சைமன் காசிச்செட்டி

தமிழ்ப் புலவர்களின் வரலாற்றைக் கூறும் முதல் நூலை எழுதிய சைமன் காசிச்செட்டி

சைமன் காசிச்செட்டி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Radicals

19-ம் நூற்றாண்டில் அரசியல், தமிழ், இலக்கியம் ஆகியவற்றில் பெரும் புகழ்பெற்ற தமிழறிஞர்களில் ஒருவர் சைமன் காசிச்செட்டி.

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து இலங்கை சென்ற வணிக குடும்பமொன்றில் 1807-ம் ஆண்டில் மார்ச் மாதம் 21-ம் நாள் புத்தளம் அருகில் கற்பிட்டியில் கவிரியேல் காசிச்செட்டியின் மகனாக பிறந்தார். தனது இளம் வயதிலேயே தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்களம் கற்று புலமை பெற்றார். இவை தவிர சமஸ்கிருதம், போத்துக்கீசிய மொழி, டச்சு மொழி, லத்தீன், கிரேக்கம், அரபு மொழி ஆகிய மொழிகளும் அறிந்திருந்தார். 

பதினேழாவது வயதில் 1824-ம் ஆண்டு புத்தளம் நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக பணிபுரியத் தொடங்கினார். 1828-ம் ஆண்டு முதலாகப் புத்தளம், சிலாபம் ஆகிய பகுதிகளுக்கான மணியக்காரராக (Cheif Headman) உயர்வு பெற்றார்.

1838-ல் சைமன் காசிச்செட்டி தேசாதிபதியால் இலங்கை சட்டசபை உறுப்பினராக நியமனம் பெற்றார். 1845-ம் ஆண்டுவரை அங்கத்தினராகத் திகழ்ந்தார். பின்பு 1848-ம் ஆண்டு முதல் தற்காலிக நீதிபதியாகவும், 1852-ம் ஆண்டு முதல் நிரந்தர நீதிபதியாகவும் விளங்கினார். இலங்கை நிர்வாகச் சேவைக்கு மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டதிலும் இவருக்கு முன் சிங்களவர், தமிழர் என யாருமே இந்த பொறுப்புகளை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தனது  அரசுப் பணிகளுக்கு இடையில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு மிகுந்த தொண்டாற்றினார். தமிழில் கலந்துள்ள பிறமொழி சொற்கள் பற்றி எழுதியதோடு, தமிழ் – வடமொழி அகராதி, ஆங்கில – தமிழ் அகராதி, தமிழ்த் தாவரவியல் அகராதி என்னும் நூல்களைத் தயாரித்தார். 

யாழ்ப்பாணத்தின் வரலாறு, பரதவர்குல வரலாறு, தமிழ் நூல்களின் பட்டியல்,, தமிழர் சடங்கு முறைகள் என்பனவும் இவர் எழுதியவற்றுள்  முக்கியமானவை

இவர் எழுதிய நூல்களுள் மற்றொரு முக்கியமான நூல், ‘Tamil Plutarch’ எனும் பெயரில் இவர் எழுதிய 202 தமிழ்ப் புலவர்களின் வரலாறு கூறும் நூலாகும். தமிழ்ப் புலவர்களின் வரலாறு கூற எழுந்த முதல் நூல் இதுவே என்று கூறப்படுகின்றது. இவருடைய ஏனைய நூல்களைப் போலவே இதையும் அவர் ஆங்கிலத்திலேயே எழுதியுள்ளார். இதில் 189 தமிழ்நாட்டுப் புலவர்கள் பற்றியும், 13 இலங்கைப் புலவர்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

Tamil Plutarch புத்தகம்

இவரது ஆய்வு குறித்து பேராசிரியர் தொ.பரமசிவன் தனது விடுபூக்கள் புத்தகத்தில்,

”தமிழ் ஆய்வுகளில் இனவரைவியல் பண்பாட்டு மானுடவியல் முயற்சிகள் இப்பொழுதுதான் அருந்தி வளர்கின்றன. இத்துறையின் வளர்ச்சிக்கு 143 ஆண்டுகளுக்கு முன் வித்திட்ட முன்னோடி என்ற பெயரை சைமன் காசிச்செட்டி பெற்றுக் கொள்கின்றார்” என்று தெரிவிக்கிறார்.

சைமன் காசிச்செட்டி 1860-ம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ம் தேதி ஐம்பத்து மூன்றாவது வயதில் காலமானார். அவரது நினைவு தினம் இன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *