ரசிகமணி டி.கே.சி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Review
”என்னுடைய சின்ன வயதில் அன்னப்பறவையைப் பற்றி சொல்லக் கேட்டிருக்கிறேன். தண்ணீர் கலந்த பாலில் பாலை மட்டும் உறிஞ்சி உண்டுவிட்டு தண்ணீரை அப்படியே விட்டுவிடுமாம். டி.கே.சி-யும் ஒரு அன்னப்பறவையே. நல்லதுகளையும் சிறந்ததுகளையும் எடுத்துக் கொண்டார். அதைப் பற்றியே பேசினார்; பாராட்டினார். போலி கலந்த கவிதைகளில் கவிதையை மட்டும் எடுத்துத் தானும் உண்டு உலகத்துக்கும் கொடுத்தார். தமிழகத்துக்கு இப்படி இன்னொரு அன்னப்பறவை கிடைக்குமா?”
என்று ரசிகமணி டி.கே.சி குறித்து எழுதும் போது கி.ராஜநாராயணன் எழுதுவார.
கி.பி 1881-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் தீத்தாரப்பன் – மீனாம்பாள் தம்பதியினருக்கு மகனாக டி.கே.சிதம்பரநாதான் அவர்கள் பிறந்தார். இவர் தென்காசியில் ஆரம்பக் கல்வியும், திருச்சிராப்பள்ளி உயர்நிலைப் பள்ளியில் உயர் கல்வியும் பயின்றார். சென்னை கிறித்தவக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். சட்டப்படிப்பினை (B.L) திருவனந்தபுரத்தில் படித்தார்.
இந்து அறநிலையத் துறை ஆணையராகப் பதவி
சிறிதுகாலம் திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் வழக்கறிஞராக பணிபுரிந்தார். இவரது தாய் மற்றும் மனைவி இருவரின் பிறந்த ஊரான திருவில்லிபுத்தூர் வடக்கு ரத வீதியில் உள்ள இல்லத்தில் சிறிது காலமும், குற்றாலத்திலும் வாழ்ந்தார். 1930 முதல் 1935 வரை சென்னை மாகாண இந்து அறநிலையத்துறையின் பாதுகாப்பு ஆணையராகப் பணியாற்றினார்.
வட்டத்தொட்டி இலக்கிய அமைப்பு
திருநெல்வேலியில் வண்ணார்பேட்டை சாலைத்தெருவில் உள்ள இவரது வீட்டின் வட்ட வடிவமான அமைப்பில் இவரது நண்பர்கள் மாலை வேளையிலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூடி இலக்கிய விவாதங்களை நடத்துவார்கள். இந்தக் கூட்டத்திற்கு வட்டத்தொட்டி என்ற பெயர் ஏற்பட்டது.
இவரின் வட்டத்தொட்டி இலக்கிய அமைப்பில் மீ.ப.சோமு, பி.ஸ்ரீநிவாச்சாரி, கல்கி, ரா.பி.சேதுப்பிள்ளை, இராஜாஜி அ.சீனிவாச ராகவன், தொ.மு.பாஸ்கர தொண்டைமான், ச.வையாபுரிப்பிள்ளை, வெ.ப.சுப்பிரமணிய முதலியார் உள்ளிட்ட தமிழ் இலக்கிய, அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
பண்பாடு என்ற சொல் உருவாக்கம்
1927-ல் சென்னை மாகாணத்தின் சட்டமன்ற மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பண் என்ற சொல்லும், பாடு என்ற சொல்லும் பழந்தமிழ் இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ள சொற்கள் தாம். அவ்விரு சொற்களையும் இணைத்து “பண்பாடு” என்ற சொல்லை தமிழுலகுக்கு கொடுத்தவர் ரசிகமணி டி.கே.சி. “கல்ச்சர்” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ் பதமாக பண்பாடு என்ற சொல்லை உருவாக்கியவர்.
ரேடியோவிற்கு வானொலி என்ற பெயர்
அகில இந்திய வானொலி நிலையம் என்று தற்போது சொல்லப்படுகிறது. ரேடியோ என்ற சொல்லுக்கு வானொலி என்ற சரியான தமிழ்ப் பதத்தைக் கொடுத்தது ரசிகமணி தான். பின்னால் வானொலி என்ற இதழ் வெளிவந்தது. அதற்கு ஆசிரியராக இருந்தவர் ரசிகமணியின் புதல்வர் தீபன் என்ற தீத்தாரப்பன் அவர்கள்.
தமிழக அரசின் சின்னம்
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் சென்னை மாகாண முதல்வராக இருந்தபோது தமிழக அரசுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரத்தை சின்னமாக வைக்க ரசிகமணி பரிந்துரை செய்தபோது அதை அப்படியே ஏற்றுக்கொண்டு செயல்படுத்தினார்.
தென்காசி மகா மண்டப சிற்பங்கள்
ஓவியம், சிற்பம் ஆகிய கலைச் செல்வங்களும் டி.கே.சி-யின் கலைக் கண்ணோட்டத்திலிருந்து தப்பவில்லை. தென்காசி கோயில் மகா மண்டபத்தில் பத்துத் தூண்களில் வடித்துள்ள சிற்பங்களை உலகறியச் செய்தார். அந்தச் சிற்பங்களையெல்லாம் படமெடுத்து கல்கி தீபாவளி மலரில் வெளிவரச் செய்தவர்.
டி.கே.சி குற்றாலத்தில் கிணற்றுக்குள் கிடந்த பெரிய கற்களை வெளியே கொண்டு வரச் செய்தபோது அரிய சிலைகள் வெளியே வந்தன. அச்சிலைகளை குற்றாலத்தில் உள்ள சித்திரசபை மண்டபத்தில் நிறுவிய பெருமை ரசிகமணியையே சாரும்.
கமண்டலம் ஏந்தாமல் தமிழ் கவிதை ஏந்திய பொதிகை முனிவர்
டி.கே.சி குற்றாலத்தில் பர்ணசாலை கட்டியிருக்கவில்லை, யோகதண்டமும், கமண்டலமும் தாங்கி நடக்கவில்லை, சடைமுடி, புலித்தோல் ஆடை உடுக்கவில்லை, என்றாலும் பொதிகை முனிவராக வாழ்ந்தார். முத்தமிழையும் வளர்த்தார். காஷாயம் தரிக்காமல், அன்பையே கோலமாக அணிந்திருந்தார். கமண்டலம் ஏந்தாமல் கையிலே தமிழ்க் கவிதையை ஏந்தினார். கடவுளையும் கவிதையையும் ஒன்றாக மதித்தார். என்று கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் டி.கே.சி குறித்து குறியுள்ளார்.
நூல்கள்
இதய ஒலி, தமிழ்க் களஞ்சியம் உள்ளிட்ட கட்டுரை தொகுப்புகளை எழுதியுள்ள டி.கே.சி முத்தொள்ளாயிரம், தமிழிசைப் பாட்டுகள் உள்ளிட்ட பல நூல்களை பதிப்பித்துள்ளார். அவர் எழுதியுள்ள கடிதங்கள் பல தொகுதிகளாக வெளிவந்துள்ளது.
“தமிழருக்குத் தமிழே துணை” என்னும் மந்திரத்தை தமிழர்களிடம் சொன்னவர் டி.கே.சி. 16.02.1954 அன்று இவ்வுலக வாழ்வை நீத்தார்.
திருநெல்வேலியில் ரசிகமணி டி.கே.சி விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி பேசிய காணொளி: