மதமாற்றம் குறித்த பிரச்சாரங்களை, இந்து மதத்தைக் காப்போம் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ் பல காலமாக நடத்தி வந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படி மதம் மாறியவர்கள் மீதும், மத போதனையில் ஈடுபடுபவர்கள் மீதும் ஆர்.எஸ்.எஸ் நாடெங்கும் தாக்குதலை நடத்தி வந்திருக்கிறது. அரசும் அவர்களை தடுக்கவோ, தண்டிக்கவோ எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. பல மாநிலங்கள் மதமாற்றத்திற்கு எதிரான சட்டங்களைக் கொண்டு வர முயற்சித்திருக்கின்றன!
தமிழ்நாட்டில் மதமாற்றம் என்பதை வைத்து ஒரு குப்பை படத்தை எடுத்து அதனை பல திரை ஆளுமைகளைக் கொண்டு பாராட்ட வைத்து, ஒரு பிரச்சாரத்தை செய்யும் அளவுக்கு அர்.எஸ்.எஸ் ஒரு நபரை உருவாக்கியிருக்கிறது.
ஒரிசாவை மையப்படுத்திய தரவுகள்
சரி மதமாற்றத்தை ஆர்.எஸ்.எஸ் வன்முறை கொண்டு எதிர்கொள்ள என்ன காரணம், இந்து மதத்தைக் காப்பது என்ற போர்வையில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள 2018-ம் ஆண்டு, RUPE என்ற ஆய்வுக் குழுமம் வெளியிட்ட India’s Working Class and its Prospects என்ற கட்டுரை ஒரிசாவை மையப்படுத்தி சில முக்கியமான தரவுகளைத் தருகிறது..
மிகவும் பின்தங்கிய மாநிலமான ஒரிசாவில், விவசாயம் சார்ந்து இருக்கும் பழங்குடிகள், தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் பெரும்பாலானோர் வறுமையில் தான் இருக்கின்றனர். விவசாயத்திலும் பிற வேலைகளின் மூலமும் அவர்களால் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஊதியத்தை ஈட்ட முடிவதில்லை..
இவர்களின் வறுமையைப் பயன் படுத்திக் கொண்டு, உள்ளூர் பணக்காரர்கள் முதல் மார்வாரி குஜராத்திகள் வரை கடன் கொடுக்க முன்வருகிறார்கள். கோவில் பார்ப்பன பூசாரிகள் முதற்கொண்டு இப்படி வட்டிக்கு கடன் தருகிறார்கள். (பார்ப்பனர்கள் வட்டித் தொழிலில் ஈடுபடக் கூடாது என்று வேதங்கள் கூறினாலும், but who cares?). வாழ்வாதாரத்திற்கே பணம் சம்பாதிக்க முடியாத மக்கள் எப்படி கடனை மட்டும் வட்டியோடு திருப்பிக் கொடுக்க முடியும்?
தெலங்கானாவிற்கு அனுப்பப்படுகிறார்கள்
வட்டிக்கு கடன் வாங்கிய ஏழைகள் தெலங்கானாவில் இருக்கும் செங்கல் சூளைகளுக்கு காண்ட்ராக்டர்கள் மூலம் வேலைக்கு அனுப்பப்படுகிறார்கள். மிகவும் கொடுமையான பணிசூழலில் தான் இவர்கள் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. சரியாக வேலை செய்யவில்லை என்று சொல்லி அவர்களின் கைகள் வெட்டப்பட்டாலும் கூட கேட்க அங்கு நாதி இல்லை. பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது எல்லாம் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இப்படி கடன் பட்டு வருடத்தில் சில மாதங்கள் தெலங்கானாவிற்கு வேலைக்கு செல்வது என்பது அங்கு வாடிக்கை ஆகிறது. இதை தான் Debt Cycle driven Distress Migration என்று இந்த ஆய்வு கூறுகிறது. ஒரு வித அடிமை முறை என்று கூட இதைக் கூறலாம்.
அரசும் இதில் தலையிடுவதில்லை. மக்கள் தாமாக முன் வந்து தான் கடன் பெறுகிறார்கள்; இவர்களின் வறுமைக்கு இவர்களே காரணம். குடிப்பழக்கம் போன்றவற்றால் தங்கள் வருமானத்தை தொலைக்கிறார்கள்; இவர்களுக்கு கொடுக்கப்படுவது கடனே அல்ல, அது வேலைக்கான முன் பணம்; வேலை செய்யாமல் தப்பிக்க, பணத்தை வாங்கிக் கொண்ட பிறகு தன்னை கட்டாயப்படுத்தி வேலைக்கு அழைத்து செல்வதாக தொழிலாளர்கள் புகார் தருகிறார்கள், என்று எல்லாம் பல்வேறு போலியான காரணிகளை அரசாங்கம் உருவாக்கி வைத்திருக்கிறது.
கான்ட்ராக்டர்கள் தங்களுக்கு என்று கிராமங்களை தொகுதியாகப் பிரித்து வைத்து இயங்குகிறார்கள். கிராம சபைகளுக்கு இந்த காண்ட்ராக்டர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி அங்குள்ள மக்களை செங்கல் சூளை வேலைக்கு அழைத்துச் செல்கின்றனர். இந்த கிராம சபை அந்தந்த கிராமத்தில் இருக்கும் மேல் சாதிக் காரர்கள், பெரும் நில உடைமையாளர்களைக் கொண்டு இயங்குகிறது. கிராமத்தின் அனைத்து நிகழ்வுகளும் இவர்கள் கட்டுப்பாட்டில் தான் நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கூலிகளை நிர்ணயிப்பது கூட இந்த சபைகள் தான். அப்படி ஒரு பலம் மிக்க அமைப்பாக இந்த சபைகள் இயங்குகின்றன.
வட்டியில்லா கடன் பெறுவதை எதிர்க்கிறார்கள்
இப்படிக் கடன்பட்டு, அடிமையாகும் மக்களுக்கு கிருத்தவ மிஷினரிகளும், வட்டியில்லாத கடன் கொடுக்கும் இஸ்லாமிய அமைப்புகளும் நிவாரண உதவிகள் அளிக்க முன்வரும்போது தான் அங்கு சிக்கல் துவங்குகிறது. நிவாரணம் பெற்று சிறிதளவு வாழ்க்கைத் தரம் உயர்ந்தாலும், ஏழைகள் கடன் வாங்க வர மாட்டார்கள். கடன் வாங்கவில்லை என்றால் அவர்களை தெலங்கானாவிற்கு அடிமைகளாக அனுப்ப முடியாது. தங்கள் சுரண்டல் இயந்திரம் நின்று போகும் எனும்போது தான், பணம் படைத்த உயர்சாதிக் காரர்களின் ஏவல் நாய்களாக ஆர்.எஸ்.எஸ் உள்ளே வருகிறது. மதம் மாற்றி இந்து மதத்தையே அழிக்கிறார்கள் என்ற பெயரில் வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறது.
ஆர்.எஸ்.எஸ்’இன் ஒவ்வொரு பிரச்சாரத்திற்குப் பின்னாலும் ஒரு பொருளாதாரக் காரணி இருக்கிறது. உழைக்கும் மக்களின் சுரண்டலை உறுதி செய்வதும், சுரண்டுபவனை பாதுகாப்பதும் தான் ஆர்.எஸ்.எஸ்’இன் வேலைத் திட்டம். அதற்கு தடையாக எது வந்தாலும் அதைச் சுற்றி ஒரு கதையைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள். மதமாற்ற எதிர்ப்பு, நூறு நாள் வேலைத் திட்ட எதிர்ப்பு போன்ற அனைத்தையுமே இந்த பின்புலத்தில் வைத்துப் பார்த்தால் எளிமையாக விளங்கிக் கொள்ளலாம்.
[விரிவாக இதைப் பற்றிப் படிக்க: https://rupe-india.org/70/distress.html]