பரிதிமாற்கலைஞரின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட பதிவு – Madras Radicals
தமிழறிஞரும், நூலாசிரியரும், தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவருமான பரிதிமாற் கலைஞரின் நினைவு நாள் இன்று. உயரிய செந்தமிழ் நடையில் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். நாடகப் புலமை சான்றவர். ‘தமிழ் மொழி வரலாறு’ போன்ற ஆய்வு நூல்களையும், கலாவதி, ரூபாவதி போன்ற நாடக நூல்களையும், நாடக இலக்கணமான நாடகவியலையும் எழுதியவர் பரிதிமாற் கலைஞர்.
மதுரை அருகே விளாச்சேரி எனும் கிராமத்தில் கோவிந்த சிவன், இலட்சுமி அம்மாள் தம்பதியருக்கு மகனாக 06.07.1870 அன்று பிறந்தார் பரிதிமாற் கலைஞர்.
வடமொழியை தந்தையாரிடமும், தமிழை மதுரை சபாபதி முதலியாரிடமும் கற்றார். இளவயது முதலே தமிழ் மொழியின் மீதும், இலக்கணத்தின் மீதும், இலக்கியத்தின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவர். பின்னாளில் இளங்கலை பட்டப்படிப்பில் தமிழ்மொழியிலும், மெய்யியலிலும் மாநிலத்திலேயே முதலாவதாகத் தேறினார்.
தமிழ்மொழியின் வரலாறு மற்றும் நாடகவியல் (நாடகங்களுக்கான இலக்கணம்) உட்பட பல நூல்களை எழுதினார். கலாவதி, ரூபாவதி என்ற நாடக நூல்களை எழுதி தாமே கலாவதி, ரூபாவதி எனும் பெண் பாத்திரங்களில் நடித்தார். இராவ் பகதூர் சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்களால் திராவிட சாஸ்திரி என சிறப்பிக்கப்பட்டார்.
ஊதியக் குறைவை பொருட்படுத்தாமல் தமிழாசிரியர் பணி ஏற்றார்
அவரது காலத்தில் பிற துறை ஆசிரியர்களைவிட தமிழாசிரியர்களுக்கு ஊதியம் குறைவு. பரிதிமாற் கலைஞர் தமிழ் மீது உள்ள ஆறாக்காதலால், ஊதியம் குறைவானாலும் தமிழாசிரியர் பணியையே அவர் படித்த சென்னைத் கிறித்துவக் கல்லூரியில் ஏற்றார். அக்கல்லூரியின் முதல்வராக இருந்த டாக்டர் மில்லர், பரிதிமாற் கலைஞரின் தமிழார்வத்தைக் கண்டு வியந்து, பிற துறை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் உயர் ஊதியத்தை இவருக்கும் வழங்கினார். கல்லூரி அளவில் தமிழாசிரியர் பணியை விரும்பி ஏற்றுக் கொண்ட முதல் பட்டதாரி பரிதிமாற் கலைஞர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
உயர் செந்தமிழ் நடையில் எழுதப்பட்ட முதல் நூல்
பரிதிமாற் கலைஞரின் கவிதை நடை எளிமையாகவும், உரைநடை கடினமாகவும் இருக்கும். சி.வை.தாமோதரனார் உயர் செந்தமிழ் நடையில் ஒரு நூலினை எழுத வேண்டுமாறு கேட்டுக்கொள்ளவே பரிதிமாற் கலைஞரும் ‘மதிவாணன் புதுவது புனைந்ததோர் செந்தமிழ்க் கதை” என்ற புதின நூலினை எழுதி வெளியிட்டார். தமிழ் இலக்கிய வரலாற்றில் முதன்முதலாக உயர் செந்தமிழ் நடையில் எழுதப்பட்ட நூல் இதுவேயாகும்
1901-ம் ஆண்டு மே 24-ல் மதுரையில் பாஸ்கர சேதுபதியார் தலைமையில் பாண்டித்துரைத் தேவர் மேற்பார்வையில் நான்காம் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டது. இச்சங்கம் ‘செந்தமிழ்’ எனும் திங்களேட்டை வெளியிட்டது. அதன் முதல் ஏட்டில் தான் பரிதிமாற் கலைஞர் “உயர்தனிச் செம்மொழி தமிழே!” என்று தலைப்பிட்டு கட்டுரை வெளியிட்டார்.
ஆரியர்களின் கதையை மறுத்த தமிழ் மொழி வரலாறு
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வட ஆரிய மொழிகள்தான் எல்லா மொழிகளுக்கும் மூலமொழி என்றும், அதிலிருந்துதான் மற்ற மொழிகள் எல்லாம் பிறந்ததாகவும் ஆரியர்கள் கதைகட்டி வந்தனர். இதை மறுத்து பரிதிமாற் கலைஞர் ‘தமிழ்மொழி வரலாறு’ என்ற நூலினை எழுதி வெளியிட்டார்.
அந்நூலில் ஆரியர்கள் தமிழரிடமிருந்து பல அரிய விசயங்களையும் மொழிப்பெயர்த்து தமிழர் அறியும் முன்னரே அவற்றை தாமறிந்தன போலவும், வடமொழி யினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டிவிட்டனர். ஆரியர் இந்தியாவிற்கு வரும் முன்னரே தமிழருக்கு எழுதப் படிக்கத் தெரியும். எழுத்து சுவடி யென்பன தனித்தமிழ் சொற்களாதலுங் காண்க என்று குறிப்பிட்டுள்ளார்.
தனிப்பாசுரத் தொகை,பாவலர் விருந்து, முதல்நாள், நாடகவியல், தமிழ்மொழியின் வரலாறு, மணிய சிவனார் சரித்திரம், சித்திரகவி விளக்கம்,தமிழ் வியாசங்கள், தமிழ்ப் புலவர் சரித்திரம் உள்ளிட்ட 13 புத்தகங்களை வெளியிட்டுள்ளார்
நவம்பர் 2, 1903 இல் பரிதிமாற் கலைஞர் மறைந்தார். 33 ஆண்டுகளே வாழ்ந்து இவர் மறைந்தபோதும் இவரது தமிழ் பணி போற்றுதலுக்குரியதாய் இருந்தது.