தமிழ்நாடு பந்த்

விவசாயிகளுக்காக தமிழ்நாட்டில் நேற்று நடந்த போராட்டங்கள்!

விவசாயிகள் அழைப்பு விடுத்த முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக மாவட்ட தலைநகரங்கள் மற்றும் தாலுகா அலுவலகங்கள், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடைபெற்றது. மொத்தம் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம் நடந்தது.

மதுரை

மதுரை மாவட்டத்தில் வணிகர்கள் மற்றும் பல்வேறு தொழிற்சங்கப் பிரமுகர்கள் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இதனால் மதுரை மாவட்டம், ஒத்தக்கடை, சமயநல்லூர், ஊமச்சிக்குளம், சோழவந்தான், உசிலம்பட்டி, திருமங்கலம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.

தஞ்சை

தஞ்சையில் இன்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வணிக வளாகங்களும் மூடப்பட்டது. சில தனியார் பஸ்களும் ஓடவில்லை. சாலைகளில் மக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது.

ஈரோடு

ஈரோடு வ.உ.சி. பெரிய மார்க்கெட், சத்தியமங்கலம் பூ மார்க்கெட், பெருந்துறை தினசரி காய்கறி மார்க்கெட்டுகளும் அடைக்கப்பட்டிருந்தன.

கோபிசெட்டிபாளையம், சென்னிமலை, பெருந்துறை, புஞ்சை புளியம்பட்டி, கவுந்தப்பாடி, நம்பியூர், ஆப்பக்கூடல், பவானி, கொடுமுடி, சத்தியமங்கலம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

சென்னையில் போராட்டம் 

மூன்று விவசாய சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்,  குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்க வேண்டும், குடியுரிமை திருத்தம் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உட்பட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்களின் சார்பில் சென்னை அண்ணா சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டக்கார்களை சென்னை காவல்துறை கைது செய்தது. 

விவசாய விரோதச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி நடைபெறும் விவசாயிகளின் பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக வடசென்னையில் சிபிஎம் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன் தலைமையில் அனைத்து கட்சி போராட்டம் நடைபெற்றது. இதில்  திமுக, சிபிஎம், சிபிஐ, விசிக, மதிமுக ஆகிய கட்சிகள் கலந்துகொண்டனர். மேலும் மாவட்ட தலைநகர்களிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின் டிவிட்டரில் 

“உழவே தலை என்கிறது வள்ளுவம். ஆனால் இங்கு தலையே நிலை குலைகிறது! உயிர் கொடுக்கும் உழவரின் உயிரையே விலை பேசும் மூன்று வேளாண் சட்டங்கள்! உழவு என்பது தொழில் மட்டுமல்ல. நம் அனைவரின் உரிமை! விவசாய மக்களுக்கு ஆதரவாக நடைபெறும் பாரத் பந்த் போராட்டம் வெல்லட்டும்! மூன்று சட்டங்களும் நொறுங்கட்டும்!” என்று பதிவிட்டு ஆதரவை தெரிவித்தார்.

கவிஞர் வைரமுத்து

ரத்தம் உறையும் குளிரிலும்
சித்தம் உறையாத 
விவசாயிகளின் போராட்டத்தைக்
கண்டங்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றன;
அதை நீளவிடக்கூடாது.
இன்று அடைக்கப்பட்ட நாட்டின் கதவுகள்
திறக்கும்போதே மத்திய அரசும் 
மனம் திறக்க வேண்டுமென்று
மக்கள் விரும்புகிறார்கள்.

போராட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர்

விவசாய மசோதாவுக்கு எதிராக விவசாய சங்கங்கள் நடத்தும் பாரத்பந்திற்கு ஆதரவாகப் புதுச்சேரியின் தெருக்களில் விவசாய சங்கங்கள் அணி வகுப்பு நடத்தியது. இதில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டார்.  

லாரிகள் ஓடவில்லை

விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இன்று ஒரு நாள் மட்டும் மாநில லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் கீழ் இயங்கும் 4.5 லட்சம் லாரிகள் இயங்காது என நேற்று அறிவிக்கப்பட்டது. 

அதன்படி இன்று தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்குச் செல்லும் லாரிகள் உள்பட மாநிலத்திற்குள் இயக்கப்படும் பெரும்பாலான லாரிகளும் காலை 6 மணி முதல் ஓடவில்லை. இந்த லாரிகள் செட்களிலும், சாலையோரங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *