெரிவித்திருக்கின்றனர்.
இதுவரை நாம் மேற்கொண்ட தனிமனித சுகாதார தடுப்பு நடவடிக்கைகளை அதே முறையில் தொடர்ந்து மேற்கொள்வது அவசியமாகிறது.
முகப்புப் படம்: Centre for Virus Research at the University of Glasgow வெளியிட்டுள்ள ஓமைக்ரான் திரிபின் படத்தில் அதன் புரத கூர்முனைகளில் சிவப்பு, நீலம், கருப்பு மற்றும் பொன்னிறங்களில் திரிபுகள் காணப்படுகின்றன.