இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு துவங்கிய முதல் அலையை ஒப்பிடுகையில் இந்த முறை பரவலாக குழந்தைகளும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். புதிதாகப் பிறந்த குழந்தைகளையும் கொரோனா பாதித்து வருகிறது என்று டெல்லியில் பல்வேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக 5-12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிக ஆபத்தில் உள்ளனர் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் தாய்மார்களை கண்காணிப்பிற்கு உட்படுத்தியுள்ளனர்.
இருமலும் வயிற்றுப்போக்கும்
”என் மகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து நாங்கள், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்து பார்த்தோம். அவளுக்கு கொரோனா தாக்கியது உறுதிசெய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து இருமலும் வயிற்றுப்போக்கும் அவளை வாட்டி வதைத்தது. மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை கொடுத்த பிறகு, இப்போது முன்னேறி வருகிறாள்” என்று 6 வயது சிறுமியின் தாயார் இந்தியா டுடே ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
2020 உடன் ஒப்பிடும்போது அபாயமான நிலை
கடந்த ஒரு வாரத்தில் டெல்லியில் உள்ள மதுகர் ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையில், 50 குழந்தைகள் கெரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ”2020 உடன் ஒப்பிடும்போது நிலைமை உண்மையில் ஆபத்தானதான இருக்கிறது. பெற்றோர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குழந்தைகளை பாதுகாப்பதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று குழந்தை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்’‘ என்று மதுகர் ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையின் டாக்டர் பிரவீன் கில்னானி தெரிவித்துள்ளார்.
”எனது 10 வயது குழந்தை உட்பட அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் கொரோனா தாக்கியுள்ளது. “ஏப்ரல் 1-ம் தேதி, முழு குடும்பமும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து நாங்கள் அதிர்ச்சிக்குள்ளானோம். சளி, இருமல், காய்ச்சல் என்று சாதாரண அறிகுறிகள்தான் முதலில் தென்பட்டது. பின் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்ததில் எங்கள் அனைவருக்கும் கொரோனா உறுதிபடுத்தப்பட்டது. இப்போது சிகிச்சை பெற்று வருகிறோம் என்று ஃபரிதாபாத் பகுதியைச் சேர்ந்த பூனம் ஷர்மா தெரிவித்துள்ளார்.
நோய் எதிர்ப்பு சக்தியை செயலிழக்கச் செய்கிறது புதிய திரிபு
”கொரோனா வைரஸின் புதிய திரிபு மிகவும் மோசமான தன்மையுடையது, இது நோய் எதிர்ப்பு சக்தியை செயலிழக்கச் செய்கிறது. கடந்த ஆண்டு, உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 11 சதவீதம் பேர் குழந்தைகள். ஆனால் இந்த ஆண்டு, உலகளவில் கிட்டத்தட்ட 20-40 சதவீத குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். டி-செல் நோய் எதிர்ப்பு சக்தி (T-cell immunity), தொண்டையில் நாசிப் பாதையில் உள்ள ஏஸ் ரெஸ்பிரேட்டர் (ace receptors ) மற்றும் பாதுகாப்பு புரதங்கள் (protective proteins) அனைத்தும் பாதிப்புக்குள்ளாகிறது என்று மூத்த குழந்தை மருத்துவரான டாக்டர். சஞ்சீவ் பாகாய் தெரிவித்துள்ளார்.
வெளியே பொது இடங்களுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும் குடும்பத்தினர் கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை குறித்து எந்த ஏற்பாடும் செய்வதில்லை என்று கோவாட் மருத்துவமனை துணை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஹிருதேஷ் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
பாலூட்டும் தாய்மார்கள் மருத்துவர்களின் அறிவுரையை பின்பற்ற வேண்டும்
பாலூட்டும் தாய்மார்கள் கட்டாயம் மருத்துவர்களை சந்தித்து அவர்களின் அறிவுரையை பின்பற்ற வேண்டும். கொரோனா பாதிக்கப்பட்ட தாய் குழந்தைக்கு தாய்பால் கொடுப்பதால் வைரஸ் பரவக்கூடும் என்று இதுவரை எந்த ஆய்வும் தெரிவிக்கவில்லை. ஆனால் தாய்மார்கள் எப்போதும் முகக்கவசம் அணிவது கட்டாயம். மேலும் பால் கொடுக்கும் போது குழந்தைகளிடம் இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று டாக்டர். சஞ்சீவ் பாகாய் எச்சரித்துள்ளார்.
குழ்ந்தைகளுக்கு சுயமாக மருந்துகள் தரக் கூடாது
”மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் சுயமாக எந்த மருந்தும் குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது. குறிப்பாக விரிவான பரிசோதனை இல்லாமல் நோய் எதிர்ப்பு மருந்துகளை கொடுக்கக் கூடாது. இருமல், வாந்தி, பேதி, காய்ச்சல் போன்றவற்றைத் தாண்டி அரிப்பு, தடிப்பு, வெண்படலம், அழற்சி அறிகுறிகள் தென்பட்டால் உடனே பெற்றோர்கள் குழந்தையை மருத்துவ உதவிக்கு அழைத்து வரவேண்டும். இவற்றை கவனிக்காமல் விட்டால் இதயம், நுரையீரல், சிறுநீரகங்கள், மூளை, தோல், கண்கள் அல்லது இரைப்பை குடல் உறுப்புகள் உள்ளிட்ட பல்வேறு உடல் பாகங்கள் வீக்கமடையக்கூடிய Multisystem Inflammatory Syndrome in Children (MIS-C) பாதிப்பு ஏற்படும்” என்று டாக்டர்.சஞ்சீவ் பாகாய் தெரிவித்துள்ளார்.
மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் குழந்தைகளுக்கு தடுப்பூசி இன்னும் பரிந்துரைக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில் குழந்தைகளைப் பாதுகாக்க என்ன வழி உள்ளது என்று தெரியாமல் மக்கள் கையறு நிலையில் உள்ளனர்.
நன்றி : இந்தியா டுடே