உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தேவியனந்தல் கிராமத்தில் ஏப்ரல் 2-ம் தேதி நர்சிங் டிப்ளமோ படிக்கும் மாணவி சரஸ்வதி கழுத்தை நெறித்து படுகொலை செய்யப்பட்டு அவரது வீட்டின் முன்பு பிணமாகக் கிடந்தார்.
இந்த வழக்கில் காவல்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த ரங்கசாமி, அவரது நண்பர் ரவீந்திரன் மற்றும் 17 வயது சிறுவன் ஒருவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருமணத்திற்கு சம்மதிக்காததால் ரெங்கசாமி என்ற நபர் சரஸ்வதிக்கு தொடர்ந்து மிரட்டல் வந்ததும், அந்த நபரே தனது கூட்டாளிகளுடன் இணைந்து கொலை செய்திருப்பதும் தெரியவந்தது.
இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய சூழ்நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இப்படுகொலைக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்திருந்தனர். இச்சம்பவத்தினை நாடகக் காதல் என்று தொடர்புபடுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் மருத்துவர் ராமதாஸ் விடுத்திருந்த அறிக்கை இணையதளத்தில் ஒருவித சமூக பதற்றத்தினை உருவாக்கியிருந்தது.
இந்நிலையில் குற்றவாளிகள் மூன்று பேரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேல்முருகன் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு
சரஸ்வதி கொலை சம்பவம் குறித்து இன்று கடலூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் ஆகியோர் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெற்றோருடன் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்பொழுது பேசிய வேல்முருகன், இவ்வழக்கை விரைந்து நடத்தி மேற்படி குற்றவாளிகள் மூவருக்கும் உச்சபட்ச தண்டனையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொண்டார்.
மேலும் கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென்றும், அவரது தந்தைக்கு அரசு வேலை வழங்கிட வேண்டுமென்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பிலும் சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் சார்பிலும் இணைந்து 2 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.

திருமாவளவன் கோரிக்கை
அதேபோல பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.

தொடர்ந்து அதிகரிக்கும் பெண்கள் மீதான குற்றங்கள்
தொடர்ச்சியாக அனைத்து வித வன்முறைகளிலும் பாதிக்கப்படுபவர்களாய் பெண்கள் இருக்கிறார்கள். குடும்ப வன்முறையாக இருந்தாலும், ஆண்-பெண் உறவு தொடர்பான வன்முறையாக இருந்தாலும், சமூக வன்முறையாக இருந்தாலும் எல்லாவற்றிலும் பாதிக்கப்படுபவர்களாய் பெண்கள் உள்ளனர்.
சமூக மாற்றங்கள் எத்தனை நிகழ்ந்தாலும் பெண்கள் மீதான பார்வையும், அவர்கள் மீதான வன்முறைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. பெண்கள் மீதான வன்முறைகளைத் தடுப்பதற்கு சிறப்பு சட்டங்களை இயற்ற வேண்டிய கடமையிலிருந்து அரசு தவறக் கூடாது. பாலியல் வன்முறைகள், ஆசிட் வீச்சு, கேலி, கிண்டல்கள் என ஒவ்வொரு நாளும் ஒரு காட்டில் உலவுவதைப் போன்றே ஒரு பெண் இந்த சமூகத்தில் வாழ வேண்டிய சூழல் இருக்கிறது.
இந்தியாவில் தினந்தோறும் ஒரு பெண் ஆசிட் வீச்சுக்கு உள்ளாகிறார் என்று NCRB அறிக்கை தெரிவிக்கிறது. 2014 மற்றும் 2018-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் 1500 பெண்கள் ஆசிட் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
இந்தியாவில் 2015-ம் ஆண்டு தொடங்கி 2019-ம் ஆண்டு வரையிலான நான்கு ஆண்டு காலத்தில் பெண்கள் மீதான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வந்திருக்கின்றன. அதுகுறித்தான விவாதங்கள் பெரிதாக இங்கே நடைபெறவில்லை.
2015-ம் ஆண்டு 3.2 லட்சம் எண்ணிக்கையில் இருந்த பெண்கள் மீதான குற்றவழக்குகள், 2019-ம் ஆண்டில் 4 லட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்திருக்கின்றன.
2019-ம் ஆண்டைப் பொறுத்தவரை ஒரு நாளைக்கு 87 பாலியல் வன்கொடுமைகள் சராசரியாக நிகழ்ந்திருக்கின்றன.
பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு முறையாக மேற்கொள்வதும், தொடர்ச்சியாக விழிப்புணர்வுகளை மேற்கொள்வதும், குற்றவாளிகளை கடுமையான தண்டனைக்கு உட்படுத்துவதுமே உடனடி தேவையாக இருக்கிறது.