கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை மிகவும் அதிகமாகியுள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது. 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் 7.2% ஆக இருந்த வேலையின்மை விகிதம் ஏப்ரல் 2020-ல் 23.5% ஆக உயர்துள்ளது. மேலும் 2020-ம் ஆண்டு முழுவதும் 7% ஆக இருந்த வேலையின்மை விகிதம், அதற்கு முந்தைய ஆண்டில் அதாவது 2019-ல் 5.3% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த ஆய்வில் குறைந்த வருமானம் கொண்ட பெண்கள் அதிக அளவிற்கு வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
2020-ம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கொண்டுவரப்பட்ட ஊரடங்கினால், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்களிடத்தில் ஏற்பட்ட சமூக-பொருளாதார தாக்கங்களைப் பற்றி Dalberg நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது.
இந்திய ஒன்றியத்தின் பத்து மாநிலங்களிலிருந்து 17,000-க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகள் அடிப்படையில் இந்த ஆய்வை நிகழ்த்தியுள்ளனர்.
பெண்கள் அதிக அளவில் வேலையை இழந்துள்ளனர்
அடிப்படையிலேயே இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. கொரோனா ஊரடங்கிற்கு முன்பு வேலைக்குச் செல்பவர்களில் பெண்கள் வெறும் 24% மட்டுமே இருந்தனர். இவர்களில் 28% பேர் தற்பொழுது வேலையை இழந்துள்ளனர். இதில் நவம்பர் 2020-க்குப் பிறகு மீண்டும் வேலைக்குச் செல்லாத பெண்கள் 43% பேர்.
வேலை இழந்த இப்பெண்கள் வேலைவாய்ப்பை மீட்பதற்கு தடையாக பாலின ஏற்றத்தாழ்வு இருப்பதும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
குறைந்த ஊதியம் பெறும் பணிகளில் ஈடுபடும் ஆண்களுக்கு மீண்டும் பணி வாய்ப்பு கிடைத்திருப்பது போல, குறைந்த ஊதியம் பெறும் பணிகளுக்கு செல்லும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்த ஆய்வின்படி கிராமப்புறங்களில் மீண்டும் வேலை கிடைக்காத ஆண்கள் 4% ஆக இருக்கிறார்கள். ஆனால் பெண்களோ 11% பேர் மீண்டும் வேலை கிடைக்காமல் இருக்கிறார்கள்.
ஊடரங்கு காலத்தில் பெண்களுக்கு அதிக வருமான இழப்பு ஏற்பட்டது
ஊரடங்கு காலத்தில் சராசரியாக, பெண்கள் தங்கள் வருமானத்தில் மூன்றில் இரண்டு பங்கை இழந்துளனர் என்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
2020-ஆம் ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் மாதத்தில் மட்டும் ஆண்கள் 23% ஆகவும், பெண்கள் 27% ஆகவும் தங்கள் அடிப்படை வருமானத்தை விட குறைவான வருமானத்தை பெற்றுள்ளனர்.
இதில் ஏற்கனவே மிகக் குறைந்த ஊதியத்தில் வேலை பார்த்தவர்களால் இந்த வாழ்வாதார இழப்பிலிருந்து மீள முடியவில்லை என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.
அதே நேரத்தில் பெண்களுக்கு இந்த ஊரடங்கு காலத்தில் எந்த ஊதியமும் அற்ற வீட்டுப் பணிகள்,பராமரிப்புப் பணிகள் அதிகரித்து இருப்பதையும் இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. ஊரடங்கிற்கு முன்பே இந்தியப் பெண்கள் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 6.5 மணிநேரம் ஊதியம் பெறாத வேலையில் ஈடுபட்டனர். இது இந்திய ஆண்கள் அத்தகைய வேலையில் செலவிடும் நேரத்தை விட மூன்று மடங்கு அதிகம்.
கோவிட் -19 ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு 47 சதவிகிதம் ஊதியமற்ற உழைப்பு அதிகரித்திருக்கிறது என்றும், மேலும் 41 சதவிகிதம் பெண்களுக்கு ஊதியமில்லாத பராமரிப்பு வேலை அதிகரித்திருப்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.