க.ப.அறவாணன்

தமிழ், தமிழர், தமிழ்நாடு, தமிழ் பண்பாடு என்று வாழ்ந்த பேரா க.ப.அறவாணன் பிறந்த தினம் இன்று

பேராசிரியர் க.ப.அறவாணன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு எழுதப்பட்ட வாழ்க்கைக் குறிப்புப் பதிவு

உலக நாடுகளுக்கு எல்லாம் பயணம் செய்து தமிழ்ப் பணி செய்த பேராசிரியர் க.ப.அறவாணன் திருநெல்வேலி மாவட்டம் கடலங்குடி எனும் கிராமத்தில் 09.08.1941 அன்று பிறந்தார். இவரது பெற்றோர் பழநியப்பன்-தங்கப்பாப்பு ஆவர். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் கிருஷ்ணமூர்த்தி ஆகும். கடலங்குடியில் ஆரம்பப் பள்ளியையும், விஷ்ணுபுரம் என்ற ஊரில் உயர்நிலைப் பள்ளிப்படிப்பையும் முடித்தார். 

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டமும் பி.ஒ.எல் பட்டமும்  பெற்றார். முதுகலைப் பட்டத்தை கேரள பல்கலைக்கழகத்தில் பயின்றார். சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டு,முனைவர் பட்டம் பெற்றார். மூத்த பேராசிரியர்கள் வ.ஐ.சுப்பிரமணியம், ச.வே.சுப்பிரமணியன் ஆகியோரின் அன்பிற்குரிய மாணவராகத் திகழ்ந்தவர்.

கல்விப் பணி 

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் ஆசிரியர் பணியைத் தொடங்கி, பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் முதல்வர் பணி ஏற்றார். பின்னர் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியிலும் பேராசிரியராகப் பணியாற்றியவர். தென்னாப்பிரிக்கா – செனகல் நாட்டுத் தக்கார் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் ஆய்வாளராக பணிபுரிந்தவர். 1982 முதல் 1987 வரை சென்னை இலயோலா கல்லூரியிலும், 1987 முதல் புதுச்சேரி பல்கலைக்கழகத்திலும் தமிழ் பேராசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகப் பணிபுரிந்தார். கிராமப்புறம் அதிகம் நிறைந்த பகுதியான நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பின்தங்கிய பகுதி மாணவர் நலனை கருத்தில் கொண்டு சமுதாயவியல் கல்லூரி என்பதை நிறுவினார்.  

ஆய்வு மற்றும் படைப்புலகம்

சமூகவியல், மானுடவியல், மொழியியல், இலக்கணம், கல்வியியல் மற்றும் வரலாறு ஆகியவற்றில் மிக முக்கியப் பங்காற்றியிருக்கிறார். தமிழர்கள் மேல் நிகழ்ந்த பண்பாட்டுப் படையெடுப்புகள் என்ற நூலின் மூலமாக, தமிழர்களை தங்கள் வரலாற்றை திரும்பிப் பார்க்க வைத்தவர். முனைவர் க.ப.அறவாணன் மேலும் ஒன்பது வரலாற்று நூல்கள் உட்பட, 60-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். சமணார்களின் தமிழிலக்கண நன்கொடை, தொல்காப்பியக் களஞ்சியம், அற்றைய நாள் காதலும் வீரமும், தமிழரின் தாயகம், தமிழ் சமுதாய வரலாறு, தமிழ் மக்கள் வரலாறு, அற இலக்கியக் களஞ்சியம் ஆகியவை குறிப்பிடத்தகுந்ததாகும். ஆங்கிலத்தில் Collected Papers on Tamilology என்ற நூலையும் எழுதியிருக்கிறார். 

விருதுகள்

தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான திருவள்ளுவர் விருது, தமிழர் தந்தை சி.ப.ஆதித்தனார் இலக்கியப் பரிசு உள்ளிட்ட விருதுகளையும், பரிசுகளையும் பெற்றவர். கடந்த 1986-ம் ஆண்டில் சிறந்த பேராசிரியருக்கான விருதும் பெற்றுள்ளார். 

இந்திய பல்கலைக்கழக தமிழாசிரியர் மன்றத்தின் முன்னாள் செயலாளரும் மற்றும் பொருளாளரும் ஆவார். இஸ்லாமிய தமிழிலக்கிய கழகத்தின் வாழ்நாள் உறுப்பினராகவும் இருந்தார். கல்வியாளராக, ஆய்வாளராக மற்றும் எழுத்தளராக தமிழ்த் தொண்டாற்றிய பேராசிரியர் அறவாணன் திராவிட இயக்கத்தினருடன் நெருங்கிய தொடர்புடையவராகவும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆதரவாளராகவும் இருந்தார்.

டிசம்பர் 23, 2018 அன்று தன் தமிழ்ப் பணியை முடித்துக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *