பெரியாருக்குள்ளும் ஓர் உரையாசியர்: முழுதளாவிய விமர்சனநோக்கும், தலையீட்டுப் பொருள்கோளியலும்
ஏலவே கலைச்சொல்லாக்கம் குறித்த பெரியார் கணிப்பான வரையறை குறித்து க.காமராசன் எடுத்துரைப்பில் கண்டோம் அல்லவா அதன் தொடர் நீட்சியாக ‘செக்குலரிசம்’ (Secularism) குறித்துக் காண்போம்:
அ.பெரியார் பார்வையில் ‘செக்குலரிசம்’
இவர்கள் எந்த நாட்டைப் பார்த்து எந்த மொழியில் ‘செக்குலர் ஸ்டேட்’ என்று குறிப்பிட்டார்களோ அந்த நாடுகளில் அந்த மொழியில் செக்குலர் என்பதற்கு என்ன பொருள் இருக்கின்றதோ, அவர்கள் எந்தப் பொருளில் அதைப் பயன்படுத்தி இருக்கிறார்களோ, அந்தப் பொருளில்தானே நாமும் பயன்படுத்த வேண்டும்?
அதை விட்டுவிட்டுச் சொல்லை மட்டும் வைத்துக்கொண்டு செக்குலர் என்றால் மதச்சார்பற்றது என்பது பொருளல்ல; எல்லா மதங்களையும் ஒன்று போலக் கருதவேண்டும் என்றுதான்(பார்ப்பனர்கள்) கூறுகிறார்ககள்”
“பெண்கள் ஒரு மாநாடு நடத்துகிறார்கள். அந்த மாநாட்டில் உள்ள பெண்கள் அத்தனை பேரும் பெண்கள் பதிவிரதைகளாக நடந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்துவிட்டு – பதிவிரதை என்றால் எல்லா ஆண்களையும் தங்கள் கணவனைப் போலக் கருதி நடந்துகொள்ள வேண்டும், அதுதான் பதிவிரதத்தன்மை என்று அர்த்தம் சொல்வது எவ்வளவு அயோக்கியத்தனமாகும்; ‘மதச்சார்பற்ற’ என்பதற்கு எல்லா மதங்களையும் ஒன்று போலக் கருத வேண்டுமென்பது – எனவே’மதச்சார்பற்ற’ என்றால் எந்த மதத்தையும் சாராத என்றே பொருள்.”
– ஈ.வெ.ராமசாமி (‘மதச்சார்பின்மையும் நமது அரசும்’ – ‘ஈவெரா சிந்தனைகள்’)
ஆ.Secularism: கருத்தாக்க வரையறை
ஜார்ஜ் ஜேக்கப் ஹோலியாக் (1817- 1906) தான் முதன்முதலாகச் ‘செக்குலரிசம்’ எனும் சொல்லைப் பாவித்தவர். அதன் அடிப்படையில் ‘பிரிட்டிஷ் செக்குலர் யூனியனை’ உருவாக்கினார் என்னும் வே.ஆனைமுத்து அது குறித்த அவரின் வரையறையையும் எடுத்துரைப்பார்:
“முற்றிலும் மனிதாபிமான அடிப்படையில் எழுந்த இவ்வுலக வாழ்க்கை பற்றிய கடமைகளை விதிக்கும் வாழ்க்கை நெறியே செக்குலரிசம்” – (‘இந்திய அரசமைப்புச்சட்டம் ஒரு மோசடி’)
“மதம் என்பது அரசு என்பதிலிருந்து தனிமைப்படுத்தப் பட்டிருக்க வேண்டும்; மதம் என்பது கல்வி என்பதில் இருந்து பிரிக்கப்பட்டிருக்க வேண்டும்; மதம் என்பது ஓர் ஒழுக்கம் என்பதுடன் தொடர்புடையதாக இருக்கக்கூடாது.”-ஜார்ஜ் ஜேக்கப் ஹோலியாக் (‘இந்திய அரசியலமைப்புச்சட்டம் வெகுமக்களுக்கு விரோதமானது ஏன்?’)
இத்தொடர்பில்தான் செக்குலர் என்பதற்கு அதற்கான கருத்தாக்கத்தை உருவாக்கிய ஹோலியாக்கின் கருத்தாக்கத்தை ஒட்டியே சமயச்சார்பற்ற எனும் கலைச்சொல்லாக்கத்தையே பாவிக்குமாறு அவருக்கே உரிய பாணியில் மனத்திற் இலகுவாகப் பதியுமாறே எடுத்துரைத்தார். நேருவும் அவ்வாறே எடுத்துரைத்தார்.
ஆனால் காந்தியாரோ இதற்கு மாறான ‘சர்வதர்ம சமபாவம்’ என்னும் சமயநல்லிணக்கமான சர்வ சமய சமரசத்தையே கையாண்டார். மட்டுமல்லாமல் “இந்திய அரசமைப்புச்சட்டத்தில் மேலைநாட்டார் கண்டு நிறுவிய மதச்சார்பற்ற கோட்பாடு இடம்பெற்றுவிடாமல் பார்த்துக் கொள்வதற்கான கெட்டியான ஏற்பாட்டை 1947 – இல் அவர் (சந்திரசேகரேந்திர சரஸ்வதி) செய்தார், அது வென்றது என்பார் வே.ஆனைமுத்து.
அடுத்து ‘கடவுள்,மதம்’ ஆகியவற்றை விமர்சிக்கையில் எவ்வாறவர் கையாண்டார் எனக் காண்போம்:
இ.கடவுள் மதம் பற்றிய முழுதளவிலான விமர்சன நோக்கு
பெரியாருக்கு முன்னோடியான அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயக்கர்,1882- ஆம் ஆண்டிலேயே ‘இந்துமத ஆசார ஆபாச தர்சினி’ எனும் அரிய அபூர்வ நூலை முன்வைத்துள்ளார்.
“ஆபாசம் என்ற சொல்லுக்குப் போலி அனுமானம் (Semblance of reason), ‘போலி நியாயம்’ (fallacy) என்ற பொருள் பழைய தமிழில் பிரபலமானது. ஏறக்குறைய இந்தப் பொருளில்தான் மதமும் கடவுளும் ஆபாசக் களஞ்சியம் என்றார் பெரியார்.”
” – ‘கடவுளும் மதமும் ஆபாசம்’ – என்று விமர்சிக்கும் போது ஆபாசம் என்ற சொல்லுக்கு ‘ அக்கிரமம், தந்திரம், முன்னுக்குப் பின் முரண்,’ மக்களை மக்கள் இழிவுபடுத்துவது’ முதலான பொருளை எல்லாம் தந்துவிடுகிறார்”
“பெரியாரின் வாதங்கள் அச்சு அசலாகத் தமிழ்மொழி வாயிலாகவே கடவுள், மதம் பற்றிய முழுதளாவிய விமர்சன நோக்கைச் சுட்டுகிறது.” – க.காமராசன் (‘பெரியாரும் சில தத்துவ விசாரணைகளும்’)
ஈ.நவீன பரிமேலகியோர் உரைவிளக்கம் போலாது பெரியாரின் தலையீட்டுப் பொருள்கோளியல்
வள்ளுவர், வள்ளலார் ஆகிய தமிழறப் பேராசான்மாரை மட்டுமல்லாமல்; ஞானியார், கைவல்யம், குன்றக்குடி, மறைமலை அடிகளார்தமையும்; பா.வே. மாணிக்கனார், கா.சு. பிள்ளை, திருவிக ஆகிய சனாதன வைரிகளான கட்டளைக்கல் அதிகாரியராம் தொல்லாணை நல்லாசிரியோரையும் எவ்வாறெலாம் பெரியாரால் விதந்தோதி இனங்காண முடிந்தது?
இதிகாச புராணங்கள்; வேதமரபு, பகவத் கீதை; மனுமுதலாம் தர்மசாத்திரங்கள்; கடவுள் மத ஆபாசங்கள் ஆகியவற்றை எவ்வாறவரால் கட்டவிழ்க்க இயன்றது என்னும் புரிதலே அவரை என்னால் வியத்தகு தலையீட்டு உரைஆசிரியராக இனங்காண வாயில் சமைத்ததென்க!
இவற்றுள்ளும் குறிப்பாக குறட்பாக்களையும் அருட்பாக்களையும் இனங்காண மாட்டாமல் அவரவர் உரைமொழிக்குக் கீழ்க்கொணர்ந்தே பேராசிரியப் பெருமக்கள் பலரும் உரைவிளக்கந் திரித்துரைத்தே நவீனபரிமேழகராக அவதாரம் எடுக்கக் கண்டோம் அல்லவா? அந்தப்புள்ளியில் தான் தலையீட்டுப் பொருள்கோளியல் தலைசிறக்க ஒருதனியாகவே வீற்றிருக்கின்றார் பெரியாருக்குள் ஓர் உரையாசிரியர்.
உ.முன்மொழிவும் வழிமொழிதல்களும்
“அறமாவது மநு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலும் ஆம்!”- பரிமேலழகர்
“வடமொழி,இலக்கியப்பரப்பின் மீதும் ‘இந்து’ எனும் கருத்தாக்கத்தின்மீதும் அவர்(வையாபுரியார்) பெரும் காதல் கொண்டிருந்தார். ‘மநுஸ்மிருதி பாரதநாடு முழுவதிலும் உள்ள இந்துசமயத்தினர் அனைவராலும் ஒப்புக்கொள்ளப் பட்டதே’ என்பதனையே திருக்குறள் விளக்கத்துக்கவர் முன்நிபந்தனையாக வைக்கிறார்”: தொ.பரமசிவம்
“இரண்டாயிரம் ஆண்டுக்கால இலக்கியம் யாவுமிங்கே பார்ப்பன வெள்ளாளக்கருத்தியலே என்ற நிலைப்பாட்டையே அ•மார்க்ஸ் பொ.வேல்சாமி இருவரும் முன்னெடுத்தனர்.”
“பவுத்தம் எந்த அளவிற்கு இந்துமதத்தால் கறைபட்டதோ அதேஅளவு சமணநெறியும் வள்ளுவநெறியும் கூட இந்துமதச்சாயல் பெற்றவையே. எல்லா உயிரும் சமம் என்கிற சமணநெறியை வற்புறுத்திய போதிலும் திருக்குறள் வருணநெறியை முற்றாக விலக்கியதல்ல”- அ•மார்க்ஸ் (‘இந்துத்துவச் சூழலில் பெரியாரின் தேவை’).
இராமலிங்கரையும் இந்து, சைவ எல்லைக்கு உட்படுத்தியே தொடர்வர் அ.மார்க்ஸ்ம், வீ.அரசும் (‘பக்தி – அனுபவம் – அரசியல்’)
“இன்று ஆர்.எஸ்.எஸ்.மூலம் திருக்குறள் பரப்பப்படும் (?!) நிலைமைக்கான அகக்காரணம் அன்றே திருக்குறளின் பால் பிரிவினையில் உள்ளது.”
“திருக்குறளில் சாணக்கியர் கருத்துக்களின் தாக்கம் உண்டு என்ற விவாதம் நீட்சே நோக்கில் முக்கியமானது” – தமிழவன்(‘தீராநதி’).
கோட்சேவிய நோக்கில் காந்தியாரை அணுகப் புகுமாப் போலவே – நீட்சேவிய நோக்கில்குறளை அணுகத் தலைப்பட்டனர் தமிழவனும் , சோ. அறிவுமணியும் (‘அறனெனப்படுவது யாதெனின்)
“குறள் ஒரு சமண(பவுத்த) அறநூல் என்பது நிறுவப்பட்ட கருத்தெ”ன்னும் ராஜ் கௌதமனே – ‘முப்பால்’ என்ற தலைப்பே ‘திரிபிடகம்’ என்ற பவுத்த சாத்திரத் தமிழாக்கம் போல் உள்ளதாகவும், வடநூல் மரபின் தர்மார்த்த கர்மப் புருஷார்த்தங்கள் முப்பாலாக ஒரே பனுவல் ஆக்கப்பட்டுள்ளதெனவும் அடுத்தடுத்த பத்திகளிலேயே மயங்கிக் குழப்புகின்றார். இன்னும் இந்த நவீனபரிமேலழகர் வரிசை ந.முருகேசபாண்டியன், ராணிதிலக் எனத் தொடராலாகின்றது. இது நவீன சிந்தனைப் பள்ளி வரலாற்றின் முரண்நகையே.
இத்தொடர்பில் மேலதிகப் புரிதல்களுக்கும், இவற்றிற்கான ஆதாரப்பூர்வ மறுப்புகளுக்கும் என் ‘தமிழின் நிறமும் ஆரியவர்ணமும்’ நூலில் காண்க. (வெளியீடு: விஜயா பதிப்பகம்)
ஊ.எது நாத்திகம்?
“நாத்திகம் என்ற சொல்லுக்குக் கடவுள் இல்லை என்று பொருளில்லை. வடமொழி ஆதாரங்களில் பார்த்தபடி சொல்கிறேன். நாத்திகன் என்றால் புராண, இதிகாசங்களை, வேதங்களை, சாஸ்திரங்களை, தத்துவங்களைப் பகுத்தறிவினாலே விவகாரம் விவாதம் பண்ணுகிறவன் என்று அர்த்தம். இந்த விவாதம் ஆரிய புராண இதிகாசங்களைப் பெரிதும் பாதிப்பதால் யார் ஒருவர் தங்களுடைய ஆதாரங்களில் கைவைக்கிறார்களோ அவர்களை நாஸ்திகன் எனச் சொல்லிவிட்டார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது. கடவுள் நம்பிக்கைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. ஆரிய கடவுள்களையும், ஆரியசாஸ்திரங்களையும், மூட நம்பிக்கைகளையும் பகுத்தறிவுடன் எதிர்த்துக் கேட்டால் நீ நாஸ்திகன் அவ்வளவுதான். அந்த வகையில் என்னை நாஸ்திகன் என்று தைரியமாகச் சொல்லிக் கொள்கிறேன்.” – ஈ.வெ.ராமசாமி.
“இராமகிருஷ்ணரைப் போற்றுகின்ற தமிழனே! இராமலிங்கம் எந்தவிதத்தில் தாழ்ந்தவர்?”
“கீதையை எறிந்துவிட்டு உண்மைத் திராவிடரான திருவள்ளுவரின் குறளை அனைவரும் படிக்கவேண்டும்”- ஈவெரா(‘குடி அரசு 1-5-1948)
“பண்டிதர் சிலர் உட்கார்ந்து கொண்டு ஒவ்வொரு திருக்குறளின் கருத்தையும் எடுத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்து இதைப்பற்றி மனுதர்மத்தில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதைக் கவனித்துப் பார்ப்பார்களானால் இந்தக் குறள் மனுதர்மத்தின் சூத்திரத்திற்கு நேர்மாறனதாக இருக்கிறது என்று புள்ளிபோட முடியும். 100 க்கு 75 பாட்டுகள் இப்படியே அமைந்திருக்கும் என்று நான் துணிந்து கூறுவேன்.” – ஈவெரா (‘திருக்குறள் பன்முகவாசிப்பு’)
“கொல்கத்தாவில் கட்டமைக்கப்பட்ட ‘இந்துச்சட்டத்திற்கு முற்றிலும் மாறான மனுதர்ம நூலிலிருந்து வேறுபட்ட பிரதியாகத் திருக்குறளை (வீரமா முனிவர்) கண்டுபிடித்தார். எல்லிஸ் (1818), துறு(1840), கோவர்(1871), துறு & லாசரஸ் (1886), போப் (1886) எனப் பலரும் திருக்குறளை மொழிபெயர்த்தனர். இந்தியவியல் என்பதில் மாறுபட்டது திராவிடவியல் எனும் கருத்தாக்கத்தை திருக்குறள் வழி கட்டமைத்தனர்.
அவைதிக மரபை எதிர்கொள்ளப்vபரிமேலழகர் திருக்குறளைக் கட்டமைத்ததைப் போல், இந்து – சாதிய – வர்ணாசிரமத்தை எதிர்கொள்ளத் திருக்குறளைக் கட்டமைத்தனர். திருக்குறள் அடிப்பபடையில் அவைதிக மரபுகளைக் கொண்டிருப்பதால், அய்ரோப்பியர்களின் தேவையை நிறைவேற்றுவதற்கு அது உதவியது. “- வீ.அரசு (மேலது)
தமிழற மரபின் சமயச் சார்பிலிக் கோட்பாடும், அய்ரோப்பிய. அறிவொளி மரபின் மதநீக்கிய (secular) கோட்பாடும் சங்கமிக்கும் சங்குமுகமே ஈதெனலாம்.
“பெரியார் தமிழ் மறுமலச்சி இயக்கத்தின் தூணாக விளங்கிய திருக்குறளைப் போற்றினார். தன் கலகச் செயல்பாட்டிற்கு ஏற்றவாறு திருக்குறளையும் ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு கலகப்பிரதியாகவே
பெரியார் கண்டுபிடித்தபோது, தமிழ்மறுமலர்ச்சி இயக்கத்திற்குத் திருக்குறளின் பங்களிப்பு பெரிய அளவில் போய்ச் சேர்ந்தது.” – க.பஞ்சாங்கம் (‘காக்கைச்சிறகினிலே’ – ஜூன், 2014)
‘எது நாகரிகம்’,’ பொதுத்தொண்டு’, ‘வள்ளுவரும் கடவுளும்’, எனும் உள் தலைப்பிட்டு முறையே ‘பெயக்கண்டும், ‘குடிசெய்வார்க்கு’, ”இரந்தும் உயிர்வாழ்தல்’ என வரும் குறட்பாக்களை அவர் பொருட்படுத்தி ஏற்கும் பாங்கு அவர் தம் வாசிப்பின் அரசியலைக் கட்டமைக்கும் திறத்திற்கு எடுத்துக்காட்டெனலாம்.
அரசன்,அமைச்சர்,விவசாயி, துறவி,வியாபாரி, பொதுநலத்தொண்டர், காதலன், காதலி சகலருக்கும் மூடநம்பிக்கை புகுத்தப்படாமல் அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது என்றும் எடுத்துரைத்தார். நமக்கு வேண்டிய முழுஅறிவையும் கொடுக்கக்கூடிய ஒரேநூல் என்றவர் குறளையே தெரிந்துரைத்தார். ஒழுக்கக் கல்விக்கான மார்க்கமாக அவர் குறள் மதத்தையே பரிந்துரைத்தார்:
“யாரேனும் நீ என்ன மதம் என்றால் குறள்மதம் என்று சொல்லுங்கள். மனுதர்மத்திற்கு உண்மையான மறுப்புநூல் திருக்குறளேயாகும். ” – (‘பெரியார் சிந்தனைகள்’:3)
“திராவிடர் கழகம் திருக்குறளைப் பின்பற்றிச் செயல்படும் கழகம். இந்த நாட்டிலே மனுதர்மம் ஒழிந்து, மனிதத்தன்மை ஏற்படப் பாடுபட்டுவரும் கழகத்திற்குக் குறள்தான் வழிகாட்டி.” (‘பெரியார் சிந்தனைகள்’: 1)
*
“பெரியார் அவர்களின் போர்முறையின் தன்மை உங்களிலே பலருக்கும் தெரிந்திருக்கும் என்று கருதுகிறேன்.அவர்கள் எதிரில் உள்ள படையை மட்டுமல்ல; முதலிலே அப்படைக்கு எங்கே மூலபலம் இருக்கிறது என்று கண்டுபிடித்து அந்த மூலபலத்தைத் தாக்குவதுதான் அவர் போர்முறையாகும்”- சி.என்.அண்ணாதுரை (‘பெரியார் பார்வை’- இதழ்த்தொகுப்பு)
அத்தகைய எதிரியின் மூலபலத்தைக் குறிவைத்துத் தகர்க்கும் படைக்கலனாகவே ஆயுதமாகவும் கேடயமாகவுமே பெரியார் வள்ளுவரையும் இராமலிங்கரையுமே உயர்த்திப்பிடித்தார். தமிழை நவீனமயமாக்குமுகமாகவே உலகத்து நவீன கருத்துகளைத் தமிழிற் கொணர்தற்கு மொழியாக்கப்படை ஒன்றை அமைக்க வலியுறுத்தினார்.
“பொருள்கோளியல் (Hermeneutics) என்பது ஒரு மிகப் பெரிய கலை ஆகும்.அது ஒரு மிகப்பெரிய கல்வித்துறை எனவும் கூறலாம். ஒரு சொல்லின் பொருளைக் காணுதல், ஒரு படைப்பின் பொருளைக் காணுதல்
என்பதைக் குறிக்கலாம். கொஞ்சம் கூடுதலாக ஒரு படைப்பின் பொருளைக் காணுவதோடு பொருள் காணுவதற்கான விதிகளை வரையறுத்தருவது பொருள்கோளியல் என்றும் கூறலாம்.” – ந.முத்துமோகன் (‘மார்க்சியக் கட்டுரைகள்’)
இத்தகைய புரிதல்களின் வெளிச்சத்தில் காணத் தலைப்படும்போதுதான் பெரியாருக்குள் வீற்றிருக்கும் ஒரு தலையீட்டுப் பொருள்கோளியல் உரையாசிரியரின் பெறுமதி எத்துணைத் தனித்த சிறப்பிற்குரியது எனும் மெய்ம்மை நமக்குத் துலக்கமுறலாகின்றது.
மதவாத மரபின் சூதையும் ,எதிர்மரபின் தன் ஆதிக்கத்தின் கீழ்க் கொணரமுயலும் உரைவிளக்க வாதத்தையும் ஒருசேர எதிர்கொள்ளவல்ல மெய்காண் முறையும், பொருள்கோள் முறையும் தலைமயங்கியே முயங்கும் உரையாசிரியரே பெரியாருக்குள் வீற்றிருக்கின்றார். மட்டுமல்ல அவர் உலகானுபவம் எனும் பல்கலைப் பேராசானாய் ‘செலச்சொல்லுமாறு’ எளிமையாய் எடுத்துரைக்க வல்லவராகவும் அவரே திகழ்கின்றார். இதனை நாம் மதச்சார்பின்மையை எடுத்துரைக்குமுகமான மகளிர் மாநாட்டுத் தீர்மானக் கதை மூலமே ஏலவே கண்டோந்தானே? இதோ இன்னும்…
‘பரந்து கெடுக உலகியற்றியான்” குறளுக்கு அவர் வாசிப்பைக் காண்போம்:
“இன்றைய தொழிலாளர்களின் பட்டினிக்கு முதலாளிகள் காரணமென்றால் அம்முதலாளியை ஒழிக்கப் பாடுபடுவது நல்லபயன் அளிக்காது. அவனைக் காப்பாற்றிப் பாதுகாப்பு அளித்து வரும் கடவுளை முதலில் ஓழி. கடவுளாவது வெங்காயமாவது. பாடுபடும் நாமெல்லாம் பட்டினி; பாடுபடாத அவனெல்லாம் வயிறுவீங்க உண்பது இதுதான் கடவுள்நீதியா? இப்படி ஒரு கடவுள் இருக்குமா? இருந்தால் அக்கடவுள் நமக்கு வேண்டவே வேண்டாம் என்று கூறினால் கடவுள் ஒழிந்துவிடும். அப்புறம் உலகப்பொருள் யாவருக்கும் சரிபங்கு என்ற உணர்ச்சி ஏற்படும். தான்பட்டினி இருக்கத் தன் முட்டாள்தனம் தான் காரணம் என்று இதைத்தான் கூறியிருக்கிறார் திருக்குறள் ஆசிரியர்” – ஈவெரா (மேலது)
பெரியாரின் இப்பார்வையின் தொடர்நீட்சியாக பேதம் எவ்வாறு லாபம் தரும் சாதனமாகி மதமும் முதலாளியமும் கைகோக்கும் புள்ளியை மற்றோருகால் இனங்காட்டுவார் அண்ணா!:
“பேதம் எதனால்?யாரால்? எதற்காக, எவ்வாறு யாரால் அது தக்கவைக்கப்படுகின்றது? பேதத்தால் பிழைப்போர் யார்? எந்தப் புள்ளியில் மதமும் முதலாளியமுங் கைகோக்கலாகினறது?”
“பேதம் மனஉணர்ச்சியால் ஏற்படுவதல்ல பேதம் இலாபம் தருகிறது. அதனால்தான் அதை விட்டுவிட மனமில்லாமல், பேதத்தால் பிழைப்பவர்களுக்கு ஓநாய்களுக்கு இரத்த பானத்தில் சுவையிருக்கும் மட்டும் ஜீவகாருண்யத்தை அது எப்படி வரவேற்க முடியும். பேதம் பல காலமாக இலாபம் தரும் சாதனமாக இருப்பதாலேயே, அதற்குச் சாகாவரம் கோருகின்றனர், அதனால இலாபம் பெறுகிறவர்கள். பேதத்தால் வரும் இலாபம் ஒழிக்கப்பட்டால்தான் தோழமை இருக்கமுடிகிறது” சி.என்.அண்ணாதுரை (‘தமிழ் ஆளுமைகள் சிந்தனைத்தடம்’)
முடிவுரையாகச் சில வார்த்தைகள்
பெரியாருடன் சனாதன எதிர்ப்பில் இணைந்து இயங்கிய தமிழியல் ஆய்வறிஞர் எண்மர் மற்றும் பெரியாரை ஓரிரு முறை சந்தித்தும், அவரிடம் பொருளுதவி பெற்றும் பழகிய தமிழ்ப்பதிப்பு முன்னோடியர் மூவரில் ஒருவரான உவேசா ஆகியோர் பற்றி மட்டுமே இப் பேசுபொருளின் முதல்பாகமான இந்நூலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
அடுத்துவரும் பாகத்தில் தமிழறிஞரராக மட்டுமல்லாமல் அவருடைய சமாந்தரப் பல்துறைப் பங்களிப்பாளர்களான மக்கள் தலைவர் , பெரியவர் வஉசி, தமிழ்த்தென்றல் திருவிக,பெரியாரியக் கோட்பாட்டாக்கப் பெருந்தகை, பின்னைப் பெரியாரியர் வே.ஆனைமுத்து; பிரமிள், தொ.பரமசிவன் எனவாங்கியலும் தமிழியல் ஆய்வறிஞர் குறித்ததாகத் தொடரும்.
– வே.மு.பொதியவெற்பன்
(பொதியவெற்பன் அவர்கள் ஆய்வாளர், கவிஞர், பதிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இலக்கியம் மற்றும் அரசியல் இரண்டிலும் ஒரே நேரத்தில் பயணித்துக் கொண்டிருப்பவர்.)
(இந்த கட்டுரையில் வரும் கருத்துகளும் பார்வைகளும் கட்டுரையாளருக்கு சொந்தமானவை – Madras Review)
பொதியவெற்பன் கட்டுரைகளைப் படிக்க