உடல் உறுப்பு கொடை

உடல் உறுப்புகள் கொடை அளிப்பதில் முதலிடத்தில் தமிழ்நாடு

உடல் உறுப்புகளை தானம் செய்வதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆறாவது முறையாக தொடர்ந்து முதல் இடத்தினை தமிழ்நாடு பெற்று வருகிறது. 

நேற்று நவம்பர் 27, உடல் உறுப்பு தானத்திற்கான சர்வதேச தினத்தின் 11-ம் ஆண்டு நிகழ்வு ஒன்றிய சுகாதார அமைச்சகத்தினால் ஒருங்கிணைக்கப்பட்டது. 

தமிழ்நாட்டில் மொத்தமாக இதுவரையில் 1392 கொடையாளர்களிடமிருந்து 8245 உறுப்புகள் கொடையாகப் பெறப்பட்டு, தேவையானவர்களுக்கு பொருத்தப்பட்டிருப்பதாக தமிழ்நாடு சுகாதார அமைச்சகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • இந்த ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 107 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளும், 186 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளும் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • கொரோனா தொற்றிலிருந்து மீண்ட 6 பேருக்கு மிகவும் சவாலான அரிய நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. 
  • நாட்டிலேயே முதல் முறையாக திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒருவருக்கு கை மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டிருக்கிறது.
  • தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனைகளில் 400 பேருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • பல உறுப்புகள் மாற்றும் அறுவை சிகிச்சை (Multi Organ Transplantation) 48 பேருக்கு நடத்தப்பட்டுள்ளது.
  • பிளாஸ்மா கொடை வழங்குவதிலும் தமிழ்நாடு முன்னணியில் இருப்பதாக தமிழக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
  • 2016-ம் ஆண்டு துவங்கி அக்டோபர் 2019 வரையிலான காலகட்டத்தில் மூளைச்சாவு அடைந்த 652 பேர் கண்டறியப்பட்டு, அதில் 431 பேர் உடல் உறுப்பு கொடையாளர்களாக மாற்றப்பட்டு பெறப்பட்டுள்ளது.
  • 2019-ம் ஆண்டின் தரவுகளின்படி, மொத்தம் கொடையளிக்கப்பட்ட 200 சிறுநீரகங்களில் 178 சிறுநீரகங்கள் மற்றவர்களுக்கு பொறுத்தப்பட்டிருக்கிறது. கொடை பெறப்படுவதில் பயன்படுத்தப்படும் சிறுநீரகங்களின் சதவீதமானது 89% சதவீதமாக இருக்கிறது.

    கல்லீரல் கொடையில் பயன்பாட்டு சதவீதம் 11% சதவீதம் ஆகும். கொழுப்பு அதிகமாக இருப்பது உள்ளிட்ட பல்வேறு கோளாறுகளால் இந்த சதவீதம் குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

    இதயத்தைப் பொறுத்தவரை பெறப்பட்ட 97 இதயங்களில் 50 இதயங்கள் மற்றவர்களுக்கு பொறுத்தப்பட்டுள்ளன. பயன்பாட்டு சதவீதம் என்பது 52% சதவீதமாக இருக்கிறது. 

உடல் உறுப்புக்களை கொடையாக அளிப்பதற்கு பதிவு செய்வது தற்போது ஆன்லைனில் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், யார் வேண்டுமானாலும் தாங்களாகவே பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் ஏற்பட்ட விழிப்புணர்வு

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கான சட்டமான THE TRANSPLANTATION OF HUMAN ORGANS ACT 1994-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட போதிலும், 2008-ம் ஆண்டில் சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த ஹிதேந்திரன் என்ற இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்ட நிகழ்வுதான் தமிழ்நாட்டில் உடல் உறுப்பு கொடைகள் குறித்த மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. 

கடந்த 12 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் சுகாதாரத் துறை மற்றும் தன்னார்வலர்கள் மேற்கொண்ட விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் தமிழ்நாட்டு மக்களில் கணிசமானோரை உடல் உறுப்பு கொடையளிக்க முன்வருபவர்களாக மாற்றியுள்ளது.

கொடையாக பெறப்படும் உடல் உறுப்புகளை தேவையானவர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக வடக்கு, தெற்கு, மேற்கு என்று மூன்று மண்டலங்கள் பிரிக்கப்பட்டு உடல் உறுப்பு மாற்று சிகிச்சைகளை எளிதாக்கி மேம்படுத்தப்படும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு பொதுவான காத்திருப்புப் பட்டியல் ஒன்று மேலாண்மை செய்யப்பட்டு அதன் மூலமாக உறுப்புகள் தேவையானவர்களுக்கு அளிக்கப்படுகிறது. 

கொடையளிக்க

உடல் உறுப்புகளை கொடையளிக்க முன்வருபவர்கள் அரசின் கீழ்காணும் இணையத்தில் சென்று பதிவு செய்யலாம்.

https://transtan.tn.gov.in/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *