தமிழ்நாட்டில் அதிக மீனவர்களையும், மீன்வளத்தையும் கொண்ட மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டமாகும். இங்கு சின்னமுட்டம், முட்டம், குளச்சல் மற்றும் தேங்காய்பட்டணம் ஆகிய மீன்பிடி துறைமுகங்கள் இருக்கின்றன.
இதில் மாவட்டத்தின் மேற்கு கடலோரத்தில் உள்ள தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தின் ஒரு பக்கம் தேங்காய்ப்பட்டணத்திலும் மறுபக்கம் இரயுமன்துறையிலும் அமைந்துள்ளது.
இந்த துறைமுகத்தை அந்த பகுதியிலுள்ள 12 மீனவ கிராமங்களில் உள்ள மக்கள் பயன்படுத்துகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக இங்கு துறைமுக கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. ஆனாலும் மீனவர்கள் பயன்படுத்தும் வகையில் இன்னும் கட்டுமானப் பணிகள் நிறைவு செய்யப்படவில்லை.
இரயுமன்துறை கிராமம் தமிழகத்தின் அத்திப்பட்டி என்று கடல் சூழலியல் ஆர்வர்களால் சொல்லப்படுகிற அளவுக்கு மோசமாக கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது. இராயுமன்துறை மட்டுமல்லாமல், அந்த பகுதியில் உள்ள அனைத்து கடலோர கிராமங்களிலும் கடல் அரிப்பு தடுப்பு சுவர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளபடியால் மீனவர்களுக்கு தங்கள் கிராமங்களிலிருந்து கடலில் தொழில்செய்யப் போகமுடியாத நிலையில் இந்த துறைமுகத்தையே நம்பியுள்ளனர்.
தடுப்பணையும் துறைமுகமும்
மேலும் இந்த துறைமுகம் தாமிரபரணி ஆற்றின் கழிமுகப் பகுதிக்கு மிக அருகில் இருக்கிறது. இப்பொழுது ஆற்றில் கட்டப்படும் தடுப்பணை காரணமாக துறைமுகத்தின் நீர் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் துறைமுகப் பகுதியில் மணல் குவிந்து, மீன் பிடித்துவிட்டு வரும் மீனவர்களின் படகுகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகிறது. இந்த மாதம் மட்டும் இதுவரை மூவர் உயிரிழந்துள்ளனர்.
துறைமுகத்தில் நடக்கும் விபத்துகள் குறித்து அந்த பகுதி மீனவர்களிடம் கேட்டபொழுது, துறைமுகத்தின் அலைதடுப்புச் சுவர் போதுமானதாக இல்லை என்றும், துறைமுகத் திட்ட வரைபடத்தில் உள்ளப்படிதான் அச்சுவர் கட்டப்படுகிறதா என்ற சந்தேகமும் தங்களுக்கு ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்கள்.
துறைமுகப் பணி துவங்கிய பின்தான் இரயுமன்துறை முதல் நீரோடி வரையிலான பகுதியில் கடல் அரிப்பும், கடல் உட்புகுவதும் அதிகமானது. இப்போது இரயுமன்துறை ஊரின் பெரும்பான்மையான பகுதி கடலுக்குள் தான் இருக்கிறது என்கிறார்கள்.
இதற்கு பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க சில முக்கிய கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள்.
மீனவர்களின் கோரிக்கைகள்
- துறைமுகத்தின் இன்னொரு கரையான இரயுமன்துறை பேருந்து நிலையத்திலிருந்து துறைமுகத்திற்கு செல்லும் சாலையை திட்ட வரைவில் உள்ளதுபோல், ஆற்றின் தெற்குக் கரையில் உடனடியாக போடவேண்டும்.
- இப்போதுள்ள கிராம சாலை என்பது கனரக வாகனங்கள் செல்வதற்கு ஏற்றதல்ல. சுமார் 100 அடி அகலம் மட்டுமேயுள்ள அந்த கரைப் பகுதியில், 40 அடிக்கு சாலை போட்டால் மீதமுள்ள இருமருங்கிலுமுள்ள வீடுகள் ஆற்றிலும் கடலிலுமாக அழிந்துவிடும். எனவே மிக முக்கியமாக கனரக வாகனங்களின் தேவைக்காக தரமான சாலையை ஆற்றில் உடனடியாக கட்ட வேண்டும்.
- துறைமுக தங்கு தளத்தில் முகவாயிலில் போடப்பட்டுள்ள கடல் நுழைவுப் பகுதிகள் பாதுகாப்பற்றதாக உள்ளபடியால், நீண்ட கால கடல் அறிவுள்ள மீனவர் குழுக்களின் ஆலோசனைகளைப் பரிசீலித்து உரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.
- சுமார் 5000 வல்லங்களும், நூற்றுக்கணக்கான ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப் படகுகளும் இங்கு தங்குவதற்கு இடநெருக்கடி என்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. எனவே தங்குதள வரைவுத் திட்டப்படி நீரோடி வரையான AVM கால்வாயைத் தூர்வாரி ஆழப்படுத்தி விரிவுபடுத்த வேண்டும். இந்த பகுதிகளில் அந்தந்த பகுதி மீனவர்களின் படகுகளையும், வல்லங்களையும் பாதுகாப்பாக நிறுத்தவும் மீன் ஏலமிடுவதற்குமான உரிய ஏற்பாடுகளை அரசு முனைப்புடன் செய்து தரவேண்டும்.
- பரக்காணியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணையிலிருந்து கசிந்துவரும் நீரானது சாதாரண காலங்களில் தங்கும் நீர்போக, மீதமுள்ள நீர் முழுதும் தங்குதளத்தில் பாயுமளவுக்கும், அதேவேளை கடல்நீர் உட்புகா வண்ணவும் அமைத்திட வேண்டும். மீனவ மக்கள் மற்றும் விவசாயிகளின் உரிமைகளுக்கு எவ்வித பங்கமும் ஏற்படாதவாறு தடுப்பணை கட்டப்பட வேண்டும்.
- இந்த தடுப்பணை சிக்கல் சரியாகக் கையாளப்படவில்லை என்றால் சமூக விரோதிகள் பரப்பும் வதந்திகளால் மீனவர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையிலான சிக்கலாக அது மாற்றப்பட்டுவிடும் அபாயம் உள்ளது.
- மிக முக்கியமாக தங்குதள பகுதியில் உருவாகும் மணற்மேடுகளை உடனடியாக அப்புறப்படுத்தத் தேவையான இயந்திர உபகரண வசதிகளை நிரந்தரமாக தங்குதளத்தினுள் ஏற்படுத்த வேண்டும்.
- இந்தப் பகுதியின் முன்னேற்றத்திற்காகவும், தொழில் அமைதியை நிலைநிறுத்தவும் இனியும் காலம் கடத்தாமல் அரசானது தங்குதளப் பணிகளை மிக விரைவாக கட்டி முடிக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.
ஆகிய கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள்.