ப.சுந்தரேசனார்

தமிழிசையை வளர்த்த பண்ணாராய்ச்சி வித்தகர் ப.சுந்தரேசனார்

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுத்தப்பட்ட சிறப்பு பதிவு

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் கும்பகோணத்தைச் சேர்ந்த பஞ்சநாதம் – குப்பம்மாள் தம்பதியினருக்கு மகனாக 1914 மே 28 அன்று பிறந்தவர் ப.சுந்தேரேசனார்.

குடும்ப வறுமை காரணமாக 4-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். அதன்பிறகு பள்ளிப் படிப்பைத் தொடரமுடியவில்லை.   அதன்பிறகு, பெற்றோர் இவரை நகைக் கடையில் வேலைக்கு சேர்த்துவிட்டனர்.  பள்ளிப்படிப்பை படிக்க முடியாது போனாலும்,  சுயமாக தன்  அறிவை வளர்க்கும் முயற்சியில்  இருந்தார். இசை தட்டுகளை கேட்பது மூலமாகவும்,  மேலும் ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம், பேராசிரியர் சாம்பமூர்த்தியின் இசைநூல்கள் போன்றவற்றைத் தொடர்ந்து கற்று, தனது இசையறிவையும்  கூர்மைப்படுத்தினார்.

அவர் வாழ்ந்த பகுதியில் இருந்தவர்கள் சைவ சமயம் குறித்து ஆய்வு செய்பவர்களாகவும், இசை அறிவு மிக்கவர்களாகவும் இருந்தனர். வீட்டருகே இருந்த தேவார பாடசாலையும், சைவ மடத்து துறவியர் தொடர்பும், சைவத் திருமுறைகள் மற்றும் சாஸ்திர நூல்களில்  பயிற்சி பெற உதவியது. தமிழ், தெலுங்கு, இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் கற்றரிந்தவர் இவர்.

இதன் தொடர்ச்சியாக  குடந்தை கந்தசாமி தேசிகரிடம் முறையாக இசை பயின்றார். பின்னர் வேப்பத்தூர் பாலசுப்பிரமணியத்திடமும், வேதாரண்யம் ராமச்சந்திரனிடம் 17 ஆண்டுகளுக்கு மேலாகவும் செவ்விசை பயின்றார்.

குடந்தை ப.சுந்தரேசனார்

இவர் சிலப்பதிகாரம், திருமுறைகள், சிற்றிலக்கியங்கள் போன்றவற்றில் சிறந்த இசை பயிற்சி பெற்றவர். இந்நூல்களின் பாடல்களை இவர் வழியாகக் கேட்கவேண்டும் என்று அறிஞர்கள் புகழும் வண்ணம் பேராற்றல் பெற்றவர். இவர் ஒவ்வொரு ஊராகச் சென்று, பெரியபுராணம், திருவிளையாடல் புராணம், சிலப்பதிகாரம் போன்ற நூல்களைப் பாடி விரிவுரை செய்தவர். மூவர் தேவாரத்தை முறையுறப் பாடி அதில் அமைந்து கிடக்கும் பண்ணழகையும், பண்ணியல்பையும் எடுத்துக்காட்டுவதில் வல்லவர்.

தமிழ் இலக்கியங்களில் பொதிந்துகிடந்த அரிய இசை நுட்பங்களை, குறிப்பாக சிலப்பதிகாரத்தின் இசைக் கூறுகளை, தமிழ் அறிஞர்களின் அற்புத இசைப் புலமையை எளிய தமிழில் எடுத்துரைக்கும் பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.

தமிழிசை வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய இவர் இசைத்தமிழ்ப் பயிற்சி நூல், முதல் ஐந்திசை பண்கள், முதல் ஐந்திசை நிரல், முதல் ஆறிசை நிரல் உள்ளிட்ட நூல்களையும் நித்திலம், இசைத் தமிழ் நுணுக்கம் உள்ளிட்ட கட்டுரைத் தொடர்களையும் எழுதியுள்ளார். பஞ்சமரபு என்ற இசை நூலை பதிப்பித்தார்.

பண்ணாராய்ச்சி வித்தகர் ப.சுந்தரேசனார் அவர்களைப் பற்றி புதுச்சேரியைச் சேர்ந்த மு.இளங்கோவன் அவர்கள் வெளியிட்ட ஆவணப்படத்தின் முன்னோட்டம்

யாழ் நூல் எழுதிய  விபுலானந்த அடிகள் உள்ளிட்டோருடன் நெருக்கமான நட்பைக் கொண்வர். பள்ளிப் படிப்பை முடிக்காத இவர், கல்வி நிறுவனங்கள், பொது அரங்குகள் மற்றும் மக்கள் மன்றங்களில் இசைப் பேருரைகள் நிகழ்த்தினார். தமிழகம் முழுவதும் இவரது புகழ் பரவியது. அதன்பின்னர் பண்ணாராய்ச்சித் திறன்  அறிந்தோர் இவரை பண்ணாராய்ச்சி வித்தகர்  என்றும் அழைத்தனர். 9 ஜூன் 1981 அன்று இறந்தார். இவரது நூற்றாண்டு விழாவினை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் கடைபிடித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *