துருக்கியின் ‘கடல் சளி’ : வேகமெடுக்கும் காலநிலை மாற்றத்தின் ‘புதிய இயல்பு’ (New Normal).

துருக்கியின் மர்மாரா கடற்பகுதி (Marmara Sea) இரண்டு நாட்களாக அனைத்து செய்திகளிலும் முக்கிய இடம் பிடித்துள்ளது. துருக்கி கடல் பகுதியில் இரு நாட்களாக கசடுகள் தடிமனான உறை போன்று படிந்திருக்கின்றன. புவி வெப்பமயமாதல் மற்றும் கடல்களில் அதிகரிக்கும் மாசுபாடு ஆகியவற்றால் இந்த விளைவு ஏற்பட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த கசடு சளி படலம்போல் இருப்பதால் இதை ‘கடல் சளி’ (Sea Snot) என்று இதை அழைக்கிறார்கள். துருக்கியின் கடல் மட்டுமல்லாமல் உலகெங்கும் இருக்கக்கூடிய கடல் சூழலியல் அனைத்துமே தற்போது ஏதாவதொரு இயற்கை சீற்றத்தால் அல்லது மாறுபாட்டினால் மாசடைவது நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

‘கடல் சளி’ என்றால் என்ன?

கடந்த ஆறு மாதங்களாக துருக்கியின் வரலாற்று புகழ்பெற்ற இஸ்தான்புல் நகரின் தெற்கேயிருக்கும்  மர்மாரா கடலின் மேல் பெரியளவிலான பரப்பளவில் மாசு பொருள்களால் நிறைந்த கசடுகள் பரவியிருக்கின்றன. இந்த பரவல் புவி வெப்பமயமாதல் மற்றும் கடலில் கலந்த பெருமளவிலான கழிவு நீர், பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றின் கசடுகளால் உருவாகியிருக்கின்றன.

இந்த அடர்த்தியான, மெலிதான சாம்பல்-பழுப்பு நிற தாள்கள் போன்ற பரவல் கடல் சளி என்றழைக்கப்படுகின்றன. அவை இறந்த மற்றும் உயிருள்ள கரிம பொருட்களால் ஆனவை. அவற்றில் பெரும்பாலானவை நீரில் மிதக்கும் தாவரவகைகளை (Phytoplankton) சார்ந்தவை. இந்த நுண்ணிய கடல் பாசிகள் பொதுவாக கடல்நீரில் உயிர்வளியான ஆக்சிஜனை கலக்க உதவுகின்றன. ஆனால் அவை வளரும் சூழ்நிலையின் கட்டுப்பாட்டை இழந்து மிகுந்த பரவலாக வளரும்போது பல சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு ஒட்டும் சளி போன்ற பொருளை உருவாக்குகின்றன.

துருக்கியின் மர்மாரா கடலில் உருவாகும் இந்த சளிப்படலம் 2007ம் ஆண்டிலிருந்தே ஒரு பிரச்சனையாக மாறியிருக்கிறது. ஆனால் இப்போது ஏற்பட்டிருக்கும் இந்த சளிப்படலம் முந்தைய ஆண்டுகளை போல அப்புறப்படுத்தவோ அல்லது அழித்தொழிக்கவோ எளிதானதாக இல்லை. இந்த வருடம் மிக தீவிர சூழலியல் பிரச்சனையாக உருவெடுத்திருப்பதால் கடந்த ஒரு வாரமாக துருக்கியின் மத்திய கிழக்கு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (Middle East Technical University -METU)  கடல்சார் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வுக் கப்பலில் இருந்து இந்த நிகழ்வை உன்னிப்பாக கவனித்துவருகின்றனர். அங்கிருக்கும் கடல்பகுதி  முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சோதனை நிலையங்களை அமைத்து அதன் தீவிரத்தை சோதித்து வருகின்றனர். இந்த சளிபடலம் முன்பில்லாத வகையில் தீவிர தன்மை எட்டியுள்ளதாக கணித்திருக்கிறார்கள். மர்மாரா கடலின் மேற்பரப்பில் மட்டுமல்லாமல் கடல்நீர் மட்டத்திலிருந்து 25அடி முதல் 30அடி ஆழம் வரை (சுமார் 80 முதல் 100 மீட்டர் வரையிலும்) சில இடங்களில் கடலின் அடிப்பகுதி வரையிலும் பரவியிருப்பதாக தெரிகின்றது.

இந்தசூழலியல் சீர்கேட்டின் பின்னணி என்ன ?

துருக்கியின் மத்திய கிழக்கு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ‘கடல்சார் அறிவியல் நிறுவனத்தின்’    (Institute of Maritime Sciences) தலைவர் ‘பாரிஸ் சாலிஹோக்லு’ (Baris Salihoglu) திடீரென ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய சூழலியல் சீர்கேட்டிற்கு எவை காரணம் என்பதை இப்போதே தெரிந்து கொள்வது கடினம் என தெரிவித்திருக்கிறார். நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கரிம சேர்மங்களிலிருந்து வெளிவரும் மாசுக்களும், காலநிலை மாற்றமும் நிச்சயமாக இந்த சீர்கேட்டில் முக்கிய பங்கைக் கொண்டிருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் மர்மாராவின் கடல்நீர் வெப்பநிலை கடந்த 20 ஆண்டுகளில் அதன் உலகளாவிய சராசரியை விட 2 முதல் 2.5 டிகிரி செல்சியஸ் (4.5 டிகிரி பாரன்ஹீட்) அளவில் அதிகரித்துள்ளதாக சாலிஹோக்லு கூறியிருக்கிறார்.

மர்மாரா கடலின் இந்த சீர்கேட்டிற்கு கடலை சுற்றியிருக்கும் நீர்நிலைகளில் கடந்த அரை நூற்றாண்டுகளாக அதிகரித்த மாசுபாடுகளும் ஒரு காரணமாயிருக்கின்றன. உண்மையில் அங்கு கடலை சுற்றி 20மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் வாழும் விவசாய பகுதிகளிலிருந்தும், தொழிற்சாலைகளிலிருந்தும் தினந்தோறும் வெளிவரும் பெருமளவிலான கழிவுநீர் மற்றும் நச்சு கசடுகள் வெளியேறுவதை தடுக்க இயலவில்லை. மேலும் மர்மாரா கடலில் மேற்கொள்ளப்பட்ட அதிகப்படியான மீன்பிடி தொழில் பல்லுயிர் இழப்பினையும், சுற்றுசூழல் அமைப்பினையும் பலவீனப்படுத்தியது. இந்த காரணங்கள் அங்கு இதுபோன்ற அதிகமான  சீர்கேடுகளை ஏற்படுத்துகிறது.

இந்த கடல் சூழியல் சீர்கேடு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?

ஈஜியன் கடலுக்கும், கருங்கடலுக்கும் இடையில் அமைந்திருக்கும் முக்கிய நீர்வழியாக மர்மாரா கடல் விளங்குவதால் இயல்பாகவே அந்த பகுதியின் சூழலியலில் மிக முக்கிய பங்காற்றுகிறது. மர்மாரா கடல் ஏராளமான சிப்பிகள், நண்டுகள், கிளிஞ்சல்கள், பவளம் மற்றும் சுமார் 230 வகையான மீனினங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான கடல் வாழ் உயிரினங்களின் வாழ்விடமாக இருக்கிறது.

இப்போது ஏற்பட்டிருக்கும் சளிபடலம் கடலின் மேற்பரப்பை மூடியும், அலைகளுக்கு அடியில் மூழ்கியும் ஒட்டுமொத்த கடற்பரப்பையும் ஒரு போர்வை போல மூடியிருக்கிறது. இந்த படலம் கடல்நீரில் இருக்கக்கூடிய   ஆக்ஸிஜனை உறிஞ்சிவிடுவதால் அடியாழத்தில் வாழும் கடல் வாழ் உயிரினங்களை மூச்சுத்திணறலால் பெருமளவில் இறந்திருக்கின்றன. மேலும் இந்த கடல் பிராந்தியத்தின் மாறுபட்ட சுற்றுச்சூழல் அமைப்பை அச்சுறுத்தும் விதமாக கடலுயிரிகள் வாழத் தகுதியில்லாத இத்தகைய சூழ்நிலை மண்டலங்களை பரவலாகியிருக்கிறது.

இந்த சளிப்படலம் பரவி விரிந்த கருங்கடலின் வடகிழக்கில் ஒரு சிறு துளி போன்று காட்சியளித்தாலும் இந்த பகுதி துருக்கியின் மீன்பிடி தொழிலுக்கு மிக முக்கிய பங்காற்றுகிறது. மேலும் மர்மாரா கடல்பகுதியின் வளத்தில் மிக முக்கிய பங்காக அதன் அடியாழ நீரோட்டத்தின் உயிர்வளியான ஆக்சிஜன் விநியோகத்திற்கும்  மிக முக்கிய பங்காற்றுகிறது. இப்போது கடல்வாழ் உயிரினங்களுக்கான ஆக்சிஜன் விநியோகம் மிகுந்த அபாயத்திலிருக்கிறது. இப்போது மீன்களுக்காக விரிக்கப்படும் வலையில் மிகஅதிகளவில் சளிபடலம் உள்நுழைவதால் அவற்றின் கனம் தாங்காமல் மீனவர்களின் மதிப்புமிக்க வலைகள் கிழிகின்றன.

கிளிஞ்சல்கள் மற்றும் சிப்பிகள் திறந்து மூடும்போது இந்த சளிபடலம் உள்நுழைந்து விடுவதால் அவை மூடமுடியாமல் பெருமளவில் இறக்கின்றன. தற்போதைய நிலையில் இங்கிருக்கும் கடல் நத்தைகள் அனைத்தும் இறந்துவிட்டதாக அங்கிருக்கும் மீனவர்கள் தெரிவித்திருக்கின்றனர். 

கடல் சளிபடலம் நுண்ணுயிர்களான வைரஸ்கள் மற்றும் பாக்டீரியா போன்ற பிற நுண்ணுயிரிகளையும் ஈர்க்கலாம். மேலும் இந்த சளிபடலத்தில் ஆபத்தான நுண்ணுயிரியான ‘ஈ.கோலை’ (Escherichia coli) இருப்பதை உறுதிபடுத்தியிருக்கின்றனர். இது கடல் உயிரினங்களுக்கும், அந்த கடலில் தொடர்புடைய மக்களுக்கும் தீங்கு விளைவிக்கலாம். இதன் விளைவால் சுற்றுலா தலங்களான அங்குள்ள கடற்கரைகள் மூடப்படும் அபாயமிருக்கிறது. ஏற்கனவே COVID-19 தொற்றுநோயுடன் போராடும் துருக்கி நாட்டிற்கும்  அதன் சுற்றுலாத் துறைக்கும் இழப்பை ஏற்படுத்தும்.

இதுபோல் வேறெங்கும் நிகழ்ந்திருக்கிறதா?

உண்மையில் கடல் சளி புதியதல்ல.  இது 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மத்தியதரைக் கடலில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. மேலும் அங்கிருக்கும் அருகாமை கடல்களான ஈஜியன் மற்றும் கருங்கடலிலும் ஒரு பிரச்சினையாகவே கடல்சளி நீண்டகாலப்மாக இருந்து வருகிறது. உலகிலுள்ள மற்ற கடல்களுடன் இந்த மூன்று கடல்களை ஒப்பிடும்போது இவற்றின் அதிக அலைகளற்ற அமைதியும், ஆழமற்ற கடல்நீர் பகுதிகளும் கடல்சளி உருவாவதற்கு ஏற்றதாக அமைந்திருக்கின்றன என்கிறார்கள் நிபுணர்கள்.

ஏப்ரல் 2010ம் ஆண்டில் மெக்ஸிகோ வளைகுடாவின் லூசியானா கடற்கரையிலிருந்து சுமார் 40 மைல் (65 கிலோமீட்டர்) தொலைவில் கச்சா எண்ணெய் ஏற்றிவந்த ஒரு கப்பலில் ஏற்பட்ட விபத்தினால் எண்ணெய் கசிந்து பேரழிவு ஏற்பட்டது. அதன் பின்னர் அங்கும் இதேபோன்ற ஒரு சளி படலம் உருவானது.

கடலில் பெருமளவில் கலந்த எண்ணெய் கடலில் மிதக்கும் தாவரங்கள் மற்றும் கரிம பொருள்களுடன் கலந்து ஒரு போர்வைபோல் படலமாக பரவியது. இதனால் கசிவு ஏற்பட்ட இடத்திலிருந்து சுமார் 130 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு கடலில் வாழ்ந்த ஏராளமான கடல்வாழ் உயிரிகள் இறந்தன.

சுற்றுசூழல் ஆய்விதழான (Nature) ‘நேச்சர்’ இதழில் வெளிவந்த ஒரு புதிய ஆய்வில் கடந்த 40 ஆண்டுகளில் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இருக்கக்கூடிய நூற்றுக்கணக்கான ஏரிகளில் ஆக்ஸிஜன் அளவு பெருமளவில் குறைந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறது. மேலும் புவி வெப்பமயமாதலால் ஏற்படும் வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் மனிதர்களின் பல்வேறு செயல்களால் ஏற்படும் நீர் மாசுபாடு ஆகியவற்றின் காரணமாகவும் பெருமளவிலான மீனினங்கள் அழிந்திருப்பதாக தெரிவித்திருக்கிறது.

மற்றுமொரு கவலையளிக்கும் செய்தியாக கடல்பாசிகளில் மற்றொரு வகையாக சற்றேபெரிய ‘பாசிகளின்  பரவல்’ (Macroalgal bloom) கடல் படுகைகளில் கட்டுப்பாடில்லாமல் இப்போது வளர்ந்துவருகிறது. இவை பெருமளவில் முன்பு காணப்பட்ட நுண்பாசி (Microalgae)வகைகளை போலவே உயிர்வளியான ஆக்சிஜன் உற்பத்தியையும், கடல்வாழ் உயிரிகளின் சுவாசத்தையும் தடை செய்கின்றன. ஏற்கனவே ஆரய்ச்சியாளர்கள் மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து கரீபியன் கடல்வரை பரவிய 9,000 கிலோ மீட்டர் பரப்பளவில் பரவிய உலகின் மிகப்பெரிய பாசி பரவலை கண்டறிந்திருக்கிறார்கள். இனிவரும் காலங்களில் இது போன்ற பாசி பரவல்கள் புதிய இயல்பாக மாறக்கூடும்.

சளி படலத்தை அகற்ற துருக்கியின் நடவடிக்கைகள்:

காலநிலை மாற்றத்தை தடுப்பதற்கு துருக்கி மட்டும் தனியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. உண்மையில் அது இன்னும் 2015 பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தவில்லை. இந்தநிலையில்  துருக்கியின் சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்த கடல் சூழலியல் பேரழிவை சமாளிப்பதற்கும் மர்மாராவில் சளி படலத்தை சுத்தம் செய்வதற்கும் ஒரு 22 அம்ச திட்டத்தை இயற்றப்போவதாக அறிவித்திருக்கிறது.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ஜூன் 8 ஆம் தேதி முதல் 24/7காலஅளவின் அடிப்படையில் நவீன விஞ்ஞான  முறைகள் மூலம் மர்மாரா கடலில் உள்ள சளிபடலத்தை முழுவதுமாக சுத்தம் செய்வதற்காக கடல்  மேற்பரப்பு துப்புரவு படகுகளை துருக்கி அரசு இயக்குகிறது.

 துருக்கியின் சுற்றுச்சூழல் மற்றும் நகரமயமாக்கல் அமைச்சர் ‘முராத் குரூம்’ (Environment and Urbanization Minister Murat Kurum) இதை பற்றி கூறும்போது இந்த ஆண்டு இறுதிக்குள் முழு கடலையும் ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கவும், கடல்நீர் மாசுபாட்டைக் குறைப்பதற்கு கடலோர நகரங்கள் மற்றும் கப்பல்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரை முறையாக சுத்திகரிக்கும் முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இப்போதைய கால்கட்டத்தின் தேவையாக இந்த கடல்சளி படலம் மற்ற கடற்பகுதிகளில் பரவாமல் தடுப்பதற்கான முயற்சியில் துருக்கி அரசு ஈடுபட்டுள்ளது. இவை போன்ற நிகழ்வுகள், தீவிரமாகும் புவி வெப்பமயமாதல் நிகழ்வையும் காலநிலை மாற்றத்தையும் நமக்கு முன்னறிவிக்கின்றன. காலநிலை மாற்றத்தை அரசு மட்டுமல்லாமல் ஒவ்வொரு தனிநபர்களும் கவனத்தை குவித்து அதை தடுப்பதற்கு தங்களால் முயன்ற சிறு முயற்சிகளை மேற்கொள்வது காலத்தின் கட்டாயமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *