கடந்த மாதம் 18-ம் தேதி நார்வேயைச் சேர்ந்த எரிக் சோல்ஹேய்ம் சென்னையில் தமிழ்நாட்டு முதலைமைச்சர் ஸ்டாலினை சந்தித்து சென்றிருக்கிறார். ஸ்டாலினுடனான இந்த சந்திப்பைப் பற்றி எரிக் சொல்ஹேய்ம் தமது ட்விட்டர் பக்கத்தில், ”மின் வாகனங்கள், சூரிய மின் சக்தி, பசுமை ஹைட்ரஜன் என மாறிவரும் உலகின் புத்தாக்க எரிசக்தி நகர்வில் இந்தியாவும், தமிழ்நாடும் எப்படி தலைமை வகிக்க முடியுமென்ற சிறந்த உரையாடலாக அமைந்தது” என பதிவிட்டிருந்தார்.
எரிக் சோல்ஹெய்மின் சுற்றுப் பயணம்
மேலும் சில நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயனம் மேற்கொண்ட் எரிக் சொல்ஹேய்ம் மஹேந்திரா நிறுவனத்தின் அதிபர் ஆனந்த் மகேந்திராவுடனும், ரிலையன்ஸ் நிறுவன அதிகாரிகளையும் சந்தித்தார். தொடர்ந்து ஒன்றிய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், வீட்டு வசதி நகர்புறத் துறை அமைச்சரும், பெட்ரோலியம் மற்றும் எரிக்காற்றுத் துறை அமைச்சருமான ஹர்தீப் சிங் பூரி, புத்தாக்க எரிசக்தி துறை அமைச்சர் ஆர். கே. சிங் ஆகியோரையும் சந்தித்தார்; நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் உள்ளிட்ட நிதி ஆயோக் குழுவினருடனும் அவர் சந்திப்பை மேற்கொண்டார்.

மரபுசாரா பசுமை ஆற்றல் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு
தனது இந்திய பயணத்தின் போது சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சொல்ஹேய்ம், ”இந்தியா சீனாவை விட அதிக (தொழில் வளர்ச்சி) பலன்களைப் பெற வேண்டுமென்றால் அது எதிர்கால வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கப் போகும் (சூரிய, காற்றாலை மின்சக்தி போன்ற மரபுசாரா ஆற்றல்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கும்) ’பசுமை வணிகத்தில் கவனம் கொள்ள வேண்டும் (If India wants to gain over China, it has to look at building green businesses that promote sustainable development as this will be a crucial factor to drive growth in the future)” என கூறியுள்ளார். தொடர்ந்து அவர்,” நீங்கள் (இந்திய வணிகம்) பசுமை (வணிகத்தை) நோக்கிப் போகவில்லையென்றால், உங்களுக்காக பரிதாபப்படுகின்றேன். ஏனென்றால் மற்றவர்கள் அதை நோக்கி போய்விடுவார்கள்; “நீங்கள் (இந்தியர்கள் எதிர்காலத்தில் உருவாகப் போகும் பசுமை வணிக சந்தையின்) வேலைவாய்ப்புகள் அனைத்தும் சீனாவுக்குப் போவதை விரும்புகிறீர்களா (விரும்புகிறீர்கள் எனில்) அதை வரவேற்கிறேன். ஆனால் இந்தியா அப்படி விரும்பில்லையென்றே கருதுகிறேன். அனைத்து வேலைவாய்ப்புகளும் இங்கே வரத் தான் இந்தியா விரும்புகிறது (“If you want all the jobs to go to China, then (you’re) welcome to (but) I don’t think that’s what India wants. India wants all the jobs here.”)”.
யார் இந்த எரிக் சோல்ஹெய்ம்?
நார்வே நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராகவும், சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் இருந்த சொல்ஹேய்ம் 2016-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை ஐநாவினுடைய சுற்றுச்சூழல் பிரிவின் இயக்குநராக இருந்தார். சுற்றுச்சூழல் தொடர்பில் வளர்ந்த மேற்குலக நாடுகளின் மரபுசாரா ஆற்றல் – மின்சாரத்தில் இயங்கும் தொழில்நுட்ப சாதனக் கண்டுபிடிப்புகளை வளரும் நாடுகளில் உற்பத்தி செய்யும், சந்தைப்படுத்தும் முயற்சிக்கான அதிகாரப்பூர்வமற்ற முகவராக செயல்படுகிறார். இது தொடர்பிலே அவரது தமிழ்நாட்டு, இந்திய சுற்றுப்பயணம் அமைந்தது.
காலநிலை மாற்றத்தின் அவசரகால நிலை உலகம் முழுதும் புதைப்படிம எரிப்பொருள் பயன்பாட்டிற்கு மாற்றான மரபுசாரா எரிசக்தி பயன்பாட்டை நோக்கி நகரும் நிலையை உருவாக்கியுள்ளது. இதை மனதில் கொண்டே சீனாவின் ஒரே மண்டலம் ஒரே பாதை திட்டம் பசுமை ஆற்றல் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது; வணிகப் போக்குவரத்து கட்டமைப்புகளை உருவாக்கிக் கொண்டே பசுமை ஆற்றல் திட்டங்களை வளர்த்தெடுத்து செயல்படுத்துவதற்கு பசுமை மண்டல- பாதை முயற்சியை (Green Belt and Road Initiative) மேற்கொண்டது. அதனது தொடர்ச்சியாக 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் (ஒரே) மண்டலம், (ஒரே) பாதை திட்ட செயல்பாட்டிற்கான பசுமை வளர்ச்சி நிறுவனம் தொடங்கப்பட்டது. முதலில் இதன் தலைவராக நியமிக்கப்பட்ட எரிக் சொல்ஹேய்ம், இப்போது மேற்குலக நாடுகளுக்காக இயங்கி வருகிறார்.
சீனாவை எதிர்கொள்ள முயலும் அமெரிக்கா
சீனாவின் இத்தகைய முயற்சிகளால் பெருகிவரும் மரபுசாரா ஆற்றல் சந்தை தேவைக்கான முதலீட்டில் சீன நிறுவனங்கள் முன்னணி வகிக்கின்றன. சீனா மற்றும் அமெரிக்காவிற்கு இடையே நிகழும் உலக சந்தை மேலாதிக்கத்திற்கான போட்டியில் மரபுசாரா ஆற்றல் பயன்பாட்டு தொழில்நுட்ப, சாதன உற்பத்தியில் சீனாவை எதிகொள்ள வேண்டிய கட்டாயம் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ளது. இதை மனதில் கொண்டே இந்தாண்டு ஜீன் மாதம் நடந்த ஜி7 மாநாட்டில் சீனாவின் பசுமை- மண்டலம் மற்றும் பாதை முயற்சியை எதிர்கொள்வதற்கு பசுமை ஆற்றல் தொடர்பில் 40 லட்சம் கோடி அமெரிக்க டாலர் முதலீடு செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
வணிகம் மற்றும் ராணுவப் போட்டியின் தொடக்கமாக QUAD
மறுபுறம் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் சீனாவுடனான உலக வணிக மேலாதிக்கப் போட்டியுடன், இந்திய (இந்தோ)-பசுபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவை ராணுவ ரீதியாகயும் எதிர்கொள்வதற்கான கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியையும் தீவிரப்படுத்தியது; இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகளை இணைத்துக் கொண்டு 2020 அக்டோபர் மாதம் QUAD- நாற்தரப்புக் கூட்டனியை உருவாக்கியது அமெரிக்கா.
கடந்த காலங்களில் மத்திய- கிழக்காசியாவின் எண்ணெய் வளங்களை மையப்படுத்தி அமெரிக்கா வடிவமைத்திருந்த அதன் வெளியுறவுக் கொள்கையை, இந்தோ- பசுபிக் பெருங்கடற் பிராந்தியத்தை மையப்படுத்தியதாக மாற்றியமைத்தது. அமெரிக்க அதிபராக பைடன் பொறுப்பேற்றவுடன் முதல் வெளிநாட்டுத் தலைவர்களுடனான கூட்டமாக குவாட் நாட்டுத் தலைவர்களுடனான கூட்டம் நடத்தப்பட்டதிலிருந்தே குவாட் கூட்டணியில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை கொண்டிருக்கும் முக்கியத்துவத்தை அறியலாம்.
ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியாவுடன் அமெரிக்கா உருவாக்கியிருக்கும் குவாட் கூட்டணி, ஆசியாவின் நேட்டோ கூட்டனி என வர்ணிக்கப்படுகிறது. இந்தோ- பசுபிக் கடற்பிராந்தியத்திற்கான ராணுவக் கூட்டணியாக சொல்லப்பட்டாலும் அமெரிக்கா தலைமையிலான குவாட் கூட்டணி, வணிக முக்கியத்துவமுடையதும் ஆகும். முன்னர் குறிப்பிட்டது போல மரபுசாரா – பசுமை சந்தை ஆற்றல் சந்தையில் சீன மேலாதிக்கத்தை எதிர்கொள்வதும், வளர்ந்துவரும் 5ஜி தொழில்நுட்ப சந்தையில் சீன ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதும் குவாட் கூட்டமைப்பின் பொருளியல் நோக்கமாக உள்ளது. இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே இந்தாண்டு செப்டம்பர் மாதம் குவாட் நாட்டுத் தலைவர்களின் நேரடி பங்கேற்பில் அமெரிக்காவில் நடந்த குவாட் கூட்டத்தில் பசுமை ஆற்றல் தொழில்நுட்பங்கள் (Green Technologies), செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் (Artificial Intelligence Technologies) தொடர்பான சந்தை- உற்பத்தி முக்கிய பேசு பொருளாக விவாதிக்கப்பட்டது. இவைகளுக்கான எலக்ட்ரானிக் சிப்களுக்கு இன்றியமையாத குறைக்கடத்திகள் விநியோக வலையமைப்பும் (Semiconductor Supply Chain) குவாட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட மிக முக்கியமான செயல்திட்ட அம்சமாகும்.
பசுமை ஆற்றல் உற்பத்தியில் அமெரிக்காவின் கவனம்
சில காலங்களுக்கு முன்பாகவே அமெரிக்கா குறிப்பிட்ட பசுமை ஆற்றல் தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் பற்றிய ஆய்வு மற்றும் உற்பத்தியில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டது. அதனது விளைவாக அமெரிக்க செனட் சபையில் இக்குறிப்பிட்ட தொழில்நுட்ப நிறுவன வளர்சிக்காக தனி மசோதாவே நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தாண்டு ஜீன் மாதம் 8-ம் தேதி அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்ட மசோதா மூலம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மற்றும் குறைக்கடத்திகள் ஆய்வு மற்றும் உற்பத்திகளுக்காக அடுத்த ஐந்தாண்டுகளுக்கு 250 லட்சம் கோடி அமெரிக்க டாலர் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது; குறைக்கடத்திகள் வளர்ச்சி மற்றும் உற்பத்திக்கான அவசர ஒதுக்கீடாக 50 லட்சம் கோடி அமெரிக்க டாலர் அமெரிக்க வர்த்தகத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்களை மார்க்கெட் செய்யும் முயற்சியில் அமெரிக்கா
அதேபோன்று பசுமை ஆற்றல் சந்தையில் மிக முக்கிய அம்சமாகப் பார்க்கப்படும் மின்சாரப் போக்குவரத்து வாகன உற்பத்தி மற்றும் பயன்பாடு தொடர்பாக அமெரிக்கா தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்காவில் மொத்தமுள்ள 50 மாகாணங்களில், 45 மாகானங்கள் மரபுசாரா ஆற்றல் மற்றும் மின்சார ஆற்றலில் இயங்கும் வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக மானியங்களை வழங்குகின்றன. உலகில் சீனா மற்றும் ஐரோப்பியாவிற்கு அடுத்து மூன்றாவது பெரிய மின்-வாகனப் பயன்பாட்டாளராக அமெரிக்கா உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில் மட்டும் தோராயமாக 3,20,000 மின்சார வாகனங்கள் அமெரிக்காவில் விற்பனையாகியுள்ளன. பெட்ரோல் பங்குகளைப் போன்று மின்சார வாகனங்களுக்கு மின்னேற்றம் செய்யக்கூடிய மின்னேற்ற நிலையங்கள் (Charging Stations) அமெரிக்காவில் தற்போது 43,000 அளவில் உள்ளன. இவற்றிலிருந்தே அமெரிக்காவில் பெருகி வரும் மின் வாகனப் பயன்பாட்டினைப் பற்றி அறியலாம்.
இந்தியாவை நோக்கி அமெரிக்கா திரும்பியதற்கான காரணம்
உள்நாட்டு மற்றும் உலக மின் வாகன சந்தை தேவை, குறைக்கடத்திகளுக்கான உற்பத்தி பரிமாற்ற சங்கிலித் தேவை ஆகியவை அமெரிக்காவின் பார்வையை இந்தியா நோக்கி திருப்பியுள்ளது. குவாட் கூட்டமைப்பைப் பொருத்தளவில் இந்தியாவை ராணுவக் கேந்திரமாக மட்டுமன்றி தனது உற்பத்தி கேந்திரமாகவும் அமெரிக்கா பார்க்கிறது. சீனாவுக்கு மாற்றான மனித வளம், தாது வளம் மற்றும் இந்தியப் பெருங்கடல் வழிப்பாதையில் அதனது அமைவிடம் ஆகியவை இதற்கு காரணமாக அமைந்துள்ளன.
இந்தியாவில் மாற்றியமைக்கப்படும் சட்டங்கள்
அமெரிக்காவின் இந்த நோக்கத்தின் அடிப்படையிலேயே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ‘இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள் (Make In India)’ முழக்கம் உருவாக்கப்பட்டது. இந்தியத் தொழிலாளர் சட்டங்கள் மாற்றியமைக்கப்படுகின்றன.
அமெரிக்காவினுடைய உள்நாட்டு மற்றும் உலக சந்தைக்கான மின் வாகன தொழிலுற்பத்தியை அடிப்படையாகக் கொண்டே இந்திய அரசின் கொள்கை வகுக்கும் அமைப்பான நிதி ஆயோக், ’2030-ம் ஆண்டுக்குள் புதைப்படிம எரிபொருட்களைப் பயன்படுத்தி இயங்கும் இந்திய வாகனப் போக்குவரத்து முழுவதும் மின் வாகனப் போக்குவரத்தாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என கொள்கை வகுத்துள்ளது.
மின் வாகன உற்பத்திக்கான கூடமாக மாறப் போகும் இந்தியா
இவ்வருடம் ஆகஸ்ட் 25ந் தேதி நடந்த இந்திய வாகன உற்பத்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய நிதி ஆயோக்கின் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் கண்ட்,”வாகன உற்பத்தியானது மின் வாகன உற்பத்தி நோக்கி நகருவது தவிர்க்க முடியாதது. (ஆகவே) வாகன தொழிற் நிறுவனங்கள் உலக மின் வாகன உற்பத்தியில் இந்தியாவை உலகின் தலைமையாக மாற்ற வேண்டும்” எனப் பேசினார்.
தொடர்ந்து இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களும், ஆட்சியாளர்களும் மின் வாகன, பசுமை ஆற்றல் தொழில்நுட்ப உற்பத்தி மற்றும் சந்தை தொடர்பான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தத் தொடங்கினர். இதற்காகவென்றே இந்திய அரசின் கனரக தொழிலுற்பத்தி அமைச்சகத்தால் மின் மற்றும் கலப்பு (வாகன) உற்பத்திக்கு விரைவாக மாறுதல் திட்டம் I & II (FAME- Faster Adoption and Manufacturing of Hybrid and EV schemes I and II) அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் மின் வாகனப் பயன்பாட்டுக்கான கட்டமைப்புகளும் இந்தியா முழுமைக்கும் விரிவுபடுத்தப்படுகின்றன.
பெட்ரோல் விநியோகக் கட்டமைப்பில் முன்னணியிலுள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், அடுத்த மூன்றாண்டுகளுக்குள் மின் வாகனங்களுக்கான 10,000 மின்னேற்ற நிலையங்களை அமைக்க முடிவு செய்துள்ளது. அதேபோல (இந்திய) தேசிய நெடுஞ்சாலை துறை ஒவ்வொரு 50 கிமீக்கும் இடைவெளியில் மின் வாகனங்களுக்கான மின்னேற்ற நிலையங்களை அமைக்கவுள்ளது. அதன்படி 9 இந்திய நெடுஞ்சாலை வழித்தடங்களில் 6000 மின்னேற்ற நிலையங்கள் அமைக்கும் பணி தொடங்கவுள்ளது.
இப்படியாக, அமெரிக்காவின் பசுமை ஆற்றல் தொழிலுற்பத்தி கொள்கை சார்ந்து இந்தியாவில் வேகமெடுக்கும் மின் வாகன உற்பத்தி மற்றும் பசுமை ஆற்றல் தொழிலுற்பத்தி நடவடிக்கைகள் அடுத்தக் கட்டத்தை எட்டவுள்ளன.
மோடி-பைடன் சந்திப்பின் முடிவுகள்
இந்தாண்டு செப்டம்பர் மாதம் இந்தியப் பிரதமர் மோடி குவாட் கூட்டதையொட்டி அமெரிக்கா சென்ற சமயத்தில், குவாட் நாட்டு தலைவர்களுடனான சந்திப்பு கூட்டத்தில் மட்டுமல்லாது, அமெரிக்க அதிபர் பைடனுடன் தனியே அமெரிக்க-இந்திய இருதரப்பு கூட்டத்திலும் பங்கேற்றார். இக்கூட்டம் பற்றி அமெரிக்க வெள்ளை மாளிகை செப்டம்பர் 24ந் தேதி வெளியிட்ட செய்தி குறிப்பில், குவாட் கூட்டமைப்பு (செயல்பாட்டின்) கீழாக அமெரிக்கா மற்றும் இந்தியா இணைந்து மேற்கொள்ளவிருக்கும் பணிகள் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் பசுமை ஆற்றல், (இருநாட்டுக்கு இடையிலான வர்ததக) பரிமாற்ற சங்கிலி , 5ஜி தொழில்நுட்ப கட்டமைப்புகள், வளரும் (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பங்கள் ஆகியவை இரு நாடுகளும் இணைந்து செயல்படவுள்ள தளங்களாக குறிப்பிடப்பட்டிருந்தன. (Under the Quad, the United States and India are working on COVID-19 response and pandemic preparedness, infrastructure, space, clean energy, humanitarian assistance/disaster relief, cyber security, maritime security, resilient supply chains, approaches to 5G infrastructure deployment that leverage open and interoperable network architectures, and critical and emerging technologies.)
மேலும், இந்தியா தீர்மானித்துள்ளபடி 2030ம் ஆண்டுக்குள் மரபுசாரா ஆற்றல்களிலிருந்து 450 கிகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய ’அமெரிக்கா- இந்தியா காலநிலை மற்றும் பசுமை ஆற்றல் நோக்கத்திற்கான கூட்டுறவுத் திட்டம்-2030 (US- India Climate and Clean Energy Agenda 2030 Partnership)’ மூலம் அமெரிக்கா உதவும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
பசுமை ஆற்றல் தொடர்பாக பிற நாடுகளுடன் அமெரிக்கா மேற்கொள்ளும் கூட்டுறவிற்கான திட்டமாக, காலநிலை மற்றும் பசுமை ஆற்றல் கூட்டுத் திட்டம் (Strategic Clean Energy Partnership- SCEP) அமெரிக்காவால் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் அமெரிக்க பிரதிநிதிகள் தங்களது இந்திய தரப்பு பிரநிதிகளுடன் இணைந்து புதிதான தனியார் பங்கேற்புடன் கூடிய ஹைட்ரஜன் ஆற்றல் தொடர்பான பணிக் குழுவையும், உயிரி (பயோ) எரிபொருள் தொடர்பான பணிக்குழுவையும் உருவாக்கியுள்ளதை மேற்சொன்ன செய்திகுறிப்பு சுட்டிக்காட்டியிருந்தது. (இதன் விளைவாக, ஹைட்ரஜன் ஆற்றல் திட்டங்களில் ரிலையன்ஸ் நிறுவனம் பெரும் முதலீடுகளை செய்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்).
அமெரிக்காவின் வர்த்தக மேம்பாட்டு மையம் உருவாக்கியுள்ள அமெரிக்க- இந்திய காலநிலை தொழில்நுட்பங்களுக்கான பணிக்குழு (US-India Climate Technologies Action Group- CTAG), இந்திய தொழிற் நிறுவனங்கள் இந்திய சந்தையில் பசுமை ஆற்றல் துறை மற்றும் காலநிலை-ஸ்மார்ட் கட்டமைப்பு திட்டங்களில் வளர்ச்சியை எட்டுவதற்கு அமெரிக்க வணிக மாதிரியை வழங்கி உதவும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொடர்பான ஒப்பந்தங்கள்
இவைகளினூடே இந்த செய்திகுறிப்பில் மிகக் குறிப்பான இரு செய்திகள் தமிழ்நாடு தொடர்பாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஒன்று, அமெரிக்க நிறுவனத்தின் ஃபர்ஸ்ட் சோலார் நிறுவனம் 5000 கோடி ரூபாய் (68 கோடி அமெரிக்க டாலர்) முதலீட்டில் தென்னிந்தியாவில் சோலார் தகடுகள் உற்பத்தி செய்ய இருக்கிறது என்பது பற்றியும் மற்றொன்று, 24எம் என்ற அமெரிக்க நிறுவனம் மின் வாகனங்களுக்கு, பசுமை ஆற்றல் தொழில்நுட்பங்களுக்குப் பயன்படும் சேமிப்பு மின்கலன்களுக்கான ஆலை அமைப்பது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த லூகாஸ் டிவிஎஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதை பற்றியும் குறிப்பிட்டிருந்ததாகும்.
சீனாவுக்கு மாற்றான உலக மின் வாகன தேவைக்கான அமெரிக்க, மேற்குலக தொழிற் நிறுவனங்களின் உற்பத்தி கேந்திரம் என்றளவில் இந்திய தொழிற் உற்பத்தி மற்றும் பயன்பாட்டு சந்தையில் பெருகிவரும் மின் வாகன உற்பத்தி கட்டமைப்புக்கான தேவை, ஏற்கனவே வாகன உற்பத்திகளுக்கான தொழிற் கட்டமைப்புகளைக் கொண்ட தமிழ்நாட்டை நோக்கி இந்தியா மற்றும் உலகின் பார்வையை கொணர்ந்திருக்கிறது.
இதனது வெளிப்பாடே 24எம் என்ற அமெரிக்க நிறுவனம் சென்னையின் லூகாஸ் டிவிஎஸ் உடன் செய்திருக்கும் ஒப்பந்தம். ஏற்கனவே இருசக்கர மின் வாகன உற்பத்தியில் முன்னணியிலிருக்கும் ஏத்தர் நிறுவனமும், விரைவில் இந்திய இரு சக்கர மின் வாகன சந்தையை ஆக்கிரமிக்க இருக்கப் போகும் ஓலா நிறுவனமும் தமிழ்நாட்டில் தங்களது உற்பத்தி ஆலையை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
தென்னிந்தியாவில் சோலார் தகடுகள் உற்பத்தி ஆலையை அமைக்கவுள்ளதாக சொல்லப்பட்ட அமெரிக்க நிறுவனமான ஃப்ர்ஸ்ட் சோலார் நிறுவனமும் தமிழ்நாட்டிலே தான் தனது உற்பத்தி ஆலையை நிறுவியுள்ளது. இதுபற்றி கடந்த அக்டோபர் 29ந் தேதி அமெரிக்க அரசுத் துறை சார்பாக வெளியிடப்பட்ட நடந்து முடிந்த ’இந்தோ- பசுபிக் வணிக மன்றக் கூட்டம் (Indo- Pacific Business forum meet)’ பற்றிய செய்திக் குறிப்பில் அதிகாரப்பூர்வமாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்தோ- பசுபிக் வணிக மன்றக் கூட்டம் அமெரிக்க-இந்திய கூட்டு முன்னெடுப்பில் நடத்தப்பட்ட கூட்டமாகும். இக்கூட்டம், முதன்முறையாக ஆசிய நாடொன்றுடனான, இந்தியாவுடனான கூட்டு முன்னெடுப்பில் நடத்தப்பட்டுள்ளது.
இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் திட்டங்கள்
மேற்சொன்ன கடந்த அக்டோபர் 28,29ம் தேதிகளில் நடந்த ‘இந்தோ-பசுபிக் வணிக மன்றக்’ கூட்டத்தில் பசுமை ஆற்றல் உற்பத்தி மற்றும் தொழில்நுட்பம் தொடர்பில் இந்தோ-பசுபிக் பிராந்தியத்திலுள்ள நாடுகளில் அமெரிக்கா பல திட்டங்களை அறிவித்துள்ளது. அவை,
- இந்தோ-பசுபிக் பிராந்திய நாடுகள் பசுமை ஆற்றல் நோக்கி மாற்றமடையும் முயற்சிக்கு உதவுவதற்காகவென்று அமெரிக்கா மற்றும் ஜப்பான் இணைந்து, அமெரிக்க-ஜப்பான் தூய ஆற்றல் கூட்டுத் திட்டத்தை (Japan- US Clean Energy Partnership- JUCEP) உருவாக்கியுள்ளன.
- அமெரிக்காவின் சர்வதேச வளர்ச்சி நிறுவனம் தெற்காசிய பிராந்திய ஆற்றல் கூட்டுறவு (South Asia Regional Energy Partnership-SAREP) திட்டத்திற்கென்று 350 கோடி ரூபாய் (4.9 கோடி அமெரிக்க டாலர்) ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் வங்கதேசம், இந்தியா, மாலத்தீவு, நேபாள், பூட்டான், இலங்கை நாடுகளின் நீடித்த ஆற்றல் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்த உள்ளது.
- பிலிப்பைன்ஸின் கிராமப்பகுதிகளில் சோலார் மின் திட்டத்தை அந்நாட்டுடன் இணைந்து அமெரிக்க செயற்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. அமெரிக்க வளர்ச்சி நிறுவனத்தின் 600 கோடி ரூபாய் நிதி உதவியுடன் செயற்படுத்தவுள்ள பல்வேறு திட்டங்களில் பிலிப்பைன்ஸ் நகரங்கள் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு தகுந்த வளர்ச்சி திட்டங்கள் மற்றும் பிலிப்பைன்ஸ்ஸூக்கான ஆற்றல் பாதுகாப்பு திட்டங்களும் செயற்படுத்த உள்ளன.
- இந்தோனேசியாவில், அமெரிக்க வளர்ச்சி நிறுவனம் 500 கோடி ரூபாய் மதிப்பில் நீடித்த ஆற்றல் திட்டங்களை உருவாக்க உள்ளது.
அமெரிக்காவிற்கு தேவைப்படும் தமிழ்நாட்டின் வளம்
மேற்கூறிய திட்டங்கள் மூலம் இந்தோ- பசுபிக் பிராந்திய நாடுகளுடனான தனது உறவையும் அதன் மூலம் பசுமை ஆற்றல் தொழில்நுட்பங்களுக்கான தனது சந்தையையும் விரிவுப்படுத்தப்போகும் அமெரிக்காவிற்கு இந்தியாவும், தமிழ்நாடும் அவசியமாகிறது. தமிழ்நாட்டின் நிலமும், (கனிம/தாது, மனித) வளமும் அமெரிக்காவின் புவிசார் அரசியலுக்கு தேவைப்படுகிறது.
பொதுவில் தமிழ்நாடு இன்று தொழிற் வளர்ச்சி மாநிலமாக அறியப்படும் நிலையில், உலக சந்தை உற்பத்திக்காக தமிழ்நாட்டின் வளங்கள் தமிழ்நாட்டில் இயங்கும் பன்னாட்டு தொழிற் நிறுவனங்களால் அழிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் வளர்ச்சி பிம்பத்தின் பின்னால் சுரண்டப்பட்ட அதனின் வளங்கள் கணக்கில் கொள்ளப்படுவதில்லை. தமிழ்நாட்டின் தொழிலுற்பத்தியானது தன்னையே அழித்து பிறருக்காக உற்பத்தி செய்யக்கூடியதாக இருக்கிறது. உலக சந்தைக்கான கார் உற்பத்தியின் சூழலியல், வளச் சிதைவுகளை தமிழ்நாடு சுமக்கிறது. காலநிலை மாற்ற சிக்கல்களினால் புதைப்படிம எரிபொருள் பயன்பாட்டுக்கு மாற்றாக, புத்தாக்க எரிசக்தி ஆற்றல் பயன்பாடு முன்வைக்கப்படுகிறதேயொழியே, உலக சந்தைக்கான புதைப்படிம எரிபொருள் பயன்பாட்டு தொழிலுற்பத்தியில் நிலவிய ‘ஒரு சில இடத்தில் உற்பத்தி செய்து உலகம் முழுதும் சந்தைப்படுத்தும்’ உற்பத்தி முறை மாற்றியமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த போக்கானது தங்களது தேவைக்காக வளரும் நாடுகளை, வளர்ந்த நாடுகள் சுரண்டும் போக்கில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. வளர்ந்த நாடுகளின் சூழலியல் பாதுகாப்பிற்காக, வளரும் நாடுகளே மீண்டும் மேலதிகமான சூழலியல் சிதைவுக்கு ஆளாகப் போகின்றன.
எதிர்வரும் காலத்தின் பசுமை ஆற்றல் சந்தைக்கான அமெரிக்க உற்பத்திக்கு தமிழ்நாடு மேலதிகமான சூழலியல் சிதைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.
இப்படியான, ’அமெரிக்க குவாட்- பசுமை ஆற்றல் தொழில்நுட்பங்களுக்கான சந்தை/ உற்பத்தி- தமிழ்நாடு’ என்ற புள்ளிகளை இணைக்கும் முயற்சியாகவே எரிக் சோல்ஹேமின் தமிழ்நாட்டுப் பயணம் அமைந்திருப்பதாகத் தெரிகிறது.
எரிக் சோல்ஹேய்ம் நார்வே நாட்டின் வெளியுறவு அரசியல் பொறுப்புகளில் இருந்த காலத்தில் தான் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள அரசிற்குமான அமைதி பேச்சுவார்த்தைகளில் அனுசரனையாளராக செயல்பட்டார். எரிக் சொல்ஹேய்ம் தலைமையிலான நார்வே நாட்டின் அனுசரணையைப் பற்றி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறும் பொழுது,” அமெரிக்காவின் ஆயுத முகம் இஸ்ரேல், அமைதி முகம் நார்வே” எனக் குறிப்பிட்டிருந்தார். அந்த அமைதி முகம் தமிழீழத்தில் ஏற்படுத்திய விளைவுகளைப் பார்த்தோம். இப்பொழுது அதே முகம் தமிழ்நாட்டில், அமெரிக்காவின் பசுமை அரசியல் முகத்தோடு வருகிறது.
கவலை கொள்ள வைக்கும் கட்டுரை! கடைசி வரி ஆயிரம் கதைகள் சொல்கிறது.