கதிரேசன் செட்டியார்

பள்ளிக்கூடமே செல்லாமல் 12 ஆண்டு பல்கலைக்கழக பேராசிரியராக பணிபுரிந்த திறன் பெற்ற கதிரேசனார்

பண்டிதமணி கதிரேசனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Radicals

செட்டிநாடு என்று சொல்லப்படும் இன்றைய சிவகங்கை மாவட்டத்தில் மகிபாலன் பட்டியில் முத்துகருப்பன் – சிவப்பி ஆச்சி ஆகியோருக்கு மகனாக  16-10 -1881 அன்று பிறந்தார் பண்டிதமணி மு.கதிரேச செட்டியார்.

தனது ஏழாம் வயதில் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் சேர்ந்தார். ஆனால் அவரால் அதைத் தொடர முடியவில்லை.

ஆனால் தானாகவே தமிழ் நூல்களை ஊன்றிக் கற்றார். சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரிய புராணம், திருவாசகம், புறநானூறு, திருக்குறள், கம்பராமாயணம் ஆகியவற்றை இவர் ஆசிரியர் இல்லாமலே ஆழ்ந்து கற்றார். தொல்காப்பியத்தையும் அதற்கான சேனாவரையரின் உரையையும் தன் ஆருயிர் நண்பரான அரசஞ்சண்முகனாரிடம் படித்தார்.

கதிரேசனாரின் நண்பரான ரா.ராகவையங்கார் இவரை மதுரை வள்ளல் பாண்டித்துரை தேவருக்கு அறிமுகம் செய்தார். வள்ளல் பாண்டித்துரை தேவர் தமிழ்ச் சங்கத்தைத் தொடங்கி வைத்த புலவர்களில் ஒருவராக கதிரேசனாரையும் சேர்த்தார்

மணிவாசகரிடம் கொண்டிருந்த ஈடுபாடு காரணமாக அண்ணமலை நகரில் இருந்த போது ‘மணிவாசக மன்றம்’ என்ற பேரவையைத் தோற்றுவித்தார். அவர் எழுதியுள்ள ’சமயக் கட்டுரைகள்’ இவரின் சைவ சமய அறிவின் நுண்மையை விளக்குகிறது. கதிரேசனாரின் பெரும் தொண்டுகளில் மணிமகுடமாக விளங்குவது அவர் திருவாசகத்திற்கு எழுதிய விளக்கவுரை ஆகும். தனது இறுதி காலத்தில் அதனை செய்தார். 

சைவ சமயத்தின் மீது அளவிலா பற்று கொண்ட கதிரேசன் செட்டியார் பலவான்குடியில் மணிவாசக சங்கத்தையும், சிதம்பரத்தில் தில்லை தமிழ்ச் சங்கத்தையும் உருவாக்கினார். கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை, திரு.வி.க, சொ.முருகப்ப செட்டியார் போன்ற தமிழறிஞர்கள் பண்டிதமணியின் மீது பெருமதிப்பு கொண்டிருந்ததுடன் அவரது சங்கப் பணிகளிலும் ஆர்வம் காட்டினர்.

அண்ணாமலை செட்டியாருக்கு இவர் மீது இருந்த நட்பு. மற்றும் இவரது தமிழ் அறிவின் காரணமாக அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணியமர்த்தினார். வ.சுப.மாணிக்கம், இரா.நெடுஞ்செழியன், க.அன்பழகன், கோவிந்தராசனார் ஆகியோர் இவரது முக்கியமான மாணவர்கள் ஆவர். 

ஏழு மாதங்கள் கூட பள்ளிக்கூடத்தில் கல்வி பயிலாமல் பன்னிரெண்டு ஆண்டுகள் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து, தமிழ்ப்பணி ஆற்றிய தனிச்சிறப்பு இவர்க்கு உரியது.

”பண்டிதர்கள் உலகில் பலர் இருப்பினும் அவருள் நம் கதிரேசனார் மணி போல திகழ்கின்றார். ஆதலின் அறிஞர்களாகிய உங்கள் முன்னிலையில் இக்கதிரேசனார்க்கு யாம் ’பண்டிதமணி’ எனும் சிறப்புப் பெயரை சூட்டுகின்றோம்.” என்று மொழிந்து கதிரேசன் செட்டியாருக்கு அச்சிறப்புப் பெயரை சூட்டியவர் உ.வே.சாமிநாத ஐயர் ஆவார்.

பண்டிதமணி கதிரேசனார் இரத்தக் கொதிப்பு நோயின் தீவிரத்தால் 1953-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் நாள் இறந்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *