தலித்துகளும் நிலமும்

தலித்துகளும் நிலமும்

ஏறத்தாழ 130 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1888ஆம் வருடம் அன்றைய காலனிய சப்கலெக்டராக இருந்த  சி.எம்.முல்லாலி செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் ஒரு சில பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்துகிறார். அப்போது அந்த பகுதியில் வாழும் பறையர் சமூகத்தைச் சார்ந்த மக்கள் காலம் காலமாக வசிக்கும் இடம் அனைத்தும் நிலவுடைமையாளர்களின் பெயரில் இருக்கிறது. எனவே அதை திருத்தி எழுத முயற்சி செய்யும்போது அங்கிருந்த நிலவுடமையாளர்கள் அதை எதிர்த்தனர். ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்ட போது ”நாங்கள் எப்போது வேலைக்கு கூப்பிட்டாலும் பறையர்கள் வேலைக்கு வரவேண்டும் மாறாக வேலைக்கு வர மறுத்தாலோ அல்லது எங்களை எதிர்த்தாலோ, அவர்களை வீட்டை விட்டு  துரத்துவோம் என்னும் பயம் அவர்களுக்கு இருந்தால் மட்டும்தான் எங்களுக்கு அடிபணிந்து நடப்பார்கள்” என்று கூறியுள்ளனர். இந்த நிலைமை செங்கல்பட்டில் மட்டும் இருக்கவில்லை ஒட்டுமொத்த இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் இருந்தது. இந்தியாவின் நகரங்கள் துவங்கி மூலைமுடுக்குகள் வரை தலித்துகளின் எதார்த்த நிலை அதுதான். 1881ம் ஆண்டு அறிக்கையின் படி செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தமாக 6,17,000 ஏக்கர் நிலம் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. அதில் 2% மட்டுமே தலித்துக்களின் வசம் இருந்தது. அன்றைய காலக்கட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட மொத்த மக்கள் தொகையில் 24.8% மக்கள் தலித்துகள் ஆனால், அவர்களிடம் 2% நிலம் மட்டுமே இருந்தது.

அம்பேத்கரின் கனவு

இந்த நிலையை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதற்காக அம்பேத்கர் பல முயற்சிகளைச் செய்தார். அதில் மிக முக்கியமான ஒன்று 1947ம் ஆண்டு அகில இந்திய அட்டவணை சாதியினர் கூட்டமைப்பின் சார்பாக, ஒரு விரிவான மனுவை தயாரித்து அரசியல் அமைப்பு சட்ட அவையிடம் கொடுத்தார். அதில் பிற சாதியினரைப் போன்று தலித்துகளுக்கும் நிலம் வைத்துக்கொள்ளும் தனி சொத்துரிமை வேண்டும், மேலும் விவசாயத்தை அரசுக் கட்டுப்பாட்டிலுள்ள தொழிலாக்க வேண்டும் என்ற இரு கோரிக்கைகளும் மிக முக்கியமானது. அரசு உடைமையாக்கப்பட்ட கூட்டுப் பண்ணை முறையை நடைமுறைப்படுத்தினால் நிலத்தை ஆதாரமாக வாழும் தலித் மக்களிடையே சாதி, மத வேற்றுமை, நிலமில்லாமை போன்ற வேறுபாடுகள் அடியோடு அழிக்கப்படும் என்று நம்பினார். இந்தியாவில் உண்மையான சமத்துவத்தை உருவாக்க வேண்டும் என்றால், அது சமூக பொருளாதாரத்துடன் தொடர்புடையதாக இருத்தல் வேண்டும் என்று நம்பினார். ஆனால் சுதந்திர இந்தியாவில் அது நடந்ததா? என்பதுதான் நம்முன் இருக்கும் மிக முக்கியமான கேள்வி?.

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் அனைவரும் நிலம் வைத்துக்கொள்ள உரிமை கொடுத்தாலும், நடைமுறையில் தலித்துகள் நிலம் வைத்திருப்பது என்பது சாத்தியமாகாத விடயமாக உள்ளது. சாதி ஆதிக்கத்தைப் பயன்படுத்தி தலித்துகளை புதிய நிலங்களை வாங்க விடுவதில்லை. மேலும் ஏற்கனவே இருக்கும் இடத்தையும் அவர்களிடம் இருந்து பறிக்கும் அபாயகரமான போக்கு தொடர்ந்து நடந்து வருகிறது.

அதிர்ச்சி அளிக்கும் வேளாண்துறை கணக்கெடுப்பு

ஒவ்வொரு ஐந்து ஆண்டும் இந்திய வேளாண்துறை கணக்கெடுப்பு நடத்தும். 2010 -11 ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்திய அளவில் நிலம் வைத்திருக்கும் தலித்துகளின் எண்ணிக்கை 12.36 % இருந்தது. இந்த எண்ணிக்கை 2015 -16 ஆண்டு கணக்கெடுப்பின்படி 11.84% அளவு குறைந்து விட்டது. இது எப்படி நடந்தது? ஏன் தலித்துகள் வைத்திருக்கும் நிலம் குறைந்தது? என்ற அடிப்படை கேள்விகள் எழுகின்றது? படிப்படியாக தலித் நிலம் பறிபோவதற்கு யார் காரணம்? இதை தடுக்க அரசிடம் என்ன திட்டம் இருக்கிறது? இதுவரை என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?

தமிழ்நாட்டில் தலித்துகளிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலம்

தமிழ்நாட்டில் 2005-06ம் ஆண்டு 8,84,000 தலித்துகள் சொந்தமாக நிலம் வைத்திருந்தனர். இது 2010-11 ம் ஆண்டு 8,73,000 ஆகக் குறைந்துவிட்டது. அதாவது தலித்துகளிடம் 2005-06ம் ஆண்டு  5,03,000 ஹெக்டேர் நிலம் இருந்தது. 2010-11ம் ஆண்டு இது 4,92,300 ஹெக்டேர் ஆகக் குறைந்துவிட்டது. பின் 2015- 2016ம் ஆண்டு 4,66,400 ஹெக்டேராக மேலும் சுருங்கிவிட்டது. 2005- 2015க்கு இடைப்பட்ட பத்தாண்டுகளில் 90,438 ஏக்கர் நிலத்தை தலித்துகள் இழந்துள்ளனர். ஏறத்தாழ 85,300 தலித்துகள் நிலமற்றவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். இதுபோன்று தலித்துகளின் நிலம் படிப்படியாக குறைந்து வருவதை, அரசு ஏன் மிக முக்கியமான பிரச்சினையாக எடுத்துக் கொள்ளவில்லை என்ற கேள்வி நம்முன் எழுகிறது? இந்த நிலைமை தென்னிந்தியாவில் உள்ள மற்ற மாநிலத்துடன் ஒப்பிடும்போது தமிழ்நாடு மிகவும் பின்தங்கியுள்ளது. சமூகநீதிக்கு பேர்போன தமிழ்நாட்டில் தலித்துகளுக்கு இதுபோன்ற கொடுமைகள் நிகழ்வது அதிர்ச்சியளிக்கிறது.

தலித் விவசாயக் கூலிகளின் அவலநிலை

ஒரு பக்கம் நிலம் வைத்திருக்கும் தலித்துகள் தங்கள் நிலத்தை படிப்படியாக இழந்து வருகின்றனர். மறுபக்கம் நிலமற்ற தலித் கூலி விவசாயிகள் தங்கள் அடிப்படை வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்து வருகின்றனர். காலம்காலமாக ஒரு சிறு துண்டு காணி நிலம் வைத்திருக்க உரிமையில்லாத மக்கள் தான் இவர்கள். நிலம் வைத்திருக்கும் உயர்சாதி இந்துக்களிடம் பண்ணை கூலிகளாக வேலைசெய்து தன் வாழ்வை நடத்தி வருகின்றனர்.  இவர்களின் வாழ்க்கை கற்பனைக்கு எட்டமுடியாத துயரத்தைக் கொண்டது. மழை பொய்த்துப்போய் சாகுபடி இல்லாமல் போனால், பசி பட்டினியால் இந்த விவசாய கூலிகள் வாடி வதங்கி உயிரை விடும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

சுதந்திரத்திற்குப் பிறகு ஏறத்தாழ கடந்த 70 ஆண்டுகளாக நிலம் வைத்திருக்கும் உயர் சாதியினர்கள், அரசு கொடுக்கும் இலவச மின்சாரம், உர மானியம், குறைந்த வட்டிக்கு கூட்டுறவு கடன் போன்ற பல்வேறு சலுகைகளை அனுபவித்து வருகின்றனர். பல சமயங்களில் பல லட்சம் கோடி மதிப்பிலான விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்பட்டதில் பயன்பெற்றவர்கள் இந்த நிலம் வைத்திருக்கும் உயிர்சாதி விவசாயிகள். இவர்கள்தான் இன்று பட்டியல் சமூகத்தினருக்கு கிடைக்கும் 1000, 2000 ஸ்காலர்ஷிப் பணத்தைக் கண்டு அஞ்சுகின்றனர். தலித்துகளுக்கு அரசு இவ்வளவு சலுகை கொடுக்கிறது என்று புலம்பி தீர்க்கிறார்கள்.

விவசாயத்தை மையமாகவைத்து அரசு கொண்டுவரும் எந்தவொரு திட்டத்தினாலும் தலித் கூலிகளுக்கு நேரடியாக எந்த பயனும் கிடையாது. விவசாயம் பாதிக்கப்படும்போது அந்த ஒட்டுமொத்த சுமையையும் காலம் காலமாக சுமந்துவருவது இந்த நிலமற்ற கூலிகள்தான். பொதுபுத்தியில் விவசாயி என்றால் நிலம் வைத்திருப்பவர்கள் மட்டும்தான் தெரிகிறார்கள். நிலம் இல்லாத விவசாய கூலிகள் கோடிக்கணக்கில் வாழ்கின்றனர். விவசாயம் நலியும் காலக்கட்டத்தில் விவசாயிகளை விட இந்த விவசாயக் கூலிகள்தான் அதிகமா தற்கொலை செய்து கொள்கின்றனர். இங்கு விவசாயிகளின் தற்கொலை என்பது ஒரு நாடு தழுவிய பிரச்சனையாகப் பார்க்கப்படுகிறது. அதேபோல் விவசாயக் கூலிகளின் தற்கொலையும் பார்க்கப்பட வேண்டும்.

குறைந்தபட்ச கூலித்திட்டம்

இந்த விவசாயக் கூலிகளுக்கு அரசு குறைந்தபட்ச கூலித்திட்டத்தை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றியமைக்க வேண்டும். இதுவும் முறையாக செய்யப்படுவதில்லை. தமிழ்நாடு அரசு கடந்த 2021 ஜுன் மாதம் சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. ஆனால் நடைமுறையில் விவசாயக் கூலிகளுக்கான அடிப்படைக் கூலியை நிலம் வைத்திருப்பவர்களே முடிவு செய்கின்றனர். இதனால் பெரும்பாலான விவசாயக் கூலிகள் நிலக்கிழார்களிடம் இருந்து கடன் வாங்கி தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். எனவே தலித்துகள் பெரும் கடனாளிகளாக மாறுவதற்க்கு அடிப்படை காரணமாக இருப்பது அவர்களுக்கு நிர்ணயக்கப்பட்ட கூலி கிடைக்காமையே.

மிராசுதார் முறையால் பாதிக்கப்பட்ட தலித்துகள்

காலனிய காலத்தில் பல்வேறு சுழ்நிலைகளில் தலித்துகளுக்கு சாகுபடி செய்ய சொந்தமாக நிலத்தை வாங்கும் வாய்ப்புகள் அமைந்தது. ஆனால் அவை முழுமையாக நிகழவில்லை. தரிசு நிலங்களில் சாகுபடி செய்தும், கால்நடைகளை வளர்த்தும், தேயிலை தோட்டங்களில் வேலை பார்த்த கூலிகளை வைத்தும், தமிழ்நாட்டில் சில இடங்களில் தனக்கு சொந்தமாக நிலம்  வாங்க முயற்சிகள் செய்தனர். ஆனால் மிராசுதார் முறையைப் பயன்படுத்தி நிலவுடைமையாளர்கள் தலித்துகளுக்கு நிலம் சொந்தமாக செல்லவிடாமல் வெறும் குத்தகைதாரர்களாக தொடர வழிவகை செய்தனர். தலித்துகள் உழைத்து பணம் சேர்த்து தனக்கு ஒரு நிலம் வாங்க நினைத்தால் அதை நிலவுடைமையாளர்கள் தடுத்தனர். அதற்கு பாரம்பரிய சாதிய முறையும் நிலவுடைமை உரிமையும் துணைநின்றது.

மிராசு முறை என்றால் என்ன?

மிராசு முறையின் அடிப்படையில் தரிசு நிலங்களை சாகுபடி செய்ய விருப்பமுடையவர்கள் ஆட்சியில் இருக்கும் அரசுக்கு விண்ணப்பிக்கலாம். அவர்கள் அந்த பகுதியில் இருக்கும் மிராசுதார்களிடம் கேட்டு அவர்கள் ஒப்புக்கொண்டால் மட்டுமே, மற்றவர்கள் விவசாயம் செய்ய அந்த நிலம் கொடுக்கப்படும். இப்படி காலனிய காலத்தில் அன்றிருந்த அரசிடம் கோரிக்கை வைத்த தலித்துகளுக்கு நிலம் கொடுக்கக் கூடாது என்று மிராசுதார்கள் தடுத்தனர். நிலத்தை விளைச்சல் இல்லாமல் சாகுபடி செய்யாமல் சும்மாவாவது போட்டுவைப்பார்கள். ஆனால் தலித்துகள் சுதந்திரமாக விவசாயம் செய்ய நிலத்தைக் கொடுக்க அவர்கள் சம்மதிக்கவில்லை. எனவேதான் காலனிய அரசு 1859-ம் ஆண்டும் அதற்கு பிந்தைய காலகட்டத்திலும் ஒரு சட்டம் கொண்டு வந்தது. நிலத்தை சாகுபடி செய்யாமல் தரிசாக போட்டு வைத்திருந்தால், மேலும் அந்த தரிசு நிலத்திற்க்கு வரிகட்டாமல் இருந்தால் அந்த நிலத்தை காலனிய அரசு எடுத்துக்கொள்ளும் என்று உத்தரவிட்டது. பிரிட்டிசார்களுக்கு நிலம் சாகுபடிக்கு உள்ளாக்கப்பட வேண்டும் அதனுடாக வரிவசூலிக்கபட வேண்டும் என்பதே அவர்களின் தேவை. அதுவே அவர்களின் இந்தியா குறித்தான பொருளாதார நலன்.

பெரும் பஞ்சத்திற்கு யார் காரணம்?

1802-1901 இந்த இடைப்பட்ட நூறு ஆண்டுகளில் மதராஸ் மாகாணத்தின் மக்கள்தொகை 300 மடங்கு கூடியது. ஆனால் விவசாய உற்பத்தியில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. மாறாக இந்த மிராசுதார்கள் தரிசு நிலங்களை உற்பத்திக்கு பயன்படாமலும், மேலும் நிலம் இல்லாதவர்களுக்கு உடமையாக சென்றுவிடக் கூடாது என்று உறுதியாக இருந்தனர். இதனால் குறைவான விளைச்சல் நிலத்தை சார்ந்து பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இருந்தனர். இது சென்னை மாகாணத்தில் உருவான பெரும் பஞ்சத்திற்கு ஒரு மிக முக்கியமான கூறாக அமைந்தது. குறிப்பாக 1876 – 78 இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தில் 4 கோடி மக்கள் பாதிக்கப்ட்டனர். இந்த பஞ்சத்தில் 40 லட்சத்திற்க்கும் அதிகமானவர்கள் இறந்து போனார்கள். இவர்களில் பெரும் பகுதியினர் தலித்துகள். இதே காலக்கட்டத்தில் நிலவுடமையாளர்கள் தான் விவசாயம் செய்த நிலத்தில் 55%க்கு அதிகமாக பணப்பயிர்களை பயிரிட்டனர். நெல் உற்பத்தி 20% குறைவாக பயிரிட்டனர். இதனால் பெரும் எண்ணிக்கையிலான விவசாய கூலிகள் உணவில்லாமல் பஞ்சத்தில் இறந்தனர். நிலவுடமையாளர்கள் தாங்கள் பயிரிட்ட பணப்பயிர்களை ஏற்றுமதி செய்து பணம்  சம்பாதித்தனர்.

பறையர் கலகங்கள்

ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கு முன்பே தலித் மக்கள் தங்களுக்கான உரிமையை பெற பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை எதிர்த்து போராடியுள்ளனர். 1795 ஆண்டு அறுவடையில் தனக்கு பங்கை உயர்த்தி தரவேண்டும் என்று பிரிட்டிசாரிடம் கேட்டனர். அதற்கு அவர்கள் ஒப்புக் கொள்ளாததால் சென்னை பூந்தமல்லி பகுதியில் தலித்துகள், தங்களது பகுதியில் இருந்து காலிசெய்து ஆற்காடு நவாப் ஆளுகைக்கு சென்றுவிட்டனர். பின் 1796-ம் ஆண்டு இப்படி ஊரைத் துறந்து வேளியேறும் போராட்டம் பரவலாக நடந்துள்ளது. இது போன்று பதினெட்டாம் நூற்றாண்டின் பல பகுதிகளில் நடந்த போராட்டத்தை பறையர் கலகங்கள் என்று பிரிட்டிஷ் ஆவணங்கள் கூறுகின்றன. அதே போல் தானியத்தில் தமக்கு சேரவேண்டிய பங்கை கேட்டும் மிராசுதார் உரிமை கேட்டும் பல போராட்டங்கள் நடந்துள்ளது. இந்த போராட்டங்களை  சில ஆளுமைமிக்க பறையர் தலைவர்கள் வழிநடத்தியுள்ளனர் என்று தெரிகிறது.

திராவிட மகாஜனசபை

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தலித்துகள் தங்களது அரசியல் கோரிக்கைகளை மாநாடுகள் நடத்தியும், பத்திரிக்கையில் எழுதியும், கோரிக்கை மனுக்கள் தயாரித்து அரசிடம் நேரடியாகக் கொடுத்தும், தனது உரிமையை வென்றெடுக்கத் துவங்கினார்கள். அதில் மிக முக்கியமான மைல்கல் அயோத்திதாச பண்டிதரால் 1891ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட திராவிட மகாஜனசபை. தலித் குழந்தைகள் கல்வி மற்றும் நிலத்தின் மீதான அடிப்படை உரிமைகள் போன்றவற்றை தலித் மக்கள் போராடி பெற்றனர்.

பஞ்சமி நிலம்

1902ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தரிசு நிலங்களை தலித் சமூகத்தவர்களுக்கு கொடுக்கவும், அவர்கள் அதை விவசாயத்திற்குப் பயன்படுத்தலாம் என்றும் உத்தரவிட்டது. இதேபோல் 1909-ம் ஆண்டு மிராசுதாரர்களிடம் இருந்து நிலங்கள் தலித் மக்களுக்குக் கொடுக்க உத்தரவிட்டடது.  அனைத்து நிலங்களும் மிராசுதாருக்குச் சொந்தம் என்கிற நடைமுறை, சட்டவிரோதமானதென 1911ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. குறிப்பாக 1918ம் ஆண்டுக்கு பிறகு பறையர் சமூகத்தவர்க்கு விவசாயம் செய்யவும் குடியிருக்கவும் ஏராளமான தரிசு நிலங்கள் வழங்கப்பட்டது.

இந்த சட்டம் வந்த பிறகு முதல் பத்து ஆண்டுகளில் சென்னை மாகாணத்தில் ஏறத்தாழ 1 லட்சத்து 80 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வழங்கப்பட்டது. பின் 1927-28ம் ஆண்டு 2லட்சத்து 37 ஆயிரம் ஏக்கராக உயர்ந்தது. பின் 1930- 31ம் ஆண்டு 3 லட்சத்து 43 ஆயிரம் ஏக்கராக உயர்த்தப்பட்டது என்று பிரிட்டிஷ் அரசின் லேபர் கமிஷன் அறிக்கை தெரிவிக்கிறது. இந்த நிலங்கள் பெரும்பாலும் புன்செய் நிலங்கள் குறிப்பாக வறட்சியான மாவட்டங்களில் தான் வழங்கப்பட்டது.

பிரிட்டிஷ் அரசு வழங்குவதற்கு முன்பு தலித்துகளுக்கு நிலம் இருந்ததில்லை என்று எண்ணுவது தவறு. பிரிட்டிஷ் கொடுத்த நிலம் அப்போது தலித்துகள் வைத்திருந்த நிலத்தில் வெறும் 10% மட்டுமே. இந்த நிலங்கள்தான் இன்று பஞ்சமி நிலம் என்று அழைக்கப்படுகிறது. இப்படி தலித்துகளுக்கு நிலம் கொடுப்பதை மிராசுதார்களும், சாதியவாதிகளும் கடுமையாக எதிர்த்து வந்தனர். அதேபோல் பல்வேறு வழிகளில் இந்த நிலத்தை தலித்துகளிடம் இருந்து மிரட்டியும் பிடுங்கியும் அவர்களுக்கே தெரியாமலும் அந்த நிலங்களை திருடியும் வருகின்றனர்.

தலித்துகளிடம் இருந்து பஞ்சமி நிலங்கள் அபகரிப்பு

பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் தலித்துகளுக்கு ஏறத்தாழ 12 லட்சம் ஏக்கர் நிலம் வழங்கப்பட்டடுள்ளது. ஆனால் அந்த நிலத்தில் அவர்களை விவசாயம் செய்ய விடாமல் சாதியவாதிகளும், மிராசுதார்களும் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளனர். கடந்த 70 ஆண்டுகளில் இந்த பஞ்சமி நிலங்கள் தலித்துகளிடம் இருந்து சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்டு வருகிறது. அதை மீட்பதற்காக அவர்கள் நீதிமன்றங்களில் போராடி பல வெற்றியும் அடைந்துள்ளனர். அந்த நீதி போராட்டங்களில் சில முக்கியமான தீர்ப்புகளை நீதியரசர் சந்துரு மற்றும் நீதியரசர் ஹரிபரந்தாமன் வழங்கியுள்ளனர். அவற்றில் மிகத் தெளிவாக பஞ்சமி நிலம் குறித்தும் அதில் தலித்துகளுக்கான உரிமை குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் பஞ்சமி நிலம் மீட்பு குறித்து தமிழ்நாடு அரசு பல திட்டங்களை உருவாக்கியுள்ளது. ஆனால் அவை முறையாக நடைமுறைப்படுத்தப் படவில்லை. அதேபோல் ஆதிதிராவிடர் நிலம் வாங்க கடன் உதவித் திட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டுவந்தது. அதுவும் எதிர்பாத்த பலனை எட்டவில்லை. தலித்துகள் நிலம் வாங்குவதில் பணம் மட்டுமே பிரச்சனை கிடையாது. அவர்களிடம் பணம் இருந்தாலும் சாதிய ஆதிக்கம் கொண்டவர்கள் அவர்களுக்கு விற்பது கிடையாது. அதேபோல் சாதிய இந்துக்கள் வசிக்கும் குடியிருப்புக்கு அருகில் உள்ள நிலங்களை தலித்துகளுக்கு வாங்க அனுமதிப்பது கிடயாது. அப்படியே விற்க முன்வந்தாலும் தரமான நிலங்களை அவர்களுக்கு விற்பது கிடையாது. இதுபோன்று பல்வேறு சுரண்டல்கலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து விரிவாக ”தலித்துகளும் நிலமும்” என்ற புத்தகத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

புத்தகத்தின் பெயர் : ”தலித்துகளும் நிலமும்”
ஆசிரியர் : ரவிக்குமார்
பதிப்பகம் : மணற்கேணி
தொடர்புக்கு : 9566266036 | 04146-355746

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *