தடுப்பூசி காப்புரிமை

ஏழை மக்களின் உயிரைப் பறிக்கும் மருத்துவக் காப்புரிமை இனியும் தேவையா?

கொரோனா பெருந்தொற்று நமக்கு ஏராளமான பாடங்களை கற்றுகொடுத்து வருகிறது. அதில் முக்கியமான பாடங்களுள் ஒன்றாக இருப்பது Intellectual Property Rights என சொல்லப்படும் ’அறிவுசார் சொத்து காப்புரிமை’ குறித்தான பாடம்.

Intellectual Property Rights இல்லாத உலகம் எப்படி இருக்கும்?

உலகம் முழுதும் உள்ள மருத்துவ நிபுணர்கள் ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியிலும் ஒன்று கூடி, வைரஸ் தொற்றுகள் குறித்தான தங்கள் அறிவு மற்றும் ஆய்வுகளைப் பகிர்ந்து, அதற்கான மருந்துகளை உருவாக்கும் சூத்திரத்தினை எந்த விதமான தனிப்பட்ட காப்புரிமையும் எடுத்துக்கொள்ளாமல் அனைத்து நாடுகளுக்கும் பொதுவாக வழங்கினால் எப்படி இருக்கும்? இப்படிப்பட்ட ஒரு உலகம் என்பது சாத்தியமில்லாத கற்பனையைப் போல் தோன்றுகிறதா? ஆனால் Intellectual Property Rights என்ற கருத்தாக்கம் இல்லாத உலகம் இப்படித்தான் இருக்கும். இப்படித்தான் பல ஆண்டுகாலம் இருந்தது.

Influenza/flu என அழைக்கபடும் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்துகள் தயாரிப்பதிலும், போலியோவுக்கான தடுப்பு மருந்துகள் தயாரிப்பிலும் காப்புரிமை இன்றி தொழில்நுட்ப அறிவு பகிரப்பட்டதால் தான் இன்று வரை நம்மை நாம் மீட்டுக் கொள்ள முடிந்திருக்கிறது.

உலக சுகாதார அமைப்பின் Global Influenza Surveillance and Response System (GIRS) என்ற அமைப்பின் மூலம் ஆண்டுக்கு இருமுறை உலகின் 110 நாடுகளிலிருந்து மருத்துவ நிபுணர்கள் சந்தித்து பரவக்கூடிய வாய்ப்புள்ள தொற்றுகள் குறித்து விவாதிக்கிறார்கள். இந்த நடைமுறைக்கு “திறந்த அறிவியல்” (Open Sceince) என்று பெயர். அதன் காரணமாகத் தான் கடந்த காலங்களில் பல்வேறு நன்மைகள் வேறுபாடுகளின்றி அனைத்து நாடுகளுக்கும் சென்று சேர முடிந்தது. ஆனால் அந்த நடைமுறையை கப்புரிமையை நீக்குவதை மையப்படுத்தி நகர்த்தாதன் விளைவு பல்வேறு தடுப்பு மருந்துகளின் விலை மக்களால் வாங்க இயலாத அளவிற்கு உயர்ந்து நிற்கிறது.

மக்களின் உயிரில் மருந்து வியாபாரம்

இன்று மருத்துவத்துறையை ஆக்கிரமித்துள்ள Intellectual Property Rights என்ற கருத்தாக்கம் தான் இன்று உலகம் முழுதும் ஏழை மக்களை மருந்தின்றி சாகும் நிலைக்கு தள்ளியிருக்கிறது. கொரோனாவை எதிர்கொள்ள உலகமே போராடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மருத்துவத் துறையில் ஒற்றை ஏகபோகத்தை (Monopoly) உருவாக்கும் காப்புரிமை நீக்கம் குறித்து நாம் விவாதத்தினை எழுப்புவது முக்கியம்.

இந்த காப்புரிமையின் வழியாகத் தான் பல மருந்து வியாபார நிறுவனங்கள், மருந்துகள் குறித்த சூத்திரத்தினை தனி உடமையாக்கி அதனை வேறு எவரும் தயாரிக்க முடியாதபடி தடுக்கிறார்கள். இதன் மூலம் ஒவ்வொரு குறிப்பிட்ட மருந்திற்கும் அவர்கள் நிர்ணயிப்பதே விலையாக நிற்கிறது. மேலும் பேரிடர் காலங்களில் அதிக அளவிலான மருந்துகளும், உபகரணங்களும் தேவைப்படும் நேரத்தில் மொத்த மக்களும் ஒற்றை நிறுவனத்தை எதிர்பார்த்து நிற்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். மக்களின் சுகாதார பாதுகாப்பினை தனிப்பட்ட சொத்துரிமையாக்கி வியாபாரம் செய்யும் மருந்து நிறுவனங்களின் வர்த்தகம் எப்படி ஒரு அறம் சார்ந்த தொழிலாக இருக்க முடியும்?

எதிர்க்கப்பட வேண்டிய Monopoly

கொரோனா பரவல் தீவிரமடைந்திருக்கும் இந்த நேரத்தில் காப்புரிமை வழியே நடந்தேறும் (monopolization) ஏகபோகமயமாக்கல் என்பது மனித உயிர்கள் மீதான வியாபாரத்திற்கு இட்டு செல்கிறது.

கொரோனா தொற்று பரவாமல் இருக்க பெரும்பாலான மருத்துவப் பணியாளர்களால் பயன்படுத்தபடும் N95 எனப்படும் முக கவசத்திற்கான 441 அமெரிக்க காப்புரிமைகளை, 3M எனும் அமெரிக்க நிறுவனம் வைத்துள்ளதால், புதிய உற்பத்தியாளர்கள் மாஸ்க்-களை உற்பத்தி செய்வதில் பல்வேறு சிரமங்களும், தடைகளும் இருக்கின்றன. இதனால் N95 முககவசங்கள் தடையின்றி கிடைப்பதிலும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் சமீபமாக அமெரிக்கவில் கொரோனா தொற்று உச்சநிலையில் இருக்கும் இவ்வேளையில் மார்ச்27-ம் தேதியும் ஏப்ரல் 7-ம் தேதியும் N95 முககவசம் குறித்தான இரண்டு காப்புரிமைகளை 3M நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றுக்கு தற்போதைக்கு குறிப்பிட்ட அளவு பலன் அளிக்கக்கூடியதாக remdesivir, favipiravir, and lopinavir/ritonavir ஆகிய மூன்று மருந்துகள் பார்க்கப்படுகின்றன. இவற்றின் மீதான காப்புரிமைகள் என்பது மருந்துகளின் உற்பத்தி விகிதத்தையும், மக்களுக்கு தேவையான நேரத்தில் விநியோகத்தையும் தடைபடுத்துகிறது. remdesivir மருந்துக்கான காப்புரிமையை அதன் தயாரிப்பு நிறுவனமான கிலெட் நிறுவனம் கோரியுள்ளது. இதன் மூலம் அடுத்த 7 ஆண்டுகளுக்கு வரி விலக்கு கிடைப்பதோடு இந்த மருந்துக்கான தயரிப்பு/விற்பனையை இந்த ஒரு நிறுவனம் மட்டுமே மேற்கொள்ள இயலும். மக்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பின் காரணமாக காப்புரிமை கோரிய விண்ணப்பத்தை  தற்போது திரும்பப்பெற்றுள்ளது கிலெட் நிறுவனம்.

இன்று பயன்பாட்டிற்கு வந்திருக்கும் அனைத்து தடுப்பூசிகளும் குறிப்பிட்ட சில தனியார் நிறுவனங்களின் காப்புரிமையுடன் தான் வருகின்றன. குழந்தைகளுக்கு போடப்படு PCV13 எனும் நிமோனியா தடுப்பூசியின் விலை நூற்றுக்கணக்கான டாலர்களில் இருக்கிறது. இதன் மொத்த காப்புரிமையை Pfizer என்ற நிறுவனம் மட்டுமே வைத்துள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் 1,00,000க்கும் அதிகமான குழந்தைகள் நிமோனியாவால் இறக்கின்றனர். இந்த குழந்தைகளின் உயிரிழப்பை தடுப்பதற்கான மருத்துவ முறைகள் உலகத்தில் இருக்கும் போதிலும், அந்த மருந்தின் விலையின் காரணமாகவே குழந்தைகளின் உயிரிழப்பை நம்மால் தடுக்க இயலாமல் போகிறது. நம்மால் ஒரு பெரிய படுகொலையினை தடுக்க முடிந்தும், தடுக்க முயன்றிடாத மவுன சாட்சிகளாய் நாம் நிற்கிறோம். இத்தனை மரணங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் சூழலிலும் Pfizer நிறுவனம் ஆண்டுக்கு தடுப்பூசியில் மட்டும் 38,000 கோடி ரூபாய்-க்கு வியாபாரத்தினை செய்து கொண்டிருக்கிறது.

ஏகபோகமயமாக்கல் என்பது மக்களுக்கு மருந்துகளை மறுத்து எவ்வாறு மரணத்திற்கு தள்ளுகிறது என்பதனை இப்பொழுது நம்மால் புரிந்துகொள்ள இயலும். அரசாங்கங்கள் கொடுக்கும் Intellectual Property Rights உரிமைகளே இதற்கான அடித்தளத்தினை அமைத்து தருகிறது. Intellectual Property Rights எனும் கருத்தாக்கத்தை நாம் அசைத்துவிடாமல் நாம் மருத்துவ துறையை மக்களுக்கானதாக மாற்றிவிட முடியாது. கொரோனா உருவாக்கியிருக்கும் சூழல் நாம் மருத்துவ காப்புரிமை எனும் வியாபார நோக்கத்தை எதிர்த்து பேச வேண்டிய தருணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *