பொதியவெற்பன்

போகூழோடே ஆகூழாய்க் கொரோனாவோடு மூன்றுவார உரையாடல் – வே.மு.பொதியவெற்பன்

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மீண்டு வந்த ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் அவர்களின் அனுபவப் பதிவு.

அனுமதிப் படலம்

இப்பதிவை இப்படித்தான் மருத்துவமனையிலிருந்து குணமாகி மீண்டு குவாரண்டைம் பீரியடும் முடிந்த பின்னரே முன்வைப்பதெனத் தீர்மானகரமாகவே நானிருந்தேன். ஏனெனில் கழிவிரக்கத்தைத் தவிர்க்கவே விரும்பினேன். மேலும் நான் ‘மன்றாட்டு மத’ச்சார்பாளனும் அல்லன் தானே? 

அந்தலை சிந்தலை ஆமாறு என் குடும்பத்தாரில் என் மகனைத்தவிர மாப்பிள்ளை, நான், என் இணை, மகள், மருமகள் என கொராணாவால் பாதிக்கப்பட்டோம். மனைவிக்கும், மகளுக்கும் குறைந்த அளவே பாதிப்பு என்பதால் கொடீசியாவிலும்; மாப்பிள்ளைக்கு அதிகஅளவு பாதிப்பு என்பதாலவர் ஒரு தனியார் மருத்துவமனையிலும்; என் அகவை நீரிழிவு இவற்றைக் கருதியும் நானும் என் மருமகளும் மற்றொரு தனியார் மருத்தவமனையிலும் சேர்க்கப்பட்டோம். 

மூவர்க்கும் இன்சூரன்ஸ் பாலிசி கிளைமிங் வாய்ப்பும் இருந்ததனால், என் ஓரகவைப் பேரனுக்கும் பாதிப்பு இருந்தது மாக்கொடுமை. அவனைக் கவனித்துக்கொள்ள மருமகளின் தமக்கை சோமபாரதி தான் தொடர்ந்து பார்த்துக்கொள்ள வேண்டி இருந்த மருத்துவத்தையும் இடையில் விட்டு வந்தே கவனித்துக்கொண்டார். என் மகன் பட்ட பாடு கொஞ்சநஞ்சமன்று. மூன்றுமே வெவ்வேறு திசையில். இவை யாவுமே எமக்கு வாய்த்த போகூழெனில், மகனுக்கு மட்டும் பாதிப்பு நேராததே எமக்கு வாய்த்த ஆகூழ். 

குறைந்த அளவே பாதிப்பென்பதால் முதலில் என் இணை, அப்புறம் அடுத்தடுத்து மருமகள், மகள்  என மூவரும் இல்லம் மீண்டனர். தனியார் மருத்துவமனை யாவும் மருத்துவக் கட்டணம் எப்படி வசூலிக்கும் என்பது நாமறிந்ததே. மாப்பிள்ளை இருந்த மருத்துவமனையில் மேலும் இலட்சக்கணக்கில் பணங்கட்டக் கேட்கவே இயலாதென மறுத்து மாப்பிள்ளையை ESI -இல் சேர்த்தாயிற்று.

தனியார் மருத்துவமனை அறைஎண் : 304 –  இலிருந்து…

அக்டோபர் 18 என் மகள் இல்லத்திற்கே நேரில் வந்து கோவிட் பரிசோதனை செய்ய என் மகன் ஏற்பாடு செய்தான். எனக்கு மகளுக்கு என் இணைக்கு மூவர்க்கும் சேர்த்து ரூ.11000..அக்.19-இல் மூவர்க்குமே  பாசிட்டிவ் என ரிப்போர்ட்..அவர்கள் இருவர்க்கும் குறையளவே பாதிப்பு என்பதால் 20 அன்று கொடீசியாவில் அனுமதிக்கப்பட்டார்கள். எனக்குச் சற்றே கூடுதல் பாதிப்பென்பதாலும் நீரிழிவு பாதிப்பென்பதாலும்; எனக்கு இன்சூரன்ஸ் பாலிசி கிளைமிங் வாய்ப்பு இருந்ததாலும் 19 இரவே ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன்.

உயிர்வளி (ஓடூ) 4 அளவில் ஆக்சிசன் குழாய் இணைப்பு மூக்கில் செருகிக் கொள்ளுமாறு பொறுத்தப்பட்டது. உறங்கையில் நெகிழ்ந்தகலவும் கூடுந்தானே? அதனினும் முகமூடி இணைப்பே பாதுகாப்பானது. என் அறையில் பக்கத்துப் படுக்கையில் அனுமதிக்கப்பட்ட ராஜேஸ்குமாருக்கு அத்தகு முகமூடி பொருத்தப்பட்டது. பாதிப்பளவைப் பொறுத்துப் போலுமென நான் கருதினேன். கேட்ட பிறகு ஒரு நாற்காலியும் டேபிளும் தரப்பட்டன. 

செலைன், ஊசிகள்  ஏற்றப்பட்ட வண்ணம் இருக்கும். இவற்றிற்கூடேயே நான் 20 முதல் 24 – வரையில் வேனில் அனுப்பிய ‘நான் இந்துவாகச் சாக மாட்டேன்’ (அம்பேத்கர் அறச்சீற்றம்) என்னும் சி.ந.சந்திரசேகரின் அண்ணலாற்றுப்படை நூலுக்கான என் வாசிப்பின் பிரதியை ஆறு பதிவுகளாக My Notes -இல் தட்டச்சு முடித்தேன். 

ஐந்து நாட்களில் ஆறு பதிவுகளாவும் மேலும் என் நூல்களுக்கான உயிர்முறி (உயில்), கோவையில் ஔவை நூலகத்தில் நான் வழங்கியுள்ள சிற்றிதழ்களை வாசிக்கும் வாய்ப்பு குறித்த இரு பதிவுகளென மொத்தம் முகநூலில் 8 பதிவுகள் இட்டேன். அண்ணல் என்னுள் ஆற்றுப்படுத்தினார்.

அனுமதிக்கப்பட்ட சூழலில் கொஞ்சம் கொராணா வேகம் ஏறியே இறங்கும் நிலை ஊடே காய்ச்சலும் ஓரிரு நாளில் மட்டுப்பட்டது. என் மனக்குரங்கை மனம் போனபோக்கில் திரிந்து அச்சமுறாது மடைமாற்ற இப்பணி எனக்கு கை கொடுத்தது என்பேன். 

பின் 25, 26 வாக்கில் ‘மகாத்மா, காங்கிரஸ் மௌனங்களால் இருட்டடிக்கப்படும் ‘மக்கள் தலைவர்’ பெரியவர் வஉசி’ எனும் கட்டுரையைத் தட்டச்சிட்டு முறைப்படுத்தி, Madras Radicals -க்கு அனுப்பி வைத்தேன். பெரியவர் என்னுள் ஆற்றுப்படுத்தினார்.

‘நாற்றைப் பறித்தே நட்டாற் போல் வேற்று நிலத்தும் வேர்பிடிப்பதே’ என் இயல்பே! எனவே எங்கிருக்க நேரினும்  நட்பைச் சம்பாதித்துவிடல் எனக்கியல்பே. 29 காலை என்னை நார்மல் வார்டுக்கனுப்பி அன்று மாலையே டிஸ்சார்ஜ்ஜூம் செய்தாயிற்று. உயிர்வளிக் கணக்கீட்டுப்பொறி இரண்டை என்மகன் வாங்கி வைத்துள்ளான். பின் வீடு திரும்பியபின் அப்பொறியில் ‘ஓ டூ” குறையளவு காட்டவே மகன் மீளவும் அத்தனியார் மருத்துவமனைக்கே அழைத்துச் சென்றான். அங்கு கணக்கிட்டால் அளவு சரியாகவே இருந்தது. கணக்கீட்டுப் பொறி வேறுபாட்டைக் கருதற்க என்றனர்.

தலைமை மருத்துவர் வேண்டுமானால் ஒருநாள் கவனிப்பில் வைத்துப் பார்க்கலாமே என்றார். என்னுள் ஏதோ பொறிதட்டியது. தவிர்த்து விடச்சொல்லி வீடு திரும்பிவிட்டோம். பிறகென் மகனிடம் ESI -க்கே போய்விடலாம் என்றேன். அவ்வாறே அன்றிரவே (29) அங்கென்னை அட்மிட் செய்தாயிற்று. அதுதான் சரியான திருப்புமுனை ஆயிற்று! ஊடே விடுபட்ட ஒருசேதி என் பக்கத்துப் படுக்கையிலிருந்த ராஜேஸ் குமார்தான் எனக்கு வை-பை இணைப்பளித்தார். அவர் டிஸ்-சார்ஜ் ஆனபின் மகன் மோடம் சேர்ப்பித்தான். அதனாலேயே இவ்வாறு நான் பதிவிட வாய்ப்பாயிற்று.

தனியார் மருத்துவமனைகளும் ESI யும்: அணுகுமுறை வேறுபாடுகள்

தனியார் மருத்துவ மனைகளில் அங்கு அட்மிட் ஆகிவிட்டால் மற்று எவரையும் காணவே இசைவில்லை. ஆனால் உறவினர் ஒருவர் உடன்தங்கி நோயாளியைக் கவனித்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் அட்டெண்ட் பண்ண ‘கேர் டேக்கர்’ ஏற்பாடும் இரண்டு ஷிப்ட்டாக செய்தும் கொள்ளலாம் என்பது இ.எஸ்.ஐ-யில் மட்டுமே சாத்தியம். அதற்குப் பணம் கட்டி விண்ணப்பித்துக் கொள்ளலாம். 

அங்கு தனிஅறை அல்லது இருவர்க்கு ஓரறை. இங்கோ ஒரு கூடத்திற்கு ஏழெட்டுப் படுக்கைகள். தனியார் மருத்துவமனைகள் கட்டணம் கண்டமானக்கி எகிரும். இங்கு கட்டணமே கிடையாது. உணவென்று பார்க்கையிலும் ESI தான் சிறப்பு. சிறப்பான மருத்துவமும் இ எஸ் ஐ -இல்தான் திருப்திகரம். 

நீரிழிவு நோயாளிக்கு தவிர்க்க வேண்டிய உணவெனில் நான் வெளியில் வாங்கிக் கொண்டேன். பூரி, கோதுமை ரவா உப்புமாவும் இடை இடையே கிடைத்தது. தனியார் மருத்துவமனையைப் போல் ‘ஓ டூ” 4. ட்யூப் என்றில்லாமல் இங்கு முகக்கவசமாகவே இட்டு 12 அளவில் தொடங்கி, அப்புறம் 5 அளவில் குறைத்தார்கள். பின் 5 நாள் கழித்து முடிந்த வரை முகக்கவசம் இல்லாது இருக்கச் சொன்னார்கள். 

அப்புறம் நவ.4 மாலை நார்மல் வார்டுக்கு மாற்றிவிட்டார்கள்.  அன்று இரவு முகக்கவசத்தை அகற்றிவிட்டார்கள். பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை அழைத்து மாற்று ஏற்பாடு செய்யுமாறு கூறிவிட்டனர். தொடர்ந்து நவம்பர் 9 வரை முகக்கவசமிடாமலே இருந்தேன்.

இடையில் எடுத்த கோவியட் டெஸ்ட்டில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்தாயிற்று. நவம்பர் 9 அன்றே டிஸ்-சார்ஜ் செய்தாயிற்று. கேர் டேக்கர் எல்லாரையும் திடீரென நிறுத்திவிட்டனர். எனக்கான கேர்டேக்கராக டேஷிப்ட்டில் வந்த பிரசாத்தை மகனென்றும், நைட்ஷிப்ட் பார்த்துக்கொண்ட கரணைப் பேரன் என்றும் கூறி நான் அவர்களைத் தக்கவைத்துக் கொண்டேன். இருவருமே அருமையாகக் கவனித்துக் கொண்டனர். அங்கிருந்து கிளம்பும் போதும் ஒரு வாரத்துக்கான மாத்திரைகளும் சியவனப்பிரகாஷ் லேகியமும் கொடுத்தனுப்பினர். அதை நீரிழிவு நோயாளிகள் தவிர்க்கணும்.

கோவை ESI மருத்துவமனையில்..

சற்றும் எதிர்பாரா முற்றிலும் புதிய அனுபவமாக அமைந்தது இஎஸ்ஐ அனுபவங்கள். தனிச்செல்லில் இருந்து திறந்தவெளிச் சிறைச்சாலைக்கு என்னுமாப்போலே!

கொராணா மருத்துவமனை என்பது போலல்லலாமல் ஒரு வார்டில் நோயாளிகள், கேர் டேக்கருடனோ, உறவினருடனோ இருக்க நேர்வதே புது வெளிச்சந்தானே!

காலையில் இனிப்பிடப்படாப் பால், கபசுரக்குடி நீர், மேங்கோ சூஸ், வாழைப்பழம், சத்துமாக்கஞ்சி, ரசம் இவ்வளவுமே காலை உணவுக்கும்; மதிய உணவுக்கும் இடைப்பிறவரல்களாக வாய்த்தன. சூஸ், வாழைப்பழம் இரண்டையும் மட்டும் கேர்டேக்கருக்குக் கொடுத்து விடுவேன்.

இரண்டு மரணங்கள் எங்கள் அறையிலும் பக்கத்து அறையிலும். ஊடே ஒரு பாட்டிக்குப் பிறந்தநாள் கொண்டாட்டம். பாட்டி தைரியமான பாட்டி. “சாவைப்பாத்தா பயமா இல்லியா” எனக் கேட்டால், ‘எதுக்கு அவங்கவங்க நோயப் பொறுத்தது, நமக்கு  ஓலை எப்பமோ அப்பத்தானே நமக்கு, இருக்க வரைக்கும் நிம்மதியா இருந்துட்டுப் போலாங் கண்ணு’- என எதிர்கொண்டார்.

‘சந்தியா பதிப்பகம் நடராசன் அவர்கள் கோவை அரசு மருத்துவமனை மருத்துவர் ரவிக்குமார் எண் தந்தார். அவர் ஏலவே என் சம்பந்தி இராம.சோமசுந்தரம் அவர்கள் அருகமைவாளர் (பக்கத்தில்லத்தவர் ஆக இருந்தவர்) என்பதால் வேறு தளத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த எங்க மாப்பிள்ளை சண்முகவேல் சோமசுந்தரம் அவர்களுக்கும் எனக்குமான மருத்துவ அறிக்கை, ஆலோசனை எனப் பகிர்ந்து கொள்ள வாய்த்தது. மருத்துவர் ரவிக்குமார் சந்தியா பதிப்பகத்துக்காக மாயவரம் குறித்தும், நான் கும்பகோணம் குறித்தும் உள்ளூர் வரலாறு எழுதப் பணிக்கப்பட்டுள்ளோம்.

தனியார் மருத்துவமனையில் இருந்து விடைபெற்ற போதிலும் சரி, இஎஸ்ஐ-இல் இருந்த போதிலும் சரி ‘நாற்றைப் பறித்தே நட்டாற்போல் வேற்றுநிலத்தும் வேர்பிடிக்கும்’ என் இயல்பால் அங்கங்கும் நட்பைச் சம்பாதித்து விடுவேன் இயல்பாக. ஆகவே அவர்கள் மத்தியில் பாடல்கள் பாடிக் கொண்டாட்டம் ஆக்கிக் கொண்டேன்.

கொராணா மரண அரசியலின் மரணப்பொருளாதார வலைக்கண்ணிகளான தனியார் மருத்துவ மனைகளைத் தவிர்த்து ESI போலும் அரசுமருத்துவனைகளையே தேர்க!

வாழுநம் என்னுஞ் செருக்கு!

அண்ணாவிடம் எதிர்க்கட்சித் தலைவர் வினாயகம் ”உங்கள் நாட்கள் எண்ணப்படுகின்றன” என்றபோது, அதற்கவர் அளித்த பதில்: “என் அடிவைப்புகள் அளந்து வைக்கப்படுவன”.

இதனையே மற்றொரு சந்தர்ப்பத்தில் பொருத்திப் பார்ப்போமே. தன் மரணப்படுக்கையிலும் உயிர்வளி முகக்கவசமிட்டுள்ள போதினிலும் ‘தற்காலத் தமிழகராதியை’ நிறைவுசெய்து வெளியிட்ட பின்னரே இயற்கை எய்தினார் ‘க்ரியா’ ராமகிருஷ்ணன்.

இவ்வாறே தம் மரணப்படுக்கையிலும் ‘சௌந்தர சுகனை’ நிறைவுசெய்தே விடைபெற்றார் இதழியப்போராளி ‘சுகன்’ சரவணன். தன் இணையை இழந்த தருணத்தும் அவர் இறுதி விருப்பத்தை ஈடேற்ற இதழை வெளிக்கொணர்கின்றார் அவர் இணையர் சௌந்தரவதனா.

இவை எல்லாம் மலைக்கவைக்கலாம்தான். எனில் எப்படித்தான் இவை கைகூடின?

பெரியாரிடம் இதற்கான உரியவிடை கிடைக்கும். ஆம் அவர் கூறுவார், மற்றெவரும் ஈடேற்ற இயலாப்பணி, தம்மால் மட்டுமே சாத்தியமெனத் தாமே தம் தோள்களில் இழுத்துப் போட்டுக்கொண்டதாக. வாசிக்க இடர்ப்பட்ட போதும் பூதக்கண்ணாடி ஏந்தி வாசித்தார். சிறுநீர் வெளியேற சிலிக்கான் குழாய் மூத்திரப்பையை வலியொடு சுமந்தே வலம்வந்தார்.

இந்த அறப்பிடிவாதத்தைத் தான் ‘சிகர குணங்களுக்காக வாழ்தல்’ என வலியுறுத்தி, அவ்வாறே வாழ்விலக்கியமும் ஆனார் பிரமிள்!

ந.பிச்சமூர்த்தியும் இவ்வாறே ‘தமிழர் ஒவ்வொருவரும் தமக்கென அர்ப்பணித்த வாழ்க்கையை வாழ வேண்டும்’ எனவே வலியுறுத்தினார். இதன் மறுபக்கம் இப்படியொரு, வரிப்புணர்வு வாழ்க்கை வாழ்ந்தே தீர்த்த பிச்சமூர்த்தியும், ‘அஃக்’ பரந்தாமனும் தத்தம் வாணாள் அந்திம திசையில் மனவெளியில் தொலைந்து போன மாக்கொடுமையே!

ஆனானப்பட்ட அப்பருக்கும் உண்டுதானே இந்த ‘அடையாள நெருக்கடி’? :

“கற்றிலேன் கலைகள் ஞானம் கற்றவர் தங்களோடும் 
உற்றிலேன் ஆதலாலே 
எற்றுளேன் இறைவனே 
நான் என்செய்வான் தோன்றினேனே?”

செல்லப்பாவின் வாழ்க்கையும் அறப்பிடிவாத அர்ப்பணிப்பே அன்றோ? அவர் விருதுகளை நிராகரித்தார். ஈகியர் வெகுமானத்தை (தியாகி பென்சன்)- புறந்தள்ளினார். ஏனய்யா இப்படி எனில், “என் சிலுவையை நான்தானே சுமக்க வேண்டும்?” என்றார்.

இத்தகு வரிப்புணர்வார்ந்த ‘வாழுநம் என்னுஞ் செருக்கு’டன் வாழுநர்க்கு உதவிக்கரங்கள் எங்கெங்கிருந்தோ நீளுந்தானே? ‘பெரிதே உலகம் பேணுநர் பலரே’ என்பதன் பொருளும் ஈதே தானன்றோ? 

காந்தியார் வாழ்க்கை மட்டுமா அவர் வாணாட் செய்தி? போராளிகள் வாழ்க்கை எல்லாமென்ன அதிற் பட்டடங்காவோ? தன்னைக் காவல்துறை சுற்றி வளைத்த போதினிலும் துவக்கேந்திய நிலையிலுங்கூட காவல்துறை அப்பாவி மக்களை அரணாக்கிச் சூழ்ந்துள்ளதால் அதனைப் பாவிக்காமலே மக்களுக்காகவே வாழ்ந்து மக்களுக்காகவே மரித்தானே மனிதகுமாரன் தமிழரசன் அவன் வாழ்க்கையும் மரணமும்! அவன் வழங்கிய வாணாட் சேதியில்லையா?

இன்றைக்கும் உள்ளே இன்றியமையா மருத்துவமும், வெளியேறப் பிணையலும் மறுதலிக்கப்பட்டே எம் மகத்தான போராளி நூலோர்கள் வெஞ்சிறையில் உயிர்வாதை அடைவதெல்லாம் மாக்கொடுமை அன்றோ?

இத்தகு முன்னோடிகளின் வம்சா வழியான நெஞ்சுரமே எம்மை வழிநடத்துவதாம். இதனை வாசிக்கும் உங்களிடம் நான்வலியுறுத்த விழைவதெல்லாம் இதுதான். கொராணா எனும் தீநுண்மித் தொற்று குறித்து அதன் பரவல் குறித்தும் எச்சரிக்கையாக இருங்கள். அதே போழ்தில் அதனால் பாதிப்புக்கு நீங்களோ ஆளாக நேரின் கொராணா மரணஅரசியல், மரணவணிக, மரணப்பொருளாதார வலைக்கண்ணிகளான தனியார் மருத்துவமனைகளிற் சிக்காமால் ESI போலும் அரசு மருத்துவமனைகளையே தேர்க, ஆற்றுப்படுத்துக!

எதிர்பாரா இலட்சக்கணக்கிலான மருத்துவக் கட்டணம், தொடர் அலைச்சல், மன உளைச்சல்களூடே பட்டுப் பாடூன்றி ஈடுகட்டிய என் மகன் பாக்யவினோத் குறித்து மிகவும் பெருமிதப்படுகின்றேன்.

நன்றிக்குறிப்பு:

இக்கட்டான இத்தருணத்தில் ஆத்மார்த்தமாய் துணைநின்ற

சந்தியா நடராசன்,
மருத்துவர் ரவிக்குமார்,
ரவிக்குமார் பா.ம.உ. ,
இரவி.கார்த்திகேயன்,
சோமபாரதி,
சுதீர் செந்தில்
தேன்மொழி தாஸ்

அனைவர்க்கும் நெஞ்சார்ந்த நன்றி!

– வே.மு.பொதியவெற்பன்

(பொதியவெற்பன் அவர்கள் ஆய்வாளர், கவிஞர், பதிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இலக்கியம் மற்றும் அரசியல் இரண்டிலும் ஒரே நேரத்தில் பயணித்துக் கொண்டிருப்பவர்.)

குடும்பப் படம்: நன்றி – விகடன் தடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *