பொதுத்துறை காப்பீடுகள்

பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் பாஜக அரசு! என்னவாகும் மக்களின் மருத்துவப் பாதுகாப்பு?

மக்களவையில் பொது காப்பீட்டு வர்த்தக (தேசியமயம்) திருத்த மசோதாவை (The General Insurance Business (Nationalisation) Amendment Bill, 2021) மோடி அரசு நிறைவேற்றியுள்ளது. நடப்பு நிதியாண்டில் 2 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும், ஒரு பொது காப்பீட்டு நிறுவனமும் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கேற்ப இம்மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னையை தலைமை இடமாகக் கொண்டு இயங்கிவரும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் விற்கப்படுவதாக செய்திகள் கசிகின்றன. பொதுக் காப்பீடு துறையின் பங்களிப்பு என்பது இந்திய சமூக சூழலில் மிக இன்றியமையாதது.

மக்களின் துயர் துடைக்கும் பொதுத்துறை காப்பீடு நிறுவனங்கள்

இந்தியாவில் இயற்கை மரணம் மற்றும் உயிர் காப்பீடு தவிர்த்து மற்ற அனைத்தும் (விபத்துக் காப்பீடும் சேர்த்து) பொதுக் காப்பீட்டின் கீழ் தான் வருகிறது. சாமானிய மக்களின் ஆடு, மாடு, கோழி, பம்பு செட் முதல் இரு சக்கர வாகனம் வரை அனைத்து வகையான பொருட்களுக்கும் இந்த பொது நிறுவனங்களே காப்பீடு கொடுக்கின்றன. சாதாரண மக்களுக்கு காப்பீடு கொடுப்பது பெரும்பாலும் பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே.

1990 தனியார்மயத்திற்குப் பின் பாதிப்பு

தாராளவாத தனியார்மயக் கொள்கை திறப்புக்கு முன் ஒரு சாமானியன் எந்த ஒரு முன்பணமும் செலுத்தாமல் ஏதேனும் ஒரு விபத்தில் பாதிக்கப்பட்டால் (மரத்தில் இருந்து தவறுதல், பாம்பு கடித்து இறத்தல்) அவர்களுக்கு 2500 ரூபாய் விபத்து காப்பீடு கொடுக்கப்பட்டது. ஆனால் 1991-ல் நவீன தாராளமயக் கொள்கை காரணமாக மீண்டும் தனியார் நிறுவனங்களின் கதவுகள் திறக்கப்பட்டதால் இந்த சமூக நலத் திட்டத்தில் வெட்டு ஏற்பட்டது. 

காப்பீட்டுத் துறையின் வரலாறு

கடந்த 1907-08ம் ஆண்டு காலகட்டங்களில் பிரிட்டிஷ் இந்தியாவில் மெர்கண்டைல் இன்சூரன்ஸ் கம்பெனி தனியார் நிறுவனங்களால் தொடங்கப்பட்டது. சுதந்திரத்துக்கு பின்னர் 1950-களில் ஆயுள் காப்பீட்டு தேசியமய விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சமயத்தில் காப்பீட்டு நிறுவனங்களின் முறைகேடுகளைப் பற்றி அன்றைய நிதியமைச்சர் சி.டி.தேஷ்முக் எச்சரித்தார். பின்னர் 1956-ம் ஆண்டில் இருந்த 195 தனியார் நிறுவனங்களில் 1971-ம் ஆண்டு 107 நிறுவனங்கள் தவிர மற்றவை காற்றோடு காணாமல் போனது.

மீதமிருந்த 107 தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் 1971-ல் அரசால் தேசியமயமாக்கப்பட்டு 

1. நேஷனல் இன்சூரன்ஸ், 

2. நியூ இந்தியா அஷுரன்ஸ், 

3. ஓரியண்டல் இன்சூரன்ஸ், 

4. யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் 

ஆகிய 4 பொதுத் துறை அரசு நிறுவனங்களாக உருவாக்கப்பட்டன.

பொதுத்துறை காப்பீட்டினை வளர்க்க அரசு செய்த முதலீடு

  • 1972-ல் காப்பீட்டு நிறுவனங்கள் வணிக தேசியமயச் சட்டத்தின் அடிப்படையில் அரசு செய்த முதலீடு ரூ.19.5 கோடி. 
  • காப்பீட்டு நிறுவனங்களின் மொத்த அலுவலகங்களின் எண்ணிக்கை 784. 
  • இன்று அவற்றின் சொத்து மதிப்பு 2 லட்சம் கோடி. 
  • அவற்றின் அலுவலகங்களின் எண்ணிக்கை 7856 என்ற அளவிற்கு உயர்த்தப்பட்டு குக்கிராமங்கள் வரை கொண்டு சேர்த்துள்ளது.
நிறுவனம்பிரீமியம் வருமானம்
2019-20
பிரீமியம் வருமானம்
2020-21
சந்தையில் வைத்துள்ள பங்குகள்
நியூ இந்தியா அஷுரன்ஸ்26,813 கோடி28,482 கோடி14.33 %
ஓரியண்டல் இன்சூரன்ஸ்13,673 கோடி12,452 கோடி6.27 %
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்17,515 கோடி16,711 கோடி8.41 %
நேஷனல் இன்சூரன்ஸ்15,262 கோடி14,181 கோடி7.14 %
மொத்தம்73,263 கோடி71,826 கோடி

1999-ம் ஆண்டில் 27-க்கும் மேற்பட்ட தனியார் கம்பெனிகள் உள்ளே வந்த போதும் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் 42 சதவீதம் பங்குகளைத் இன்றும் தக்க வைத்துள்ளன.

உழைக்கும் மக்களின் மருத்துவப் பாதுகாப்பை உறுதி செய்த பொதுத்துறை காப்பீடு

ஒரு சாமானியன் எந்த வங்கியில் வேண்டுமானாலும் வங்கிக் கணக்கு வைத்திருந்து அதில் ஆண்டுக்கு 12 ரூபாய் மட்டும் பிரிமியம் செலுத்தி வந்தால் காப்பீடு 2 லட்சம் கிடைக்கும். இவை அனைத்து பொதுக் காப்பீடு நிறுவனங்களுக்கும் பொருந்தும். பொதுத்துறை காப்பீடு நிறுவனங்களே பெருமளவில் 17.5 கோடி பாலிசிகளை பெற்றுள்ளன. இதனால் அவர்களுக்கு 350% நட்டம். இருப்பினும் இதனை பொதுத்துறை நிறுவனம் செய்து வருகிறது.

தமிழ்நாட்டு முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு திட்டத்தை கடந்த 11 வருடங்களாக இந்த பொதுத்துறை பொதுக் காப்பீட்டு நிறுவனங்களே ஏற்று நடத்தி வருகின்றன. இதனால் உழைக்கும் நடுத்தர மக்களின் மருத்துவப் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தால் பயனடைந்தவர்கள் ஏராளம். இன்றளவிலும் பயனடைந்து வருகிறார்கள். 

அரசுத் திட்டங்களுக்கு பொதுத்துறை காப்பீடு நிறுவனங்களின் பங்களிப்பு

ஆயுஷ் மான் பாரத் திட்டத்தை மோடி அறிவித்தார். ஆனால் அதற்கு வழங்கப்பட வேண்டிய claim-ஐ பொதுத்துறை பொதுக் காப்பீட்டு நிறுவனங்களே செயல்படுத்துகிறது. அதிலும் குறிப்பாக தமிழ்நாடு தான் அத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்த நிறுவனங்களின் பங்களிப்பு ரூ.1,78,977 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

சுனாமி, புயல், வெள்ளப்பெருக்கு, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்பின் போது பொதுத்துறை பொது காப்பீடு நிறுவனங்களே பெரும்பாலும் அரசுக்கு பக்கபலமாக நின்றிருக்கின்றன.

பாஜக ஆட்சியில் விற்கப்படும் பொதுத்துறை நிறுவன பங்குகள்

2015-16ம் ஆண்டுவாக்கில் மோடி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 51 சதவீத பங்குகளை அரசும், 49 சதவீத பங்குகளை விற்கவும் முடிவு செய்யப்பட்டது. இதனால் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படுகின்றன. சமூக நீதி பாதிக்கப்படும் என விமர்சனங்கள் எழுந்த பொது அதனை மறுத்த பாஜக இன்று 100 சதவீத பங்குகளையும் விற்று தனியாருக்கு தாரை வார்க்க இருக்கிறது.

இதற்கு மத்திய நிதி அமைச்சர் சொல்லும் காரணம் தனியார் நிறுவனங்களை விட பொதுத்துறை நிறுவனங்கள் நட்டதில் இயங்குகின்றன என்கிறார். ஆனால் இதனை தென் மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ஆனந்த் திட்டவட்டமாக மறுக்கிறார். அவர் கடந்த 2018 வரை லாபகரமாக இயங்கிக் கொண்டிருந்த பொதுத்துறை பொதுக் காப்பீடு நிறுவனங்கள் 2018-க்கு பிறகு புரோவென்ஷன் அதிகமாக கொடுக்கப்பட்டு நட்டம் போல காட்டப்படுகிறது. மேலும் அவர்கள் கூறும் penetration என்பது சர்வதேச அளவில் உள்ள கணக்கீட்டு முறையினைக் காட்டி உள்நாட்டு உற்பத்தியில் பொதுத்துறை பொதுக் காப்பீடு துறையின் பங்கு சதவீதம் மிக குறைவு என்கிறார்கள். 

உலகில் அதிக பாலிசிகளைக் கொண்ட பொதுத்துறை காப்பீடு

உலகில் உள்ள அதிக மக்கள் தொகை கொண்ட சீனா வை விட நாம் அதிக மக்களை அதாவது 50 கோடி பாலிசிதாரர்களை தொட்டிருக்கிறோம். வெறும் 6 கோடிக்கு உட்பட்ட வாடிக்கையாளரை வைத்துள்ள தனியார் நிறுவனங்களுடன் பொதுத்துறையை ஒப்பிட்டு சரியாக செயல்படவில்லை என்பது எப்படி? ஏன் இந்த பாரபட்சம் என கேள்வி எழுப்பியுள்ளார்.

தனியார் நிறுவனங்களுக்கு முக்கிய நகரங்கள் தவிர பெரும்பாலும் கிராமங்களில் அலுவலகங்கள் கிடையாது. ஆனால் பொதுத் துறை நிறுவனங்கள் 40 சதவீத அலுவலகங்கள் குக்கிராமங்கள் வரை அலுவலகம் அமைத்து செயல்படுகிறது. இதனால் ஒரு சமானியனுக்கும் இன்சூரன்ஸ் என்பது சாத்தியமாகிறது.

தனியார்மயத்தால் ஏற்படும் பாதிப்பு

மேலும் தென் மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ஆனந்த் கூறுகையில்,

முழுவதும் தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்படுவது என்பது விலை கட்டுப்பாட்டைத் தகர்க்கும் என்றும், இதனால் இன்சூரன்ஸ் அதிக விலை கொடுத்து பெற நேரிடும் என்றும், ஒரு சாமனியனுக்கு 100 சதவீதம் மறுக்கப்படும் என்கிறார்.

புதிய நிறுவனங்களுக்கு பங்குகள் விற்கப்படும் போது பொது இன்சூரன்ஸ் வர்த்தக தேசிய மயமாக்கல் சட்டம்(GIBNA) அவர்களுக்கு பொருந்தாது என மாற்றப்பட்டுள்ளது. இதனால் சமூக காப்பீடு ஒழிக்கப்படும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு மறுக்கப்படும் என்கிறார்.

முகப்புப் படம்: இன்சூரன்ஸ் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் பிப்ரவரி 2-ம் தேதி கொச்சியில் நடத்திய போராட்டத்தின் கோப்பு புகைப்படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *