பகத் சிங்

புரட்சி, சமூக மாற்றம், நாத்திகம் – கடிதங்கள் வழியே பகத்சிங் பேசிய அரசியல்

பகத்சிங் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Radicals

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றின் போக்கை மாற்றியமைத்தவர்களில் ஒருவர் பகத்சிங். அவரது கடிதங்கள் ஒவ்வொன்றும் அவரது அரசியல் அறிவுத் திறத்தினையும், துணிவையும் பறைசாற்றி இளைஞர்களுக்கு முக்கியமான வழிகாட்டியாய் இருப்பவை.

இந்திய விடுதலைப் போராட்டம் இந்திய மக்களுக்கும் இங்கிலாந்திற்கும் இடையிலான போர். நாங்கள் போர்க்கைதிகள். எங்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்ட காரணமும் நாங்கள் அரசுக்கு எதிராக போர் தொடுத்ததாகத் தான் கூறுகிறது. எங்களை போர்க்கைதிகளுக்கு தண்டனை கொடுப்பது போல துப்பாக்கியால் சுட்டுக் கொல்லுங்கள்” என்று பஞ்சாப் கவர்னருக்கு கடிதம் எழுதியவர் பகத் சிங்.

சிறைக்குள்ளிருந்தும், சிறைக்கு வெளியில் இருந்தும் பகத்சிங் எழுதிய கடிதங்கள் அவர் யார் என்பதை மிகத் தெளிவாக நமக்கு காட்டுகின்றன. உணர்ச்சி வசப்பட்டு அதிதீவிர செயல்பாடுகளில் ஈடுபட்ட ஒரு இளைஞன் அல்ல அவர். மிக நேர்த்தியான அரசியல் புரிதலில் இருந்து தன் செயல் பாடுகளினின் வழியாக தன் மரணத்தின் வழியாக இந்திய இளைஞர்களுக்கு விடுதலையை நோக்கியும், அந்த விடுதலை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் கூறியவர் பகத்சிங். 

சாமானியனாய் சுகதேவிற்கு எழுதிய கடிதம்

பகத்சிங் கைதாவதற்கு மூன்று நாள்களுக்கு முன் 05.04.1929 அன்று தன் நண்பன் சுகதேவிற்கு எழுதிய கடிதமானது ”நாங்கள் சாமானியர்கள். ஆனால் அசாத்தியங்களை கனவு காண்கிறோம்” என்றே சே குவேராவின் வரிகளை நமக்கு நினைவூட்டுகிறது. மேலும் காதல் குறித்து ஒரு மனிதனுக்கு காதல் என்னவெல்லாம் செய்யும் என்று தன் மெல்லிய உணர்வுகளை அந்த கடிதத்தில் எழுதியிருப்பார். இந்த கடிதம்தான் பகத்சிங் சுதந்திரமாக தன் மனதில் பட்டதை அப்படியே எழுதிய கடைசி கடிதமாகும்.  

“வாழ்க்கையில் எல்லா ஆசைகளும், நம்பிக்கைகளும் உடையவன்தான் நானும். ஆனால் தேவையான நேரத்தில் அவற்றை என்னால் உதறிவிட முடியும். அதுதான் மனிதனின் உண்மையான தியாகமும் ஆகும். மனிதனின் வாழ்க்கைப் பாதையில் அந்த விசயங்கள் எல்லாம் ஒரு நாளும் குறுக்கே நிற்க முடியாது, அவன் நிஜமாகவே மனிதனாக இருக்கும் பட்சத்தில். மிக விரைவில் அதற்கான நடைமுறை உதாரணத்தை நீ பெறப்போகிறாய்” என்று எழுதியிருந்தார்.

சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான மாநாட்டிற்கு எழுதிய வாழ்த்துக் கடிதம்

சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் 1929-ம் ஆண்டு அக்டோபர் 19 அன்று லாகூரில்  நடைபெற்ற பஞ்சாப் மாணவர்கள் மாநாட்டுக்கு சிறையிலிருந்து பகத் சிங் எழுதிய வாழ்த்துக் கடிதமும் மிக முக்கியமானதாகும். அவர் தனிமனித சாகசங்களில் விருப்பமற்று அரசியல் ரீதியாக அணி திரட்டப்பட்ட மக்களால் தான் விடுதலையை நோக்கி செல்லமுடியும் என்பதை மாணவர்களுக்கான செய்தியாகக் கூறியிருப்பார். 

அந்த கடிதத்தில் பகத்சிங் எழுதியதன் சாராம்சம் இதுதான். 

“இன்று துப்பாக்கிகளையும் வெடிகுண்டுகளையும் கையில் எடுக்குமாறு இளைஞர்களாகிய உங்களை நாங்கள் கோரப்போவதில்லை. இன்று அதைவிட அதிக முக்கியத்துவம் வாய்ந்த பணி ஒன்றை நீங்கள் எதிர்கொண்டு உள்ளீர்கள். வரவிருக்கும் லாகூர் மாநாட்டில் நாட்டின் சுதந்திரத்திற்காக உக்கிரமான போராட்டம் ஒன்றிற்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்திருக்கிறது.

தேச வரலாற்றின் சிக்கலான காலகட்டத்தில் மிகப்பெரும் பொறுப்பை இளைஞர்களே சுமந்தாக வேண்டும். இளைஞர்கள் புரட்சிகரமான செய்தியினை நாட்டின் மூலை முடுக்குகளில் உள்ள அத்தனை பகுதி மக்களிடமும் கொண்டு சேர்க்க ஜனநாயக முறையில் மக்களைத் திரட்டி விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொள்ளச் செய்ய வேண்டும்.

அப்போதுதான் நாம் சுதந்திரம் அடைவோம், மனிதனை மனிதன் சுரண்டும் கொடுமைச் சாத்தியமற்றதாகும். தியாகி யதீந்திராதாசிடமிருந்து உத்வேகத்தைப் பெற்று எடுத்துக்கொண்டு, அளவற்ற தேச பக்தியுடன் சுதந்திரப் போராட்டத்தில் தடுமாற்றம் இல்லாத மன உறுதியுடன் போராட உங்களால் முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும். புரட்சி நீடுடி வாழ்க”  

என்று எழுதி முடித்திருப்பார்.

புரட்சி குறித்து இளைஞர்களுக்கு பகத்சிங் எழுதியது 

இந்தியாவின் அரசியலில் ஈடுபாடு காட்டுகிற, விடுதலைப் போராட்டத்திலும்  வர்க்கப் போராட்டத்திலும் தன்னை இணைத்து கொள்ளவரும் இளம் தலைமுறைக்கு 02.02.1931 அன்று பகத்சிங் சிறையில் இருந்து எழுதிய ஆவணம் மிக முக்கியமானதாகும். அதில் புரட்சி என்பது சமூக அமைப்பை முழுமையாக மாற்றி அமைப்பது என்று அவர் இளம் தோழர்களிடம் அறிவுறுத்துகிறார்.

“நீங்கள் உண்மையிலேயே புரட்சியை நாடுகின்றீர்கள் என நினைத்துக் கொள்கிறேன். சட்டசபை குண்டு வழக்கில் எங்கள் அறிக்கையில் குறிப்பிட்டபடி புரட்சி என்ற பதத்தின் எங்கள் விளக்கம், தற்போதைய சமூக அமைப்பை முழுமையாக அப்புறப்படுத்திவிட்டு அதன் இடத்தில் ஒரு சோசலிச அமைப்பை நிர்மாணிப்பதே. இதற்காக நமது உடனடி குறிக்கோள் அதிகாரத்தை அடைவதே.

உண்மை என்னவெனில் அரசும் அரசாங்க இயந்திரமும் ஆளும் வர்க்கத்தின் கைகளில் உள்ள ஒரு உபகரணமே. அதன் வர்க்க நலனைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் நாம் அந்த அதிகாரத்தைப் பறித்து நமது இலட்சியத்திற்காக பயன்படுத்த வேண்டும். அதாவது மார்க்சிய அடிப்படையில் சமூக புனர்கட்டுமானம். இதற்காக அரசாங்க இயந்திரத்தை அடக்குவதற்கு நாம் போரிட்டுக் கொண்டிருக்கிறோம். வழி நெடுக நமது சமூக திட்டத்திற்கான சாதக சூழ் நிலையை உருவாக்கும் பொருட்டு மக்களுக்கு கல்வி புகட்ட வேண்டும். இந்த போராட்டங்களில் அவர்களுக்கு பெரிதும் பயிற்சியும் கல்வியும் புகட்ட முடியும்.

இந்த தெளிவிற்கு முன் அதாவது நமது உடனடி மற்றும் இறுதி குறிக்கோள் தெளிவான பின் தற்போதைய சூழ்நிலை பற்றிய ஆய்வைத் தொடங்குவோம். சூழ்நிலையை ஆய்வு செய்கையில் நாம் எப்போதும் மிகுந்த வெளிப்படையுடனும் கடமையுடனும் செயல்பட வேண்டும்” 

என்று அறிவுறுத்தினார்.

மரண தண்டனைக்கு முன்பும் தான் நாத்திகன் என்பதை பறைசாற்றிய கடிதம்

பாபா ரண்வீர் என்கின்ற சுதந்திரப் போராட்ட வீரர் சிங் பகத்சிங் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். அதன் காரணமாக,

 ”நீ மரண தண்டனை பெற்று, தூக்குத் தண்டனைக்கு செல்லப் போகிறாய்; வாழ்நாளெல்லாம் நீ ஆண்டவனை வழிபடாமல் நாத்திகம் பேசி வந்தாய்; எனவே இந்த கடைசி நேரத்திலாவது நீ கிரந்தங்களைப் படிக்க வேண்டும். நீ இறைவனை நெருங்க வேண்டும், கடவுளை ஏற்றுக் கொள்ள வேண்டும்” 

என்று பகத்சிங்கிடம் கூறினார்

அதனை பகத்சிங் ஏற்க மறுத்ததால் இருவருக்கும் இடையில் நீண்ட நேரம் விவாதம் நடைபெற்றது. 

தன் கருத்தை பகத்சிங் கடைசி நேரத்தில் கூட மாற்றிக் கொள்ளவில்லை என்பதால், ஆத்திரப்பட்ட பாபா ரண்வீர், 

”இந்த வழக்கின் காரணமாக மக்களிடம் உனக்கு ஏற்பட்டிருக்கும் புகழுக்கு அடிமையாகி விட்டாய், அது உன் கண்ணை மறைக்கிறது. அதனால் ஏற்பட்ட திமிர் உனக்கு அகந்தையைத் தந்திருக்கிறது. கடவுளுக்கும் உனக்கும் இடையில் அந்த அகந்தையும் திமிரும் தடையாக  இருக்கிறது” 

என்று கூறிவிட்டார். 

இதற்கு பதிலாக பகத்சிங், தான் நாத்திகன் ஆனது ஏன் என்பதை தனது நண்பர்களுக்கும் உலகுக்கும் தெரிவிக்க வேண்டிய தேவையின் பொருட்டு எழுதிய கடிதம்தான் ”நான் ஏன் நாத்திகன் ஆனேன்?” எனும் கடிதம். இது தமிழில் பொதுவுடமைப் போராளி ஜீவா அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டது.

“உலகப் புரட்சி சம்பந்தமான பல திறப்பட்ட லட்சியங்களை ஆற அமர சீர்தூக்கிப் பார்ப்பதற்கு போதுமான சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. நான் அராஜகத் தலைவரான (Anarchist Leader) பக்குனின் என்பவரின் தத்துவங்களைக் கற்றேன். பொது உடைமைத் தத்துவத்தின் தந்தையாகிய மார்க்சின் நூல்களில் சிலவற்றைக் கற்றுணர்ந்தேன். ஏகாதிபத்திய

ஆதிக்க இருள் அடர்ந்திருந்த நாட்டில் புரட்சியை வெற்றிகரமாக செய்து முடித்த கர்ம வீரர்களான லெனின், ட்ராஸ்ட்கி, இன்ன பிறரால் இயற்றப்பட்ட நூல்களில் பெரும்பாலானவற்றை அலசி அலசி ஆராய்ச்சி செய்தேன். 

அவர்கள் எல்லோரும் பச்சை நாத்திகர்களே. பக்குனின் எழுதிய ‘கடவுளும் ராஜ்ஜியமும்’ (God and State) என்ற நூல் பூர்த்தி செய்யப்படாது துண்டு துணுக்குகளாக இருந்த போதிலும், விஷயத்தை வெகு ருசிகரமாக விளக்குகிறது. சில காலத்திற்குப் பின் நிர்லம்ப சாமியால் எழுதப்பட்ட ‘பகுத்தறிவு’ (Commen Sence) என்னும் புத்தகத்தையும் படிக்க நேர்ந்தது. அதில் நாத்திகவாதம் தெளிவுபடும்படியில்லாமல் ஒரு தினுசாகக் கூறப்படுகிறது. இந்த விசயமானது அந்தக் காலத்தில் எனக்கு மிக ருசிகரமானதாகி, எனது உள்ளத்தை கொள்ளை கொண்டுவிட்டது. 

1926-ம் ஆண்டு முடிவில், இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்து, காத்து, நடத்தி வரும் சர்வ சக்தி வாய்ந்த கடவுள் ஒருவர் உண்டு என்ற கொள்கை அடியோடு ஆதாரமற்றதென உணர்ந்து கொண்டுவிட்டேன். என்னுடைய இந்தத் தெய்வ நம்பிக்கையற்ற தன்மையை நாத்திகவாதத்தை  பகிரங்கப்படுத்தினேன்.” 

என்று தான் அறிவியல் பார்வையை நோக்கி வளர்ந்த கதையை விளக்கியிருப்பார்.

மரணத்திற்கு பின்பான வாழ்வு உண்டா?

மேலும் இதில் மரணத்திற்கு பின்னான வாழ்வு குறித்தும் அவர் கேள்விகளுக்கும் தெளிவான பதிலை அளித்திருப்பார்.

ஒரு லட்சியத்திற்காக எனது வாழ்வைத் தியாகம் செய்யப் போகிறேன் என்ற அபிப்பிராயம் நீங்கலாக எனக்கு ஆறுதலுக்கு வேறு ஏதாயினும் உண்டா? கடவுள் நம்பிக்கையுள்ள ஒரு ஹிந்து மறுபிறப்பில் ஓர் அரசனாகப் பிறக்கலாம் என்று பார்க்கலாம். ஒரு முஸ்லீமோ அன்றி ஒரு கிறிஸ்தவனோ தன்னுடைய கஷ்ட நஷ்டங் களுக்காகவும் தியாகத்திற்காகவும் சன்மானமாகச் சொர்க்கத்தில் போக போக்கியங்களை அனுபவிக்கலாமென்று கனவு காணலாம். ஆனால் நான் எதை எதிர்பார்ப்பது? என்னுடைய கழுத்தைச் சுற்றி கயிறு மாட்டப்பட்டு, காலடியிலுள்ள பலகை தட்டிவிடப்படும் நிமிஷமெதுவோ அதுவே எனது இறுதி நிமிஷம். அதுவே எனது வாழ்க்கையின் முடிவான நிமிஷம். இன்னும் விளக்கமாக வேதாந்த சாஸ்திரத்தின் சிறப்புச் சொற்களால் கூறினால், எனது ‘ஆத்மா’ எல்லாம் அக்கணமே முடிந்துவிடும்.

அதற்கப்பால் ஒன்றுமில்லை. இந்த நிகழ்ச்சியை நாஸ்திகக் கண்ணோடு பார்க்கும் தைரியம் எனக்கிருந்தால் “எத்தகைய மாபெரும் முடிவுமின்றி போராடிக் கொண்டிருந்த ஒரு சிறிய ஜீவிதம்” தான் எனது வாழ்க்கையின் சன்மானமென்பது விளங்கும்.” என்று எழுதினார்.

துணிச்சலோடு தூக்கு மேடையேறுவதே சமூகத்திற்கு நான் அளிக்கும் செய்தி

பகத் சிங் மன்னிப்பு கேட்டு இனி இது போன்ற போராட்டங்கள் செய்ய மாட்டேன் என்று எழுதி கொடுத்தால் பிரிட்டிஷ் அரசு மரண தண்டனையை ரத்து செய்வதாக சிலர் சிறைக்குள் அவருக்கு சீட்டு எழுதி அனுப்பினர். அவர்களுக்கு அந்த மாவீரன் தன் கடைசி கடிதத்தில் பதில் சொல்லியிருந்தார்.

”மனித குலத்திற்கும், என் நாட்டிற்கும் ஏதாவது செய்ய வேண்டி சில குறிக்கோள்களை எனது இதயத்தில் பேணி வளர்த்தேன். அந்த குறிக்கோள்களில் ஆயிரத்தில் ஒரு பங்கைக் கூட என்னால் நிறைவேற்ற முடியவில்லை. ஒருவேளை நான் உயிரோடிருந்தால் அவற்றை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைக்கலாம். நான் சாகக் கூடாது என்ற எண்ணம் எப்போதாவது என் மனதில் உண்டாகக்கூடுமானால், அது இந்த நோக்கத்தில் இருந்து மட்டுமே உண்டாகும்.

வாழ வேண்டுமென்ற ஆசை இயற்கையானதே. அது என்னிடமும் உள்ளது. அதை நான் மறைக்க விரும்பவில்லை. ஆனால் அந்த ஆசை நிபந்தனைக்குட்பட்டது. ஒரு சிறைக் கைதியாகவோ நிபந்தனை வரம்புகளுக்கு உட்பட்டவனாகவோ வாழ எனக்கு விருப்பமில்லை. என் பெயர் இந்தியப் புரட்சியின் அடையாளச் சின்னமாகியுள்ளது.

இன்று என் பலவீனங்களை மக்கள் அறியமாட்டார்கள். ஒருவேளை தூக்கு மேடையிலிருந்து நான் தப்பிப் பிழைத்தால் அந்த பலவீனங்கள் எல்லாம் அவர்கள் முன்னால் வெளிப்படக்கூடும். புரட்சியின் அடையாளச் சின்னம் களங்கப்பட்டு நிற்கலாம் அல்லது ஒருவேளை அது முற்றாக மறைந்தும் போகலாம்.

துணிச்சலோடும் புன்னகையோடும் நான் தூக்குமேடையேறினால், இந்தியத் தாய்மார்கள் தங்களது பிள்ளைகளும் பகத்சிங்கைப் போல் ஆக வேண்டுமென்று அவர்கள் விரும்புவார்கள். இதன் மூலம், நமது நாட்டின் விடுதலைக்காக போராட வருபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். பிறகு புரட்சிப் பேரலையை எதிர்கொள்வதற்கு ஏகாதிபத்தியத்தால் முடியாமல் போகும்.”

என்று உறுதியுடன் தன் மரணத்தை ஆயுதமாக மாற்றிய மாவீரனின் பிறந்த நாள் இன்று.

உதவிய நூல்கள்:

கேளாத செவிகள் கேட்கட்டும் 

நான் ஏன் நாத்திகன் ஆனேன்?

பகத்சிங்கும் இந்திய அரசியலும் – பேரா.சுப.வீரபாண்டியன்

2 Replies to “புரட்சி, சமூக மாற்றம், நாத்திகம் – கடிதங்கள் வழியே பகத்சிங் பேசிய அரசியல்”

  1. உங்கள் பதிவுகள் அனைத்தும் அறிவுப் பூர்வமாகவும், ஆழமாகவும், படிப்பதற்கு ஆர்வமாகவும் இருக்கிறது. அரிய செய்திகளைத் தருவதற்கு ஆர்வமுடன் உழைக்கும் குழுவினருக்கு என் உளப்பூர்வமாக வாழ்த்துகளும்.. பாராட்டுகளும்.. தொய்வின்றி பணி தொடர்க! – சைதை மா. அன்பரசன்

    1. மகிழ்ச்சியும் நன்றியும். தொடர்ந்து இணைந்திருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *