வேலை வழங்கக்கோரி தூய்மை பணியாளர்களின் போராட்டம் !

கடந்த 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சியிலுள்ள சில மண்டலங்களின் துப்புரவுப் பணி வெளிநாட்டு நிறுவனமான ஸ்மித், ஹென்ரோ உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டது. பத்தாண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநகராட்சியில் துப்புரவு பணிகளுக்கான தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக அமர்த்தப்பட்டுள்ளனர்; மண்டலம் 8ல் மட்டும் 551 பேர் வேலை செய்து வந்தார்கள். இந்நிலையில் துப்புரவுப் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதன் காரனமாக இவர்கள் அனைவரும் முன்னறிவிப்பின்றி வேலையிலிருந்து நீக்கபட்டனர்.

இதனால் கடந்த எட்டு மாத காலமாக அத்தொழிலாளர்கள் வேலையின்றி வாழ்வாதாரம் பாதிக்கபட்டுள்ளனர்.

சென்னையின் பல்லாயிரம் டன் குப்பைகளை கொரோனா பெருந்தொற்று காலத்திலும், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியும் பணி செய்தவர்களை கொரோனா நிலைமை கொஞ்சம் சரியானதும் எடப்பாடி அரசு துப்புரவுப் பணியை தனியாரிடம் ஒப்படைத்து அத்தூய்மைத் பணியாளர்களது வாழ்வாதாரத்தை பறித்தது.

அன்று திமுக ஆட்சிக்கு வந்தால் இரண்டே மாதங்களில் மீண்டும் வேலை உறுதி செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் அத்தொழிலாளர்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார். அதை நம்பி வேலை கிடைத்துவிடும் என்று இத்தனை நாளும் காத்திருந்திருந்தனர்.


பலமுறை சென்னை மாநகராட்சி அலுவலகத்தின் முறையிட்டும், அமைச்சரிடம் கோரிக்கை வைத்தும் எவ்வித பலனும் இல்லாமல் போனதால் நேற்று நூற்றுக்கணக்கான தூய்மைப்பணியாளர்கள் தங்களுக்கு மீண்டும் வேலை வழங்கக்கோரி சென்னை மண்டலம் 8 செனாய் நகர் மண்டல மாநகராட்சி அலுவலக வளாகத்தில் போராடி வருகிறார்கள்.

போராட்டத்திற்கு தமிழக அரசு செவிசாய்க்காததன் காரனமாக கையறு நிலைக்குத் தள்ளப்பட்ட சூழலில், நள்ளிரவிலும் சுமார் 60 பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கு வழிகோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *