கொரோனா சித்த மருத்துவம்

கோவிட் -19 க்கு சித்த மருத்துவம் ஏன்? – மருத்துவர் பாலசுப்பிரமணியன்

கோவிட்-19 என்பது கபசுரமா? என்று கேள்வி எழுப்புவோர்க்கு சில ஆதாரங்களை கூற முனைந்துள்ளேன். அதன்படி கீழே உள்ள யூகி வைத்திய சிந்தாமணி நூலில் கூறப்பட்ட கபசுரத்தின் பாடலை ஆதாரமாக எடுத்து காட்டியுள்ளேன்,

கபசுரத்திற்கான சித்தமருத்துவ பாடல்:

சந்தாப மானசி லேத்ம சுரத்தைச்

சாற்றிடவே நாக்குமுகம் வெளுத்துக் காணல்

மந்தாப மார்நோத லிரும லிளைப்பு

வருகுதல்வாய் துவர்த்துமே உரிசை யில்லை

முந்தாப மூச்சுவிடப் போகா மற்றான்

முயங்கியே விக்கலோடு தாகங் காணல்

சிந்தாப மிடறுநொந்து மேன்மூச் சாதல்

தினவெடுத்தல் தியங்கிடுதல் சேட்ப மாமே“.

 உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட கோவிட் – 19 பெருந்தொற்றின் குறிகுணங்களோடு யூகி வைத்திய சிந்தாமணி பாடலின் விளக்கத்தை ஒப்பிட்டு காட்டியுள்ளேன். அவற்றை கிழே காண்க,

1. சந்தாபமான சிலேத்ம சுரத்தைச் சாற்றிடவே – சந்தாபமான (வெப்பமான) கபசுரத்தை (Fever with cold) கூறிடவே

2. நாக்குமுகம் வெளுத்துக் காணல் – நாக்கில் வெண்ணிற மாவுபோன்ற படிவு (white coated tongue) காணல். 

3. மந்தாப மார்நோத லிரும லிளைப்பு வருகுதல்  –  உடல் சோர்வோடு (with tiredness) மார்பு நோதல் (chest pain), இருமல் (cough), இளைப்பு (shortness of breath) ஏற்படுவதால் முகம் வெளுறி (facial paleness) காணப்படுதல்.

4. வாய் துவர்த்துமே உரிசையில்லை – வாய் துவர்த்து சுவைகள் ஏதும் தெரியாமை (loss of taste).

5. முந்தாப மூச்சுவிடப் போகாமற்றான் – சரியாக மூச்சை இழுத்து விடமுடியாமை (difficulty breathing).

6. முயங்கியே விக்கலோடு தாகங் காணல் – அவற்றோடு விக்கலும், தாகமும் (hiccups with thirst) சேர்ந்தே ஏற்படல்.

7. சிந்தாபமிடறு நொந்து மேன்மூச்சாதல் – தொண்டை (மிடறு) வலியுடன் – (sore throat) மேல் மூச்சு வாங்குதல் (shortness of breath).

8. தினவெடுத்தல் தியங்கிடுதல் சேட்பமாமே – தினவு உண்டாதல் (தோலரிப்பு – skin rash with itching), தியங்கிடுதல் (மனக்கலக்கம் – confusion) உண்டாதல் இவை எல்லாம் கபத்தினாலே (cold).

மேற்கண்ட குறிகுணங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது உலக சுகாதார நிறுவனம் கூறிய கோவிட்- 19ன் குறிகுணங்களில், தீவிர (serious) மற்றும் பொது குறிகுணங்களில் (common and less common symptoms) பெரும்பாலானவை கபசுரத்தின் குறிகுணங்களோடு பொருந்திய வண்ணம் காணப்படுகின்றன. ஆகவே கபசுரம் என்பது கோவிட்- 19ன் குறிகுணங்களுடன் பொருந்திப்போகிறது. இதன் காரணமாகவே கபசுரத்திற்கான சித்த மருத்துவம் கோவிட்- 19க்கு பயன்படுத்தப்படுகிறது.

கபசுரத்திற்கென்று சித்தமருத்துவ நூலில் கூறப்பட்ட குடிநீர் (கசாயம்) என்பதனால்தான் அது “கபசுர குடிநீர்” என்று பெயர்பெற்றது. கபசுர குடிநீர் என்பது அக்குடிநீரின் காரணப் பெயரே. கபசுர குடிநீர் என்பது 15 மூலிகைகளை கொண்ட ஒரு மூலிகை பானமாகும். அதில் சுக்கு, மிளகு, இலவங்கம், சிறுகாஞ்சொறி வேர், அக்கிரகாரம் வேர், பப்பரமுள்ளி வேர், கடுக்காய் தோல், ஆடாதோடை இலை, கற்பூரவல்லி இலை, கோட்டம் வேர், சீந்தில் தண்டு, கண்டுபாரங்கி வேர் (சிறுதேக்கு), நிலவேம்பு சமூலம், வட்டத்திருப்பி வேர், கோரைக் கிழங்கு ஆகியவை சமபங்கு கலந்துள்ளன. இவற்றை நீரிலிட்டு காய்ச்சி நான்கில் ஒன்றாக சுண்டச்செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது அவற்றில் உள்ள தாவர வேதி மூலக்கூறுகள் (phytochemical molecules) பிரிந்து நீருடன் (aqueous extract) கலந்துவிடுகிறது. இதையே நாம் வடிக்கட்டி அருந்துகிறோம். எனவே இதை முறைப்படி குடிநீரிட்டு நோயாளியின் வயது மற்றும் உடல் வன்மைக்கு தகுந்த அளவில் நோய்த்தொற்று ஏற்பட்டு சுரம் தோன்றிய நாள் முதல் இரண்டு அல்லது மூன்று வேளை கொடுத்துவர வேண்டும். இதை தனியே கொடுப்பதைவிட குழந்தைகளுக்கு கோரோசனை மாத்திரையுடனும், பெரியவர்களுக்கு சந்திரோதய மாத்திரையுடனும் சேர்த்து இருவேளையாக கொடுத்துவர நோய் விரைவில் நீங்க ஏதுவாக அமையும்.

கபசுரத்தின் மருந்தான கபசுர குடிநீர் கோவிட்-19க்கு ஆரம்ப நிலை தொற்று ஏற்படாவண்ணம் முன்கூட்டியே தடுக்கும்படி சிறப்பாக வேலைசெய்யும் என்ற நோக்கத்தினாலேயே அரசால் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் சுரமும் ஏற்பட்டு அதனுடன் மற்ற பொது குறிகுணங்கள் காணப்பட்டால் கபசுர குடிநீர் மட்டும் போதாது, உடனடியாக மருத்துவரை அணுகி, கோவிட்-19க்கான பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும். பரிசோதனையின் முடிவு நேர்மறையாக (positive) இருப்பின் உடனே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவரின் அறிவுறையின்படி, கபசுர குடிநீருடன், குறிகுணங்களுக்கு தகுந்தாற்போல் வேதுபிடித்தல் போன்ற புறமருத்துவ (external medicine) முறைகளையும் மற்றும் மூச்சுத்தினறல் ஏற்பட்டால் கொடுக்கும் சுவாசகுடோரி மாத்திரை போன்ற அகமருத்துவ (internal medicine) முறைகளையும், குறிகுணங்கள் குறையும் வரை எடுத்துக்கொண்டு நோயிலிருந்து குணமடைய வேண்டும்.

மேலும் மருத்துவத்திற்கு நோய் கட்டுப்படாமல் தீவிர குறிகுணங்களான மார்புநோதலுடன் (chest pain), மேல்மூச்சு வாங்குதல் (shortness of breath), மூச்சுவிட சிரமம் (difficulty breathing) போன்றவை ஏற்படின் சன்னி மருத்துவ முறைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஒரு நோய் மருத்துவத்திற்கு கட்டுப்படாமல் தீவிர நிலையை அடையும் போது அது “சன்னி நிலையை” அடையும் என்று சித்தமருத்துவத்தில் குறிப்பிடுவார்கள். உடலில் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் ஒன்றுசேர்ந்து மிகைப்படும்போது ஏற்படுவதே சன்னி நோய் எனப்படும். இது குறிப்பாக சுரத்தினை தொடர்ந்து ஏற்படக்கூடிய ஒன்று, அதனால்தான் இதை “சன்னிசுரம்” என்றும் கூறுவர்.

மேற்சொன்னபடி மருத்துவத்திற்கு கட்டுப்படாத கபசுரத்தின் முடிவில் ஏற்படுவது சீதசன்னியாகும் (கபசன்னி). அதை கீழ்க்கண்ட பாடலில் காண்க,

அடித்துப் போட்டாற் போற்கிடக்கும்

அறிவைக் குலைக்கும் பேச்சுமில்லை

நொடிப்பி லுயிர்ப்பு மில்லையெனும்

நோவாகும் மேல் மூச்செரியும்

எடுத்துக் கண்ணீர் விழுந்து

ஏறிட்டுப் பார்த்து திளைப்பெய்தும்

சடுதி யாயுங் கால் குளிரும்

சன்னி சீத சுரமாமே“.

 மேற்கண்ட பாடலின்படி கபசுரத்தை தொடர்ந்து ஏற்படும் கபசன்னியில் அடித்துப் போட்டது போல் கிடத்தல் (loss of mobility), அறிவை குலைக்கும் (confusion), பேச்சுமில்லை (loss of speech), நொடிப் பொழுதில் உயிர்போவதை போன்ற வலியுடன்கூடிய மேல்மூச்சு உண்டாதல் (sudden chest pain with difficulty breathing), இளைபெய்தும் (shortness of breath), திடீரென கால் குளிரும் (sudden cold feet due to poor circulation) ஆகிய குறிகுணங்களை உண்டாக்கும்.

 மேற்கண்ட சன்னி நிலையானது கோவிட் – 19 பெருந்தொற்றின் அதிதீவிர நிலையில் காணப்படுகிறது. அதாவது கொரோன வைரஸ் கிருமியின் அதிதீவிர தொற்றால் நுரையீரல் திசுக்கள் பாதிக்கப்பட்டு சேதமடைகின்றன. இதன் காரணமாக சைடோகைன் (cytokine) அதிசுரப்பு ஏற்பட்டு நுரையீரல் திசுக்கள் வீக்கமடைகிறது (pneumonia). சாதாரண (mild) தொற்று மற்றும் தீவிர (moderate), அதிதீவிர (severe) தொற்றுக்கும் உள்ள வேறுபாடு என்னவெனில், நோயாளி எதிர்கொள்ளும் (exposure) கொரோனா கிருமிகளின் எண்ணிக்கை (viral load) மற்றும் அது உடலில் பல்கிப்பெருகும் (viral replication) விகிதமுமே ஆகும். பொதுவாக சிறு அளவிலான நோய் கிருமிகளை எதிர்கொள்ளும்போது அதில் சிறிய அளவிலான குறிகுணங்களை கொண்ட சாதாரண தொற்றே ஏற்படும், ஆனால் பெரிய அளவில் நோய் கிருமிகளை எதிர்கொண்டால் தீவிர அல்லது அதிதீவிர தொற்று ஏற்படக்கூடும். இதனாலேயே நுரையீரல் திசுக்கள் பெருமளவில் வீக்கமடைகிறது. சாதாரண தொற்றின் போது ஏற்படும் சிறிய அளவு நுரையீரல் பாதிப்பில், நுரையீரலுக்கு போதிய ஓய்வு கொடுக்க வேண்டும், இல்லாமல் பிராணாயாமம் போன்ற மூச்சு பயிற்சிகளை மேற்கொண்டால் அது “காலில் குத்திய முல்லை எடுக்க முயன்று மேலும் ஆழத்திற்கு சென்ற கதையாகிவிடும்”. அதனால் இதுபோன்ற தருணங்களில் ஓய்வு எடுக்க வேண்டுமே தவிர, நோயாளிகள் கூட்டு சேர்ந்து சுவாச பயிற்சியை மேற்கொள்ளக் கூடாது. மேற்கொண்டால் சாதாரண தொற்றும் தீவிர தொற்றாக மாற வாய்ப்புகள் உண்டு. வேண்டுமானால் நோயிலிருந்து மீண்ட பிறகு தனிமையில் தொற்று இல்லா நல்ல காற்றோட்டமான இடத்தில் இதை செய்யல்லமே தவிர, நோய் தொற்று உள்ள நிலையில் செய்தால் தொற்று தீவிரமடைந்து நுரையீரல் திசுக்கள் பாதிக்கப்பட்டு மேலும் வீக்கமடையலாம்.

பொதுவாக வீக்கம் என்பது உடலின் ஒருவகை தற்காப்பு நடவடிக்கை இது சைடோகைன் சுரப்பினால் ஏற்படுகிறது, இதனால் பாதிக்கப்பட்ட நுரையீரல் திசுக்களுக்கு அதிகுருதி பாய்கிறது, அதனால் அங்கு திரவம் சேர்ந்து வீக்கம் (swelling) ஏற்படுகிறது, பொதுவாக வீக்கத்தின் போது அக்குறிப்பிட்டபகுதில் வலியுடன் (pain) தொழிலற்று போகும் நிலை (loss of function) காணப்படும், மேலும் அங்கு அதிகுருதி பாய்ச்சலினால் சிவந்துபோதல் (redness), சூடுண்டாதலோடு (heat) நோய் கிருமிகளை தாக்கி அழிக்க அங்கு நோய் எதிர்ப்பு அணுக்கள் படையெடுத்து குவிக்கபப்டும்.

அதிதீவிர தொற்றில் சைடோகைன் அதிசுரப்பு ஏற்பட்டு நுரையீரல் திசுக்கள் பெருமளவு வீக்கமடைகிறது. இதனால் பெருமளவில் படையெடுக்கும் நோய் எதிர்ப்பு அணுக்கள் நோய் கிருமிகளை அதிரடியாக தாக்கி அழிப்பதோடு (onslaught of wbc), நுரையீரல் திசுக்களையும் அதிரடியாக தாக்கி (cytokine storm), காற்று நுண்ணறை மற்றும் நுண் குருதிகுழல்களையும் சிதைகின்றன, இதனால் அங்கு குருதி உறைதல் (thrombosis) ஏற்படுகிறது.

இவ்வாறு காற்று நுண்ணறை மற்றும் நுண் குருதிகுழல்கள் பாதிக்கபடுவதால் நுரையீரலால் காற்றில் உள்ள பிராண வாயுவை பிரித்தெடுக்கும் திறன் குறைந்து போகிறது. காற்று என்பது ஒரு வாயு கலவையாகும் (அதில் நைட்ரஜன்(N)-78% ஆக்சிஜன்(O)-21%, கார்பன்டை ஆக்சைடு  மற்றும் பிரவாயுக்கள்- 1% அடங்கியுள்ளன), அதில் உள்ள பிராண வாயுவை மட்டும் பிரித்தெடுத்து உட்கிரகித்து குருதியுடன் கலைக்க செய்து தேவைற்ற கரியமில வாயுவை வெளியிடுவதே நுரையீரலின் பணி. எனவே நுரையீரலால் காற்றில் உள்ள பிராண வாயுவை பிரித்தெடுக்கும் திறன் குறைந்து போவதனால் குருதியில் உள்ள பிராண வாயுவின் (oxygen saturation)  அளவு குறைந்து நோயாளிக்கு மூச்சுச்திணறல் ஏற்படுகிறது. இச்சூழலில் நோயாளியின் மூளைக்கு செல்லும் குருதியில் பிராண வாயுவின் அளவு குறைவாக இருப்பதனால் மூச்சு திணறலோடு பேச்சற்றும் (loss of speech), அசைவற்று படுக்கையில் கிடந்தும் (loss of mobility), அறிவு குலைந்த நிலையிலும் (confusion) இருப்பான்.   இதன் காரணமாகவே நவீன அறிவியலின் படி நோயாளிக்கு துய பிராண வாயுவை (99.5% pure oxygen) குடுவையில் அடைத்துவைத்து மூச்சு திணறல் ஏற்படும்போது மூக்கின் வழியே செலுத்தப்படுகிறது.

தூய பிராணவாயுவை செலுத்தும்போது நுரையீரலின் பிரித்தெடுக்க வேண்டிய வேலைப்பளு குறைகிறது, அதாவது நுரையீரலின் பாதிக்கப்படாத பகுதி தூய பிராணனை எடுத்துகொண்டு பதிக்கப்பட்டு செயலிழந்த பகுதிகளின் வேலையை சமன் செய்வதனால் நோயாளியின் மூச்சுச்திணறல் நீங்கி சுவாசம் சீரடைகிறது.எனவே நோயாளிக்கு சன்னி நிலை ஏற்பட்டால் உடனடியாக தூய பிராண வாயுவோடு சன்னி நோய்க்கான மருதத்துவத்தை மேற்கொள்ள வேண்டும்.

சேத்ம சீதமாய் துடைத்து

என்று தேரையர் கூறியமையால் கபக் குற்றமே மேலிட்டு மார்பு நோதலுடன் (chest pain), மேல்மூச்சு வாங்குதல் (shortness of breath), மூச்சுவிட சிரமம் (difficulty breathing) போன்றவற்றை ஏற்படுத்தி இறுதியில் கொல்லும். எனவே பூபதி மாத்திரை, பூரண சந்திரோதய மாத்திரை போன்ற தேரன் சேகரப்பாவில் கூறப்பட்ட சன்னி பைரவ மாத்திரைகளை கொடுத்து சன்னி நோய்க்கான சிகிச்சையை தூய பிராணவாயுவோடு மேற்கொள்ள வேண்டும். மேலும் மற்ற குறிகுணங்களுக்கு தகுந்தாற்போல் பிற மருந்துகளையும் சேர்த்து கொடுத்து நோயை முற்றிலும் குணமடையச் செய்ய வேண்டும்.

நாடிமூன்றும் படபடவென் றோடிற்சன்னி

மேலும் இந்த சன்னி நிலையில் நாடியும் படபடத்தோடும். இதற்கு காரணம் நுரையீரலால் காற்றில் உள்ள பிராண வாயுவை பிரித்தெடுக்க இயலாமையால் குருதியில் பிராணன் குறைகிறது. குருதி பிராணவாயு (SpO2) குறைவினால், குருதியோட்டத்தால் உடலின் பிராணவாயு தேவையை பூர்த்தி செய்ய இயலாமல் போகிறது, அதை சமன்படுத்த இருதயம் தன் நடையை கூட்டுகிறது. இதனால் நாடிநடை படபடக்கிறது. இவ்வாறு படபடக்கும் நாடிநடையை மரணநாடி என்று நாடிநூல் கூறுகிறது. இந்த நாடிநடை நோயாளியின் இறுதி நிலையை உணர்த்தவல்லது.

மேலும் சுரம் என்பது ஒரு நோயே அல்ல, அது ஒரு அறிகுறிதான், சுரம் ஏற்பட பல காரணங்கள் உள்ளது. அவற்றில் மிகமுக்கியமான ஒன்று நோய் கிருமித்தொற்று. சுரத்தை உண்டாக்கும் நோய் கிருமிகள் ஏராளம், அவற்றில் வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை ஆகியவை அடங்கும். அவற்றில் வைரஸ் மிக முக்கியமான ஒன்று. ஏனெனில் நீண்ட காலமாக நாம் எதிர்கொள்ளும் சாதாரண சளி முதற்கொண்டு பெரியம்மை, சின்னம்மை, பறவை காய்ச்சல், பன்றி காய்ச்சல், சார்ஸ், மெர்ஸ் சிக்குன்குனியா, டெங்கு, எபோலா மற்றும் இன்றைய கோவிட்-19 வரை அனைத்தும் வைரஸ் கிருமியால்தான் ஏற்படுகிறது. கொரோன வைரஸ் ஒன்றும் புதிதல்ல, நீண்ட காலமாக சளி இருமலை உண்டாக்கும் வைரஸ்களில் இரண்டாம் இடத்தை வகிக்கக்கூடியது கொரோன வைரஸ் கிருமிகளே, முதலிடத்தில் இருப்பது ரைனோ வைரஸ் வகைகள் ஆகும்.

சாதரணமாக ரைனோ வைரஸ் மற்றும் கொரோன வைரஸ் ஆகியவை குளிர் காலங்களில் சளித்தொற்றை உண்டாக்ககூடியவை. இவை பொதுவாக மேற்சுவாசப்பாதை தொற்றை ஏற்படுத்தி தோராய காலமான 2-5 நாட்களுக்கு பிறகே காய்ச்சலின்றி மேற்சுவாசப் பாதையான நாசிச் சளிச்சவ்வை வீங்கச்செய்து தும்மல் மற்றும் மூக்கு நீர்ப்பாய்தலையும், நாசி விசையாழிகளை வீங்கச்செய்வதோடு  (engorged turbinate’s) நாசிப் பக்கபுழைகளை  (paranasal sinuses) அடைத்து மூக்கடைப்பையும், உடற்சோர்வு, சிறு மென்னண்ண வலி அல்லது தொண்டை வலி போன்ற குறிகுணங்களையும் உண்டாக்கி ஒருவாரத்திற்குள் பெரும்பாலும் மருத்துவ தேவையின்றி பிற பாதிப்புகள் ஏதுமின்றி தானே நீங்கிச் செல்லும். இவை சிறுபான்மையாக காதுவலி (otitis media) மற்றும் நாசி பக்கபுழை வீக்க நோய் (acute sinusitis) போன்றவற்றை  உண்டாக்குகின்றன. பெரியோர்களில் ஏற்கனவே இருந்த இரைப்பு (asthma) போன்றவற்றை மென்மேலும் தூண்டிவிடுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி மிகக்குறைந்து உள்ள நோயாளிகள் சிலருக்கே கீழ் சுவாசப்பாதையை தாக்கி நுரையீரல் வீக்கம் (pneumonias) ஏற்படுகிறது.

ஆனால் இதில் கொரோனா வைரஸ் வகைகள் பெரும்பானமையாக கீழ்சுவாசப்பாதை தொற்றையும், அதாவது நுரையீரல் பாதிப்பையும் உண்டாக்கி காய்ச்சல், தலைவலி, உடல்வலி மற்றும் உடற்சோர்வு, இருமல், தொண்டைவலி போன்றவற்றை உண்டாக்குவதோடு நோயின் பிற்பகுதியில் மூச்சுத்திணறலையும், சிலநேரம் வாயிற்றுப் போக்கையும் உண்டாக்குகிறது. இதில் ஒரு சிலருக்கே நுரையீரல் வீக்கம் மற்றும் சுவாச செயலிழப்பு ஏற்பட்டு  இருதியில் இறப்பு ஏற்படும். கொரோனா தொற்றில் இரண்டாம் அலையோ மூன்றாம் அலையோ, பெரும்பாலும் இது குழந்தைகளை காட்டிலும் பெரியவர்களையே பாதிக்கிறது என்பதே நிதர்சனம்.

மேலும் பொதுவாக வைரஸ் நோய் தொற்றின் போது உடலின் நோய் எதிர்பாற்றல் குறைந்தே காணப்படும். அதிலும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட சர்க்கரை (புற்றுநோய், எய்ட்ஸ்)  நோயாளிகளின் நோய் எதிர்ப்பு வெகுவாக குறைந்து காணப்படும் அக்காலகட்டத்தில் இரண்டாம் நிலை தொற்றாக பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளின் தொற்றும் சந்தர்ப்பவாத தொற்றாக (opportunistic infection) ஏற்படக்கூடும் என்பதும் இயல்பே. இதைப்போலவே இப்போதும் கருப்பு பூஞ்சை மட்டுமல்லாது வெள்ளை மற்றும் மஞ்சள் பூஞ்சை நோயும் கோவிட்-19 தொற்றிலிருந்து மீண்டு வந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல் குறைந்ததன் காரணமாக சந்தர்ப்பவாத தொற்றாகவே ஏற்பட்டு வாருகிறது.

  2002- ல் கண்டறியப்பட்ட சார்ஸ் தொற்று மற்றும் 2012- ல் கண்டறியப்பட்ட மெர்ஸ் தொற்று போன்றவை தற்போதுள்ள கோவிட்-19ஐ போல கொரோனா வைரஸ் வகைகளினால் ஏற்பட்டவையே. கொரோனா வைரஸ் காலச்சூழளுக்கு தகுந்தாற்போல் அடிக்கடி தன் மரபு பொருளை உருமாற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது. இதனாலேயே உடலில் இதற்கு எதிரான நோய் எதிர்பாற்றல் உண்டாவதில் குழப்பமும், மேலும் தற்போது இதற்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்பதில் சிரமமும், தாமதமும் ஏற்பட்டுள்ளது என்று நவீன அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

வளிமுதலா எண்ணிய மூன்று” – குறள்.

மேற்சொன்ன கொரோனா பெருந்தொற்று கபசுரமோ இல்லையோ, அதன் குறிகுணங்கள் இதனோடு பொருந்திபோகின்றன, சித்தர்கள் ஆதிகாலத்திலேயே இதுபோன்ற ஏராளமான நோய் பொருந்தொற்றுகளை எதிர்கொண்டு அதற்காண மருத்துவ முறைகளையும் கையாண்டு வந்துள்ளனர். அவர்கள் நோய் கிருமிகளை பற்றி அறிந்திருக்கவில்லை, என்றபோதிலும் கிருமி தொற்றின் போது உள்ள நோய் போக்கினையும், அதன் அறிகுறிகளையும் நன்கு அறிந்து வைத்திருந்தனர். அதனை அவர்கள் வளி முதலிய முக்குற்ற தத்துவ அடிப்படையிலேயே கூறினர். அவர்கள் நோய் கிருமி தொற்றின் போது உடலின் மாறுபட்ட இயக்க நடவடிக்கை, அறிகுறி மற்றும் குறிகுணங்களை குற்ற மாறுபாட்டின் அடிப்படையில் நாடி, அதற்கு அக மற்றும் புற மருத்துவமும் மேற்கொண்டு வந்துள்ளனர்.

அதை அவர்கள் தன் சொந்த தமிழ் மொழியின் மருத்துவ நடையில், தமிழ் மருத்துவ கலைச் சொற்களை (traditional medical terminology) கொண்டு கூறி, ஓலைச் சுவடிகளில் குறிப்பு எழுதியும் வைத்துச் சென்றுள்ளனர். அதை நாம் ஒருபோதும் நம் அறியாமையால், அதன் அடிப்படை தத்துவம் புரியாத ஒரே காரணத்தால், அதன் மகத்துவம் தெரியாமல், அகம்பாவத்தால் ஒதுக்கி புறந்தள்ளிடக் கூடாது, மாறாக அப்பொக்கிசங்களை மறு ஆய்வு செய்து நம்மையும், வரும் தலைமுறைகளையும் நோயின்றி வாழ வழிசெய்திடல் வேண்டும், அதுவே நம் தலையாய கடமையாகும். இதையே சித்தர்களும் எண்ணி நமக்கு அவற்றை விட்டு சென்றுள்ளனர். அவர்கள் பயன்படுத்திய வார்த்தைகள் பரிபாசைகள் அல்ல, அப்போது வழக்கில் இருந்த வார்த்தைகளே. அதனால் அவர்கள் இந்த மருத்துவ முறைகளை வெளி உலகிற்கு மறைத்தார்கள் என்று எண்ணி நாமும் அதை மறைத்தே வைத்து அழித்துவிட வேண்டாம். நாம் நம் சித்த மருத்துவ முறையில் உள்ள அறிவியல் உண்மைகளை நம் மருத்துவச் சாயல் சிறிதும் குறையாமல் நவீன அறிவியலின் அடிப்படையில் வெளிப்படையாகக் கூறி நம் மருத்துவ முறையை உலகறிய செய்யவேண்டிய தருணம் DRBALASUBRAMANIAN BSMS,MD siddha govt primary health center,avalurpettai

ஆதார நூல்கள்:

1. சித்த மருத்துவம் பொது, மரு.க.நா. குப்புசாமி முதலியார்

2. Harrison’s Infectious Diseases, Dennis L. Kasper, Anthony S. Fauci, 1st edition.

3. Ananthanarayanan and Paniker’s Textbook of Microbiology, 10th edition.

Dr BALA BSMS ,DVMS,MD (S): இம்மருந்துகள் மீது பல “கிளினிக்கல் மற்றும் ப்ரீ கிளீனிக்கல் ஆய்வுகள்”,  அதாவது நோயாளிகளிடமும் – நோயாளிகளுக்கு முந்தையதாக அடிப்படை மருத்துவ ஆய்வுகளும் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

தற்போது நடத்தப்பட்டு வரும் /நடந்து முடிந்த ஆய்வுகளின் விபரங்கள் பின்வருமாறு:

Preclinical studies;

1. மூலிகை மருந்துகள் மீதான உயிர் கணிணி தகவல் தொழில் நுட்ப ஆய்வுகள் (Docking studies).  

2. நோய் எதிர்ப்பாற்றல் செய்கை ஆய்வுகள்( Immuno modularity studies)

3. இரத்த உறைதலைத் தடுக்கும் செய்கை (Thrombolytic studies)

Antiviral study;

ஆங்கில மருந்தான ரெடம்சிவிர் போன்றே வைரஸ் பரவுதலைத் தடுக்கும் ஆற்றல், சித்த மருந்தான கபசுரக் குடி நீருக்கு இருப்பதை அறியும் ஆய்வு. இந்த ஆய்வில் கபசுரக் குடினீருக்கு சார்ஸ் கோவிட் 2 வைரஸ் பரவுதலை குறிப்பிடத்தக்க அளவிற்கு கட்டுப்படுத்தும் தடுக்கும் செய்கை அறியப்பட்டுள்ளது.

Clinical study;

ஒன்பது  வகையான வேறுபட்ட இலக்குகளுடன் கீழக்கண்ட ஆய்வுகள் நடைபெற்றுள்ளன

1. கபசுரக்குடிநீர் எடுத்த 20,000 சுகாதார ஊழியர்களிடம் ஆய்வு

2. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற கபசுரக் குடி நீர் மீதான open randomised clinical trial. வைரல் அளவு குறைவதை, நோய் எதிர்ப்பாற்றல் உயர்வை அறியும் ஆய்வு இது,

3. கோவிட் நோய் நிலையில், எதிர்ப்பாற்றல் விஷயத்தில் கபசுரக்குடி நீர் மற்றும் விட்டமின் சி இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்க, நடத்தப்பட்ட தேனி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற  ஆய்வு

4. கோவை மருத்துவக்கல்லூரி – ஈ எஸ் ஐ மருத்துவமனை இணைந்து கபசுரக்குடி நீர் மற்றும் விட்டமின் சி – சிங்க் சத்து கூட்டு சிகிச்சையின் பயன் மற்றும் பாதுகாப்பு குறித்த ஆய்வு

5. முதல் நிலை மருத்துவ பணியாளருக்கு கபசுரக் குடி நீரால் ஏற்பட்ட பாதுகாப்பு ஆய்வு

6. மக்களிடையே கோவிட் 19 நோய் நிலையில் சித்த மருந்துகளின் பயன்பாட்டு விழிப்புணர்வு ஆய்வு

7. சென்னை நோய்த்தடுப்பு முகாம்களில் தங்கியிருந்தோருக்கு கபசுரகுடி நீர் பயன்பட்ட ஆய்வு

8. SSMRi file எனும் கபசுரக் குடி நீர்  கோவிட் நிலையில் பயன்பட்ட ஆய்வு

9. சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் கபசுரக் குடி நீர் மீதான ஆய்வு.

கபசுர குடிநீர் எப்படி குடிக்க வேண்டும். விளக்குகிறார் மருத்துவர்.

கபசுர குடிநீர் தயாரிக்கும் முறையை விளக்கவும்

தினசரி கபசுர குடிநீரை எத்தனை மணி நேர இடைவெளியில் குடிக்க வேண்டும்?

5 கிராம் கபசுரக் குடிநீர் பொடியை 240 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 60 மில்லியாக வற்ற வைக்கவும். குறைந்த தணலில் கொதிக்க வைக்க வேண்டியது முக்கியம். வாய்ப்பிருந்தால் மண் பானையில் கொதிக்கவைப் பது சிறந்தது. இயலாதவர்கள் வேறு பாத்திரங்களிலும் தயாரிக்கலாம். கபசுரக் குடிநீரின் தரம் பார்த்து வாங்க வேண்டியது மிக முக்கியம். போலி மருத்துவர்களும் போலி மருந்தகங்களும் பெருகி விட்ட நிலையில் இதை கவனிக்க வேண்டியது மிக அவசியமாகிறது.

அரசு தர நிர்ணயம் செய்த தயாரிப்பாகப் பார்த்து வாங்கினால் அதன் தரம் நன்றாக இருக்கும். அல்லது அரசு மருத்துவ மனைகளிலோ, துணை சுகாதார நிலையங்களிலோ, ஆரம்ப சுகாதார நிலையங்களிலோ வாங்கிப் பயன்படுத்தினால் அதில் அனைத்து மூலிகைகளும் கலந்திருப்பதால் முழுப் பலனையும் பெற முடியும்.

போலியாகத் தயாரிக்கப் படுகிற கபசுரக் குடிநீர் பொடியில் 15 மூலிகைகள் இடம்பெற வேண்டியதற்கு பதிலாக ஏழோ, எட்டோ மட்டும் சேர்த்துத் தயாரிப்பார்கள் விலை அதிகமான மூலிகைகளையும் கிடைத்தற்கரிய மூலிகைகளையும் சேர்க்காமல் விட்டு விடுவார்கள். கபசுரக் குடிநீரில் சேர்க்கப்படும் 15 மூலிகைகளில் சில குளிர்ச்சி வீரியத்துடனும் சில பித்த வீரியத்துடனும் இருக்கும். இரண்டும் சேர்ந்து கூட்டு மருந்து தத்துவத்தைக் கொடுப்பது தான் சித்த மருத்துவத்தின் சிறப்பே. அதைத் தவற விடும் போது கபசுரக் குடிநீரின் பலன்கள் போய் விடும். உதாரணத்துக்கு சந்தனம் என்ற பொருள் இதில் சேராமல் போனால் வயிற்றெரிச்சல் ஏற்படலாம். எனவே கவனமாகப் பார்த்துத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஏதேனும் அறிகுறிகள் இருப்பவர்கள் கபசுரக் குடிநீரை வாரத்தில் 5 நாள்கள், இரண்டு வேளைகள் எடுத்துக் கொள்ளலாம். அறிகுறிகள் இல்லை, தடுப்பு நடவடிக்கையாக எடுத்துக் கொள்கிறேன் என்பவர்கள், ஒரு நாள் விட்டு ஒரு நாள் எடுத்துக் கொள்ளலாம்.

பெருந்தொற்று  சீஸன் ஆரம்பித்த நாள் முதல் இப்போது வரை கபசுரக் குடிநீரை தொடர்ந்து குடித்துக் கொண்டே இருப்பவர்களையும் பார்க்கலாம். அது மிகவும் தவறு. கேஸ்ட்ரைட்டிஸ் எனப்படும் இரைப்பை அழற்சிக்கு அது காரணமாகி விடும். எனவே கபசுரக் குடிநீரை மருந்தாக நினைத்தே எடுத்துக் கொள்ள வேண்டும். வயிற்றெரிச்சல் பிரச்னை உள்ளவர்கள், சாப்பிட்ட பிறகு இதை எடுத்துக் கொள்ளலாம். லேசான தொண்டைக் கரகரப்போ, மூக்கடைப்போ ஆரம்பிக்கும் போது உடனடியாக கபசுரக் குடிநீரை எடுத்துக் கொண்டால் நிச்சயம் பலன் தரும். கபசுரக் குடிநீரைத் தயாரித்த மூன்று மணி நேரத்துக்குள் குடித்து விட வேண்டும். நிறைய பேர் மொத்தமாகத் தயாரித்து ஃபிளாஸ்க்கில் வைத்து மாலை வரையோ, அடுத்த நாள் வரையோ வைத்திருந்து குடிக்கிறார்கள். அது கூடாது.

கர்ப்பிணிகள் கபசுர குடிநீர் குடிக்கலாமா?

கபசுரக் குடிநீரை எடுத்துக் கொள்வதில் கர்ப்பிணிகளைப் பொறுத்த வரை மருத்துவரின் ஆலோசனை மிக முக்கியம். முதல் 3 மற்றும் கடைசி 3 மாதங்களில் உங்கள் மருத்துவரின் ஆலோசனையோடு உங்களுக்கு இருக்கும் அறிகுறிகளைப் பொறுத்து எடுத்துக் கொள்வது தான் பாதுகாப்பானது. நீங்களாக எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும்.

வாரம் இருமுறை ஆவி பிடிக்கலாமா?

ஆவி பிடிப்பது பற்றிய விவாதம் இன்று பரபரப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. முறையான ஆவி பிடித்தல் பற்றி சித்த மருத்துவத்தில் விளக்கப் பட்டிருக்கிறது. மண் பானை அல்லது பாத்திரத்தில் மெல்லிய ஆவியை முக்காடிட்டு (பெட்ஷீட்டோ, துணியோ கொண்டு மூடியபடி) பிடிப்பதுதான் சரியானது. அது எந்தவிதப் பிரச்னையையும் தராது. வாரத்தில் 2 நாள்கள் ஆவி பிடிக்கலாம். இதைத் தவிர்த்து வீரியமாக வெளியேறும் ஆவியைப் பிடிப்பதால் தான் பாதிப்புகள் வரும். ஆவி பிடிக்கிற நீரில் கற்பூரவள்ளி, நொச்சி, யூகலிப்டஸ், திருநீற்றுப் பச்சிலை ஆகியவற்றைப் போட்டு அதிலிருந்து வரும் மெல்லிய ஆவியைத் தான் பிடிக்க வேண்டும். அதற்காக தீவிர அறிகுறிகள் உள்ள ஒரு நபர், நான் வீட்டிலேயே ஆவி பிடித்தே  பெருந் தொற்றிலிருந்து குணமாகி விடுவேன் என்று சொல்வது தவறான செயல். மற்ற சிகிச்சைகளுடன் சேர்த்து இதையும் கூடுதலாக எடுத்துக்கொள்ளலாமே தவிர இது மட்டுமே நோயைக் குணப்படுத்தி விடும் என இருக்கக் கூடாது.

குறைந்த அறிகுறிகள் உள்ளவர்கள், வீட்டுத் தனிமைப் படுத்தலில் இருக்கும்  பெருந்தொற்று  நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எப்போதெல்லாம் ஆவி பிடிக்கலாம் என கேட்டுப் பின்பற்றுவது தான் சரியானது. சித்த மருத்துவத்தில் பல்வேறு நோய்களுக்கு ஆவி பிடித்தல் தீர்வளிக்கும்

மருத்துவர் பாலசுப்பிரமணியன் அவலூர்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம்

(இந்த கட்டுரையில் வரும் கருத்துகளும் பார்வைகளும் கட்டுரையாளருக்கு சொந்தமானவை – Madras Review)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *