விவசாயிகள் போராட்டம்

எங்களுக்கு உணவை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். பேச்சுவார்த்தையின் போது அரசின் விருந்தை மறுத்த விவசாயிகள்: டெல்லி போராட்ட அப்டேட்ஸ்

கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பத்தாவது நாளாக இன்றும்(5/12/2020) டெல்லியின் பல்வேறு எல்லைகளில் போராடி வரும் சூழலில் விவசாயிகள் தங்கள் பிரதிநிதிகளுடன் ஐந்தாவது சுற்றுப் பேச்சுவார்த்தைக்காக அரசாங்கத்தை இன்று சந்தித்தனர்.

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் இன்று மதியம் ஒன்றிய அரசு விவசாயிகளை சந்திப்பதாக அறிவித்திருந்தது.

மேலும் விவசாயிகளின் கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாவிட்டால் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதோடு அதிகளவிலான சாலைகளை மறிப்பதாக தெரிவித்திருந்த நிலையில்,வரும் டிசம்பர் 8-ம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தையும் அறிவித்துள்ளனர்.

இன்று நடைபெற்ற முக்கிய செய்திகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

தற்போது வரை நடந்துள்ளவை

 • டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குடரெஸ்-ன் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், “மக்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு உரிமை இருக்கிறது, அதிகாரிகள் அவர்களை (அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம்) செய்ய அனுமதிக்க வேண்டும்” என  தெரிவித்தார்.

 • விவசாய சங்கங்கள் இன்றும் ஒன்றிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த இருந்த சூழலில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் விவசாய சங்கமான பாரதிய கிசான் சங் அமைப்பு வேளாண் சட்டத்தில் 4 திருத்தங்கள் செய்ய வேண்டுமென பரிந்துரைத்துள்ளது. குறைந்தபட்ச ஆதார விலைவாசிக்கு கீழ் விற்க தடை விதிப்பது, விவசாயிகள் விரைவாக பணத்தைப் பெற வங்கி மூலமாக உத்திரவாதம் அளிப்பது போன்ற பரிந்துரைகளை பாரதிய கிசான் சங் பரிந்துரைத்தது.

 • சிங்கு எல்லைப்பகுதியில் பஞ்சாப் முஸ்லிம் அமைப்பைச் (Muslim Federation of Punjab) சேர்ந்த 25 நபர்கள் பூராடம் விவசாயிகளுக்கு ஆதரவாக சமூக சமயற்கூடம் அமைத்து உணவு பரிமாறி வந்தனர். “போராட்டம் தொடரும் வரை தொடர்ச்சியாக 24 மணிநேரமும் உணவு பரிமாறுவது நடைபெறும். விவசாயிகள் நமக்கு எவ்வளவோ செய்கிறார்கள். தற்போது நம் நன்றிக் கடனை திரும்ப செலுத்த வேண்டிய நேரம் இது” என்று ஃபாரோகி முபீன் தெரிவித்ததாக ‘நியூஸ்18’ செய்தி வெளியிட்டுள்ளது.

 • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்), புரட்சிகர சமூகக் கட்சி மற்றும் அனைத்திந்திய பார்வார்டு பிளாக் ஆகிய கட்சிகள் இணைந்து செப்டம்பர் எட்டாம் தேதி அறிவித்துள்ள அனைத்திந்திய வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.

 • “சட்டங்களை ரத்து செய்வது மட்டுமே போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. நாங்கள் இங்கிருந்து சிறிதளவுகூட நகரப் போவதில்லை. சட்டங்களை ரத்து செய்வதைத் தவிர வேறு எதையும் நாங்கள் ஏற்க மாட்டோம் என்று அகில இந்திய கிசான் சபை அமைப்பின் நிதிச் செயலாளர் கிருஷ்ணா பிரசாத் தெரிவித்தார்.

 • “சட்டங்களை திரும்பப் பெறவே நாங்கள் விரும்புகிறோம். சட்டங்களை திருத்துவதற்கான அரசாங்கத்தின் பரிந்துரையை நாங்கள் ஏற்க மாட்டோம்” என தோபா கிசான் சங்கர்ஷ் குழுவை சேர்ந்த ஹர்சுலிந்தர் சிங் தெரிவித்தார்.

 • விவசாயிகளுடனான ஒன்றிய அரசின் பேச்சுவார்த்தை இன்று மதியம் 2:30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

 • விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசிய கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசியதை தொடர்ந்து. கனடா தலைமையில் டிசம்பர் 7-ம் தேதி நடைபெற இருந்த கொரோனா சந்திப்பை இந்திய அரசு ரத்து செய்துள்ளது. 
  முன்னர் “இந்திய விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பாக எங்கள் உள் விவகாரங்களில் குறுக்கிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது” என இந்திய வெளியுறவுத் துறை கனடா அரசைக் குறிப்பிட்டு எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

 • பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்திருந்த உணவையே சாப்பிட்டனர். டிசம்பர் 3-ம் தேதி அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையின் போதும், விவசாயிகள் அரசு கொடுத்த உணவை உண்ண மறுத்து தாங்கள் கொண்டு வந்த உணவை சாப்பிட்டது குறிப்பிடத்தக்கது.

 • இன்று விவசாய போராட்டத்துக்கு ஆதரவாக பாடகர்-நடிகர் தில்ஜித் டோசன்ஜ், சிங்கு எல்லையில் கலந்து கொண்டு உரையாற்றினார். “விவசாயிகள் புதிய வரலாற்றைப் படைத்துள்ளனர். விவசாயிகளின் பிரச்சினைகளை யாரும் திசை திருப்பக்கூடாது” என்று தில்ஜித் டோசன்ஜ் தெரிவித்ததாக ‘ANI’ செய்தி வெளியிட்டது 

 • இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒன்றிய அரசு வரும் டிசம்பர் 9-ம் தேதி ஒரு பரிந்துரை அறிக்கையைத் தயாரித்து விவசாயிகளிடம் அளிக்கப்படும் என தெரிவித்ததாக ‘ANI’ செய்தி வெளியிட்டுள்ளது.

 • பேச்சுவார்த்தையின் முடிவில் எந்தவித திட்டவட்டமான முடிவும் எட்டப்படாத நிலையில் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை வரும் டிசம்பர் 9-ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு மாநிலங்களில் நடக்கும் போராட்டம்

விவசாயப் போராட்டத்திற்கு ஆதரவாக ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சி பிகார் தலைநகர் பாட்னாவில் போராட்டம் நடத்தியது.

தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், விவசாய சட்டங்களுக்கு எதிராக கருப்புக் கொடி போராட்ட அணிவகுப்பு மாநிலம் முழுவதும் நடைபெற்றது. சேலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின், ஒன்றிய அரசுடன் கூட்டணியில் இருக்கும் அதிமுக கட்சியை விவசாயிகளுக்கு எதிராக இருப்பதாக விமர்சித்துப் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *