தாவூத்ஷா

குரானை தமிழில் மொழிப்பெயர்த்த இராமயாண சாயபு!

நறையூர் தாவூத்ஷா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Review

தஞ்சை மாவட்டத்தில் உள்ள நாச்சியார்கோயில் அருகில் இன்று கீழ்மாந்தூர் என்று அழைக்கப்படும் நறையூர் கிராமத்தில் 1885-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி, பாப்பு ராவுத்தர் – குல்சும் பீவி இணையருக்கு மகனாகப் பிறந்தார் அல்ஹாஜ் பா.தாவூத்ஷா. இவரது ஊர் பெயரை முன்வைத்து ’நறையூர் தாவூத்ஷா’ என அழைக்கப்பட்டார்.

கணித மேதை ராமானுஜத்தின் நண்பர்

நாச்சியார் கோயிலில் திண்ணை பள்ளிக்கூடத்தில் தனது ஆரம்பக் கல்வியைத் தொடங்கினார். பின்னர் கும்பகோணம் “நேடிவ்’ உயர்நிலைப் பள்ளியில் உயர் கல்வியைப் படித்தார். உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது கணிதமேதை ராமானுஜமும் இவரும் உற்ற நண்பர்களாவார்கள்.

உ.வே.சாவின் மாணவர்

சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தார். அங்கு டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் இவருக்கு தத்துவ ஆசிரியராக இருந்தார். அவருக்கு தமிழ்ப் பேராசிரியராக இருந்தவர் உ.வே.சாமிநாதையர் ஆவார். அப்பொழுது கல்லூரியில் கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வென்று பரிசுகளைக் குவித்தார்.

தமிழ்ச் சங்கத் தேர்வில் முதல்நிலை பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார் அவர். உ.வே.சா அவர்களின் நம்பிக்கைக்குரிய மாணவராக இருந்தார். பா.தாவூத் ஷாவின் உரைநடையில் கூட உ.வே.சா-வின் சாயலைக் காணமுடியும் என்பது ஆய்வாளர்களின் கருத்து. மதுரை தமிழ்ச் சங்க பொன்விழா மலரில் ‘இஸ்லாம்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரை பரவலான வரவேற்பைப் பெற்றது.

துணை நீதிபதி பணியை விட்டு வெளியேறினார்

1912-ம் ஆண்டில் நாச்சியார் கோயிலிலேயே முதன்முதலில் பி.ஏ பட்டம் பெற்றவர் இவர்தான். மதுரை தமிழ்ச் சங்கத்தில் தேர்வு எழுதி முதல் மாணவனாக தங்கப்பரிசும் பெற்றார். 1915-ல் இவருடைய மனைவியை இழந்தார். ஆட்சியர் பணிக்கு தேவையான துறைத் தேர்வெழுதி 1917-ல் துணை நீதிபதியாகப் பணியாற்றினார். பின்பு மைமூன் பீவி என்பவரை மறுமணம் செய்து கொண்டார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிர நாட்டம் கொண்ட அவர், ஒன்பது ஆண்டுகள் வரை அரசுப் பணியில் இருந்தார். 1921-ல் விழுப்புரத்தில் துணை நீதிபதியாக இருந்தபோது, கிலாபத் இயக்கத்தில் ஈடுபட வேண்டிய காரணத்தால் பணியை விட்டு வெளியேறினார். அப்பொழுது இவரின் பெயர் உதவி ஆட்சியர் பணிக்கு உயர்த்தப்பட வேண்டிய பரிந்துரையில் பதிவு செய்யப்பட்டிருந்தது. 

காந்தியின் கொள்கைகளை எடுத்துரைத்து சுதந்திரப் போராட்டத்தில் தாவூத்ஷா

தாவூத்ஷா, இந்திய விடுதலைப் போரில் பங்குகொண்டு, ஊர் ஊராகச் சென்று உரையாற்றினார். 1934-ம் ஆண்டில் காங்கிரஸ் பிரச்சாரத்திற்காக ’தேச சேவகன்’ என்ற வார இதழை சென்னையில் நடத்தினார்.

எழுதுவதிலும் வல்லுநராக இருந்த தாவூத்ஷா, சென்னை நகரத் தெருக்களிலும், வெளியூரிலும் கூட்டங்கள் நடத்தி, மகாத்மா காந்தியின் கொள்கைகளையும் தேச விடுதலையின் அவசியத்தையும் தெளிவுபட எடுத்துச் சொல்லி வந்தார். அவரின் கடுமையான உழைப்பினால், சென்னை மாவட்டக் காங்கிரஸின் தலைவரானார். பிறகு சென்னை நகரசபையின் நகரத் தந்தையாகவும் நியமிக்கப்பட்டார்.

காங்கிரஸ் தலைவர்களான ராஜாஜி, சேலம் மருத்துவர் பெ.வரதராஜுலு நாயுடு, மறைமலையடிகள், திருவிக போன்றோருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார்.

ராமாயண சாயபு

நபிகள் நாயகம் பிறந்த நாள் விழாக்களில் பல ஊர்களில் பல மேடைகளில் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் கம்பராமாயணம் சொற்பொழிவும் செய்துவந்தார். இதனால் மக்கள் இவரை, “இராமாயண சாயபு’ என்றே அழைத்தனர்.

தாருல் இஸ்லாம் இதழ்

1920-ல் “தத்துவ இஸ்லாம்” என்ற பெயருடன் மாத பத்திரிகை ஒன்றை வெளியிட்டார். இந்த இதழ் 1923 ஜனவரியில் “தாருல் இஸ்லாம்” என்று மாற்றப்பட்டது. “தாருல் இஸ்லாம்’ என்றால் “முஸ்லிம் உலகம்” என்று பொருள். 1922 பிப்ரவரி மாதம் லண்டனுக்கு சமய உரையாற்றச் சென்றார். அங்கே “இஸ்லாமிய ரெவ்யூ’ என்ற ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார்.

ரஞ்சித மஞ்சரி எனும் பொழுதுபோக்கு இதழ்

அவர் தமது சொந்த ஊரான நாச்சியார் கோவிலில் பத்திரிகை பணியைத் தொடங்கினார். எனினும், 1923-ம் ஆண்டில் சென்னையில் தொடங்கிய தாருல் இஸ்லாமே அவரது அடையாளத்திற்குரிய இதழாக பெயர் பதித்தது. தாருல் இஸ்லாம் இதழுடன் 1932-ம் ஆண்டில் ‘ரஞ்சித மஞ்சரி’ என்ற பொழுதுபோக்கு இதழையும் நடத்தினார்.

பல நாடுகளில் விற்பனையான தாருல் இஸ்லாம்

சென்னையில் ’கார்டியன்’ என்ற அச்சகத்தை தாவூத்ஷா விலைக்கு வாங்கினார். சொந்த அச்சகம் வந்ததும் தாருல் இஸ்லாம் வார இதழாக மாற்றப்பட்டது. 1934-ல் இருமுறை இதழாக வெளிவந்தது. பிறகு நாளிதழாக மாற்றப்பட்டது. 1941-ம் ஆண்டு சென்னையில் முஸ்லிம் லீக் மாநாடு நடந்தபோது காலை, மாலை என இருவேளையும் வெளியான ஒரே இதழ் “தாருல் இஸ்லாம்’ ஒன்றுதான். இவ்விதழ் மியான்மர், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளுக்கு ஆயிரக்கணக்கில் விற்பனையாயின.

1920-ம் ஆண்டில் 64 பக்கங்களுடன் வெளிவந்த தாருல் இஸ்லாம் இதழ், பல புதிய இதழ்களின் தோற்றத்திற்கு உந்துசக்தியாக அமைந்தது. தலையங்கங்கள், அரிமாநோக்கு, கண்ணோட்டம், அரசியல், ஆன்மீகம், அறிவியல், சட்ட, மருத்துவக் கட்டுரைகள், கவிதை, கதை, தொடர்கதை, கேள்வி – பதில், வாசகர் கடிதம், துணுக்குகள் முதலான பல்சுவை அம்சங்களுடன் பவனி வந்தது தாருல் இஸ்லாம்.

இதழில் ‘எங்கேனும் ஓர் எழுத்துப் பிழையேனும் கண்டுபிடித்துத் தருவோர்க்கு இரண்டணா அஞ்சல் தலை பரிசு என்று அறிவித்தார். மேலும் தம் பத்திரிகையில் அச்சுப்பிழை திருத்துவதற்கென்றே புலவர் செல்வராஜ் என்ற தமிழ்ப் புலவரையே நியமித்தும் வைத்திருந்தார்.

இஸ்லாமியர் நடத்திய இதழில் திரை செய்திகள்

மீண்டும், 1947-ல் மாத இதழாக வெளியிட்டார். இவர் வெளியிட்ட இதழில்  திரைப்பட விமர்சனம், திரைச் செய்திகள், கலைஞர்களின் பேட்டி ஆகியவையும் அதில் வெளிவந்தன. இஸ்லாமியர் ஒருவர் நடத்தும் பத்திரிகையில் திரைச்செய்திகள் வெளிவருவது அன்றைய காலகட்டத்தில் பெரும் சாதனையாக சீர்திருத்தமாக பேசப்பட்டது.     

கான் அப்துல் கஃபார் கான் புத்தகம் 

மேலும் 1934-ம் ஆண்டு அரசியல் சீர்திருத்தங்கள் பற்றி ’வரலாற்று தொகுப்பு’ என்ற நூலை எழுதி  வெளியிட்டார். 1937-ல் ’எல்லை காந்தி கான் அப்துல் கஃபார் கான்’ என்ற நூலை காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியின் முன்னுரையுடன் புத்தகமாக வெளியிட்டார்.

1905-ம் ஆண்டு நாச்சியார்கோயிலில் ’சுதேச நன்னெறிச் சங்கம்’ என்ற சங்கத்தைத் தொடங்கி ஒரு நூலகம் நடத்தினார். அவருடைய சொற்பொழிவுகளை 1919-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் “கமலம்’ என்ற பெயரில் சிறு சிறு வெளியீடுகளாக வெளியிட்டார்.

குரானை தமிழில் மொழிப்பெயர்த்தார்

இவர் எழுதிய முஹம்மது நபியின் வாழ்க்கை வரலாறு, அபூபக்கர் சித்திக் பள்ளிகளில் பாடமாக இடம்பெற்றிருந்தது. குரானை தமிழில் மொழிப்பெயர்த்தது உட்பட நான்கு மொழிப்பெயர்ப்புகளை கொண்டுவந்துள்ளார். பல சிறுகதைகளும் பெருங்கதைகளும்  எழுதியிருக்கிறார்.

பெண் கல்வி கூடாது என பேசப்பட்ட காலத்தில் SIET கல்லூரியை பஷீர் அகமது துவங்கிய போது அவருக்கு உறுதுணையாக இருந்தவர்.

தமிழ் எழுத்தாளர் சங்கம் தாவூத்ஷாவின் தமிழ்ப் பணியைப் பாராட்டி 1963-ல் கேடயம் வழங்கிச் சிறப்பித்தது. விடுதலைப் போராட்ட வீரர், சிறந்த பத்திரிகை ஆசிரியராகவும், எழுத்தாளராகவும், சீர்திருத்தவாதியாகவும், சிறந்த சொற்பொழிவாளராகவும் திகழ்ந்த தாவூத்ஷா, 1969-ம் ஆண்டு பிப்ரவரி 24 அன்று சென்னையில் தன்து 84-ம் வயதில் இயற்கை எய்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *