PM CARES RTI

PM CARES-க்கு மக்கள் அளித்த நிதி என்ன ஆனது?

பிரதம அமைச்சர் (கொரோனா) உதவி நிதி (PM Cares Fund) கணக்கு விபரம், இந்திய மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய அவசியமுடைய ”பொது அதிகார அமைப்பு விவகாரம்” கிடையாது என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஸ்ரீ ஹர்ஷ கந்த்குரி என்ற சட்டக் கல்லூரி மாணவரால் பிரதம அமைச்சரின் (கொரோனா) உதவி நிதி கணக்கு விபரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கே, பிரதமர் அலுவலகம் மேற்குறிய பதிலை தெரிவித்துள்ளது; மேலும் அரசின் பொது அதிகார அமைப்பின் விவகாரங்களுக்கு மட்டுமே தகவல் அறியும் உரிமைச் சட்டம் பொருந்தும், பிரதம அமைச்சரின் (கொரோனா) உதவி கணக்கிற்கு அது பொருந்தாது என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.

RTI-க்கு பிரதமர் அலுவலகம் அளித்த பதில்

கடந்த மார்ச் 28-ம் தேதி, கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்களுக்கு உதவிகள் மற்றும் நிவாரணப் பனிகளுக்கான நிதி திரட்ட ”பிரதம அமைச்சரின் (கொரோனா) உதவி நிதி கணக்கு” உருவாக்கப்பட்டது. இதற்கான தலைவராக பிரதமர் நரேந்திர மோடியும், பொறுப்பாளர்களாக நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் செயலாற்றுவர்கள் என தெரிவிக்கப்பட்டது. வழக்கமாக பேரிடர் கால நிவாரண நிதி திரட்டலுக்குப் பயன்படுத்தப்படும் ”பிரதம அமைச்சர் தேசிய நிவாரண நிதி (PMNRF)” கணக்கு இருக்கையில், தனியாக பிரதம அமைச்சர் பராமரிப்பு நிதி கணக்கு (PM CARES) உருவாக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது என அப்போதே எதிர்கட்சிகள் கேள்வியெழுப்பின.

கார்ப்பரேட் நிறுவனங்கள் பிரதம அமைச்சரின் (கொரோனா) உதவி நிதி கணக்கிற்கு வழங்கக்கூடிய நிதி அந்நிறுவனங்களின் பொதுச் சமூக பொறுப்பு நிதி  (Corporate Social Responsibility Fund) செலவிடலின் கீழ் சேர்க்கப்படும் என கார்பரேட் விவாகார துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. அதனையடுத்து பல கார்ப்பரேட் நிறுவனங்கள் கோடிக்கணக்கான ரூபாயை பிரதம அமைச்சர் நிவாரண நிதிக்கு பங்களித்திருக்கின்றன. செயல்படத் தொடங்கிய ஒரு வாரத்தில் ரூ. 6500 கோடி ரூபாய் பிரதம அமைச்சர் உதவி நிதியில் சேர்க்கப்பட்டது.

பொதுத்துறை நிறுவனங்களான எண்ணெய் இயற்கை எரிக்காற்று நிறுவனம் (ONGC), இந்திய பெட்ரோலிய நிறுவனம், பாரத் பெட்ரோலிய நிறுவனம் ஆகியவை ரூ. 1000 கோடி நிதி வழங்கின. ஒரு ஆண்டு காலத்திற்கு ஒன்றிய அரசு ஊழியர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் மாத ஊதியத்தில் ஒரு நாள் ஊதியம் இந்நிதிக் கணக்கிற்காக பிடித்தம் செய்யப்படுகிறது. இவை இல்லாமல் பொதுமக்கள் தங்கள் சேமிப்பிலிருனந்தும் கொரோனா நிவாரணத்திற்காக ஏராளமான நிதி உதவியினை அக்கணக்கில் செலுத்தியிருக்கிறார்கள். மே மாத இறுதி வரையில் 10 ஆயிரம் கோடி ரூபாய் இந்நிதி கணக்கின் கீழ் திரட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

பிரதம அமைச்சரின் (கொரோனா) உதவி நிதி செயல்படத் தொடங்கிய காலத்திலிருந்தே, அது குறித்து அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட மறுக்கிறது என எதிர்கட்சிகளும், அரசியல் செயற்பாட்டாளர்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

இந்நிலையில் தான் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பிரதமர் அலுவலகம் அளித்துள்ள பதில் பிரதம அமைச்சரின் (கொரோனா) உதவி நிதி கணக்கின் வெளிப்படையற்ற தன்மையை பட்டவர்த்தனமாக்கியிருக்கிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் சொல்வது என்ன?

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 ஆனது, ”அரசியலமைப்பு சட்டத்தின்படியோ, ஒன்றிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றும் சட்டதின்படியோ, மாநில சட்டமன்றங்களில் இயற்றப்படும் சட்டத்தின்படியோ, அரசு பிறப்பிக்கும் உத்தரவுகளின், அறிவிப்புகளின் படியோ அதன் கீழ் இயங்கும் அமைப்பு, நிறுவனம், தன்னாட்சி நிர்வாகம் ஆகியவை “பொது அதிகார அமைப்பின்” கீழ் வருமென்றும், அவை தொடர்பாக பொதுமக்களுக்கு தகவல் தெரிவிப்பது அவசியம்” எனவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. 

அப்படியிருந்தும் அரசினால் அறிவிக்கப்பட்ட “பிரதம அமைச்சரின் (கொரோனா) உதவி நிதி கணக்கின்” தகவல்கள் பொதுமக்களிடமிருந்து மறைக்கப்படுகிறது. முன்னதாக இந்நிதி கணக்கு பற்றி கருத்து தெரிவித்த மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகம் (CAG), ”தனிநபர்கள், நிறுவனங்களிலிருந்து நன்கொடை பெற்றுக் “தொண்டு நிறுவனமாக” செயல்படுகிற பிரதம அமைச்சரின் (கொரோனா) உதவி நிதி கணக்கை நாங்கள் தணிக்கை செய்யமாட்டோம்” என குறிப்பிட்டிருந்தது.

ரிலையன்ஸ் ஜியோ, PayTM நிறுவனங்கள் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தைப் பயன்படுத்தி வணிக விளம்பரங்கள் செய்தன. அதேபோல், பொது அதிகாரத்திற்குட்படாத அமைப்பாக பிரதமர் அலுவலகம் குறிப்பிடும்  “பிரதம அமைச்சரின் (கொரோனா) உதவி நிதி கணக்கின் (PM CARES)” உரிமையாளர்களான பிரதம அமைச்சர் மற்றும் அமைச்சர்கள், தங்களது  நிதி திரட்டல் நடவடிக்கைகளுக்கு இந்திய அரசின் இலச்சினையை விளம்பர அடையாளமாக பயன்படுத்துகிறார்களா என கேள்வியெழுகிறது.

தொடக்கத்தில் புலம்பெயர்ந்த தொழிளார்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏற்பாடு செய்யப்பட்ட ஷார்மிக் ரயில்களில் பயணக் கட்டனம் வசூலிக்கப்பட்டது. பிரதம அமைச்சர் (கொரோனா) உதவி நிதியில் முதல் வாரத்தில் மட்டும் 6,500 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டிருந்தும், புலம்பெயர் தொழிலாளர்கள் பயணத் துயர் துடைக்க அந்நிதியை பயன்படுத்த அரசு முன் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா நிவாரண நிதியிலும் கூட வெளிப்படையற்ற தன்மையுடன் செயல்படுகிறது நரேந்திர மோடி தலைமையிலான அரசு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *