தமிழர்களின் வரலாற்றை தெரிந்துக்கொள்ள பல பண்பாட்டு கூறுகளின் சான்றுகள் நமக்கு துணைபுரிகின்றன. அந்த வகையில் தமிழின் தொல் இலக்கியங்களான சங்க இலக்கியம் காட்டும் தமிழரின் வாழ்வியலில் விடுபட்ட இடங்களை தொல்லியல் அகழாய்வுகளின் மூலம் கிடைக்கும் சான்றுகள் இட்டு நிரப்புகின்றன.
தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் கீழடி, கொந்தகை, அகரம், கங்கை கொண்ட சோழபுரம், கொற்கை, மயிலாடும்பாறை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மணலூர் ஆகிய இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மயிலாடும்பாறை அகழாய்வு
அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டம் தொகரப்பள்ளி அருகிலுள்ள மயிலாடும்பாறை என்ற இடத்தை 2003ஆம் ஆண்டு,தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சார்பில் பேராசிரியர் கா. ராஜன் ஒரு அகழாய்வை மேற்கொண்டார். அந்த அகழாய்வில் நம்பிக்கை தரக்கூடிய தரவுகள் கிடைத்ததையடுத்து, தமிழ்நாடு தொல்லியல் துறை அங்கு புதிதாக அகழாய்வுகளை மேற்கொள்ள முடிவுசெய்தது.
2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அங்கு அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.அந்த ஆய்வுகள் ஈமச்சின்னங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் வாழ்விடப் பகுதியிலும் நடந்தன.இந்த அகழாய்வில் கல்திட்டை பகுதியில் உடைந்த நிலையில் 70 செ.மீ. நீளமுள்ள இரும்பு வாளும் நான்கு பானைகளும் கண்டெடுக்கப்பட்டன. அதே பகுதியில் உள்ள கல்திட்டையில் மேலும் மூன்று கால்களுடான மண் குடுவைகள், உடைந்த நிலையில் உள்ள மண்குவளை, இரும்புக் கத்திகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.
வாழ்விடப் பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வில் 104 செ.மீ. ஆழத்திலும் 130 செ.மீ. ஆழத்திலும் பல இரும்புப் பொருட்கள் கிடைத்தன. இந்த இரண்டு அடுக்குகளிலும் இருந்து பல கரிமப் பொருட்களும் கிடைத்தன. இதிலிருந்து இரண்டு கரிம மாதிரிகள் அமெரிக்காவிலுள்ள ப்ளோரிடா மாநிலத்தின் பீட்டா பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு AMS (Accelerator Mass Spectrometry) என்ற முறையில் காலக் கணக்கீடு செய்யப்பட்டு,அதன் முடிவுகள் தற்போது பெறப்பட்டுள்ளன.
காலத்தால் பழமையானது.
AMS முடிவின் படி,ஒரு கரிமப் பொருளின் சராசரி மைய அளவீட்டுக் காலம் கி.மு.1615 என்றும் மற்றொரு கரிமப் பொருளின் சராசரி மைய அளவீட்டுக் காலம் கி.மு.2172 என்றும் தெரியவந்துள்ளது.
இதன்மூலம்,தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு 4200 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்து வந்தது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக மாநில தொல்லியல் துறை தெரிவிக்கிறது.
மேலும் மயிலாடும்பாறையின் ஆய்வு முடிவுகள் இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் நடந்த நடக்கிற இரும்பு கால பண்பாட்டின் காலத்தை கண்டறிவதற்கான ஆய்வில் இதுவரை 28 இடங்களின் முடிவுகள் கிடைத்துள்ளன.அதில் மயிலாடும்பாறையில் கிடைத்த சான்றே காலத்தால் முந்தியது. அதாவது பொ.ஆ.மு2172 வரை பழமையானது என தெரியவந்துள்ளது.இந்த கால அளவுகளில் இருந்து நம்மால் இரண்டு விடயங்களை தொடர்புப்படுத்தி பார்க்க இயலும்.
ஒன்று பொ.ஆ.மு.2172 என்பது இந்தியாவின் வடமேற்கு பகுதியில் நிலவிய சிந்துவெளி நாகரிகத்தின் உச்ச காலம் அதாவது முதிர்வுநிலை என்று சொல்லக்கூடிய பொ.ஆ.மு 2600-பொ.ஆ.மு 1900 க்குள் வருகிறது. முதிர்வு நிலை என்று சொல்லக்கூடிய சிந்துவெளி காலத்தில் அந்நாகரிக மக்கள் ஹரப்பா, மொகஞ்சதாரோ, லோத்தல், காலிபங்கன், பனவாலி, ராக்கிஹர்க்கி பகுதிகளில் வாழ்ந்துள்ளனர். இதுநாள் வரை சிந்து பகுதியில் செய்த அகழாய்வு தரவுகளின்படி அம்மக்கள் அறிந்திராத உலோகமாக இரும்பு சொல்லப்படுகிறது.ஆனால் அதேகாலக்கட்டத்தில் தெற்கில் (தமிழகத்தில் )வாழ்ந்த மக்களிடம் இரும்பின் பயன்பாடு இருந்துள்ளது.
இரும்பின் பயன்பாடும் நாகரிக வளர்ச்சியும்
ஒரு சமூகத்திற்க்கு இரும்பின் பயன்பாடு மற்றும் இரும்பை உருக்கி பயன்படுத்தும் தொழில்நுட்பம் தெரிந்திருப்பின் அச்சமூக மக்கள் நாகரிகத்தின் அடுத்த படிநிலைக்கு நகர்ந்திருப்பார்கள் என்பது வரலாற்று உண்மை. ஏனென்றால் இரும்பின் பயன்பாட்டை கொண்டு நிலத்தை எளிதில் வேளாண்மைக்கு உரியதாக்க இயலும். அதிலிருந்து ஒரு வேளாண் சமூகம் உருவாகி உபரி உற்பத்தி,உபரி வணிகம்,செல்வம்,இனக்குழு தலைமை,அரசு என உருவாகத் துவங்கும். எனவேதான் இரும்பின் பயன்பாட்டின் துவக்கக் காலத்தை கண்டறிவது முக்கியமாகிறது.
இங்கு ஒன்றை நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.சிந்துவெளி நாகரிகம் உலகத்தின் மிக முக்கியமான நகர நாகரிகம். அம்மக்களின் வளமான வாழ்க்கைமுறை,கடற்வணிகம்,வணிகம், செல்வம் பற்றியான தரவுகள் சிந்துவெளி நகர நாகரிகம் பரவியிருந்த இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் அறியமுடிகிறது.
அம்மக்கள் இரும்பை அறிந்திருக்கவில்லை என்பது அவர்களின் செழிப்பான திட்டமிட்ட நகர வாழ்க்கை கட்டுமானத்திற்கு முரணாக உள்ளது.
இங்கே பொ.ஆ.1924-ல் சிந்துவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு வரலாற்றின் போக்கு மாறுகிறது. அதுவரை வேத நாகரிகமே முதல் நாகரீகம் என்று சொல்லப்பட்டு வந்த விடயம் முற்றிலும் மாறி போனது.மேலும் ஆதிச்சநல்லூர்,அரிக்கமேடு,கீழடி, கொடுமணல் போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு முடிவுகளின் மூலம் கிடைத்த தரவுகள் தமிழகத்தின் வரலாற்றுக் காலத்தின் காலஅளவை பின்னோக்கி நகர்த்தியுள்ளது. அந்தவகையில் இதுநாள் வரையில் நாம் படித்த வரலாற்றை இப்பொழுது கிடைக்கும் அகழாய்வு முடிவுகள் மாற்றி எழுதிக்கொண்டிருக்கின்றன.
அதன்படி மயிலாடும்பாறையின் ஆய்வுமுடிவுகள் நமக்குள் சில கேள்விகளையும் எழுப்புகிறது.
சிந்துவெளி நகர மக்கள் மயிலாடும்பாறையில் வாழ்ந்த மக்களோடு வணிக உறவை ஏன் கொண்டிருக்கக் கூடாது..? சிந்துவெளியின் செழிப்பான கடற்வணிகம் இரும்பின் பயன்பாடு இன்றி எப்படி சாத்தியமாயிருக்கும்..? அதாவது சிந்துவெளியில் சிறந்த துறைமுக நகரமான லோத்தலில் கப்பல் கட்டுமானங்களும் நடந்திருக்கின்றன.அப்படி கப்பல் கட்டுமானங்கள் இரும்பு இன்றி எப்படி நடந்திருக்கும்..? உதாரணத்திற்கு கப்பலை நிறுத்துவதற்கு பயன்படும் நங்கூரம் எப்படி சாத்தியமாயிருக்கும்..? பலகோணங்களில் யோசித்தால் வளமான வாழ்க்கை சிந்துவெளி மக்கள் வாழ்ந்து இருப்பார்கள் என்றால் அங்கே இரும்பும் இருந்திருக்க வேண்டும் என்பது இயல்பான புரிதலே..!
மேலும் தஞ்சாவூர் மாவட்டம் மயிலாடுதுறையில் சிந்துவெளி முத்திரைப் பதித்த கற்கோடாரி ஒன்று கிடைக்கப் பெற்றதை சிந்துவெளி ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் பதிவு செய்திருப்பார்.சிந்துவெளி முத்திரை கோடாரி தமிழகத்திற்கு எப்படி வந்தது என்ற கேள்விக்கான விடையாக ஏன் இந்த வணிகம் இருக்கக்கூடாது..?
மேலும் கீழடியில் எட்டாம் கட்ட ஆய்வில் கிடைத்த சிந்துவெளி முத்திரை எழுத்துகளை ஒட்டிய பானைஓட்டு குறியீடுகளும், சிந்துவெளி நாகரிக பகுதிக்கும் தமிழகத்துக்குமான கால மற்றும் இடத் தொலைவுகளை குறைத்திருக்கிறது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இந்தக் கோணத்தில் பார்க்கும் பொழுது சிந்துவெளியில் இரும்பின் பயன்பாடு குறித்த ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்பது தெளிவாகிறது.
தமிழ் நாட்டில் இரும்பு பயன்பாட்டின் காலம்
இரண்டாவதாக, தமிழ்நாட்டின் இரும்பின் பயன்பாடு இதற்கு முன்பு பெருங்கற்காலம் என்று சொல்லக்கூடிய பொ.ஆ.மு.1300-பொ.ஆ.மு.500 வரை என ஆதிச்சநல்லூர் அகழாய்வு சான்றுகள் மூலம் நிரூபிக்கப்பட்டிருந்தது.ஆனால் மயிலாடும்பாறை ஆய்வுமுடிவுகள் இரும்பின் பயன்பாட்டு காலத்தை பொ.ஆ.மு.2172 வரை கொண்டு சென்றுள்ளது.இதிலிருந்து தமிழகத்தின் புதிய கற்காலத்திலேயே இரும்பின் பயன்பாடு இருந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.மேலும் தமிழகத்தில் கருப்பு சிவப்பு மட்பாண்டங்கள் இரும்பு காலத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட்டன என்று முன்பு கருதப்பட்டது ல்.ஆனால் தற்போது அவை புதிய கற்காலத்தின் பிற்பகுதியில் பயன்பாட்டிற்கு வந்திருக்கலாம் என தெரிகிறது.
மயிலாடும்பாறையில் தற்போது இக்காலக்கணிப்பு செய்யப்பட்ட மண்ணடுக்குக் கீழாக மேலும் 25 சென்டி மீட்டர் அளவுக்கு பண்பாட்டு எச்சங்கள் காணப்படுவதாக தொல்லியல் ஆய்வில் ஈடுபட்டவர்கள் கூறுகின்றன. அவைகளும் அகழாய்வு செய்யப்பட்டு, கிடைக்கும் சான்றுகளை காலக்கணக்கீடு செய்தால் இந்தியாவின் வடமேற்கில் உள்ள சிந்துவெளிக்கும் தெற்கிலுள்ள தமிழகத்திற்குமான வரலாற்று நெடும்பாதை தெளிவுபெரும் என நம்பலாம்.
-எரிசினக் கொற்றவை