ஆற்காடு இராமசாமி முதலியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Radicals
இவர் நீதிக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவர். இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் இந்திய அரசாங்கத்தில் நிர்வாகம், ஆட்சி சார்ந்த பல பதவிகளை வகித்தவர்.
இராமசாமி முதலியார் 1887 அக்டோபர் 14 அன்று கர்னூலில், குப்புசாமி – சிதம்மா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இராமசாமி மற்றும் ஆற்காடு லட்சுமணசாமி ஆகிய இருவரும் இரட்டையர்கள் ஆவர்.
இவர் கர்னூலிலுள்ள நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் படித்து அதன்பின் சென்னை கிறித்துவக் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டமும் பயின்றார். சட்டப்படிப்பு முடித்தபின், அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு வழக்குரைஞராகப் பணியாற்றினார்.
இராமசாமி முதலியார், நீதிக்கட்சியினை ஆரம்பித்த தலைவர்களில் ஒருவர் அவரை நீதிக்கட்சியின் மூளை என்று கூறுவார்கள். நீதிக்கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்தார். சூலை 1918-ல் இங்கிலாந்து சென்று நீதிக்கட்சி சார்பில் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி அதற்கான பிரித்தானிய நாடாளுமன்றச் சீர்திருத்தச் செயற்குழு முன் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த குழுவில் இராமசாமி முக்கியப் பங்காற்றினார்.
இந்தியாவில் வெவ்வேறு பகுதிகளிலும் உள்ள பார்ப்பனர் அல்லாதோரை ஒன்றிணைக்கவும் அவர்களையும் உள்ளடக்கி மாநாடுகளை நடத்தவும் முயற்சிகள் மேற்கொண்டார்.
இராமசாமி முதலியாருக்கு ஷாகு மகாராஜாவுடனும், மகாராஷ்டிர பார்ப்பனர் அல்லாதார் கூட்டமைப்பு தலைவர்களோடும், மற்ற வட இந்திய பார்ப்பனர் அல்லாதோர் தலைவர்களோடும் நட்புமுறையிலான நல்ல உறவு இருந்தது. ராமசாமி முதலியார் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலும் உள்ள பார்ப்பனர் அல்லாதோர் அமைப்புகளின் தலைவர்களை ஒருங்கிணைப்பதிலும் பெரும் முயற்சிகளை எடுத்தார்.
1925-ல் சர் பி.டி.தியாகராயரின் மறைவுக்குப்பின் ஷாகு மஹாராஜின் சத்ய ஷோதக் சமாஜையும், நீதிக்கட்சியையும் இணைக்கும் பாலமாக இருந்தவர் இவர் ஒருவர் மட்டுமே. நீதிக்கட்சியில் ஜஸ்டிஸ் பத்திரிக்கை ஆசிரியராகவும் இயங்கினார்.
1920-ல் சென்னை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1920–1926, 1931–1934 காலகட்டங்களில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
இவர் 1928 முதல் 1930 வரை சென்னை நகர மேயராகப் பணிபுரிந்தார். 1935-ல் அரசின் வரித்துறையில் நியமிக்கப்பட்டதால் ஜஸ்டிஸ் செய்தித்தாளின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகினார்.
அவர் மேயராக இருந்தபோதுதான் ரயில் வண்டிகளில் பயணிகள் அமரும் இடங்களில் ’பிராமணர்ளுக்கு மட்டும்’ என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததையும், அவர்களுக்கு இடம் தனித்து ஒதுக்கப்பட்டிருந்ததையும் ஒழித்து அனைத்து பயணிகளையும் சமன் செய்தார்.
திருவாங்கூர் கேரள பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், மைசூர் திவான் ஆகவும் பணியாற்றினார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இவருக்கு “டாக்டர் ஆஃப் சிவில் லா” (Doctor or Civil Law) எனும் பட்டத்தை 1945-ம் ஆண்டு வழங்கியது.
1945-ல் ஏப்ரல் 25 முதல் சூன் 26 வரை சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அவையின் மாநாட்டில் இந்தியப் பிரதிநிதியாக ஆற்காட்டார் கலந்து கொண்டார். அங்கு பொருளாதார, சமுதாயப் பிரச்சினைகளைப் பற்றி விவாதித்த குழுக் கூட்டதிற்கு தலைமை தாங்கினார்.
சனவரி 23, 1946 அன்று சர்ச் ஹவுஸ், இலண்டனில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொருளாதார, சமூக மன்றக் கூட்டத்தில் மன்றத்தின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆற்காட்டார் தலைமையில் பிப்ரவரி 1946-ல் நடந்த மன்றக் கூட்டத்தில் பன்னாட்டு சுகாதார மாநாடு ஒன்று நடத்தப்படவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி சூன் 19, 1946-ல் பன்னாட்டு சுகாதார மாநாடு நடந்தது. அதனை ஆற்காட்டார் தொடங்கி வைத்த அந்த மாநாட்டில்தான் உலக சுகாதார அமைப்பு (WHO) உருவானது. அவ்வமைப்பின் சட்டதிட்டங்கள் விவாதிக்கப்பட்டு 61 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. டாக்டர் ஹெர்மன் சாண்டா க்ரூஸ் என்பவர் ’A page from the history of the united nations’ என்ற பெயரில் ராமசாமியாரின் பணிகள் பற்றி எழுதி இருக்கிறார்.
மாபெரும் சாதனைகளைப் படைத்த ராமசாமி 17.7.1976 அன்று தனது 88-வது வயதில் காலமானார்.