கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று மக்களை வீட்டுக்குள் முடக்கிவிட்டது, பொருளாதார சரிவு என்பது தவிர்க்க முடியாக ஒன்றாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சிலமாதங்களாக அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு கொண்டிருக்கிறோம். இந்த சூழ்நிலையில் மாறுபட்ட கொரோனா வைரஸ் பரவல் குறித்து அடிக்கடி செய்தி வருவது மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்துகிறது. இங்கு பொருளாதரா பாதிப்புக்கு இணையாக குழந்தைகளின் கல்வி பாதிப்பு பெரும் சோர்வை ஏற்படுத்தியுள்ளது. இதனால் குழந்தைகளின் இயல்புத் தன்மை சீர்குலைந்துள்ளது. இதில் இருந்து குழந்தைகளை மீட்டெடுப்பது என்பது அவசியமான ஒன்று. அதன் பொருட்டு உலகம் முழுவதும் அரசுகள் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது. ஆனால் அவற்றில் ஒரு தெளிவான வரையறை இல்லை என்பதுதான் வருத்தமாக உள்ளது.
இல்லம் தேடி கல்வி திட்டம்
தமிழ்நாட்டு குழந்தைகளின் கல்வி இடைவெளியை தவிர்ப்பதற்காக இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை செயல்படுத்தப் போவதாக திமுக அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் அடிப்படையில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு பன்னிரெண்டாம் வகுப்பு படித்த தன்னார்வலர்களை பயன்படுத்தி ஒரு நாளைக்கு ஒன்றரை மணி நேரம் என்ற விகிதத்தில் பாடம் கற்பிக்கச் செய்வது. தமிழ்நாட்டில் ஏறத்தாழ 34 லட்சம் குழந்தைகள் அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை படித்து வருகின்றனர். அவர்களுக்கு பாடம் கற்பிக்க 20 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் 170000 தன்னார்வலர்களை நியமிக்க அரசு விண்ணப்பிக்கச் சொல்லியுள்ளது. இந்த திட்டம் அடுத்த ஆறு மாதத்திற்கு செயல்படும் என்று அரசு கூறியுள்ளது. கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட கல்வித்துறையின் மந்தநிலையை போக்குவது அவசியம்தான். இது போன்ற தற்காலிக வேலை திட்டத்தின் எதிர்கால பாதிப்புகளை கருத்தில் கொண்டு முடிவெடுப்பது அவசியம்.
ஆர்.எஸ்.எஸ் கல்விக் கட்டமைப்பு
இந்த இல்லம் தேடி கல்வி என்பது தமிழ்நாட்டுக்கு வேண்டுமானால் புதிய ஒன்றாக இருக்கலாம். ஆனால் இந்தியாவில் பல மாநிலங்களில் ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் இது நடைமுறையில் உள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக தன்னார்வலர்களையும் தொண்டு நிறுவனங்களையும் களத்தில் இறக்கிவிட்டு இந்த திட்டத்தை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு செய்து வருகிறது. கிராமம், நகரம், பழங்குடியினர் வசிப்பிடம் போன்ற அனைத்து பகுதிகளிலும் பல்வேறு பெயர்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பு கல்வி கற்பித்தல் என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. இது ‘கல்வியினூடாக இந்துத்துவா’ என்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஏகல் வித்யாலயா திட்டமாகும். ஏறத்தாழ 1989ம் ஆண்டு இன்றைய ஜார்க்கண்டின் கும்லா மாவட்டத்தில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது.
ஏகல் வித்யாலயா எனும் கற்பித்தல் முறை
ஏகல் வித்யாலயா கல்வி திட்டத்தின் அடிப்படை வரையறை என்னவென்றால் 6 முதல் 14 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு தினமும் 3 மணிநேரம் கல்வி கற்ப்பிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு வரை படித்தவர்கள் மாணவர்கள் வசிக்கும் இடத்துக்கே சென்று அந்த அந்த பகுதியில் இருக்கும் மாணவர்களை ஒன்று திரட்டி 20 முதல் 30 பேருக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் இந்த வகுப்புகளை நடத்த வேண்டும். இந்த முறையை தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள இல்லம் தோடி கல்வி என்பதுடன் அப்படியே ஒப்பிட்டு பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. இரண்டும் ஒரே வடிவம்தான் ஆனால் பெயர்கள் மட்டும் வேறாக உள்ளது. இந்த நடைமுறையை செயல்படுத்த பல ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ் அமைப்பு தனது தொண்டு நிறுவனங்களை ஒரு சக்தி வாய்ந்த கட்டமைப்பாக உருவாக்கி வைத்துள்ளது.
32,06,212 மாணவர்கள் படிக்கும் வித்யாபாரதி பள்ளிகள்
2020 ஆகஸ்ட் மாதத்தின் புள்ளி விபரப்படி இந்த ஏகல் வித்யாலயா திட்டத்தின்கீழ் ஏறத்தால 102753 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக வடகிழக்கு மாநிலத்தில் மட்டும் 2100 பள்ளிகள் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கல்வி பிரிவான வித்யாபாரதி இந்தியா முழுவதும் 14,000 தனியார் பள்ளிகளைக் நடத்திவருகிறது. இதில் 32,06,212 மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஒரு லட்சத்திற்கும் அதிகமான சன்ஸ்கார் கேந்திரா எனப்படும் கல்வி பயிற்சி மையங்களையும் இயக்கி வருகிறது. இந்த மையங்கள் இன்று தமிழ்நாட்டு அரசு சொல்கிறதே அந்த இல்லம் தேடி கல்வி என்ற தொண்டு நிறுவன பயிற்சி முறையை ஒத்தது. இந்த நிறுவனங்கள் அனைத்தும் நேரடியாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இந்த அமைப்புகளுக்கு பலகோடி டாலர்கள் வெளிநாடுகளில் இருந்து நன்கொடையாக குவிகிறது.
வன்முறையை வளர்க்கும் ஆர்எஸ்எஸ் பள்ளிகள்
இந்த அமைப்புகள் கல்வி கற்பித்தல் என்ற போர்வையில் மதவாத சிந்தனைகளையும், குழந்தைகளிடம் பிற மதத்தின் மீதான வெறுப்பையும், வன்முறை மனோபாவத்தையும் விதைக்கிறார்கள் என்று 2005-ம் ஆண்டு ஒன்றிய அரசின் மனிதவள அமைச்சகம் நடத்திய விசாரணையில் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் அரசு நிதிகள் இந்த நிறுவனங்களுக்கு குறைக்கப்பட்டது. இந்த அமைப்புகள் இந்தியா முழுவதும் பல்வேறு பெயர்களில் ஒவ்வொரு மாநிலத்திற்கு எற்றார் போல் செயல்பட்டு வருகின்றன.
பல்வேறு பெயர்களில் இயங்கும் காவி கல்வியமைப்பு
டெல்லி மற்றும் ஹரியானா பகுதிகளில் இந்து சிக்ஷா சமிதி என்றும், ஆந்திராவில் ஸ்ரீ சரஸ்வதி வித்யா பீடம் என்றும், தமிழ்நாட்டில் விவேகானந்த கேந்திரா என்று இந்த அமைப்புகள் அழைக்கப்படுகின்றன. இதனுடன் இன்னும் கீழ்காணும் பெயர்களில் இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது. சிசு மந்திர் சேவா பாரதி, பாரத் கல்யாண் பிரதிஸ்தான், பாரதிய ஜன் சேவா சன்ஸ்தான், சரஸ்வதி சிஷு மந்திர்கள், வனவாசி கல்யாண் ஆசிரமம், ராஷ்ட்ரிய சேவா பாரதி, வித்யா பாரதி அகில் பாரதிய சிக்ஷா சன்ஸ்தான். பாரதிய சிக்ஷா சன்ஸ்தான்.
காவிமயமானது புதிய கல்வி கொள்கை
இந்தியாவில் பல மாநிலங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனம் என்ற போர்வையில் ஆர்எஸ்எஸ் அமைப்பு தனது இந்துத்துவ சித்தாந்தத்தை செயல்படுத்தி வருகிறது. ஆனால் இந்த திட்டத்தை அனைத்து மாநிலங்களிலும் முழுமையாக செயல்படுத்த முடியவில்லை. இதை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசின் புதிய கல்வி கொள்கையை ஆர்எஸ்எஸ் அமைப்பு வரையறை செய்துள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனங்களை பயன்படுத்தி கற்றல் கற்பித்தல் என்ற முறையை விரிவாக செயல்படுத்த புதிய கல்வி கொள்கை பரிந்துரைத்து பல வழிகாட்டு நடைமுறைகளையும் கொடுத்துள்ளது. இந்த புதிய கல்வி கொள்கை என்பது ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. இதை பயன்படுத்தி பிற மாநிலங்களிலும் கால்பதிக்க வேலை செய்து வருகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் சதிக்குள் முழுமையாக அகப்படாத தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தான் அடுத்த இலக்கு.
தமிழ்நாட்டு கல்வி கட்டமைப்பு
உலக வர்த்தக கழகம், இந்திய ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு, இவை எதாவது மக்கள் விரோத கொள்கையை செயல்படுத்த முயற்சித்தால் தமிழ்நாடு உடனே எதிர்வினையாற்றுகிறது. இதற்கு காரணம் இங்குள்ள கல்வி கட்டமைப்புதான். நீதிகட்சி காலத்தில் துவங்கி இன்றுவரை ஏறத்தால 100 ஆண்டுகளாக பல்வேறு தலைவர்களின் பெருமுயற்ச்சியின் விளைவாக உருவானது இந்த கல்வி கட்டமைப்பு. தமிழ்நாட்டின் கடைகோடி கிராமத்திற்கு சென்றாலும் ஒரு ரேசன்கடையும், அரசு பள்ளிக்கூடமும் எப்போதும் இயங்கிக்கொண்டிருக்கம். இந்தியாவில் அதிக பள்ளிகளையும் கல்லூரிகளையும் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. ஒரு ஆண்டுக்கு லட்சகணக்கான வடமாநில மாணவர்களுக்கு கல்வி கொடுக்கும் இடம் தமிழ்நாடு. நீட், மாநில உரிமை பறிப்பு, ஜிஎஸ்டி போன்ற அனைத்து மக்கள்விரோ திட்டங்களையும் எதிர்த்து நிற்கும் மாநிலம் தமிழ்நாடு, சாதி மத சமத்துவத்தை உள்ளடக்கிய சமூக நீதிகொள்கையை பாதுகாத்துவரும் இந்த தமிழர் மண்ணை ஆர்எஸ்எஸ் ஆக்ரமிக்க பெருமுயற்ச்சி செய்து வருகிறது, இதற்கு வாய்ப்பாக இல்லம் தோரும் கல்வி திட்டம் அமைந்துவிட கூடாது.
மோகன் பகவத்தின் கொரோனோ கால சிறப்பு திட்டம்
கொரோனா பெருந்தொற்றின் முதல்அலை காலகட்டத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு தனது ஏகல் வித்யாலயா திட்டத்தின் அடிப்படையில் மேலும் புதிய திட்டங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது. கொரோனா காலத்தை பயன்படுத்தி வீடுகளுக்கு சென்று குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கிறோம் என்ற போர்வையில் களப்பணி செய்ய வேண்டும் என்று 2020 ஜூலை மாதம் போபாலில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத் வலியுறுத்தியுள்ளார். இது மத்திய பிரதேசம் மட்டுமல்ல பிற மாநிலங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று அவரால் வலியுறுத்தப்பட்டடுள்ளது. இந்த திட்டத்தை சதீஷ் பிம்ப்லிகர் என்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் பொறுப்பேற்று நடத்தி வருகிறார்.
கொரோனா காலகட்டத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தொண்டு நிறுவனங்கள் கற்பித்தல் என்ற போர்வையில் மேற்குவங்கம் மற்றும் மத்தியபிரதேச மாநிலங்களில் என்ன செய்தார்கள் என்பது குறித்து இந்துஸ்தான டைம்ஸ், தி கேரவன் போன்ற பத்திரிக்கைகளில் வந்த செய்திகளை பார்க்கும்போது அதிர்ச்சியாக உள்ளது.
மேற்குவங்கத்தில் 5700 பயிற்சி மையங்களை உருவாக்கியுள்ளது
மேற்கு வங்க மாநிலத்தில் 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தனது வேலையை ஏகல் வித்யாலயா துவங்கியது. பழங்குடியினரின் நண்பர்கள் சங்கம் (Friends of Tribals Society) என்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் தொண்டு நிறவனத்தின் பெயரில் தனது வேலை செய்து வருகிறது. இந்த அமைப்பை உள்ளுர்வாசிகள் வான்வந்து பரிஷத் (Vanvandhu Parishad) என்று அழைக்கின்றனர். கடந்த இரு ஆண்டுகளில் மேற்குவங்கத்தில் ஏறத்தாழ 5700 பயிற்சி மையங்களை நடத்தி வருகிறது. இவையனைத்தும் ஒரு ஆசிரியர் கற்பித்தல் என்ற அடிப்படையில் நடந்துவருகிறது. இது குறித்து சில பெற்றோர்கள் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை கொடுத்த நேர்காணலில் இருந்து திரட்டபட்ட செய்திகளை பார்க்கும் போது கற்பித்தல் என்ற போர்வையில் இவர்கள் என்ன செய்து வருகிறார்கள் என்று வெளிப்படையாக தெரிகிறது.
ஜெய் ஸ்ரீ ராம் என்று முழங்குங்கள்
“ஒவ்வொரு நாளும் குழந்தைகளுக்கு வகுப்புகள் துவங்கும் முன் சரஸ்வதி வந்தனம் பாடப்படும் மேலும் வேத துதியான காயத்ரி மந்திரம் பாடப்படும் இந்த இரண்டும் கற்ப்பித்தல் பயிற்சியின் ஒரு பகுதியாக நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. வகுப்பு நடக்கும் கூடத்தின் முன்புறம் ஆர்எஸ்எஸ் பயன்படுத்தும் பாரதமாத புகைபடம் வைக்கப்பட்டு குழந்தைகள் அந்த படத்திற்கு முன் வணக்கம் செலுத்துவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அத்தோடு மாணவர்கள் “பாரத் மாதா கி ஜெய்” என்று கோஷமிடவேண்டும். வகுப்பில் வந்தேமாதரம் பாடலை பாடுவதற்கு பயிற்சி கொடுக்கபடுகிறது, ஒவ்வொரு முறையும் காலை வணக்கம், மாலை வணக்கம், நன்றி போன்ற சொற்களை பயன்படுத்தாமல் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று சொல்ல பழக்கப்படுத்துகின்றனர்.
பொய் வரலாறுகளை புகுத்தும் இந்துத்துவா
வரலாறு என்ற போர்வையில் சிவாஜி ஜெயந்தி போற்றபடுகிறது. மற்றும் முகலாய சாம்ராஜ்யத்தை எதிர்த்து புகழ் பெற்ற 16 ஆம் நூற்றாண்டின் மன்னரான ராணா பிரதாப்பை இந்திய வரலாற்று நாயகர்கராக குழந்தைகளுக்கு கற்பிக்கின்றனர். சியாமா பிரசாத் முகர்ஜி மற்றும் தீன் தயாள் உபாத்யாயா போன்ற ஆர்எஸ்எஸ் இந்துத்துவா சிந்தனையாளர்களை உள்ளடக்கியதான இந்திய சுதந்திர போராட்டம் குறித்து பயிற்றுவிக்கப்படுகிறது. மேலும் பசுக்கள் தெய்வீக தன்மை கொண்டவை என்று கற்றுதரப்படுகிறது.
கல்வியினூடாக இந்துத்துவா
இந்த பயிற்சி மையங்கள் மேற்கு வங்க மாநிலத்தில் ஜார்பஸ்தி பகுதியில் செயல்பட தொடங்கி சில மாதங்களுக்கு பிறகு மற்றொரு தன்னார்வ தொண்டு நிறுவனம் அந்த கிராமத்திற்குள் வந்தது அதன் பெயர் ஸ்ரீ ஹரி சத்சங் சமிதி ( Shree Hari Satsang Samiti) இந்த அமைப்பு சன்ஸ்கார் கேந்திரா என்ற இளைஞர்களுக்கு நடக்கும் வாராந்திர கூட்டத்தை நடத்த துவங்கியது. அந்த கூட்டத்தில் மதவாத கதைகளை இளைஞர்களுக்கு போதிப்பதற்காக ஆர்எஸ்எஸ் அமைப்பு கதகர்களை (கதைசொல்பவர்கள்) நியமித்தது. இவர்கள் ஹரி கதா, ராம் கதா மற்றும் பகவத் கதா போன்ற கதைகளை பிரச்சாரம் செய்கின்றனர் அதாவது விஷ்ணு கதைகள், ராமரின் கதைகள் மற்றும் பகவத் கீதை பிரச்சாரம் செய்துவருகின்றனர் என்று கிராம வாசிகள் குறிப்பிடுகின்றனர். மேற்குவங்கத்தின் ஜார்பஸ்தி மற்றும் ரசகோவா பஞ்சாயத்தில் இந்த அமைப்புகள் செயல்பட துவங்கிய பிறகு வீடுகளில் காவி கொடி பறப்பது அதிகமாகிவிட்டது மேலும் ஜெய் ஸ்ரீ ராம் மற்றும் பாரத் மாதா கி ஜெய் என்று முழக்கமிடுவது வாடிக்கையாக மாறிவிட்டது என்று கிராமவாசிகள் கூறுகின்றனர். கல்வி என்ற பெயரில் உள்ளே புகுந்து குழந்தைகளிடம் நவீன அறிவியல் கல்வியை தவிர்த்துவிட்டு பிற்போக்குதனமான புராணங்களையும் இதிகாசங்களையும் கற்பிப்பது மட்டுமல்லமல் ஆர்எஸ்எஸ் தலைவர்களையும் அவர்களின் சித்தாந்ததையும் விதைத்து வருகின்றனர். கிராமப்புரங்களில் மத வேறுபாடுகளையும் மத மோதல்களையும் வளர்ப்பதினூடாக பாரதிய ஜனதா கட்சியை வலுப்படுத்தும் வேலையை தான் இந்த தொண்டு நிறுவனங்கள் செய்துவருகின்றன.
மத்தியப் பிரதேசம்
ஆர்எஸ்எஸ் அமைப்பு கொரோனா கால கல்வி என்ற போர்வையில் பாலகோகுலம் என்ற தனது செயல் திட்டத்தினூடாக ஏறத்தாழ 1000 தன்னார்வ தொண்டர்களை மத்திய பிரதேசத்தின் 31 மாவட்டங்களில் இறக்கிவிட்டுள்ளது என்று ஆகஸ்ட்மாதம் 2020 வருடம் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை தகவல்களை வெளியிட்டுள்ளது. மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் அடுத்த இரண்டு வாரங்களில் 1000 மையங்கள் தொடங்கப்படும் என்று பெயர் வெளியிட விரும்பாத பொறுப்பாளர் இந்துஸ்தான டைம்ஸ் பத்திரிக்கையிடம் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து கடந்த 15 மாதங்களில் மத்திய பிரதேச மாநில கிராமங்களில் ஏறத்தாழ 600 பயிற்சி மையங்களை உருவாக்கி தனது வேலையை ஆர்எஸ்எஸ் செய்து வருகிறது. மேலும் இந்த வகுப்புகள் பின்தங்கிய பகுதிகளை மையமாக வைத்து தொடங்கபட்டுள்ளன. இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜே.பி.தனோபியா கூறுகையில் “இது மத்திய பிரதேசத்தில் தங்கள் காவி சித்தாந்தத்தை பரப்ப ஆர்.எஸ்.எஸ்ஸின் விரிவாக்க திட்டமாகும். பள்ளி மாணவர்களை எளிதில் மூளைச்சலவை செய்யதுவிடமுடியும் என்பதால் இத்திட்டம் அவர்களிடம் துவங்கப்பட்டுள்ளது.”
தமிழ் சமூகத்தின் எதிர்காலம் என்னவாக போகிறது
இந்த கள ஆய்வுகளை கருத்தில் கொண்டு பார்க்கும்போது புதிய கல்வி கொள்கையின் திட்டமான கற்றல் கற்பித்தல் முறையை செயல்படுத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு துவங்கிவிட்டது. இதை எதிர்க்க இந்தியாவில் எந்தவிதான உறுதியான கட்டமைப்பும் இல்லை என்பதுதான் கள நிலவரம். தன்னார்வ தொண்டர்களையும், தன்னார்வ நிறுவணங்களை பயன்படுத்தியும் இல்லம் தோடி கல்வி என்று முயற்சி செய்தால் கட்டாயம் ஆர்எஸ்எஸ் அமைப்பு தனது சித்தாந்த வாதிகளை உள்ளே தினிக்க அனைத்து வாய்ப்புகளும் உள்ளது. அதற்கான உறுதியான கட்டமைப்பும் முன் அனுபவம் உள்ள தொண்டர்களும் அவர்களிடம் உள்ளனர். இது தமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பை மட்டுமல்ல தமிழ் சமூகத்தின் எதிர்காலத்தையும் சீரழித்துவிட வாய்ப்புள்ளது.
தன்னார்வலர்களின் போதாமை
கற்பித்தல் என்பது வெறும் பாடம் நடத்தும் வேலை மட்டும் கிடையாது அது பல்வேறு அம்சங்களை உடையாது. குழந்தைகளை அணுகுவதற்கு அவர்களின் உளவியல் தெரியவேண்டும். சாதி, மதம், வர்க்கம், பிராந்தியம் என்று பல்வேறு ஏற்றத்தாழ்வான சூழ்நிலைகளை உள்வாங்ககூடிய ஆற்றல் இருந்தால் மட்டும்தான குழந்தைகளிடம் நேர்மையாக அணுக முடியும் இல்லை என்றால் குழந்தைகளின் வாழ்வில் பல எதிர்மறையன விளைவுகளை ஏற்படுத்திவிடும். குறிப்பாக பெண் பிள்ளைகள் அதிகமாக படிக்கும் தமிழ்நாட்டில் அவர்களை நாகரீகமாகவும் உயர்ந்த பண்புடனும் நடத்துவதற்கு பயிற்சிகள் தேவை. தன்னார்வ தொண்டாகளுக்கு அரசு கொடுக்க நினைக்கும் குறுகியகால பயிற்சி கட்டாயம் போதாது, ஆசிரியர் பயிற்சி போன்று ஒரு நெடிய பயிற்சி அனுபவம் உள்ளவர்ளால் மட்டும்தான் இதை பூர்த்தி செய்யமுடியம்.
காத்துகிடக்கும் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள்
குழந்தைகளுக்கு கற்பிக்க தேவைபடும் நபர்களை தமிழ்நாடு அரசு தனது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆசிரியர் பயிற்சி முடித்து பதிந்துள்ளவர்களை பயன்படுத்தலாம். ஆசிரியர் பயிற்சியின் இரண்டாம் நிலை படித்தவர்கள் 165000, பிஎட் படித்தவர்கள் 300000, எம்எட் படித்தவர்கள் 221000 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்துள்ளனர். மேலும் டெட் எனப்படும் ஆசிரியர் பயிற்சி தேர்வில் தேர்வாகிவிட்டு இன்னும் பணி நியமணத்திற்காக காத்திருப்பவர்கள் 80000க்கும் அதிகம் இவர்களை இந்த திட்டத்தில் பயன்படுத்தினால் பலனளிக்கும். இவர்கள் மூன்று ஆண்டு கற்பித்தல் முறைகளை கற்றவர்கள் எனவே குழந்தைகளை அணுக குறைந்தபட்ச அனுபவம் இருக்கும். ஒரு நாளைக்கு ஒன்றரை மணிநேரம் மட்டுமே வகுப்பு என்பதால் இவர்களுக்கு மாதம் 5000 ரூபாய் என்ற விகிதத்தில் கொடுத்து குழந்தைகளுக்கு கற்பிக்கலாம். அடுத்த ஆறு மாதத்திற்கு இல்லம் தேடி கல்வி திட்டத்திற்காக 200 கோடி ஒதுக்கியுள்ளதாக தமிழ்நாடு அரசு கூறுகிறது. இவர்களுக்கு 5000 கொடுத்த 510 கோடி செலவாகும் இது தமிழ்நாடு அரசு கணக்கிட்டடதைவிட 300 கோடி அதிகம். இது அரசுக்கு ஒரு பெரும் சுமையாக அமைய வாய்ப்பு இல்லை எனவே குழந்தைகளின் எதிர்காலத்தையும் தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும் இந்துத்துவா சக்திகளிடம் இருந்து பாதுகாக்கும்பொருட்டு திட்டங்கள் வகுக்கப்பட்டுவது நல்லது.
-சத்தியராஜ் குப்புசாமி
Madras Review