சென்னை தீவுத்திடல் அருகே கூவம் ஆற்றங்கரையோரம் வசித்த குடிசைவாழ் மக்கள் அந்த இடத்திலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். சென்னை நகரத்தின் மையப் பகுதிகளில் ஒன்றான தீவுத்திடலின் எதிரேயிருந்த காந்திநகர், இந்திரா நகர், சத்தியவாணிமுத்து நகரில் வசித்த அம்மக்களை அங்கிருந்து வெளியேற்றி பெரும்பாக்கத்தில் குடியேற்றியிருக்கிறது அரசு.
வெளியேற்றப்பட்டவர்களின் குடியிருந்த பகுதியிலிருந்து, புதிதாக அரசு அமைத்து தந்துள்ள குடிசைமாற்று குடியிருப்புப் பகுதியானது கிட்டதட்ட 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சுமார் 3000 குடியிருப்புகளில் வசித்த 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். சென்னை சீர்மிகு திட்டத்தின் கீழ் கூவம் ஆற்றை மேம்படுத்துவதாகக் கூறி இவ்வெளியேற்றம் நடந்திருக்கிறது.
சொந்த குடியிருப்பு நிலமில்லாத நகரத்தினுடைய உழைக்கும் மக்கள், அவர்களினுடைய குடியிருப்புப் பகுதி அமைந்திருக்கும் நகரத்திற்கு வெளியே தொலைத்தூரப் பகுதிகளுக்கு வெளியேற்றப்படுவது தொடர்கதையாக உள்ளது. இதன் காரணமாக, அம்மக்கள் தங்கள் வாழிடங்கள் சார்ந்து அதன் அருகாமையில் ஏற்படுத்திக் கொண்ட வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகிறது. மேலும் வேறொரு புதிய இடத்திற்கு மாற்றப்படுவதால் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் கூடுதல் சுமை ஏற்படுத்தப்படுகிறது.
குடிசைமாற்று வாரிய சட்டம்
1971 குடிசைமாற்று வாரிய சட்டத்தின்படி வெளியேற்றப்படுபவர்களுக்கு, 8 கிலோ மீட்டருக்குள் மாற்று இடம் கொடுக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அவ்விதி செயல்படுத்தப்படுவதில்லை. கடந்த காலங்களில் சென்னை நகர விரிவாக்கம், மேம்படுத்துதல் என்ற பெயரில் நடந்த வெளியேற்றங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் செம்மஞ்சேரி, கண்ணகி நகர் போன்ற தொலைத்தூரப் பகுதிகளுக்கு விரட்டப்பட்டனர்.
நகரம் தொடர்பான அரசின் பொருளாதாரக் கொள்கையில் தொடரும் பாகுபாடு
நகரங்கள் தொடர்பான அரசின் கொள்கை முடிவுகள் அதனது பொருளாதார கொள்கை சார்ந்தே உள்ளது. உலகமயமாக்கலுக்குப் பிறகு நவ தாராளமய கொள்கையே, அரசின் பரந்த பொருளாதாரக் கொள்கையாக (Macro Economic Policy) உள்ளது. அதன் விளைவாக அரசினால் வளர்த்தெடுக்கப்படும் நவீன நகரமென்பது, தனியார் முதலாளிகளினுடைய சேவை வணிகத்தின் சந்தை பரப்பாக அரசினால் மாற்றப்படுகிறது. தனியார் முதலாளிகளை மையப்படுத்தி அரசினால் வளர்த்தெடுக்கப்படும் நவீன நகரம், நகரத்தின் அனைத்துமட்ட மக்கள் தொகுப்பின் ஒருங்கிணைந்த (Inclusive) வளர்ச்சியை உத்திரவாதப்படுத்தாமல், வளர்ச்சியில் பின்தங்கியிருக்கும் பொருளாதார பலமில்லாத அடித்தட்டு மக்களை வெளியேற்றும் போக்கை கடைப்பிடிக்கிறது.
அதன் விளைவாக நகரக் கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்கள் குறிப்பிட்ட மக்கள் தொகுதியின் பாதிப்பிலிருந்தே நிர்மாணிக்கப்படுகிறது. இந்தியாவின் சாதிய சமூகக் கட்டமைப்பின் படி நகர வெளியேற்றத்தால் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பான்மையினராக ஒடுக்கப்பட்ட மக்களே உள்ளனர்.
அடித்தட்டு மக்களின் செலவு செய்யும் திறனும், அவர்களின் நிலமும்
அதேபோல, பொருளாதாரத்தில் மிக நலிந்த நிலையிலுள்ள அடித்தட்டு மக்களின் நகர வெளியேற்றம் என்பது, அவர்களின் செலவு செய்யும் திறன் (Expenditure Capacity) குறித்த உள்நோக்கமுடையது. நவீன நகரத்தின் செலவினங்களுக்கு அடித்தட்டு மக்களால் முகங்கொடுக்க இயலாத நிலையானது, நகர மக்கள் மீது செலவினத்தை அதிகப்படுத்தும் அரசிற்கு எந்நாளும் அச்சுறுத்தலே. அரசின் நவீன நகரம் எல்லாவற்றிற்கும் அதீத விலையை நிர்ணயிக்கும் பொழுது, எல்லாவற்றிற்கும் செலவு செய்ய இயலாத அடித்தட்டு மக்கள், நவீன நகரத்தில் கிடைக்காத தங்களுக்கானதைப் பெற, நவீன நகரத்தின் எல்லாவற்றையும் குலைக்க வேண்டி வரும். இது நவீன நகரத்தை தனியார் முதலாளிகளின் லாபத்திற்காக கட்டமைக்கும் அரசிற்கு பிரச்சனையாக அமையும். எனவேதான் பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் மக்களை நவீன நகரமாக சொல்லப்படும், தனியார் முதலாளிகளின் சந்தைப் பரப்பிலிருந்து வெளியேற்றுகிறது; வெளியேற்றிய பின்னர் அம்மக்களின் நிலங்களை தனியார் முதலாளிகளின் சந்தைக் கட்டமைப்பாக மாற்றுகிறது.
நகரங்களில் அதீத செலவினங்களுக்கு முகங்கொடுக்க முடியாத மக்களை அப்புறப்படுத்தும் நிலையானது, ‘அதீத செலவீனங்களுக்கு எதிரான எதிர்க் குரலை’ இல்லாமல் செய்து விடுகிறது. இது நவீன நகரத்தின் செலவினத்தை சுமக்கப் போகும் நடுத்தர மக்கள் தரப்பை, அதீத செலவினங்களுக்கு எதிரான எதிர்க் குரலின் கூட்டுப் பலமில்லாத பலவீனமானவர்களாக மாற்றும்.
தற்காலிக எதிர்வினைகளால் கடக்கப்படும் வெளியேற்றங்கள்
இத்தகைய சமூக பொருளாதார காரணங்கள் மற்றும் அரசின் நவ தாராளமய பொருளாதார கொள்கையே நகரத்தில் வசிக்கும் அடித்தட்டு மக்களின் நகர- வெளியேற்றத்திற்கு காரணமாக உள்ளது. ஆனால் அடித்தட்டு மக்களின் ஒவ்வொரு நகர- வெளியேற்ற நிகழ்விலும், அது ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பிரச்சனை என்ற நோக்கத்தில் அணுகப்பட்டு, அவ்வெளியேற்றத்திற்கு எதிரான தற்காலிக எதிர்வினையுடன் கடக்கப்படுகிறது. வெளியேற்றத்திற்கு அடிப்படையான அரசினுடைய நவ தாராளமயக் கொள்கையின் விளைவாக இருக்கும் அதனது நவீன நகரமைப்புக் கொள்கை கேள்விக்குள்ளாக்குப்படுவதில்லை.
ஸ்மார்ட் சிட்டியும் சிறுகுறு வணிகர்களும்
நகர வெளியேற்றம் தொடர்பான தமிழ்நாட்டு அரசியல் சூழலின் இப்போக்கானது, அரசினை அதனது தனியார் முதலாளிகள்சார் நவீன நகரமைப்பு கொள்கையினை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வைத்திருக்கிறது. பன்னாட்டு தனியார் நிறுவனங்களையும் உள்ளடக்கிய ஸ்மார்ட் சிட்டி திட்டமாக அது விரிவடைந்திருக்கிறது. அடித்தட்டு மக்களுக்கு பாதிப்பேற்படுத்தும், நிலையைக் கடந்து உள்நாட்டு சிறு, குறு வணிகர்களையும் நகர வணிகக் கட்டமைப்பிலிருந்து வெளியேற்றுகிறது. நகரத்திலிருந்து குறிப்பிட்ட மக்கள் தொகுப்பின் வெளியேற்றத்தை அரசின் நகரமைப்புக் கொள்கையிலிருந்து அணுகாததன் விளைவாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தினால் வெளியேற்றப்பட்ட உள்ளூர் சிறு, குறு வணிகர்கள் தனியே இந்நெருக்கடியை எதிர்கொண்டனர். தற்போதைய சென்னைத் தீவுத்திடல் மக்களின் வெளியேற்றம், ஸ்மார் சிட்டி திட்டத்தினால் வெளியேற்றப்பட்டு பாதிப்புக்குள்ளான வணிகர்களிடத்திலே கூட குறைந்தபட்ச எதிர்க்குரலை ஈட்டவில்லை.
எனவே தமிழ்நாட்டு அரசியல் சூழல், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் அரசின் நகரமைப்புக் கொள்கை தொடர்பான ஒரு நிலைப்பாட்டை விரைவில் எட்டுவதே நகரத்திலிருந்து வெளியேற்றப்படும் அடித்தட்டு மக்கள் பிரச்சனைக்கு தீர்வை நோக்கிய தொடக்கமாக அமையும்.