கி.ராஜநாராயணன்

தீராத இழப்பு…கரிசல் மண்ணின் கதைசொல்லி கி.ரா மறைந்தார்

இன்றைய நாள் இப்படி விடிந்திருக்க தேவையில்லை. தமிழ் இலக்கிய உலகின் மாபெரும் இழப்பாக தமிழின் இணையற்ற கதைசொல்லி, கரிசல்காட்டு இலக்கியங்களின் முன்னத்தி ஏர் ‘கி.ரா’ என்று சுருக்கமாக எல்லோராலும் விளிக்கப்படும் கி.ராஜநாராயணன் (பிறப்பு: 1922) மறைந்திருக்கிறார். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தில் 1922-ம் ஆண்டு பிறந்தார். இவரின் முதல் கதை 1958-ல் சரஸ்வதி இதழில் வெளியானது.

இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை. கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப் பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர்.

கரிசல் வட்டார அகராதி

கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவரே. சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016-ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்றவர்.

கரிசல்காட்டு கடுதாசி

இலக்கியம், புனைவு என்று பல்வேறு விதமான புத்தகங்களை தேர்ந்தெடுத்து வாசிக்கும் வாசகர்கள் தவிர்க்கவே இயலாமல் ஒருவரிடம் கட்டுண்டு கிடந்தார்கள் என்றால் அது கி.ரா வாகத்தான் இருக்கும். ஜூ.வியில் வெளிவந்த “கரிசல்காட்டு கடுதாசி” தொடரின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் அவரின் மிக மிக எளிதான, கூடவே அமர்ந்து கதையை சொல்லும் போக்கில் அமைந்த எழுத்துக்கள்தான். ஒரு வாசகனால் எல்லா நேரங்களிலும், எல்லா சூழ்நிலையிலும் விரும்பி படிக்கும் ஒரு எழுத்து என்றால் அது கி.ராவின் எழுத்துகள்தான்.

கி.ரா வின் எழுத்துகள்

கி.ராஜநாராயணன்

கி.ரா-வின் எழுத்துக்கள் மிக எளிதானவை. வாசகனை குழப்பும் அல்லது மேதாவித்தனத்தை வெளிப்படுத்தும் எந்தவித படோபங்களும் அவரின் எழுத்தில் கண்டதில்லை. உதாரணமாக

“அவர் வெற்றிலை போடுவதைப் பார்த்துக் கொண்டிருப்பதே சுவாராஸ்யமான பொழுதுபோக்கு. தினமும் தேய்த்துத் துடைத்த தங்க நிறத்தில் பளபளவென்றிருக்கும் சாண் அகலம், முழ நீளம், நாலுவிரல் உயரம் கொண்ட வெற்றிலைச் செல்லத்தை, ‘நோகுமோ நோகாதோ’ என்று அவ்வளவு மெல்லப் பக்குவமாகத் திறந்து, பூஜைப் பெட்டியிலிருந்து சாமான்களை எடுத்து வைக்கிற பதனத்தில் ஒவ்வொன்றாக எடுத்து வெளியில் வைப்பார். வெற்றிலையை நன்றாகத் துடைப்பாரே தவிர, காம்புகளைக் கிள்ளும் வழக்கம் அவரிடம் கிடையாது. (அவ்வளவு சிக்கனம்!) சில சமயம் மொறசல் வெற்றிலை அகப்பட்டுவிட்டால் மட்டும் இலையின் முதுகிலுள்ள நரம்புகளை உரிப்பார். அப்பொழுது நமக்கு, “முத்தப்பனைப் பிடிச்சு முதுகுத்தோலை உறிச்சி பச்சை வெண்ணையைத்தடவி….” என்ற வெற்றிலையைப் பற்றிய அழிப்பாங்கதைப் பாடல் ஞாபகத்துக்கு வரும்.

களிப்பாக்கை எடுத்து முதலில் முகர்ந்து பார்ப்பார். அப்படி முகர்ந்து பார்த்துவிட்டால் ‘சொக்கு’ ஏற்படாதாம். அடுத்து அந்தப் பாக்கை ஊதுவார்; அதிலுள்ள கண்ணுக்குத் தெரியாத பாக்குப் புழுக்கள் போகவேண்டாமா அதற்காக, ஆரம்பத்தில் மெதுவாக ஆரம்பிக்கும் இந்த முகர்ந்து பார்த்தலும் ஊதலும் வரவர வேகமாகி ஒரு நாலைந்து தடவைமூக்குக்கும் வாய்க்குமாக, கை மேலும் கீழும் உம் உஷ், உம் உஷ் என்ற சத்தத்துடன் சுத்தமாகி டபக்கென்று வாய்க்குள்சென்றுவிடும்.

ஒருவர் உபயோகிக்கும் அவருடைய சுண்ணாம்பு டப்பியைப் பார்த்தாலே அவருடைய சுத்தத்தைப் பற்றித்தெரிந்துவிடும். மாமனார் இதிலெல்லாம் மன்னன். விரலில் மிஞ்சிய சுண்ணாம்பைக் கூட வீணாக மற்றப்பொருள்களின் மேல் தடவமாட்டார். அவருடைய சுண்ணாம்பு டப்பியை எடுத்துக் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம்.”

என்று தன்னுடைய ஒரு கதையில் அவர் சொல்லும் ஒருவர் வெற்றிலை போடும் ‘அளகில்’ சொக்கிப்போய்விடவேண்டும். எப்போதும் அவரின் கரிசல் மண்சார்ந்த மிக நுண்ணிய வாழ்வியல் பழக்கவழக்கங்களை பதிந்துகொண்டே இருப்பார்.

‘மாசாணம் பெண்டாட்டியின் பெயரும் மாசாணம்தான்! இதைக் கேட்டதும் ஊர்க்காரர்களுக்கு ரெட்டைச் சந்தோஷம். கால் கை சுளுக்கிக்கொண்டால் எண்ணெய் இட்டுத் தேய்த்துவிட இனிமேல் ஒரே பெயருடைய தம்பதியர் வீட்டைத்தேடி விசாரிக்கவேண்டாம். தேடிப்போகும் மூலிகை வந்து காலில் சிக்கிக்கொண்டதே’

ஒரே பெயருடைய தம்பதியானால் அவர்களிடம் குழந்தைகளுக்கு மந்திரிக்க, விபூதி பூசிக்கொள்ளவது என்பதை கிராமத்து நடைமுறை. இதுபோன்ற நடைமுறைகளை அடுத்த தலைமுறைகளுக்கும் எடுத்துச் சென்றவர். கிராமத்து வாழ்வியல் நம்பிக்கைகளை

“எல்லோரும் தோரியைச் சுற்றிக்கொண்டு மழை வரும் அறிகுறி ஏதாவது கிடையில் தெரிகிறதா என்று கேட்டார்கள்.

நேத்துலேயிருந்து ஆடுக சரியா மேயாமெ கூடிக்கூடி அடையுது மழை வராமப் போகாது” என்றார். பால் கறந்துகொண்டு வர விடலைப் பனையில் குருத்தோலை வெட்டப் போனபோது துரக்கணாங்குருவிகள் வேகமாய் கூடுகள் கட்டி முடிப்பதைப் பார்த்திருந்தார்.

தரைப் புற்றுகளிலிருந்து தேங்காய்ப்பூப் போன்ற வெண்ணிறத்தில் தங்களின் முட்டைகளை அள்ளிக்கொண்டு மொலோர் என்ற எறும்புக் கூட்டங்கள் கிளம்பிப் போவதையும் அவர் பார்த்திருந்தார்.

இதில் மழை வருவதை முன்கூட்டியே அறியும் சில மண்சார்ந்த அறிவினை பதிவு செய்திருப்பார். இதுபோன்ற பாரம்பரிய மண்சார்ந்த கருத்துப்பெட்டகமாக அவரின் நூல்கள் விளங்குகின்றன.

வர்ணனைகள் இலக்கியத்தின் உச்சமாக அடித்தள வாழ்வின் எச்சமாக விளங்கும் அவரது கதைகளில்,

துடைத்தது போலிருந்த வானத்தில் நேரம் ஆக ஆக மேக கோபுரங்கள் எழுந்துவந்த வண்ணமாக இருந்தன. திடீரென்று காலநிலையில் சொல்ல இயலாத மாறுதல் – பார்த்துக் கொண்டிருக்கும்போதே – நிகழ்ந்துகொண்டிருந்தது.

வேகமாக நகர்ந்துகொண்டிருந்த வெள்ளை மேகங்கள் மதியத்துக்கு மேல் நிறைசூல் கொண்ட யானை மந்தைகளைப்போல் நகரமுடியாமல் அப்படியே நின்றுவிட்டது. உச்சியில் கட்டுத்தரையிலிருந்து கயிற்றை அறுத்துக்கொண்ட காளையொன்று குதியாளம் போட்டது. இரைக்குச் சென்றிருந்த கரைமரத்துக் காகங்கள் பாதியிலேயே கத்திக்கொண்டு திரும்பி வந்துகொண்டிருந்தன. வடஞ்சுருட்டி – மூலையில் திடீரென்று மின்னல் அந்தப் பகலிலும் கண்ணை வெட்டியது.

மேகத்திற்கு சூழ்கொண்ட யானையை உருவாக்கப்படுத்தியிருக்கும் பாங்கு மனதில் அதைப்படித்த கணத்திலேயே எழும் கற்பனைகளில் வாசகன் அவருடன் இன்னும் நெருங்குவான். எளிதான நகைச்சுவைகளும், எள்ளல்களும் அவரது எழுத்தில் ‘சொலவடையாய்’ நீளும்.

‘இந்த நிகழ்ச்சிக்குப் பின்னரே, எங்கள் வீட்டில் எப்படியாவது ஒரு நாற்காலி செய்துவிடுவது என்ற முடிவு எடுக்கப்பட்டது. இந்த நாற்காலி செய்வதில் ஒரு நடைமுறைக் கஷ்டம் என்ன என்றால், முதலில் பார்வைக்கு எங்கள் ஊரில் ஒரு நாற்காலி கூடக் கிடையாது; அதோடு நாற்காலி செய்யத் தெரிந்த தச்சனும் இல்லை.’

எதுவுமே நிக்கலே; எழுத ஆரம்பிச்சுட்டேன்!

தன்னை பற்றி சொல்லும்போது,

“எனக்குள் ஒரு வேடிக்கை உண்டு. ஒரு தச்சு ஆசாரி அழகா நாற்காலி செஞ்சா, அதைச் செய்யணும்னு எனக்கும் தோணும். சவத்துக்கு அடிக்கிற மோளத்திலே லயிச்சு, அப்படி வாசிக்க நினைப்பேன். எட்டாவது வரை ஸ்கூலுக்குப் போனேன்; ஆனா படிக்கல; ஸ்கூல்ல எதுவுமே படிக்கல. நான் படிச்சதெல்லாம் வெளியிலே இந்தப் பரந்த உலகத்திலேதான். எல்லாத்துக்கும் ஆசைப்பட்டேன்; எல்லாத்திலேயும் லயிச்சேன்; கடைசியிலே எதுவுமே நிக்கலே. அதான் எழுத ஆரம்பிச்சுட்டேன்!”

என்று சொல்லியிருக்கிறார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் உலகம் ஊரடங்கு என்று அல்லலுறும் காலத்தில் அதை பற்றிய தனது கருத்தாக,

“இதுபோன்ற இக்கட்டான காலகட்டங்களில் நாம் நம் சமூகத்தைக் காக்க எதைக் கருவியாகக் கொள்வது?”

“மனிதாபிமானம்தான் ஒரே கருவி. ரொம்ப இக்கட்டான காலகட்டத்துல நம்மோட முன்னோர்கள் அரசாங்கத்தைப் பெரிசா நம்பினதே இல்லை; அப்படி முழுக்க நம்பினா, முழு மோசம் போயிடுவோம்னு அவங்களுக்குத் தெரியும். சாப்பாட்டை அவங்க சிக்கனமாக ஆக்கிக்குவாங்க. இந்த மாதிரி காலத்துல கையிருப்பு என்னவோ அது மட்டும்தானே நிதர்சனம்? சம்சாரிங்க அதை எவ்வளவு காலத்துக்கு நீட்டிக்கணுமோ அவ்வளவுக்குப் பாதுகாப்புப் பண்ணிக்குவாங்க. ஆனா, தன்னளவுலதான் சிக்கனம் இருக்குமே தவிர, ஒருத்தருக்கு ஒருத்தர் உதவிக்குறது நிக்காது. கருணை பெருகும். அப்படித்தான் மனித குலம் இவ்வளவு காலமாகத் தன்னைக் காபந்து பண்ணிக்கிட்டு வந்துருக்கு. நம்ம வயிறு நெறைஞ்சுதான்னு நெனைக்காம, நமக்குக் கீழ இருக்கவங்க வயிறு நெறையுதான்னும் பார்த்து, அவங்களுக்கு உதவுற காருண்யம்தான் நாம எப்பவும் கைக்கொள்ள வேண்டிய கருவி!”

என்று வாழ்வின் உன்னதத்தை சொல்லியிருக்கிறார். காலம் முழுவதும் தான் கற்றுக்கொண்ட தனது கரிசல் மண்ணில் கதைகளை அடுத்த தலைமுறையினருக்கு மிக அழகாக அந்த கருத்துப் பெட்டகத்தை கைமாற்றியிருக்கிறார். போய் வாருங்கள் கி.ரா, கரிசல் மண்ணின் கடைசி சம்சாரி இருக்கும் வரையில் உங்கள் எழுத்துக்களுக்கு அழிவில்லை. உங்கள் தடம் பதிந்த, மனம் கவர்ந்த இடைசெவலில் இளைப்பாருங்கள். தமிழ் இலக்கியத்தில் உங்கள் பெயர் என்றென்றும் நினைவு கூறப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *