நிலம் ஆதார்

நிலத்திற்கு தனியே புதிய ஆதார் கார்டு; மோடியின் கார்ப்பரேட்டுகளுக்கான அடுத்த திட்டம்!

ஒரு வருட காலத்திற்குள் இந்தியாவில் உள்ள அனைத்து நிலத்திற்கும் 14 இலக்க அடையாள எண்ணை வழங்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த வாரம் மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளனர். இந்த நிலத்திற்கான புதிய ஆதார் எண் நிலப் பதிவு தரவுகளோடும், வருவாய் நீதிமன்ற பதிவுகள் மற்றும் வங்கிப் பதிவுகள் ஆகியவற்றோடு இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது 10 மாநிலங்களில் தொடக்கம்

இந்த நிலங்களுக்கான யூனிக் லேண்ட் பார்சல் அடையாள எண் Unique Land Parcel Identification Number (ULPIN) வழங்கும் திட்டத்தை கடந்த வாரம் பாராளுமன்ற நிலைக் குழு மக்களைவையில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. இத்திட்டம் இந்த ஆண்டில் பத்து மாநிலங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இது 2022 மார்ச் மாதத்திற்குள் நாடு முழுவதும் தொடங்கப்படும் என்று நில வளத்துறை பாராளுமன்ற நிலைக்குழுவிடம் தெரிவித்தது.   

இந்த திட்டம் 2008-ம் ஆண்டு தொடங்கிய டிஜிட்டல் இந்தியா லேண்ட் ரெக்கார்ட்ஸ் திட்டத்தின் (DILRMP) அடுத்த கட்டமாகும். மேலும் அதன் நோக்கம் வளர்ந்தவுடன் பல மடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. DILRMP திட்டம் அடுத்த வாரம் முடிவுக்கு வர உள்ளது. ஆனால் நிலவளத் துறையின் சார்பில் அதனை விரிவுபடுத்துவதற்கும் 2023-24 வரை மேலும் நீட்டிக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்த திட்டம் கடந்த வாரத்தில் ஒரிசாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டுக்குள் இந்தியா முழுதும்

நிலங்களுக்கான ஆதார் எண் திட்டத்தினை 2020-21 நிதியாண்டில் 10 மாநிலங்களிலும், 2021-22ம் ஆண்டில் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும்  நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் நவீன நிலப்பதிவு அறை

இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு நவீன நிலப்பதிவு அறையை உருவாக்குவதற்கு, ஒரு மாவட்டத்திற்கு 50 லட்சம் செலவாகும். அதே நேரத்தில் நிலப் பதிவுகளை வருவாய் நீதிமன்ற மேலாண்மை அமைப்புடன் ஒருங்கிணைக்க 270 கோடி செலவாகும். DILRMP-ன் அடுத்த கட்டத்தில் “வங்கிகளுடன் நிலப் பதிவு தரவுத்தளத்தை இணைப்பதும்” அடங்கும் என்றும் அதில் கூறியுள்ளனர்.

கார்ப்பரேட்டுகள் நிலங்களை கையகப்படுத்த வழிவகுக்கும்

மேலோட்டமாக பார்க்கிறபோது ஒவ்வொருவரது நிலத்தையும் தனித்து பிரித்துப் பதிவு செய்வது மக்களுக்கு நல்லது தான் என்பதுபோல தெரியும். ஆனால் இது பெருநிறுவனங்கள் விவசாயிகளிடம் இருந்து நிலங்களை  எடுப்பதற்கு உள்ள சிக்கல்களை குறைக்கிறது. கார்ப்பரேட்டுகள் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான வழியினை இத்திட்டம் எளிமைப்படுத்துகிறது. உலகவங்கி மற்றும் உலக வர்த்தகக் கழகத்தின் பரிந்துரைகள் அடிப்படையில்தான் இச்சட்டம் கொண்டு வரப்படுகிறது. இச்சட்டம் கொண்டுவரப்படுவதற்கு முன் ஒவ்வொரு கட்டமாக படிப்படியாக முன்வைக்கப்பட்ட நடவடிக்கைகளை கவனிக்கும் போது, இது கார்ப்பரேட்டுகளுக்கான திட்டம் என்பதை புரிந்துகொள்ள முடியும்.

நிலச் சீர்திருத்தம் குறித்து உலக வங்கியின் பரிந்துரை

இந்தியாவில் நிலச் சீர்திருத்தம் குறித்து 2007-ம் ஆண்டு உலக வங்கி வெளியிட்ட ஆவணமானது, இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பின் செய்த நிலச் சீர்திருத்தங்கள் எதுவும் இப்போது எந்த பயனும் தருவதில்லை என்று கூறியது. அதற்குப் பதிலாக என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று உலக வங்கி ஒரு பட்டியலையும் கொடுத்தது: 

“பத்திரங்களைக் கொண்டும், கணினிமயமாக்கலைக் கொண்டும் நாட்டில் உள்ள எல்லா நிலங்களையும் ஒருங்கிணைத்து கணக்கிற்குள் கொண்டுவர வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலத்தின் நிலத்தை முழுவதுமாக கணக்கெடுக்க வேண்டும். நில அளவீட்டு நடவடிக்கைகளில் தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்த வேண்டும். அரசாங்கம் அதை ஒழுங்கமைக்கும் வேலையை மட்டும் செய்தால் போதும்.”

”இறுதியாக நிலத்தை குத்தகைக்கு விடுவதை சட்டமாக்குதல், நிலத்தின் மீதான வாடகைத் தொகைக்கு இருக்கும் வரம்புகளை நீக்குதல், நிலம் கைமாற்றுவதில் இருக்கும் கட்டுப்பாடுகளை நீக்குதல், அரசாங்கத் தலையீடு இல்லாமல் விவசாய நிலத்தை முதலீட்டாளர்கள் பெறுவதற்கு இடையூறாக இருக்கும் கட்டுப்பாடுகளைக் களைதல் ஆகிய நடவடிக்கைகள் மூலம் “நிலச் சந்தையில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்” என்றும் கூறியது.

கொரோனா ஊரடங்கில் மோடி ஆற்றிய உரை  

கொரோனா காலத்தில் அரசின் திட்டங்களை முன்வைத்து பிரதமர் நரேந்திர மோடி மே 12 அன்று ஆற்றிய உரையில்: “தற்சார்பு இந்தியாவை உறுதி செய்யும் பொருட்டு நிலம் (Land), தொழில் (Labor), பண ஓட்டம் (Liquidity), சட்டம்(Law) ஆகியவை இந்த திட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன” என்று கூறினார். எந்த நிலத்தைப் பற்றி மோடி இதில் பேசினார், எந்த வகையான சீர்திருத்தம் குறித்து பேசினார் என்பதை அதன் தொடர்சியாக இந்த  துணைக்கண்டத்தில் கொண்டுவரப்பட்ட பல்வேறு  நிலம் தொடர்பான சட்டங்களைக் கூர்ந்து  கவனித்தால் தெரியும்.

கர்நாடக அரசு கொண்டுவந்துள்ள திருத்தம்

கர்நாடக அரசாங்கம் தொழில் துறைக்கு தேவையான நிலம் கையகப்படுத்தல் சட்டத்தில் திருத்தத்தை 2020 டிசம்பர் மாதம் கொண்டுவந்துள்ளது. 

விவசாயிகள் தங்கள் நிலத்தை விற்க வற்புறுத்தப்படுவதையும், அதில் ஏமாறுவதையும் தடுக்கும் பொருட்டு, விவசாயிகளிடம் இருந்து தனியார் நிறுவனங்கள் நேரடியாக நிலத்தை வாங்க முடியாது என்ற சட்டம் கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்தது.

சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் என்னவென்றால், வருடத்திற்கு 25 லட்சத்திற்குக் கீழ் சம்பாதிப்பவர்கள் மட்டுமே விவசாய நிலத்தை வாங்க முடியும் என்ற கட்டுப்பாட்டையும், விவசாயத்தை தங்கள் வாழ்வாதாரமாக கொண்டவர்கள் மட்டுமே இன்னொரு விவசாய நிலத்தை வாங்க முடியும் என்ற கட்டுப்பாட்டையும் நீக்கியுள்ளன. 

இந்த திருத்தங்களின் படி, நிலத்தை இப்போது விவசாயிகளிடம் இருந்து தொழில் நிறுவனங்கள் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம். பிற மாநிலங்களும் இதைக் கடைப்பிடிக்கத் துவங்கும்.

டிசம்பர் 2020-ல் அந்த சட்டம் திருத்தப்பட்டது. பெரும் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் இதை வரவேற்றனர்.

நிலத்திற்கான ஆதார் என்பதும், அதனை அனைத்து வகையான அரசு ஆவணங்களிலும் பதிவது என்பதும், இந்தியாவில் நிலச் சந்தையை உருவாக்குவதற்கும், கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள் விவசாயிகளிடமிருந்து எளிதாக நிலங்களைக் கைப்பற்றுவதற்குமான ஒரு வடிவமே ஆகும்.

உதவிய புத்தகம்: இந்தியாவின் உணவுச் சங்கிலியை அறுக்கும் விவசாய சட்டங்கள்;

மெட்ராஸ் ரிவியூ மக்கள் பதிப்பகம்; விலை ரூ.60

இந்த நூலைப் பெற தொடர்பு கொள்ளவும்: 7550090517

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *