துப்புரவுப் பணியாளர் போராட்டம்

16,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சென்னை மாநகராட்சியின் குப்பை அகற்றும் பணிக்கான ஒப்பந்தம்

சென்னை மாநகராட்சியில் குப்பை அகற்றும் பணி ஸ்பெயின் மற்றும் இந்திய கூட்டு நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் இந்த திட்டத்தை  செப்டம்பர் 30-ம் தேதி தீவுத் திடலில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கிறார். அதன்பின் அக்டோபர் 1-ம் தேதி முதல் பணிகள் தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் ஆலந்தூர், அடையார், பெருங்குடி, சோழிங்கநல்லூர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம் ஆகிய ஏழு மண்டலங்களில் முதற்கட்டமாக குப்பையை அகற்றும் பணி ‘அர்வேசர் ஸ்மித்’ என்ற ஸ்பெயின் இந்தியா கூட்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அந்த நிறுவனத்திற்கு ஆண்டுக்கு ரூபாய் 447 கோடி வீதம் எட்டு ஆண்டுகளுக்கு மாநகராட்சி வழங்க இருக்கிறது. 

மேலும் அந்நிறுவனத்தின் பணியை மாநகராட்சி நிர்வாகம் 34 வகையான பார்வையில் கண்காணித்து மதிப்பீடு செய்து நிதியை வழங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாநகராட்சி சார்பில் ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளர்களுக்கு வழங்கும் தின ஊதியத்தை விட குறைவாக ஊதியம் வழங்கியது என்பன போன்ற பல குற்றச்சாட்டுகள் ஏற்கனவே எழுந்த வண்ணம் இருந்தன. தற்பொழுது இந்த ஒப்பந்தமானது மேலும் பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. 

16,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரம்

இது குறித்து செங்கொடி தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் சீனிவாசலு அவர்கள் ‘Madras Radicals’ இணையதளத்திற்கு கூறிய கருத்து பின்வருமாறு.

ஏற்கனவே பல ஆண்டுகளாக இப்பணியை மேற்கொண்டு வரும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்களைப் பறிக்கும் வண்ணம் இந்த ஒப்பந்தம் அமைந்து இருக்கிறது. இந்த பணியில் தங்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கூட இன்னும் அமல்படுத்தப்படாமல் உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் தனியார்மயம் நோக்கி செல்கிறது. இதை மாநகராட்சி செங்கொடி சங்கம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம் என்று தெரிவித்தார்.

இந்த தனியார்மய ஒப்பந்தத்திற்கு எதிராக செங்கொடி சங்கம் சார்பாக மறியல் அறிவிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு 2017-ம் ஆண்டு அக்டாபர் மாதம் 11-ம் தேதி வெளியிட்ட ஆணையின்படி, குறைந்தபட்ச ஊதியமாக ஒரு நாளைக்கு 624 ரூபாய் என மாதத்திற்கு 16,325 ரூபாய் வழங்கப்பட வேண்டும். கடந்த 3 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சியில் மட்டும் அது அமல்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டை வைத்தார். 

மேலும் தற்போது சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சியைச் சேர்ந்த 16,000 தொழிலாளர்கள் 2009-ம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக வேலை செய்து வரும் நிலையில், அத்தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களை திட்டமிட்டு அழிக்கும் வகையில் இந்த தனியார்மய ஒப்பந்தம் செயல்படுத்தப்படுவதாக தெரிவித்தார்.

மாநகராட்சியை பொறுத்தவரை நான்காம் நிலைப் பணியில் கடைகோடியில் மட்டுமே இருக்கும் தொழிலாளர்களின் பணிகளையும் இந்த அரசின் தனியார்மய ஒப்பந்தம் பறிப்பதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *