பிரேசிலில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி அளித்து பரிசோதிக்கப்பட்ட நபர் உயிரிழந்த தகவல் அதிர்ச்சி அளித்துள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அஸ்ட்ராசெனேகா என்கிற கொரோனா தடுப்பூசியை உருவாக்கி மனிதர்களுக்கு சோதனை செய்யும் கட்டத்தில் இருந்து வருகிறது. பிரேசில் நாட்டின் ரியோ டி ஜேனேரோ நகரைச் சேர்ந்த 28 வயது நிரம்பிய இளைஞர் ஒருவருக்கு ஆஸ்ட்ராசெனேகாவின் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டு வந்த சூழலில் தற்போது உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஆஸ்ட்ராசெனேகா-வின் பங்குகள் 1.8% சரிவடைந்தது.
“தடுப்பூசி பரிசோதனையின் பாதுகாப்பு குறித்து எந்த பிரச்சனையும் இல்லை” என்று கூறி பரிசோதனையில் எந்த தடையும் இருக்காது என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் ஆஸ்ட்ராசெனேகா நிறுவனம் சோதனையில் இறந்தவர் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க மறுத்துவிட்டது.
கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டதன் காரணமாக அவர் உயிரிழந்திருந்தால் இந்நேரம் பரிசோதனை நிறுத்தப்பட்டிருக்கும். அந்த நபர் மெனின்ஜிட்டிஸ் எனப்படும் மூளை நோய் தடுப்பூசி அளிக்கப்பட்ட நபராக இருக்கலாம் என்று பெயர் குறிப்பிடாத ஒருவர் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரேசிலில் ஆஸ்ட்ராசெனேகா தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனைகளை சாவோ பாலோ (Sao Paulo) பெடரல் பல்கலைக்கழகம் ஒருங்கிணைத்து வருகிறது. தடுப்பு மருந்துகளின் பரிசோதனைகளுக்கு அனுமதி அளிக்கும் சுயாதீன ஆய்வுக் குழுவானது பரிசோதனையை மீண்டும் தொடர பரிந்துரைத்துள்ளதாக அந்த பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இறந்தவர் பிரேசில் நாட்டைச் சார்ந்தவர்தான் என்பதை பல்கலைக்கழகம் ஏற்கனவே உறுதிபடுத்தியிருந்தது. ஆனால் மற்ற விவரங்கள் எதையும் தர மறுத்துவிட்டது.
இதையும் படிக்க: ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதிக்கப்பட்டவருக்கு முதுகுத் தண்டு வீக்கம் மற்றும் நரம்பியல் பிரச்சினைகள்
தடுப்பூசி பரிசோதனை எதிர்பார்த்தபடியே நடந்து வருவதாகவும், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி தொடர்பான எந்த தீவிர பிரச்சினைகளும் ஏற்படவில்லை என பிரேசில் பல்கலைக்கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தற்போது பிரேசிலில் உள்ள ஆறு நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 8000 நபர்களுக்கு முதல் டோஸ் (Doss) கொடுக்கப்பட்டு சோதனை நடைபெற்று வருவதாகவும், சில நகரங்களில் இரண்டாவது டோஸ் கொடுக்கப்பட்டு பரிசோதனை தொடங்கி விட்டதாகவும் பல்கலைகழகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சி.என்.என்(CNN) பிரேசில் செய்தி நிறுவனம், இறந்தவர் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் வசித்து வந்த 28 வயது இளைஞர் என்றும், கோவிட்-19 தொற்றின் பக்கவிளைவுகளால் அவர் இறந்ததாகவும் தெரிவித்துள்ளது.
பிரேசில் அரசு இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசியை வாங்கி ரியோ டி ஜெனிரோவில் உள்ள பயோமெடிக்கல் ஆராய்ச்சி மையத்தில் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் ஆஸ்ட்ரா செனேகா தடுப்பூசியுடன் போட்டியிடும் வகையில் சாவோ பாலோ மாநில புட்டான்டன் ஆராய்ச்சி மைய நிறுவனத்தால் சீனாவின் சினோவாக்(Sinovac) பயோடெக் லிமிடெட் நிறுவனத்தின் தடுப்பூசியும் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
பிரேசிலின் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ கடந்த புதன்கிழமை தன் நாட்டு அரசு சினோவாக் தடுப்பூசியை வாங்காது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுவரை கொரோனா தொற்றால் 154,000-க்கும் அதிகமானோர் பிரேசிலில் உயிரிழந்துள்ளனர். இது அமெரிக்காவிற்குப் பிறகு உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும் அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு அடுத்தபடியாக 5.2 மில்லியனுக்கும் அதிகமான தொற்றுகளுடன் பிரேசில் நாடு மூன்றாவது அதிக கொரோனா பாதித்தவர்களை கொண்டுள்ளது.