சதாசிவ பண்டாரத்தார்

கல்வெட்டு ஆய்வுகளிலிருந்து வரலாற்றை எழுதலாம் என அறிமுகப்படுத்திய சதாசிவ பண்டாரத்தார்

சதாசிவ பண்டாரத்தார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு

சதாசிவ பண்டாரத்தார் கும்பகோணம் அருகே திருப்புறம்பியத்தில் வைத்தியலிங்க பண்டாரத்தாருக்கும், மீனாட்சியம்மையாருக்கும் மகனாக ஆகஸ்ட் 15, 1882 அன்று பிறந்தார்.

பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், வலம்புரி பாலசுப்பிரமணியப் பிள்ளை ஆகியோரிடம் தமிழ் இலக்கியமும் இலக்கணமும் படித்த சதாசிவம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியை துவங்கியர். பள்ளியில் தமிழாசிரியர், கல்லுரியில் விரிவுரையாளர், துறைத் தலைவர் மற்றும் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டார்.  

‘சோழன் கரிகாலன்’ என்னும் கட்டுரையே இவரது முதல் கட்டுரையாகும். இது 1914-ம் ஆண்டில் செந்தமிழ் இதழில் வெளியானது. 

1930-ம் ஆண்டில் முதல் குலோத்துங்க சோழன் என்ற நூல் வெளிவந்தது. தமிழ் ஆய்வு தளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த நூலை கல்வெட்டாய்வாளர் வி.ரெங்காச்சாரியார், உ.வே.சா, திரு.வி.க போன்ற அறிஞர்களாலும் செந்தமிழ், நவசக்தி போன்ற இதழ்களாலும் பாராட்டப்பட்டது.

அதன் பின் 1940-ம் ஆண்டில் பாண்டியர் வரலாற்று நூலை எழுதி வெளியிட்டார். 

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்ததும் பல்கலைக்கழக நிர்வாகம் அவருக்கு பிற்காலச் சோழர் வரலாற்றை எழுதுவதற்கு அனுமதி வழங்கியது. அவர் பல்கலைக்கழக நூலகத்தில் உள்ள கல்வெட்டாய்வு நூல்களைப் பயன்படுத்தி பிற்காலச் சோழர் சரித்திரத்தினை இரண்டு பாகங்களாக எழுதினார். முதல் பாகம் 1949-ம் ஆண்டிலும், இரண்டாம் பாகம் 1951-ஆம் ஆண்டிலும் பல்கலைக்கழக வெளியீடுகளாக வெளிவந்தன.

இதனைத் தொடர்ந்து சோழர் சரித்திரத்தின் மூன்றாம் பாகம், தமிழ் இலக்கிய வரலாறு (கி.பி.250-600), தமிழ் இலக்கிய வரலாறு (13,14,15-ஆம் நூற்றாண்டுகள்) ஆகிய நூல்கள் 1955-ம் ஆண்டு பல்கலைக்கழக வெளியீடுகளாக வெளிவந்தன. 

1953-ம் ஆண்டு பல்கலைக்கழகப் பணியில் இருந்து ஒய்வு பெற்றபோது இவரது ஆய்வறிவை தமிழ்ச் சமூகம் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று பல்கலைக்கழகம் மீண்டும் அவரை 1955-ம் ஆண்டு மீண்டும் பணியில் அமர்த்தியது. மீண்டும் பணியில் சேர்ந்தபொழுது சோழர் சரித்திரத்தின் மூன்றாம் பாகம் அவரால் எழுதப்பெற்று 1961-ம் ஆண்டில் பல்கலைக்கழக வெளியீடாக வெளிவந்தது. இவரது படைப்புகளை அடிப்படையாக வைத்தே கல்கி, சாண்டில்யன் போன்றவர்கள் வரலாற்றுப் புதினங்கள் எழுதினர். 

வரலாற்று அறிஞரான பண்டாரத்தார் நீதிக்கட்சியின் செயல்பாடுகளுடன் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டார். அக்கட்சி நடத்திய ஒவ்வொரு மாநாட்டிலும் தவறாமல் கலந்து கொண்டார். 

அறிஞரின் உடையார்குடி கல்வெட்டு ஆய்வு குறித்து அறிந்த தந்தை பெரியார் சிதம்பரம் வந்தபோது இவரை அழைத்து பாராட்டினார். இவரை மேலும் ஆய்வுகள் செய்யுமாறு ஊக்கப்படுத்தினார்.

தமிழ் வளரச்சிக் கழகம் வெளியிட்ட தமிழ் கலைக் களஞ்சியப் பதிப்பாசிரியர் குழுவிலும், தமிழ்ப் பொழில் இதழாசிரியர் குழுவிலும் உறுப்பினராக இருந்து சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.

இவருடைய ஆய்வுத் திறமையைக் கண்ட மதுரை திருவள்ளுவர் கழகம் 1956-ஆம் ஆண்டு மாரச் 29-ஆம் நாள், ஆராய்ச்சிப் பேரறிஞர் என்ற பட்டத்தை இவருக்கு வழங்கி சிறப்பித்தது.

1960-ம் ஆண்டு ஜனவரி இரண்டாம் நாள் உடல்நலக் குறைவின் காரணமாக இவ்வுலக வாழ்வை நீத்தார்.  

‘‘கல்வெட்டு ஆராய்ச்சி அதன் முதல்வரை இழந்துவிட்டது. ஆராய்ச்சி அறிஞர் தங்கள் அண்ணாவை இழந்து விட்டனர். தமிழ் ஆராய்ச்சி என்னும் தாய் தம் செல்வ மகனை இழந்துவிட்டாள். உலகம் எதைக் கேட்டாலும் சொல்லவல்ல பேரறிஞரை இழந்துவிட்டது’’ என்ற இரங்கல் செய்தியை மா.ராசமாணிக்கனார் வெளியிட்டார் 

கி.ஆ.பெ.விசுவநாதம், கரு.முத்துத் தியாகராயர், தந்தை பெரியார், மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார் உள்ளிட்டோர் இரங்கல் செய்தி விடுத்தனர். இலக்கிய சான்றுகளில் இருந்து எழுதப்பட்ட வரலாறுகளோடு, கல்வெட்டு ஆய்வுகள் வழியாகவும் வரலாற்றை எழுதமுடியும் என்று தமிழ் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் சதாசிவ பண்டாரத்தார் ஆவர்.

One Reply to “கல்வெட்டு ஆய்வுகளிலிருந்து வரலாற்றை எழுதலாம் என அறிமுகப்படுத்திய சதாசிவ பண்டாரத்தார்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *